இணைய இதழ் 101சிறுகதைகள்

மிக்சர் – ஷா.காதர் கனி

சிறுகதை | வாசகசாலை

கிரீசை பழைய பேப்பரைக் கொண்டு நன்றாகத் துடைத்துவிட்டு மெக்கானிக் முருகனிடம், ”கொஞ்சம் பார்த்துக்கோப்பா நான் ஒதுங்கிட்டு வந்துடுறேன்” என்று கூறி தனது டிவிஎஸ் 50 பைக்கின் கிக்கரை பூப்போல் மிதித்து ஸ்டார்ட் செய்தார் கடையின் முதலாளி ராஜா. ‘மெக்கானிக்’ ராஜா என்றால் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், ஊரில் உள்ளவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் பொழுது அந்தக் கடையை ‘கஞ்சராஜா கடை’ என்றே குறிப்பிடுவது வழக்கம்.

சிறுவயதில் மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும் பொழுது அவரின் கடை முதலாளி மெக்கானிக் தங்கையா ஒரு விபத்தில் இறந்து போக, அடுத்து கடையை உரிமை கொண்டாட அவரது குடும்பத்தில் யாரும் முன்வராததால் ஒரு சிறு தொகையை மட்டும் பகடியாகக் கொடுத்து இப்பொழுது இருக்கும் தங்கையா மெக்கானிக் கடையை அப்படியே இவர் எடுத்து நடத்தினார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் ஆன பிறகும் கூட அடிக்கடி, ”இந்தக் கடை எனக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய சொத்து. பெரிய அளவு முதலீடு இல்லாமல் இன்று சொந்த வீட்டில் உன்னை வைத்திருக்கின்றேன் என்றால் அதற்கு இந்த கடை தான் காரணம்” என்று தனது மனைவியிடம் ஆயிரம் முறைக்கும் மேலாக சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருக்கும் கடுமையான உழைப்பாளி.

சூரியன் மேற்கில் கீழிறங்கிக் கொண்டிருந்த வேளையில் அழுக்குச் சட்டையும்-கைலியுமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ராஜாவிற்கு இயற்கை கடன் தனது சுமையை இறக்கி வைப்பதற்கு அழைத்தது.  கடனைக் கழிப்பதற்கு கடையில் இருந்து கிளம்பிய ராஜா நேராக ஒதுங்கும் இடத்திற்கு சென்று ஆசுவாசமாக சிறுநீர் கழித்து வழக்கம்போல் ஐம்பது பைசா நிஜாம் பாக்குப் பாக்கெட்டை பிரித்து வாயில் கொட்டினார். வெயில் மங்கி என்றும் இல்லாதது போல் சற்று குளிர் காற்று அடித்தது. ‘மழை வரும் போல’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டே மீண்டும் தனது டிவிஎஸ் 50 பைக்கின் கிக்கரை அழுத்தினார். கடைக்கு திரும்பச் செல்லும் போது பூசாரி மிக்சர் கடையிலிருந்த கூட்டம் ராஜாவின் பார்வையை சிறிது சிதறடித்தது. உடனே வண்டியை மெதுவாக ஓரங்கட்டி இதமான குளிர் காற்றுக்கு புதியதாக தயாரிக்கப்பட்ட மிக்சரை வாங்கிச் சாப்பிடலாம் என்று நினைத்தார். மழை வருவதற்கான வாய்ப்பு இருந்ததால் பெரும்பாலானவர்கள் தன்னைப் போன்றே மிக்சர் வாங்குவதற்கு வந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே கடைக்கு அருகில் சென்றார்.

