இணைய இதழ் 101சிறுகதைகள்

மரகதப்புறா – கார்த்திக் பிரகாசம்

சிறுகதை | வாசகசாலை

கலையரசியும், நந்தினியும் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் கர்ப்பம் தரித்தார்கள்.

***

பொதுவாகவே பெண்களின் தோழமைக்கு அற்ப ஆயுள். தட்டி விட்டால் வெட்டிக் கொள்ளும் இயல்பு. வெளிப்பார்வைக்கு ஸ்திரமானது போலத் தோற்றமளித்தாலும் அவ்வப்போது தோன்றும் புயலின் ஆட்டத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், அந்தரத்தில் அலையுறும் மின் இணைப்பு கம்பிகளைப் போல எப்பொழுது வேண்டுமானாலும் அறுந்து விழும் சந்தர்ப்பம் எதிர்நோக்கி உள்ளுக்குள் ஊசலாட்டம் கண்டபடியே இருக்கும். அகவெளியிலிருந்து நட்பைத் துண்டிக்கும் வேலை, திருமணம், குடும்பம், குழந்தை போன்ற புறவுலகக் காரணிகளைத் தவிர்த்துப் பார்த்தாலும், இயல்பாகவே இரு பெண்கள் மனதளவில் ஒத்துப் போய் நீண்ட காலம் நட்பைத் தொடர்வதென்பது அரிதான சங்கதி. இதில் பெண்-ஆண் நட்பு என்பது விதிவிலக்கு. பல ஆண்டுகளைத் தாண்டியும் ஒரு பெண்ணால், இன்னொரு ஆணுடன் தொடர்ந்து அதே தோழமையுடன் காலம் கடந்து நட்பு பாராட்ட முடியும். ஆனால், எல்லா தருணங்களிலும் ஆத்மார்த்தமாக உணராத ஒருத்தியோடு, இன்னொரு பெண்ணால் நீண்ட காலம் செயற்கைத் தனத்தோடு சகித்தபடி இணைந்திருக்க முடியாது.

அந்த விதத்தில் கலையரசியும், நந்தினியும் தங்களது நட்பை ஆரோக்கியமாக வளர்த்தெடுத்து, பரிசுத்தமாகச் செதுக்கிக் கொள்ளும் வாய்ப்பமையப் பெற்ற ஆசிர்வதிக்கப்பட்ட தோழிகள்.

***

இரவே சுயம் மறந்துறங்கும் நடுநிசியில், தூளியில் மிதக்கும் குழந்தை வீறிடுகிறது. செவிடாய் இருந்தாலும், பசிக்கு அழுதிடும் குழந்தையின் சிணுங்கல் பெற்றவளுக்குக் கேட்காமல் போய்விடுமா…! இமைகளைப் பிரிக்காமலேயே பாரம் இழந்த உடலின் எடையை மீட்டினாள். தொட்டிலில் மிதந்த மழலை, அடுத்த கணம் அவளது மடியில் மீண்டது. மார்கச்சை அணிந்திடாத சௌகரியத்தால், ஜாக்கெட்டை எளிதில் திறந்து காம்பைக் குழந்தையின் வாயில் திணித்தாள். மழலையின் இளம் எச்சில் பட்டதும் மயிர்க்கூச்செறிய விரைத்த காம்பு பாலமுதை பாய்ச்சியது. சிலிர்த்த உடலைச் சீர்செய்யக் கண் விழித்தாள். கண்களைத் திறவாமல் உதட்டினை மட்டும் நமுட்டி உணவினை உறிஞ்சும் மழலை அதிசயம், ஊறிக் கொண்டிருக்கும் மார்பில் மென் கன்னங்களால் உரசியது. சிலிர்த்த உடல் மற்றொருமுறை கிளர்ந்தடங்கியது. பசியாற்றிக் கொண்டே உறங்கிப் போன குழந்தையைத் தொட்டிலில் இட்டாள்.

