
செவ்வக வடிவில் ஒரு கடல்
மீன்களைத் தொட்டிகளுக்குள் போட்டு வளர்ப்பது பல நூறு ஆண்டுகள் பழமையான ஒரு பொழுதுபோக்கு. 1369ல் சீனாவின் அரசர் ஒருவர் தங்க மீன்களை வளர்ப்பதற்காகவே மிகப்பெரிய பீங்கான் தொட்டிகளை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்கூடத்தை நிறுவினாராம். விநோதமான மீன்களை வளர்த்து அதை வந்திருக்கும் விருந்தாளிகளிடம் காட்டி பெருமை பீற்றிக்கொள்வது அந்த கால செல்வந்தர்களின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பொழுதுபோக்கு மற்றவர்களிடமும் பரவத் தொடங்கியது. 1850களில் மேலை நாடுகளில் இருந்த அனைவருமே தங்களது வீட்டிலும் மீன் தொட்டி வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தார்கள். முதலாம் உலகப் போருக்குப் பிறகு வீடுகளுக்கு மின்சார வசதி வந்ததால் இந்த மோகம் மேலும் அதிகரித்தது. முதலில் தங்களது ஊரில் கிடைக்கும் மீன்களை வளர்க்க ஆரம்பித்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து இனங்களை வாங்கி வளர்க்கத் தொடங்கினார்கள்.
இப்போது இந்தத் துறையின் நிகர மதிப்பு 1000 மில்லியன் அமெரிக்க டாலர்கள்! இதில் பொது மீன் காட்சியகங்களின் பங்களிப்பு ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானது. மற்ற எல்லாமே வீடுகளில், தனி நபர்கள் வைத்திருக்கும் மீன் தொட்டிகள்தான். 125 நாடுகள் இந்த வணிகத்தில் ஈடுபடுகின்றன. மிக அதிகமான மீன் தொட்டி வைத்திருப்பவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடம் பிடிக்கிறது. அமெரிக்காவில் மட்டுமே 30 லட்சம் வீடுகளில் மீன் தொட்டிகள் இருக்கின்றன என்கிறது 2022ம் ஆண்டில் வந்த ஒரு அறிக்கை. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறையின் நிகர மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது என வணிக அமைப்புகள் தெரிவிக்கின்றன.
1400 முதல் 2500 மீன் இனங்கள் இந்தத் துறையோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன, இவற்றில் 60%க்கும் மேற்பட்டவை நன்னீர் இனங்கள்தாம். இந்த நன்னீர் இனங்களை வளர்ப்பதில் பெரும்பாலும் சூழல் பிரச்சனைகள் இருப்பதில்லை, ஏனென்றால் இவற்றில் பல மீன்கள் முழுக்க முழுக்க பண்ணைகளில் வளர்க்கப்படுபவை. மீதமிருக்கும் 40% கடல் மீன்களைப் பற்றித்தான் நாம் கவலைப்படவேண்டியிருக்கிறது, ஏனென்றால் இவற்றில் 98% மீன்கள் நேரடியாகக் கடலில் இருந்து பிடிக்கப்படுபவை.
மீன்கள் மட்டுமல்லாமல் பவளங்கள், முதுகெலும்பற்ற உயிரிகள் என பல்வேறு கடல் உயிரிகள் மீன் தொட்டிகளில் வைத்து வளர்ப்பதற்காக நேரடியாகக் கடலில் இருந்து சேகரிக்கப்படுகின்றன. இந்தப் புள்ளி விவரங்களைக் கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது. மொத்தம் 140 பவளப்பாறை இனங்கள் சேகரிக்கப்படுகின்றன, ஒவ்வொரு ஆண்டும் 1.2 கோடி பவளப்பாறைத் துண்டுகள் சராசரியாகக் கடலில் இருந்து எடுக்கப்படுகின்றன. மொத்தம் 500 முதுகெலும்பற்ற இனங்கள் சேகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 1 கோடி உயிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இதைத் தவிர, சாதாரண பாறைகளைக் கடலுக்குள் வைத்து அவற்றில் பாசிகள் வளர்ந்தபின்பு காத்திருந்து அதை “Live Rock” என்ற பெயரோடு ஏற்றுமதி செய்வதும் Soft corals எனப்படும் மென் பவள உயிரிகளை சேகரிப்பதும்கூட நடக்கிறது.