கடை என்றால் ஒருவர் மட்டுமே அமர்ந்து வியாபாரம் செய்யக்கூடிய ஆறுக்கு ஆறு அளவிலான கடை. அதன் ஒரு மூலையில் ஊதா நிறத்திலான தடித்த பிளாஸ்டிக் பையில் அன்று தயாரிக்கப்பட்ட ஓமப்பொடியும், அதே அளவிலான வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் மொறு மொறு காராச்சேவும் இருந்தன. இந்த இரண்டின் மீது சாய்ந்த படி ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் காராப்பூந்தியும் மற்றொரு பையில் உடைத்த பொரிகடலையும், பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் இருந்த மற்றொரு பையில் அரிசி பொரியும் இருந்தன. பூசாரி உட்கார்ந்திருக்கும் பலகைக்கு சற்று முன்னோக்கி நேர் மேலாக இரும்பு தராசு தொங்க விட்டிருந்தது. ராஜா இவற்றையெல்லாம் கூட்டம் ஓரளவிற்கு கலையும் வரை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தார். ராஜாவை கவனித்த பூசாரி தனக்கே உரிய குசும்புடன், “என்ன ராஜா, இந்தப் பக்கம்?” என்று முழுவதும் சிரிக்காமல் கேட்டவுடன், “மிக்சர் வாங்கிவிட்டு போகலாம்னு வந்திருக்கேன் பூசாரி”. 

“பத்து ரூபாய்க்கு மிச்சர் கொடுங்க” 

“என்னது பத்து ரூபாய்க்கா? ராஜா என்னப்பா இதெல்லாம்? 50 கிராம் 15 ரூபாய்க்கு கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது நீ பத்து ரூபாய்க்கு கேட்கிறது நியாயமா?” 

“அதெல்லாம் நியாயம்தான்.. எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் கலந்து கொடுங்க” என்றவனிடம், “சரியா போச்சு போ” என்று சம அளவில் கிழித்து வைத்திருந்த நியூஸ் பேப்பரை எடுத்து ஒரு குழலாக சுழற்றினார். அருகில் இருந்த பையிலிருந்து கைப்பிடியாக அள்ளாமல் விரல்களை சுருக்கி முதலில் ஓமப்பொடியையும் அடுத்தடுத்து காராபூந்தி மற்றும் உடைத்த பொரிக்கடலையையும் அதற்குள் போட்டு ஒரு குலுக்கு குலுக்கினார் பூசாரி. 

கவனித்துக் கொண்டிருந்த ராஜா, “அந்தப் பொரியை போடலையே” என்றதும் சற்று மேலும் கீழும் ராஜாவைப் பார்த்துவிட்டு, “எனக்குத் தேவைதாம்பா. இதோ பத்து ரூபாய்க்கு எல்லாத்தையும் தந்துடறேன்” என்று நெற்றியில் மெதுவாக அடித்துக் கொண்டு அரிசிப் பொரியையும் கொஞ்சம் அள்ளிப்போட்டு பேப்பரை மேல்புறமாக மடித்து கொடுத்தார். “ஒதுங்கிட்டு போகலாம்னு வந்தேன் அதனால காசு எடுத்துட்டு வரல பூசாரி. கடைக்கு போய் முருகன்கிட்ட குடுத்து விடுறேன்” என்று சொன்னவனிடம் “காசு இல்லையா.. சரி சரி பரவால்ல ராஜா. நீ எல்லாம் மிச்சர் வாங்குறதுக்கு என் கடைக்கு வந்ததே பெரிய விஷயம்தான். போய் கொடுத்து விடுப்பா” என்றார். பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வண்டியின் முன்பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் டேங்கின் கவரில் வைக்க முற்பட்டபோது உள்ளே ஒரு அழுக்குத் துணி இருந்ததைப் பார்த்துவிட்டு, இதில் வைத்தால் சாப்பிடும் பொருள் வாடை அடித்து விடும், அதே நேரத்தில் துணியைக் கீழே போட்டால் அவசரத்திற்கு வேறுத் துணியைத் தேட வேண்டும் என்று யோசித்தார். கையில் துணியை எடுத்துவிட்டு கவரின் உள்ளே அந்தப் பொட்டலத்தை வைத்தார். சுற்று முற்றும் பார்த்தவர் கையில் அந்த கந்தல் துணியை எடுத்துக் கொண்டு மீண்டும் பூசாரி கடைக்கே சென்றார்.