இரவைக் கிழிக்கும் தெரு நாய்களின் ஊளைச்சத்தம் குழந்தையின் உறக்கத்தைக் கலைத்துவிடுமோ என்று வெடுக்கென பதறி எழுந்தபோதுதான் கனவென்ற பிரக்ஞை புத்தியில் உரைத்தது. கட்டிலின் ஓரத்தில் குப்புறப்படுத்து  உறங்கிக் கொண்டிருந்தான் பாஸ்கரன். செம்பிலிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு இடது கையை தலைக்குக் கொடுத்து ஒருக்களித்துப் படுத்தாள். வெற்றிடமாகக் கிடக்கும் வயிற்றை தன்னிச்சையாக வலது கரம் மிருதுவாகத் தீண்டித் தடவியது. இளம் இரத்த சூட்டின் வெதுவெதுப்பு இன்னும் படர்ந்திருப்பது போல் பட்டதும் கடகடவென கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது.

கலையரசிக்கு அதன்பின் உறக்கமே கூடவில்லை.

***

நந்தினிக்கு ஒன்பதாவது மாதம் சீமந்தம் முடிந்த நான்கு நாட்கள் கழித்து, பிரசவத்திற்குக் குறிப்பிட்ட நாள் கடந்தும் கலையரசிக்குப் பிரசவ வலி உண்டாகவில்லை. உடனடியாக மருத்துவரைப் பார்க்கலாம் என்று சொன்ன பாஸ்கரனையும், கலையரசியையும் பொறுமையாக இருக்கும்படி பணித்துவிட்டு, வலி உண்டாகும் வரை காத்திருக்கலாமென திண்ணமாகச் சொல்லிவிட்டாள் கலையரசியின் அம்மா மாதேஸ்வரி. பிரசவத்தை நாங்கள் சென்னையிலேயே பார்த்துக் கொள்கிறோம் எனத் திட்டவட்டமாக பாஸ்கரன் கூறிய போது, மாதேஸ்வரிக்கு மனமே ஒப்பவில்லை. இருந்தாலும் குணமான மாப்பிள்ளையின் முடிவை மறுத்துப் பேச விரும்பாமல், மகளின் பிரசவத்திற்காகச் சேலம் ஆட்டையாம்பட்டியிலிருந்து கிளம்பி வந்து ஒரு மாதமாகச் சென்னையில் தங்கியிருந்தாள். பழகிப் போன பதற்றத்தை மறைத்துக் கொண்டு சாந்தமாய் இருக்க முயன்றாள் கலையரசி. பாஸ்கரனுக்கோ எதற்கிந்த வீண் நேரக்கழிப்பு. நேரடியாக மருத்துவமனைக்குச் சென்றுவிடலாம் என உள்ளுணர்வு உந்தியது. அது உள்ளுணர்வோ அல்லது தன் குழந்தையைச் சீக்கிரம் கையில் ஏந்த வேண்டும் என்ற எதிர்பார்ப்போ(?), என்னவாக இருப்பினும் தனது நெஞ்சை ஆற்றுப்படுத்திக் கொண்டு மாமியாரின் வயதிற்கும், அனுபவத்திற்கும் கட்டுப்பட்டு நடப்பவனாய் மௌனம் காத்தான்.

மேலும் மூன்று நாட்கள் கடந்தன.

வயிறு இறங்கவில்லை. வலியும் உண்டாகவில்லை. கலையரசிக்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது. இனிமேலும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குப் போகச் சொல்லி நந்தினியும் அறிவுறுத்தினாள்.

நாள் கடந்துவிட்டது. பிரசவ வலியும் இன்னும் ஏற்படவில்லை. உடனடியாக சிசேரியன் செய்துவிடலாம் எனச் சிசு உண்டாகி உறுதிசெய்த நாள் தொட்டு கலையரசியின் உடல்நிலையைக் கண்காணித்து வரும் மருத்துவர் பரிந்துரைத்தார். சிசேரியன் என்றதும் மாதேஸ்வரியின் முகம் சுருங்கிப் போனது. ‘காசு பிடுங்குவதிலேயே குறியாக இருக்கின்றனர்’ என மருத்துவரின் காதுப்படவே முனகினாள்.

