
பெண்ணுள்ளம் ஒரு மூங்கில் காடு
தீக்குச்சி ஒன்றைப் போட்டு பாரு – சரண்புகுதல் கலை
சங்கத்தமிழ் மரபில் ஒரு வழக்கு இருந்ததாம் – மடலேறுதல்.
தன் காதலை ஏற்க மறுக்கும் காதலியை இணங்கச்செய்யும் பொருட்டு பனை மடல்களால் செய்யப்பட்ட குதிரையின் மீது சாம்பலும் சூடாமலரான எருக்கம் பூவையும் சூடி தலைவன் தலைவியின் பெயரை ஊர் உரக்கக் கூவிக்கொண்டே ஊர்ந்து செல்வதாகும்.
தனக்காகக் கர்வம் தளர்த்தி இவ்வாறு செய்கிறானே என பெண் உருகி அவன் காதலை ஏற்பாளாம். சில நேரம் பெண் சம்மதித்தும் பெண் வீட்டார் சம்மதிக்காவிடில், ஊர் பெரியவர்களின் நியாயம் வேண்டியும் மடலேறுதல் ஒரு வழக்கமாக இருந்ததாம்.
சங்க இலக்கியங்களில் மடல் இலக்கியமென்றோர் தனிப் பிரிவே இருந்ததாம். திருக்குறள், குறுந்தொகை, அகநானூறு, நற்றிணை என பல இலக்கிய குறிப்புகள் ஆண் காமுறுதலைப்பற்றியும் அதற்காக அவன் செய்யும் பிரயத்தனங்களையும் வர்ணிக்கும். இதில் திருமங்கையாழ்வார் மட்டும் தனி ரகம். ஆண்கள் மட்டும் மடலேறிக் கொண்டிருக்க தன்னைத்தானே ஒரு பெண்ணாகப் பாவித்து கடவுளுக்காக மடலேறுவதாய் எழுதி இருப்பார்.
இன்றைய தேதிக்கு இவ்வாறு ஏதேனும் செய்தால் அது stalking-இல் சேர்த்தி. மன உளைச்சல் தூண்டும்படி நடந்து கொண்டாரென ஒரு புகார் கொடுத்தால் போதும், நைய்யப்புடைத்து அனுப்பிவிடுவார்கள். இருந்தும் பெரும்பாலான பெண்கள், ஆண்கள் கெஞ்சுவதையும், தன்னை பின்தொடர்வதையும், மண்டியிட்டு காதல் பிச்சை கேட்பதையும் விரும்பவே செய்வார்கள்.
பிழை பெண்களின் மீதில்லை, மனித பரிணாமத்தின் மீது!
ஆதி மனிதன் ஆதி மனிதியிடம் இவ்வாறே கெஞ்சி இருக்கிறான். தாய்வழி குளம் பேணும் சமூகமாக மனித சமுதாயம் வாழ்ந்த வரை பெண்ணே தேர்ந்தெடுக்கும் அதிகாரம் படைத்தவளாக இருந்திருக்கிறாள். ஒருவள் மீது காமுற்றால் அவளை தன்பால் ஈர்க்க ஆண் தன் விருப்பத்தை நிறையச் செய்கைகளில் தெரிவிக்கிறான். அதில் பின் தொடர்தல் எளிய வகை. முதலில் எரிச்சலேற்றினாலும் பிறகு தனக்காக மெனக்கெட்டு சிரத்தை எடுக்கும் அவனுக்காக மெல்லப் பணிகிறாள் பெண்.
ஏனெனில் அவளுக்கு கொண்டாடப்படுதல் பிரியம். தனது தேர்வுகளை, முடிவுகளை மதிப்பவன் பிடித்தம். பெரிதாகத் தனது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லவில்லையென்றாலும் அவள் தளரும் நேரம் அவளைத் தாங்கிப்பிடித்தலும் அவளை முன்னிறுத்துவதும் வேண்டும். பெண்ணின் இப்பண்பு தன்னை பின்தொடர்பவன் தனக்காக சில பிரயத்தனங்களை எடுப்பவன் மீது மையல் கொள்ள வைக்கிறது.
பரிணாமம் பெண்ணை அவ்வாறே வடிவமைத்திருக்கிறது. அவள் மதிக்கும் காதலைத் தேடுகிறாள். தன் உணர்வுகளைக் கேட்டு நடக்கும் ஆணை நாடுகிறாள். அதை ஒரு பெண்ணுக்கு தன் செயலினால் புரியவைக்கும் ஆண் வெற்றியாளனாகிறான். புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் க்ரேய், ஆணின் இம்மாதிரியான முயற்சிகளுக்குப் பின்னும் பரிணாமமே உள்ளதாக குறிப்பிடுகிறார்.