“பூசாரி, நான் காசு கொடுக்கணும்ல” 

“ஆமா ராஜா” 

“அதான்… நான் காசு கொடுக்கும்போது இந்த துணியை வாங்கிக்கிறேன். இப்ப இதை வாங்கி உள்ளே வச்சுக்கோங்க” என்றதும் “ஏன்பா, உன்னைய எல்லாரும் ஏன் கஞ்சராஜான்னு சொல்றாங்கன்னு இப்பதான் புரியுது. பத்து ரூபாய்க்கு எனக்கு தண்டனையா?” என்று தலையில் அடித்துக் கொண்டே கொடு என்று வாங்கி வைத்துக் கொண்டார். 

கையை வீசிக்கொண்டு ஏதோ சாதித்தது போல் சிரித்துக் கொண்டே வண்டியின் ஆக்சிலேட்டரை மெதுவாக முறுக்கினார். எங்கேயாவது நின்று சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று மெதுவாக வண்டியை ஓட்டினார். எங்கு பார்த்தாலும் மனிதர்களின் தலைகள்தான் தெரிந்தன. சரி, கடைத் தெருவில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்கு சென்று சாப்பிடலாம் என்று அத்திசை நோக்கி வண்டியை ஓட்டினார். ‘பத்து ரூபாய் மிச்சர் சாப்பிடுவதற்கு பெட்ரோலை வேற செலவு செய்ய வேண்டிருக்கிறது’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே வண்டியை ஒட்டி பள்ளிக்கூடத்தின் வாசலை சென்றடைந்தார். அங்கு மாலை நேரத்தில் கைப்பந்து விளையாடுபவர்களுக்காக கதவு திறந்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்தவர், வண்டியை வெளியே நிறுத்திவிட்டு பொட்டலத்தை கையில் எடுத்துக் கொண்டு கைலியை தூக்கிக் கட்டிக்கொண்டு உள்ளே சென்றார். அங்கிருந்த பல மரங்களில் ஒரு மரத்தின் அடியில் உள்ள வகுப்பறையின் வாசலில் அமர்ந்து பொட்டலத்தை பிரிக்க எத்தனித்த போது சற்றுத் தொலைவிலிருந்து ஒரு சத்தம் வந்தது. “ராஜா அண்ணே, என்ன இந்தப் பக்கம்?” என்று வாலிபால் விளையாட வந்த ஒருவர் கேட்டுக் கொண்டே அருகில் வந்ததும், பதறிப் போய் மிச்சர் பொட்டலத்தை கைலியில் மறைத்து கைலியின் கீழ்புறத்தை எடுத்து மேல் பக்கமாக மடித்து இறுக்கமாகக் கட்டினார். அருகில் வந்தவனிடம் “சும்மா காத்து வாங்கலாம்னு வந்தேன்” என்றதும் “ஆமாம்ணே, காத்து மட்டும்தான் இலவசமாகக் கிடைக்கும்” என்ற பதிலில் ‘இவன் நம்மள நக்கல் பண்றானா?’ என்று மனதில் நினைத்துக் கொண்டே, “வேறு யாரும் விளையாட வரலையா?” என்று கேட்டார். “பின்னால் வந்துகிட்டு இருக்காங்க” என்று அவன் சொன்னவுடன், ‘சரியா போச்சு! இங்கிருந்து கிளம்ப வேண்டியதுதான். இல்லையென்றால், நிம்மதியாக சாப்பிட முடியாது’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, “சரி நான் கிளம்புறேன்டா தம்பி” என்று கூறி தூக்கிக் கட்டிய கைலியின் இறுக்கத்தை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டே நடந்து வெளியே வந்தார். 