கடுஞ்சினத்துடன் அம்மாவை முறைத்தாள் கலையரசி.

மருத்துவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. கலையரசியையும், பாஸ்கரனையும் கவனித்து மட்டுமே உரையாடினார். ஒருகட்டத்தில் இருவரும் தடுமாறுவதைக் கவனித்த அவர், சற்று நிதானப்படுத்திக் கொண்டு சூழ்நிலையை விளக்கினார்.

“நம் முன்னே இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, ஊசி மூலமாக மருந்து செலுத்தி, செயற்கையாகப் பிரசவ வலியை உண்டாக்க முயல்வது. மருந்து செலுத்தி மூன்று மணி நேரத்திற்குள் வலி உண்டாகலாம். இம்முறையில் குழந்தையின் இதயத்துடிப்பு சீர்கெட அநேக வாய்ப்புள்ளது. எனவே, குழந்தையின் இதயத் துடிப்பைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கண்டிப்பாக இதயத்துடிப்பு குறையும் என்று சொல்லவில்லை. ஒருவேளை… ஒருவேளை… குழந்தையின் இதயத்துடிப்பு குறைவது போலத் தெரிந்தால், உடனடியாக சிசேரியன் செய்தாக வேண்டும். வேறு வழியில்லை. மற்றொன்று ஏற்கனவே சொன்னது போல் நேரடியாக சிசேரியன். நாம் இப்போது கவனத்தில் நிறுத்த வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், குறிப்பிட்ட பிரசவ நாள் கடந்துவிட்டதால், எப்போது வேண்டுமானாலும், தாயின் வயிற்றிலேயே குழந்தை மலம் கழிக்கும் நிலை உருவாகலாம். ஒருவேளைக் கழிவை உட்கொண்டுவிட்டால், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. யோசித்து முடிவெடுங்கள் ஆனால், நம்மிடம் அதிக நேரமில்லை” எச்சரித்துவிட்டு அடுத்த வார்டுக்கு கிளம்பிப் போனார்.

கலையரசியும், பாஸ்கரனும் செய்வதறியாமல் திகைத்துப் போய் நின்றனர் .

சுற்றிமுற்றிப் பயமுறுத்திவிட்டு வேறெந்த முடிவையும் எடுக்கவிடாமல் மீண்டும் சாதுரியமாக சிசேரியனிலேயே வந்து நிறுத்தும் மருத்துவரின் மீதும், பட்டணத்து மருத்துவமனையின் மீதும் வெளிப்படையாகவே கடும் அதிருப்தியைக் காட்டினாள் கலையரசியின் அம்மா. “இதுக்குத்தான் பிரசவத்த ஊருல பாத்துக்கலாம்னு சொன்னேன். பெரியவங்க பேச்ச கேட்டாதான. தனக்குத்தான் எல்லாமும் தெரியும்னு ஆடுனா என்ன பண்றது” எனக் கடுகடுத்த முகத்துடன் பொரிந்து தள்ளினாள். மேலும் ‘இதுவே ஊராக இருந்திருந்தால் நெலமையே வேறு. கண்டிப்பாகச் சுகப்பிரசவம்தான்’ என ஆழமாக நம்பினாள். மகளுக்கு சிசேரியன் செய்வதில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை.

“சிசேரியன்லாம் வேண்டாம்… இன்னிக்கி அமாவாசை” என வாயெடுக்கும் போதே, ‘நீங்கக் கொஞ்சம் சும்மா இருங்க’ என பாஸ்கரன் இடைமறித்தான். மூன்று நாட்களாய் மனதிற்குள் அடக்கி வைத்திருந்த ஆதங்கம், கன்னத்தில் அறையும் வெறியுடன் அனலாக வெளிப்பட்டது.