இந்தப் பொழுதுபோக்கின் மையமாக அமெரிக்கா இருக்கிறது என்றாலும் அதற்கான மீன்கள் வெப்பமண்டல நாடுகளில் இருந்துதான் போகவேண்டும். ஏனென்றால் வெப்பமண்டலக் கடல்களில் உள்ள பவளத்திட்டுகளில் வசிக்கும் வண்ண மீன்கள்தான் அதிகமாக விரும்பப்படுகின்றன. ஆகவே அமெரிக்காவில் ஒருவர் தன்னுடைய வீட்டில் கடல்மீன் தொட்டியை வைத்து அழகுபார்க்க வேண்டுமென்றால் அதற்கு இந்தோனேசியாவிலோ ஃபிலிப்பைன்ஸிலோ உள்ள கடல்கள் சுரண்டப்படும்!

இந்த வணிகத்தின் மையச்சிக்கல் இதுதான். இதிலிருக்கும் சூழல் அநீதியைப் (Environmental Injustice) பற்றிக் கொஞ்சம் பேசலாம். பெரும்பாலும் வளர்ந்து வரக்கூடிய மூன்றாமுலக நாடுகளிலிருந்து இந்த மீன்கள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றில் பல சிறு தீவுகளில் மீன் தொட்டிகளுக்காக உயிர் மீன்களை சேகரிப்பது ஒரு முக்கியமான குடிசைச் தொழிலாகவும் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது. அதற்கான முக்கியக் காரணம் இந்த மீன்களிலிருந்து கிடைக்கும் வருமானம். அலங்கார மீன்கள் சேகரிக்கப்படும் இதே பவளத்திட்டுகளிலிருந்து உணவுக்கான மீன்களும் பிடிக்கப்படுகின்றன. ஆனால் விலையை ஒப்பிட்டால் இந்தத் தொழிலின் லாபம் புரியும். பவளத்திட்டிலிருந்து பிடிக்கப்படும் ஒரு கிலோ உணவுமீனின் விலை 6 டாலர் என்றால், அதே பவளத்திட்டில் இருந்து அலங்கார மீன்களை சேகரித்தால் கிலோவுக்கு 500 டாலர் கிடைக்கும்! இந்தத் துறையையே “Low volume, high value industry” என்று அழைக்கிறார்கள். புரியும்படி சொல்லவேண்டுமென்றால் “சின்ன கல்லு, பெத்த லாபம்” இது. இந்த பெரிய லாபத்தில் மிகக்குறைந்தப் பங்கு மட்டுமே நேரடியாக மீனவர்களுக்குக் கிடைக்கிறது என்பதையும், இடைத்தரகர்களே நிறைய பணம் பார்க்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
உலகில் உள்ள கடல்சார் அலங்கார மீன்களில் 85% ஃபிலிப்பைன்சிலிருந்தும் இந்தோனேசியாவிலிருந்தும் வருபவைதான். எங்கேயோ இருக்கும் வீடுகளின் பொழுதுபோக்குக்காக தங்களது நாட்டுக் கடல்களில் உள்ள பவளத்திட்டுகள் பாதிக்கப்படுகின்றன என்பதை இந்த நாடுகள் ஆரம்பகட்டத்தில் உணரவில்லை. சூழல் பாதிப்புகள் வரத் தொடங்கியபின்னர் இப்போது சில நாடுகளில் உள்ள செயற்பாட்டாளர்கள் எதிர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.
“காலநிலை மாற்றம் பற்றிய பிரச்சனைகளில் நாம் முதலாளித்துவத்தைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறோம், ஆனால் காலனியாதிக்கத்தின் விளைவுகளையும் இதில் சேர்த்தே விவாதிக்கவேண்டும்” என்று எழுத்தாளர் அமிதவ் கோஷ் அடிக்கடி குறிப்பிடுவார். இந்தப் பிரச்சனையிலும் அவரது பரிந்துரையைப் பொருத்திப் பார்க்க முடியும். காலனியாதிக்கத்தின் விளைவால் இந்த நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தில் பின் தங்கி இருக்கின்றன, இந்த நாடுகளில் உள்ள விளிம்புநிலை சிறு/குறு மீனவர்களுக்கு வாழ்வாதாரம் தேவை. முதலாளித்துவ நெருக்கடியால் அவர்கள் அதிக லாபம் ஈட்டினால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. இந்த சூழலில், தங்களது சூழலை பாதிக்கக்கூடிய ஒரு தொழிலில் ஈடுபடுகிறார்கள், அந்தப் பண்டம் வளர்ந்துவிட்ட மேலை நாடுகளில் பொழுதுபோக்குக்காக அனுப்படுகிறது. மீனவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது, மேலை நாட்டு மக்களுக்குப் பொழுதுபோக்கு உறுதி செய்யப்படுகிறது. ஆனால் இதன் சூழல் பாதிப்புகள் எல்லாம் மூன்றாமுலக நாடுகளின் தலையில் விழுகின்றன. தங்களது கடலுக்கு எந்த பாதிப்பும் இன்றி மேலை நாடுகள் பாதுகாத்துக்கொள்கின்றன. உச்சகட்ட சூழல் அநீதி இது!