எங்கு போய் இதைச் சாப்பிடுவது என்ற குழப்பத்துடன்… என்றும் இல்லாமல் இன்றைக்கு பத்து ரூபாய் செலவழித்தும் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை என்று தன்னைத்தானே நொந்துக் கொண்டு அருகில் இருக்கும் முருகன் கோயில் பாலத்திற்குச் சென்று சாப்பிடலாம் என்று வண்டியைக் கிளப்பினார். மெதுவாக தூறல் விழ ஆரம்பித்ததால் சற்றே சுதாரித்துக் கொண்டு கடைக்கு போய் விடலாம் என்று நினைத்து நேராக வண்டியை கடைக்கு விட்டார். கடையின் அருகில் வந்தவுடன் கைலிக்குள் இருந்த மிச்சர் பொட்டலத்தை எடுத்து மீண்டும் டேங்க் கவரில் வைத்து கவரின் தலைப்பகுதியில் உள்ள பஞ்சு நன்றாக மூடிக்கொண்டு ஒட்டி இருப்பதை உறுதி செய்து கொண்டார். கடிகாரத்தில் ஐந்து நாற்பத்தி ஐந்து மணி எனக் காட்டியது. இன்னும் பதினைந்து நிமிடத்தில் முருகன் கிளம்பியதும் சாப்பிட்டு விடலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே வேலையில் இறங்கினார்.

“முருகா…. அந்த பத்துக்கு பன்னிரண்ட கொண்டு வா. அப்படியே அந்த டூல்ஸ் பாக்ஸையும் இங்கே எடுத்துட்டு வா”என்றதும் முதலாளி கேட்ட பொருள்களை அவன் அருகில் கொண்டு வந்து வைத்துவிட்டு “அண்ணா…சின்ன வேலைதான, இதை நான் பார்க்கட்டுமா?” என்று கேட்டவனிடம் “நீ உள்ளே இருக்கும் அந்த பைக்கை முதலில் முடி. நான் இதை பார்த்துக்கிறேன்” என்று ஸ்பேனரை போல்டின் மீது வைத்து அழுத்தமாக முறுக்கினார். “சரி அண்ணா” என்று முருகன் எழுந்ததுதான் தாமதம், போல்டை முறுக்கி கொண்டிருந்த ஸ்பேனர் கைநழுவி அருகில் இருந்த தகரத்தில் வேகமாக குத்தி நின்றது. தகரம் சுண்டு விரலின் கீழ்பகுதியில் குத்தியதில் சுதாரித்துக் கொண்ட ராஜா லாவகமாக அதிலிருந்து கையை எடுத்தார். கை முழுவதும் இரத்தமானது. “அய்யய்யோ! அண்ணா! என்னாச்சு?” என்று இரத்தத்தை பார்த்து பதறிய முருகனிடம் அங்கிருக்கும் பழைய துணியை தண்ணீரில் நனைத்து கொண்டு வரச் சொன்னார். தண்ணீரில் நனைத்த துணியை அழுத்தமாக அழுத்தி இரத்தம் வராமல் பிடித்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் இரத்தம் நின்றதும் துணியை எடுத்து பார்த்த பொழுது நன்றாக சதை பிரிந்து கிழிந்திருந்தது. சுதாரித்த முருகன் “இது சரி வராதுண்ணே! வாங்க ரமேஷ் டாக்டர்கிட்ட போய் பார்த்துடலாம்” என்று கூறியவுடன், காயத்தைப் பார்த்துக் கொண்டே, “ஆமா, நல்லா வெட்டிருக்கு. ஆனா, ரமேஷ் டாக்டர் கிட்டலாம் வேண்டாம் தர்மாஸ்பத்திரிக்கு போகலாம்” என்றவரிடம் “ஆறு மணிக்கு யாருண்ணே அங்க இருப்பாங்க? இங்கேயே பார்த்திடலாம்ணா” என்றான். “இல்லை இல்லை.. தர்மாஸ்பத்திரிக்கு கிளம்பு” என்று சற்று கண்டிப்புடன் கூறிக்கொண்டு ஆணியில் தொங்க விட்டிருந்த வண்டியின் சாவியை எடுத்தார். 

“அண்ணே! நீங்களா வண்டி ஓட்டப் போறீங்க?” என்று கேட்ட முருகனிடம், “ஆம்மாப்பா, பரவால்ல நானே ஓட்டுறேன்” 

“என்னண்ணே, விளையாட்டா? இவ்ளோ அடிபட்டிருக்கு. பரவால்ல… சாவிய என்ட குடுங்க… நான் ஓட்டுறேன்” என்று விடாப்பிடியாக வண்டிச்சாவியை வாங்கினான். 