கலையரசியும் பாஸ்கரனும் அறையைவிட்டு வெளியே சென்று கலந்தாலோசித்தனர்.

அம்மா சொல்வது போலக் கலையரசிக்கும் சிசேரியன் செய்து கொள்வதில் சுத்தமாக உடன்பாடில்லை. ஆனால், தன்னுடைய முடிவால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த விபரீதமும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற பதற்றம் அவளை வெகுவாக அச்சமூட்டியது. “வலி அனுபவிக்கப்போறது நீ. உன் முடிவுதான் முக்கியம். மத்தவங்க பேசுறத காதிலேயே வாங்கிக்காத உனக்கு என்ன தோணுதோ அதுபடி செய்யலாம். நான் கூட இருக்கேன்” பாஸ்கரன் தெம்பூட்டினான்.

நீண்ட நேர மௌனத்திற்குப் பின், “இரவுவரை காத்திருக்கலாம். வலி உண்டாகவில்லையென்றால் சிசேரியன் செய்துவிடலாம்” என்றாள். உள்ளங்கை வியர்க்க இறுக கை கோர்த்திருந்தவளின் நெற்றியில் முத்தம் பதித்தான் பாஸ்கரன்.

தன்னை உதாசீனப்படுத்திவிட்டு, மருத்துவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மருமகனையும், எங்கம்மா சொல்வதைக் கேட்போம் எனக் கொஞ்சமும் குரலெடுத்துக் கண்டிக்காமல், தானும் கணவனோடு சேர்த்துக் கொண்டு தன் பங்குக்கு எடுத்தெறிந்து பேசும் மகளையும் கடுமையாக வெறுத்த மாதேஸ்வரி, இங்கு நடப்பதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல விட்டதையும் வாசலையும் முறைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அதன்பின் வாயே திறக்கவில்லை.

பெரும் மழைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தன மேகங்கள். கருப்பு போர்வைக்குள் ஒளிந்து கொள்ளத் தீவிரமாய் முயல்வது போல் வெளியெங்கும் இருள் பரவியது

மதியம் சாப்பிட்டுவிட்டு உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு திடுமென வயிற்றில் மின்னல் வெட்டியது போல் வலித்தது. வெட்டிய மின்னல் வானில் ஆக்ரோஷ இடியாய் ஓலமிட, கலையரசி கத்தி பெரும் கூச்சலிட்டாள். உடனடியாக அறுவைச் சிகிச்சை அரங்கிற்குக் கொண்டு சென்றார்கள். குழந்தையின் இதயத்துடிப்பு படுவேகமாக குறைவதாக மருத்துவ சாதனம் அலறியது. மருத்துவரும், செவிலியர்களும் பதற்றமாகினர். மூச்சுத் திணறியது.

கிட்டத்தட்ட இருபத்தைந்து நிமிடங்களுக்கு மரணத்தீயின் விளிம்பில் நிற்பது போல அறுவை சிகிச்சை அறையின் முன் அரற்றிக் கொண்டிருந்தான் பாஸ்கரன். அவன் கலையரசியைக் காணும் போது அவள் அரை மயக்கத்தில் கிடந்தாள்.

அவளது பாதுகாப்பான கருவறையை விட்டு வெளியேறுவதை விரும்பாத குழந்தை, வெளியுலகத்தின் செயற்கை வெளிச்சம் பட்டதும் தன் சுவாசத்தை நிறுத்திக் கொண்டதை, கலையரசி கண் விழித்த போது, அவளிடம் சொல்லிடும் வலிமையின்றி கதறி அழுதான் பாஸ்கரன்.

கலைந்த மேகங்கள் மழையைத் தராமல் அன்று பொய்த்தன.