அவரின் கூற்றுப்படி, ஆண்கள் வெற்றியை அதிகம் விரும்புபவர்கள். எடுத்த காரியங்களுக்குத் தனது முழு முயற்சியை அளித்து அதில் வெற்றி பெறுவதே அவனின் லட்சியமாகப் பார்க்கப்படுகிறது. இதை அவன் பெண்ணை கவர்வதிலும் செய்கிறான். அவளைப்பற்றிப் புரிந்துகொள்ள எத்தனிக்கிறான். அவளுக்கு பிடித்தவற்றைச் செய்கிறான். அவலுடன் அதிகம் பேச்சுக்கொடுக்க பார்க்கிறான். எவ்வளவு உதறினாலும் தான் கொண்ட காதலில் தீர்க்கமாக இருப்பதாய் அவளுக்கு உணர்த்தும்பொருட்டு மடலேறுகிறான்.
காதலில் இணையை தன்பால் ஈர்த்தலொரு கலை. இதில் தேர்ந்த நடிகனும் தோற்பான் ஐந்தாறு காதலைக் கடந்தவனும் தோற்பான். இங்கு அன்பும் அது சார்ந்த உணர்வும் பிரதானம். அதை இணையின் மனதிற்கு கடத்தி விட்டால் மதி.
உயிரே படத்தின் பூங்காற்றிலே என்றும் ஒரு masterpiece. தன் வாழ்வில் நிறையக் குரூரங்களைச் சுவைத்தவள், இழப்புகளைச் சுமந்தவள் மேல் ஒருவன் காதலுறுகிறான். அவளுக்கு, அவனை ஏற்றெடுத்துப் பார்க்கவும் நேரமில்லை. தான் கொண்ட கொள்கையைப் பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பவளை வழிமறித்து நாயகன் பாடும் பாடல் இது.
தனது இயலாமையும் சந்தர்ப்பமும் அவனிடம் நெருங்க எப்படி அவளைத் தடுக்கிறதென்பதை சொல்வது போல பாடல் ஆரம்பிக்கும்.
“கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை” என அவள் அவன் காதலைச் சுவீகரிக்கத் தடுமாறும் நிமிடம் அவன் அவள் இல்லாமல் வாடும் இந்த நரகத்திலிருந்து முக்தி வேண்டி அவளிடம் மன்றாடி நிற்பான்.
நான் காண்கிற காட்சி விடுகின்ற மூச்சு உதிர்க்கின்ற பேச்சென எல்லாவற்றிலும் நீ நிறைந்திருக்கிறாய் சகி என உருகுகிறான்.
“வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி”
வைரமுத்து எப்பொழுதுமே அதீத உணர்ச்சிகளை வரியில் கடத்துபவர். இயல்பான காதல் தவிப்பைக் கூட உயிர்வலிக்கு இணையாக சோகம் கலந்து உருக்குவார். அவன் ஏக்கப் பெருமூச்சின் சூட்டில் இதயம் கருகும் என நம்மை நம்ப வைப்பார். கவிஞர்கள் அப்படித்தான். நெகிழிகளுக்கு உயிரூற்றி குழப்புவார்கள்.
வாலி இவ்விடயத்தில் அநியாயத்திற்கு நியாயமாக எதார்த்தம் பேசுவார். வாலியின் வரிகளில் மையல் கொண்ட பெண்ணை ஆண் அணுகும் விதத்தில் ஒரு விடலைத்தனம் இருக்கும். அவளைப் போற்றும், வர்ணிக்கும் உயர்த்தி பேசும் சிரத்தை இருக்கும். அவளுக்காக எதையும் செய்வேனென உத்வேகம் இருக்கும். இவை அத்தனையும் அவளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற துணிவும் இருக்கும்.
“நீல வான ஓடையில்” பாடல் அதுபோன்ற ஒரு பாடல் தான்.
பெரிதாக நீயில்லையெனில் காற்று கசக்கும் தொண்டைக்குழியில் சோறு இறங்காது போன்ற சிக்கல்கள் இல்லாத காதல். நானும் நீயும் மாலை சூடினால் வானம் பூமியாவும் வாழ்த்து பாடி நம்மை மகிழ்விக்கும் போன்ற நன்னம்பிக்கை தருகிறான் நாயகன். எதிர்காலம் வசந்தமாகும் என்ற வாக்குறுதி அது. பெண்ணை, உன்னை என்றும் தாங்குவேன் என்ற உறுதியளித்தல். என்றும் உன்னை மரியாதையோடு நடத்துவேன் என்ற பாதுகாப்பை அவளுக்கு அளித்தல்.
உன்னை அடைய உயிரையும் இழப்பேன் என சொல்பவனை விட நீ சம்மதித்தால் உன்னை உயிராய் காப்பேன் என சொல்பவன் அதிகம் ஈர்க்கிறான் ஏனெனில் பெண் மனம் எதிர்காலம் குறித்தே செயல்படுகிறது. இன்றை விட நாளை சிறந்ததாக மாற்றவே அவள் விரும்புகிறாள். அதற்கான உறுதிகளைத் தருபவனிடம் அடுத்த கணமே சரணடைகிறாள்.