எங்கே பெட்ரோல் டேங்க் கவரில் மறைத்து வைத்துள்ள மிச்சர் பொட்டலத்தை பார்த்து விடுவானோ என்ற பயம் வேறு… ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லை என்றால் தனியாக செலவு செய்ய வேண்டுமே என்ற பயம் வேறு… ஒரே மனக் குழப்பத்துடன், அடிபட்ட உள்ளங்கையில் துணியை வைத்து அழுத்திக் கொண்டு மறு கையால் வண்டியின் பின்னால் உள்ள கம்பியை பிடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாசல் வந்தவுடன், “அண்ணே! இருங்க நான் போய் உள்ள டாக்டர் இருக்காங்கன்னு பார்த்துட்டு வர்றேன்” என்று முருகன் சென்றான். சென்ற வேகத்தில் மீண்டும் வந்தவன், “நர்ஸ் மட்டும்தான் இருக்காங்க. வாங்க உள்ள போய் பார்க்கலாம்” என்று கூட்டிக்கொண்டு போனான். 

“என்ன இவ்ளோ பெரிய காயமா இருக்கு. ஏதும் சண்டை போட்டீங்களா?” என்று நர்ஸ் கேட்டவுடன் “இல்லை பைக்கின் தகரம் குத்தி கிழித்து விட்டது” என்றார் ராஜா.

“சரி சரி உட்காருங்க… கையை காட்டுங்க…. என்னது இவ்வளவு ஆழமாக காயம் இருக்குது… கண்டிப்பாக தையல் போடனும்… தையல் போட்டால் அதற்கு ஊசியும் போடனும். இங்க நான் மட்டும்தான் இருக்கேன். நீங்க வேணா வேற டாக்டர் கிட்ட போய் பாருங்களேன்” என்று சொன்ன நர்ஸைப் பார்த்து, “தயவு செய்து நீங்களே தையல் போடுங்களேன்” என்று கெஞ்சாத குறையாக ராஜா கேட்டார். “அண்ணே! அதான் நர்ஸம்மா சொல்றாங்கல்ல! இங்க வேணாம்னு வாங்கண்ணே! நாம ரமேஷ் டாக்டர் கிட்ட போயிடலாம்” என்று சொன்னவனை, “நீ கொஞ்சம் சும்மா இருடா” என்று கண்டித்து மீண்டும் நர்ஸிடம் கெஞ்சினார். “இல்லை! இல்லை!! இதற்கு நான் மருத்துவம் பார்க்க முடியாது தயவு செய்து நீங்கள் வேறு டாக்டரைத்தான் பார்க்க வேண்டும்” என்று உறுதியாக கூறியதால் வேறு வழியில்லாமல் அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள்.

பைக்கில் ஏறியவுடன் முருகன் தன் அர்ச்சனையை ஆரம்பித்தான். “அண்ணே! நான் சொல்றதை கேளுங்க ஒன்னு ரமேஷ் டாக்டர் கிட்டயே போய் பாத்துருவோம். இல்லைன்னா பக்கத்துல பரமக்குடிக்கு போயி பெரியாஸ்பத்திரில காமிச்சிருவோம். தயவு செஞ்சு இதுலயும் காச பாக்காதீங்கணா!” 

“இல்லடா_ எனக்கு வலியும் தாங்க முடியல…ரமேஷ் டாக்டர்ட்டயே பார்த்துருவோம்” என்று கூறி இருவரும் கிளினிக்கை நோக்கிச் சென்றனர். நேரம் ஆக ஆக வலி அதிகமாக இருந்ததால் சோர்வுடன் காணப்பட்ட ராஜாவுக்கு மீண்டும் மீண்டும் டேங் கவரில் உள்ள மிக்சர் ஞாபகமே வந்து சென்றது. ‘இதைப் பார்த்து விட்டால் அவனுக்கு வாங்கி வராமல் தனக்கு மட்டும் வாங்கி வந்து விட்டோம் என்று நம்மை தவறாக நினைப்பானோ?’ என்று எண்ணிக்கொண்டே ரமேஷ் டாக்டரிடம் வந்துவிட்டனர். வழமையாக பைக்கை ராஜாவிடம் சர்வீஸ் விடக்கூடிய அடிப்படையில் முன்னரே ராஜாவைப் பற்றியும் அவருடைய தன்மையைப் பற்றியும் நன்கு அறிந்தவர் தான் டாக்டர். 