மீன்களை எளிதில் பிடிப்பதற்காக சயனைடு பயன்படுத்துவது, பவளப்பாறைகளை உடைப்பது போன்ற நேரடியான சூழல் பாதிப்புகள் தவிர பல்வேறு பாதிப்புகளை விஞ்ஞானிகள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அலங்கார மீன்களில் Cleaner Wrasse என்று அழைக்கப்படும் ஒரு மீன் அதிகமாக விரும்பப்படுகிறது. பெயரைக் கேட்டாலே இது ஒரு வகையான சுத்திகரிப்பு மீன் என்பது புரியும். இந்தக் குட்டி மீன், பெரிய விலங்குகளின் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை சுத்தம் செய்யக்கூடியது. இந்த மீன்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் பெரிய மீன்கள் வரிசையாக வந்து நின்று உடலை சுத்தம் செய்துகொள்ளும்! இதை Cleaning stations என்பார்கள். இந்த சுத்திகரிப்பு மீன்களை நாம் கடலில் இருந்து சேகரிக்கும்போது, அந்தப் பங்களிப்பு குறைந்துவிடுகிறது, பெரிய மீன்கள் பாதிக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட அளவிலான வண்ண மீன்களை மட்டுமே தேடித் தேடிப் பிடிக்கும் பழக்கத்தால், அந்த மீன் கூட்டத்தின் சமநிலை பாதிக்கப்படுகிறது. ஒரு இடத்தில் மட்டுமே இருக்கக்கூடிய மீன்களை நாம் பிடிக்கும்போது, அந்த மீன்கள் மீன்பிடி அழுத்தம் தாளாமல் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படுகின்றன. பாங்காய் தீவுகளில் மட்டுமே இருக்கும் Banggai Cardinalfish என்ற ஒருவகை மீனுக்கு இதுதான் நடந்தது. கடற்குதிரைகளில் பல இனங்கள் அழியும் நிலையில்தான் இருக்கின்றன, ஆனாலும் அவை தொடர்ந்து அலங்கார மீன்களாகப் பிடிக்கப்படுகின்றன.
அலங்கார மீன்களாக வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்படும் மீன்கள் அங்கிருக்கும் கடலில் விடப்படுவதும் உண்டு. அந்த சூழலில் இவை அயல் ஊடுருவி இனங்களாக மாறுகின்றன. இந்தோ பசிபிக் கடற்பகுதியைச் சேர்ந்த Lionfish எனப்படும் மீன், இப்போது அட்லாண்டிக் கடலில் பெரிய இம்சை உயிரினமாக மாறியிருக்கிறது. இது அலங்கார மீனாக அங்கே கொண்டு செல்லப்பட்டதுதான். மீன்கள் மட்டுமல்லாமல் சிலவகை பாசிகளும் இங்கிருந்து அங்கு எடுத்துச் செல்லப்பட்டு அயல் ஊடுருவிகளாக மாறி அந்த ஊர்க் கடல் சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன.
“Finding Dory” திரைப்படம் வந்தபோது சூழலியளார்கள் பெரிய அச்சத்தில் இருந்தனர். இதற்கு முந்தைய Finding nemo திரைப்படம் வந்தபோது அந்தப் படத்தில் வந்த கோமாளி மீன்களை வளர்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டினர். அது கோமாளி மீன்களுக்கான தேவையைப் பல மடங்கு உயர்த்தியது. Finding dory திரைப்படத்தில் வரும் ஒருவகை கோழி மீன் இனமான Blue Tang, ஏற்கனவே அதிக அளவில் பிடிக்கப்படும் வகை. இந்தோனேசியாவில் அந்த இனம் ஏற்கனவே கடும் மீன்பிடி அழுத்தத்தில் இருந்தது. இந்த நிலையில், திரைப்படத்தைப் பார்த்து மக்கள் இந்த மீன் மீது ஆர்வம் காட்டினால், இந்த இனம் அதிகமாகப் பிடிக்கப்பட்டு எண்ணிக்கை மேலும் குறையும் என்பதுதான் அவர்களின் பயத்துக்குக் காரணம்.