***

அடுத்த ஒரு வாரத்தில் நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

வெளியுலகத்தைக் காணத் திராணியில்லாமல், அறை முழுவதும் இருளை நிரப்பிக் கொண்டு வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தாள் கலையரசி. நந்தினிக்குக் குழந்தை பிறந்தது மகிழ்ச்சியாகவும், அதே சமயம் சுய இழப்பை மேலும் பூதாகரமாக்கி தனக்குள்ளேயே ஒடுங்கச் செய்வதாகவும் மனதை வாட்டி வதைத்தது. திடமானவள்தான் என்றாலும், இந்த விஷயத்தில் மிகுந்த பலகீனம் அடைந்தாள். பாஸ்கரன் அலுவலகத்திற்கு விடுப்பெடுத்து கலையரசியின் அருகாமையிலேயே இருந்தான்.

கர்ப்ப காலத்தின் கடைசி சொச்ச நாட்களை உற்சாகமின்றி கழித்தாள் நந்தினி. கீழிறங்கியிருக்கும் வயிற்றில், சிசு தன் இருப்பை உணர்த்தும் ஒவ்வொரு கணமும் கலையரசியை நினைத்து மனம் பெருத்த வேதனை அடைந்தது. மற்ற எல்லா காரியங்களையும் போலவே இருவரும் திட்டமிட்டு ஒரே காலத்தில் கர்ப்பம் தரித்திருந்தார்கள். இப்படிப்பட்ட இரக்கமற்ற சூழ்நிலையில், கலையரசியை மீண்டும் சந்திக்கும் தைரியமே நந்தினிக்கு வரவில்லை. அவள் கண்களை எப்படி எதிர்கொள்வது? என்னவென்று ஆறுதல் சொல்வது? ஆயிரமாயிரம் சொற்களைக் கொண்டு நிறைத்தாலும், ஒரு உயிரின் இழப்பை ஈடுகட்ட முடியுமா? அதுவும் ரத்தமும், சதையுமாக பத்து மாதம் சுமந்த பிள்ளை, பூமியில் பிணமாகப் பிறப்பதை விட வேறென்ன கொடுமை ஒரு பெண்ணிற்கு இருக்க முடியும்? தீவிர மன உளைச்சலினால் சரியாக உண்ணாமல், சோகம் தோய்ந்த முகத்துடன் அலக்கழியும் நந்தினியைப் பார்க்க அவளின் அம்மா தாமரைக்குச் சங்கடமாக இருந்தது.

ஒருகட்டத்தில் குழந்தையைக் கூட மறந்து தொடர் மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருந்தவளுக்கு, அதே மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. சற்று மயக்கம் தெளிந்ததும் பசியால் வீறிடும் குழந்தையை நந்தினியின் மாருக்கு நேராக படுக்க வைத்தாள் நர்ஸ். உறைந்து போயிருந்த கரங்களைத் தூக்கச் சிரமப்பட்டவளுக்கு, நைட்டியின் மேல் பட்டன்களை அவிழ்த்து உதவினாள் அம்மா. முலையைப் புகட்டினாள். ஓரிரு திணறலுக்குப் பிறகு, காம்பைக் கச்சிதமாகக் கவ்வியது. மழலையின் மென் உதடுகள் தீண்டியதும், நந்தினியின் உடல் குளிர்ந்து சிலிர்த்தது. கனத்திருந்த மனம் சற்று இலகுவானது போல் இருந்தது.

பொழுது கடந்த பின்னும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை. காம்பிலிருந்து உறிஞ்சத் தெரியாமல் சிரமப்படுவதாக நினைத்து, மாரை மேலிருந்து காம்பை நோக்கி அமுக்கி தள்ளி குழந்தைக்கு உதவ முற்பட்டாள் நந்தினியின் அம்மா. என்னதான் பெற்றவளாக இருந்தாலும், மாரில் கை பட்டதும் நந்தினிக்குக்

கூச்சமாக இருந்தது. ஆனால், வெண்ணிற திரவம் எதுவும் வெளி வரவில்லை. குழந்தையின் பசியைப் போக்க தற்காலிகமாக வெதுவெதுப்பான தண்ணீரில் பால் பவுடர் கலந்து சங்கடையில் குடுத்தாள். பசியடங்கியதும் குழந்தையின் அழுகை மெல்லச் சிணுங்கலாகி ஓய்ந்தது. புரை ஏறாமல் இருக்கத் தோளில் போட்டுக் கொண்டு முதுகைத் தட்டிக் கொடுத்தாள். ஏப்பமிட்டு உறங்கியதும் நந்தினியின் பக்கத்தில் குழந்தையைப் படுக்க வைத்தாள்.