“என்னாச்சு ராஜா?” 

“பைக்ல உள்ள தகரம் கிழிச்சிருச்சு சார்”. 

“சரி, அங்க படுத்துக்கோங்க பார்க்கலாம்” என்று கூறி டார்ச் லைட்டை கையில் எடுத்துக்கொண்டு, நர்ஸிடம் முதலுதவிப் பெட்டியை கொண்டு வரச் சொன்னார். “நல்ல ஆழமா கிழிச்சிருக்குது. சரி… ஒரு நாலு ஸ்டிச்சஸ் போடுற மாதிரி இருக்கும்” என்று சொல்லி முடிவதற்குள், “சார், எவ்வளவு சார் பீஸ் ஆகும்?” என்று கேட்டார். “ஒரு ஸ்டிச்சஸுக்கு நூறு ரூபாய்” என்ற பதிலைக் கேட்டு பாதி மயக்க நிலைக்கு சென்றார். இருந்தாலும் வலி வேறு பொறுக்க முடியாமல் “சரி போடுங்க சார். முடிஞ்சா மூணு தையல்லையே முடிச்சுருங்க” என்று அந்த நிலைமையிலும் கூறியது டாக்டரை சற்று கடுப்பாக்கியது. 

நான்கு தையல்கள் போட்டு அதன் மேல் மஞ்சள்நிற மாவு போன்ற மருந்தை வைத்து, வெள்ளை துணியை இரண்டாக மடித்து அதனை முழுவதுமாக மூடி இறுக்கமாகக் கட்டிவிட்டு, “தையல் பிரிக்கும் வரையிலோ அல்லது பத்து நாட்களுக்கோ இதில் தண்ணீர் படக் கூடாது”. என்று கூறும்போதே விஷயம் அறிந்து ராஜாவின் மனைவி கையில் பணத்துடன் அங்கு வந்து சேர்ந்தார். “சார்! என்ன ஆச்சு சார்?” என்று டாக்டரிடம் பதட்டத்துடன் விசாரிக்க பொறுமையாக எடுத்துக் கூறினார். “சரிங்க சார், இனி அடுத்து எப்பொழுது வர வேண்டும்?” என்று கேட்டுக் கொண்டே, “ஃபீஸ் எவ்ளோ சார்” என்று கேட்டார். எவ்வளவு தொகை என்று டாக்டர் சொல்லும் முன்பதாகவே அவசரப்பட்டு ராஜா “நானூறு ரூபாய் கொடு” என்றார். டாக்டர் சிரித்துக்கொண்டே, “இல்லை 600 ரூபாய் கொடுங்கள்” என்றார்.

“சார்! தையலுக்கு நூறுரூபாய்னுதான சொன்னீங்க” என்றவுடன் மனைவியும் கடுப்பாகி, “சார், இவருக்கு வேற வேலையில்லை சார் இந்தாங்க” என்று சொல்லி ஆயிரம் ரூபாய் கொடுத்து நானூறு ரூபாயை பெற்றுக் கொண்டு முருகனிடம் ராஜாவை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு விட்டுவிட்டு கடையை அடைக்கும்படி சொல்லிச் சென்றார். 

இவ்வளவு கலவரங்களுக்கு மத்தியிலும் ராஜாவின் நினைப்பு அந்த மிக்சரின் மேல் இருந்தது. இப்பொழுதும் அந்த மிக்சரை முருகன் பார்த்து விடக்கூடாது என்றே எண்ணியிருந்தார். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தவுடன் எப்படியாவது முருகனை மிக்சர் பொட்டலத்தை கவனிக்க விடாமல் உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று அவசர அவசரமாக அவனை கடைக்கு போகச் சொல்லி விட்டு நல்லவேளையாக மிச்சர் விஷயம் முருகனுக்குத் தெரியவில்லை என்று பெருமூச்சு விட்டார். 