இதில் இன்னொரு இம்சையும் இருக்கிறது. உதாரணமாக மேலே சொல்லப்பட்ட கோழி மீனையே எடுத்துக்கொள்வோம். இந்த மீன் அதிகமாகப் பிடிக்கப்பட்டால் எண்ணிக்கை குறைந்துவிடும். இப்படி நடக்கும்போது, அந்த இனம் “Rare species” என்ற வகைக்குள் போய்விடுகிறது. அலங்கார மீன் வணிகத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற அரிய இனங்களின் விலை அதிகம். ஆகவே எண்ணிக்கை குறையக் குறைய விலை அதிகரிக்கும், இதனால் உந்தப்படும் சேகரிப்பாளர்கள், இருக்கும் ஒன்றிரண்டு மீன்களையும் பிடிக்கவேண்டும் என்று நினைப்பார்கள், எண்ணிக்கை மேலும் குறையும், விலை மேலும் அதிகரிக்கும்! மீளா சுழற்சி இது.
“இது மட்டுமல்ல, உலகிலேயே அதிகம் விரும்பப்படும் டாப் 10 அலங்கார மீன்களை எடுத்துக்கொள்வோம். அதில் முக்கியமான மீன் இனங்கள், தொட்டிகளில் வைத்தால் விரைவிலேயே இறந்துவிடும் தன்மை கொண்டவை! அதாவது, இவற்றை நம்மால் வளர்க்கவே முடியாது. ஆனாலும் சும்மா அழகுக்காக இவை பிடிக்கப்படுகின்றன” என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தருகிறார்கள். வளர்க்கவே முடியாவிட்டாலும் பிடிக்கப்பட்டு சும்மா இரண்டொரு நாட்கள் தொட்டியில் வைத்து அழகு பார்க்கப்படும் Mandarin fish எனப்படும் பவளப்பாறை மீனை உதாரணமாகக் காட்டுகிறார்கள்.
இவையெல்லாம் சூழல்சார்ந்த பாதிப்புகள் மட்டுமே. பிறந்ததிலிருந்து கடலில் வசித்துவரும் மீன்களைப் பிடித்து ஒரு சின்ன கண்ணாடித் தொட்டிக்குள் வளர்ப்பதில் இருக்கும் அறம்சார்ந்த சிக்கல்களையும் பேசவேண்டும்.
“இங்கே
முட்டாளாக இருப்பது நல்லதுதான்
உனக்குப் பின்னாலுள்ள கண்ணாடியை மறந்துவிட்டு
உனக்கு முன்னால் வளைந்து பளபளக்கும் கண்ணாடியை கவனிக்காமல்
ஒரு பெருங்கடலில் நீ நீந்துகிறாய் என்று நீ நம்புவது நல்லதுதான்“
என்ற கதா போலிட்டின் கவிதை ஒன்று உண்டு. ஒரு மீன் அளவில் சிறிதாக இருக்கிறது என்பதாலேயே அதன் வாழ்க்கைப் பரப்பும் சிறியதுதான் என்று நாம் நம்புவது அபத்தமானது. கடல் மீன்கள் பெரிய அளவிலான வாழ்க்கைப் பரப்பு கொண்டவை, அரையடி நீளம் கொண்ட ஒரு மீனுக்குக் கூட பல சதுர மீட்டர் பரப்பிலான Home Range தேவைப்படும். அவற்றின் செழிப்பான வாழ்க்கைக்கும் உடல் நலனுக்கும் இனப்பெருக்க வெற்றிக்கும் இது அவசியமானது. இதை மாற்றியமைக்கும் உரிமை மனிதர்களுக்குக் கிடையாது. மீன்கள் இதனால் மன உளைச்சல் அடைகின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு மீனுக்கு இத்தனை தொந்தரவுகள் கொடுத்து பொழுதுபோக்குக்காக அதை வீட்டில் வைத்துக்கொள்ள மனிதர்களால் மட்டுமே முடியும்.