இரண்டு நாட்களுக்கு மேலாகியும் பால் சுரப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பரிசோதனை செய்து பார்த்ததில், தாய்ப்பால் சுரப்பிற்கு அவசியமான புரோலக்டின் ஹார்மோன் குறைபாடு நந்தினிக்கு இருப்பது தெரிய வந்தது. அதுமட்டுமில்லாமல் நந்தினிக்குத் தாய்ப்பால் சுரப்பதற்கு வாய்ப்பே இல்லையெனப் பலவிதமான சோதனை முடிவுகளைக் கையில் வைத்துக் கொண்டு புரியாத மருத்துவ மொழியில் உறுதிப்படக் கூறினார் கலையரசியைக் கவனித்த அதே மருத்துவர்.

நந்தினிக்குக் குழப்பமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

வெறும் காம்பைச் சப்பி ஏமார்ந்து போகும் குழந்தையை நினைத்து வெம்பினாள். இயலாமையின் பொருட்டு ஊற்றெடுத்த குற்றவுணர்ச்சி மனதை குத்தீட்டியால் கிழித்தது. பத்து மாதம் சுமந்தால் மட்டும் தாய்மை நிறைவுற்றிடுமா(?) தன்மீதே வெறுப்பு கவிழ்ந்தது. பவுடர் பாலை கலந்து கொடுக்கும் போதெல்லாம் இன்னதென காரணம் சொல்லத் தெரியாத ஒரு பொறாமை அம்மாவின் மீது தோன்றியது. அதுவே மெல்ல மெல்ல குழந்தையிடமிருந்து விலகல் உணர்வை ஏற்படுத்தத் துவங்கியதும் நந்தினிக்கு மீள முடியாத நிரந்தர சூனியத்தில் அடைபட்டது போலிருந்தது.

***

நேர்வெயில் நெடுநெடுவென மேலேறியது. ஓயாத ஊமை அழுகையினால் உறக்கமில்லாத முகம் ஊதிப் பெருத்திருந்தது. வியர்வை பெருக்கெடுத்து உடலை நனைக்க, சைக்கிளை ஏறி மிதித்தாள் கலையரசி. மார் கனத்தது. மொத்த உடலின் எடையும் மார்பில் தஞ்சமடைந்தது போல் சுளீரென வலித்தது. தாளவில்லை.

வீறிட்டு அழும் குழந்தை சத்தமும், அதனூடே சமாதானப்படுத்த முயலும் இரண்டு குரல்களும் வாசல்வரை கேட்டன. அவசர அவசரமாகக் கேட்டைத் திறந்து சைக்கிளை நிறுத்திப் பூட்டினாள். வீட்டிற்குள் நுழையும் போதே ஜாக்கெட் கொக்கிகளை அவிழ்த்து மாரைத் தளர்த்திக் கொண்டாள். போன வேகத்தில் நந்தினியிடமிருந்து குழந்தையை மடியில் வாங்கி காம்பினைத் திணித்தாள். குழந்தையின் விம்மல் அடங்கியதும், கலையரசியின் அருகில் சென்று அமர்ந்தாள் நந்தினி.

நீண்ட மௌனத்திற்குப் பிறகு கலையரசியின் கரத்தை இறுகப் பற்றினாள். எதுவும் பேசவில்லை. உள்ளத்தில் திரண்டிருந்த வலி கண்ணீராய் கசிந்தது. கசந்து போன நெஞ்சங்களில் ஈரம் சுரந்தது.

karthiksona91@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button