இப்பொழுதாவது மிக்சரை எடுத்து சாப்பிடலாம் என்றால் இதற்கு முன்பாக தன் பிள்ளைகள் அடிக்கடி கேட்டும் ஏதேதோ சாக்குப் போக்கு சொல்லி வாங்கி கொடுக்காததால், இப்பொழுது தனக்கு மட்டும் வாங்கியதை நினைத்து கண்டிப்பாக தன்னைத் தவறாக நினைத்து விடுவார்கள் என்ற பயம் கலந்த எண்ணத்தில் சோபாவில் சாய்ந்தவன் அப்படியே கண்ணயர்ந்து விட்டான்.

மறுநாள் காலை விடிந்ததும் வழக்கம்போல் ராஜாவின் மனைவி தனது அன்றாட வேலைகளை பார்த்து குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்கு தயார் செய்து கொண்டிருந்தாள். சோபாவில் படுத்திருந்த ராஜா, இடையிடையே இடது புறமும் வலது புறமும் திரும்பி திரும்பி படுத்தார். அவர் முழித்துவிட்டதாக நினைத்த ராஜாவின் மனைவி, “ஏங்க, வண்டிய எடுத்துட்டுப்போயி புள்ளிகளை நான் ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடுறேன்” என்று சொன்னவுடன் பதறிப் போய் எழுந்த ராஜா, “இல்லையில்லை, நானே போய் விட்டுட்டு வந்துடறேன்” என்று தன்னை அறியாமல் சொன்னார்.

“இல்லங்க கையில் கட்டு போட்டுட்டு நீங்க போக முடியாது. நானே போயிட்டு வந்துடறேன்” என்று சொன்னவளை இடைமறித்து, “அப்படி என்றால் நீ ஆட்டோவில் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிட்டு வா” என்று சொன்னவுடன் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று ‘கையில் தானே அடிபட்டது தலையில் ஏதும் அடிபடவில்லையே!’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டே, “உண்மையாத்தான் சொல்றீங்களா? ஆட்டோவுக்கு அம்பது ரூபா கேப்பாங்களே பரவாயில்லையா?”

“ஒன்னும் பிரச்சனை இல்ல தாராளமா நீ கூட்டிட்டு போய் விட்டுட்டு வா” என்றதும் அருகில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி தனது மனைவி குழந்தைகளுடன் செல்வதைப் பார்த்துக் கொண்டே இருந்தவர், ஆட்டோவில் ஏறியதை உறுதி செய்தவுடன் வேக வேகமாக வண்டிக்கு அருகில் சென்றார். சீட் முழுவதும் ஈரமாக இருந்ததைப் பார்த்து ஒரு கணம் அவனது மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது. மிக வேகமாக பெட்ரோல் டேங்க் கவரை பிரித்துப் பார்த்தார். உள்ளே பொட்டலம் அப்படியே இருந்தது. ஆனால், அன்று இரவு பெய்த கன மழையால் அவர் நினைத்ததைப் போல் இல்லாமல் மிச்சர் முழுவதும் தண்ணீரில் ஊறி உப்பி போய் இருந்தது. ஒரு கணம் மிச்சர் பொட்டலத்தை உற்றுப் பார்த்து வெறுப்பில் கடுப்பாகி தூக்கி எறிந்தார். பின் அமைதியாக யோசித்த ராஜா ‘இருக்கட்டும்…..மிக்சர வேற சாப்பிட முடியவில்லை. நம் பழைய துணி பூசாரியிடம்தானே இருக்கிறது. பொறுமையாக பத்து ரூபாய் கொடுத்து அதனை வாங்கிக் கொள்ளலாம்’ என்று தன்னைத்தானே அமைதிப்படுத்திக் கொண்டு சோபாவில் அமர்ந்தார்.

kathargani.edn@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button