நன்னீர் மீன்களைப் போலவே இவற்றையும் பண்ணையில் வளர்த்துவிட்ட்டால் பெரும்பாலான சூழல் ஆபத்துகளைத் தவிர்க்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த மீன்களைப் பண்ணை மீன்களாக்குவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. ஆகவே இதை முழுமையாக நம்மால் செய்ய முடியவில்லை. இனப்பெருக்க காலத்தில் இந்த மீன்களைப் பிடிக்கத் தடைவிதிப்பது, அலங்கார மீன்களுக்கான மீன் பிடி உரிமம் மற்றும் உச்ச வரம்பு, சில பவளத்திட்டுகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பது, குறிப்பிட்ட அளவிலான மீன்களை மட்டுமே தேடித் தேடிப் பிடிப்பதைத் தடை செய்வது என இதிலிருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க வேறு சில தீர்வுகளும் சொல்லப்படுகின்றன.
கடல் மீன்களை அலங்காரத்துக்காக வளர்ப்பது மிகவும் சமீபத்தில் வந்த பழக்கம்தான். சூழல் பாதிப்பின்றி பண்ணைகளில் வளர்க்கப்படும் நன்னீர் வண்ண மீன்கள் இருக்கும்போது, ஒரு வாழிடத்தையே கெடுத்து எதற்காகக் கடல் மீன்களை வளர்க்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே எனும்போது, இந்தப் போக்கை மாற்றிக்கொள்வதிலும் பெரிய பிரச்சனை இருக்காது என்று தோன்றுகிறது. வளரும் நாடுகளைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளராக, இந்தப் பொழுதுபோக்கின் முக்கியத்துவத்தை ஒரு அளவுக்கு மேல் என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. வீட்டில் மீன் தொட்டி கட்டாயமாக வேண்டும் என்றால் பிரச்சனையில்லாத நன்னீர் மீன்களை வளர்த்துக்கொள்ளலாமே என்பது என்னுடைய நிலைப்பாடு. ஒவ்வொரு முறையும் இதுபற்றிய விவாதங்கள் வரும்போதெல்லாம் மீன் வளர்ப்பாளர்கள் கடல் மீன் தொட்டிகளின் அழகைப் பற்றியும் தேவை பற்றியும் உணர்ச்சி பொங்கப் பேசுவார்கள். அவர்களிடம் “பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா” என்று கேட்கத் தோன்றும்.
கடல்சார் வண்ண மீன் வளர்ப்பைத் எதிர்க்கும் சூழல் செயற்பாட்டாளர்கள் பலரும் “இந்த வணிகத்தை உடனடியாக முற்றிலுமாகத் தடை செய்யவேண்டும்” என்று குரல் எழுப்புகிறார்கள். சமூகவியல் அறிந்த விஞ்ஞானிகளோ, “மூன்றாமுலக நாடுகளின் வாழ்வாதாரத் தேவையை உணராமல் எழுப்பப்படும் வெற்றுக் கூச்சல் இது. முன்னேற்பாடுகள் இன்றி இதை உடனடியாகத் தடை செய்தால் இது ஒரு கறுப்பு சந்தையாக மாறும். அது ஆபத்தானது. ஆகவே இதை வேறு வழியில் சமாளிப்பது எப்படி என்று யோசிப்போம்” என்கிறார்கள். இந்த மீன்களை இறக்குமதி செய்யும் மேலை நாடுகள் சரியான முன்னெடுப்புகளை எடுக்கவேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் மூன்றாமுலக நாடுகளின் நன்மைக்காக மேலை நாடுகள் செயல்படும் என்று நம்ப முடியவில்லை, வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடம் அப்படி. மூன்றாமுலக நாடுகள் தங்கள் மீனவர்கள்/மீன் சேகரிப்பாளர்களுக்கான மாற்று வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுத்துவிட்டு அலங்காரத்துக்காக மீன்களை சேகரிப்பதில் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அதுவே சரியான செயல்பாடாக இருக்கும்.
கடலுக்கும் மனிதனுக்குமான உறவில் பல்வேறு அம்சங்களைப் பார்த்துவிட்டோம். நமக்கும் கடலுக்குமான உறவின் அடுத்த கட்டம் எப்படி இருக்கப்போகிறது? இதை எதிர்கொள்ள நமக்கு எப்படிப்பட்ட புரிதல்கள் தேவைப்படும்?
(அடுத்த கட்டுரையோடு நிறைவடையும்)