இணைய இதழ் 125கட்டுரைகள்

கே.பாலமுருகனின் தலேஜூ : மொழியின் களியாட்டம் – தமிழ் ஐயப்பன், சிங்கப்பூர்

கட்டுரை | வாசகசாலை

முதல் காதலைத் தொலைத்துவிட்டுத் தேடுபவர்களுக்குச் சமர்ப்பணம் என நாவல் தொடங்குகிறது. மிக எளிதான கட்டமைப்பு கொண்ட அழகியல் நாவல் என்பதை முதல் அத்தியாயம் தகர்த்து எறிகிறது. எழுத்தை இவ்வளவு வளைக்க முடியுமா என ஒவ்வொரு அத்தியாயமும் மூச்சடைக்க வைக்கின்றது. இந்த நாவலை வாசித்து அறிமுகம் செய்யும் வாய்ப்பு சிங்கப்பூரில் இயங்கும் சொல்லாடும் முன்றில் வழியாக வந்தது. தேசிய நூலகத்தில் அறிமுகம் செய்து பேசினேன்.

முதலில் இந்த நாவலில் என்னை வியக்க வைத்தது எழுத்தாளர் தன்னைத்தானே ஒப்புக்கொடுத்துக்கொண்ட அல்லது இதற்காக மேற்கண்ட சவால்கள். சாதாரணக் காதல் நாவலாக எழுதி எளிதாக விற்றுவிட்டுப் போய்விடமுடியும். அப்படியல்லாமல் மூன்று பெண்கள், கதையின் மையமாக வரும் சரவணன் எனும் பாத்திரத்தின் மனச்சிதைவு மிகுதியான தனிமையில் போத- அபோத மனத்தின் விழிப்பு. அதற்கேற்றாற் போல் மொழி நடை, காட்சி மாறுதல்கள் என எல்லாவற்றையும் திறம்படக் கொடுத்துள்ளார். முக்கியமாகத் தற்காலப் பெருந்தொற்றான கொரனா சூழ்ந்த நகரைக் கதைக்களமாகக் கொண்டது மிகச்சிறப்பு.

கதாபாத்திரங்களைத் தன்மையை வடிவமைத்து அதனையே காட்சி மாறுதலுக்கு உபயோகப்படுத்துவது மிகச் சிறப்பு. சரவணனின் அம்மாவிற்கு வலது கை நீளம் என்று அந்தப் பாத்திரத்தை எழுதினால் அதேயே கை நீண்டு கொண்டே போனது என அதை மாய யதார்த்தவாதத்தின் வழி காட்சி மாறுதலுக்காகக் கையாளும் போது நாவல் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது.

காமினியின் கதாபாத்திரம் காதலை அள்ளித்தரும் கதாபாத்திரமாகவும் “சரா என்னை யாரும் காதலித்ததே இல்லை,” எனக் காதலுக்கு ஏங்கும் கதாபாத்திரமாகவும் வருகிறது. மசாஜ் நிலையத்தில் வேலை செய்கிறாள். எத்தனையோ நிர்வாணத்தைத் தினந்தோறும் பார்க்கிறவள். தான் நேசிப்பவனின் நிர்வாணத்தை வெறுக்கிறது. அன்போ,காதலோ நிர்வாணமல்ல என்பதைப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லும் பகுதி. அவள் தரும் பணத்தை மறுதலிப்பவனாக சரா மானம், அவமானம் பார்க்கும் சமூக மனிதனாக அவள் முன் இருக்கிறான். திடுதிப்பென்று செத்தும் போகிறாள். பறவை மாதிரி எந்தவொரு அடையாளமும் இல்லாமல் செத்துப்போனவளை நினைத்து சரா வெதும்புகிறான். அவள் இறந்து பதினாறாவது நாள் நினைவின் உருவகமாக அருகில் வந்து அமர்கிறாள். மாபெரும் தனிமைக்கு மத்தியில் அபோத மனத்தின் உருவெழுச்சியாக அமர்ந்து வதைக்கத் தொடங்குகிறாள்.

இன்னொரு பாத்திரமாக கமாரியா நேபாளத்தில் குமாரியாகப் பட்டம் சூட்டப்பட்டு பின்பு வெளியேறி சமூக வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டவளாக வருகிறாள். நிகழ்காலத்தில் அவள் தொடர்பில் இருந்தாலும் அவள் பேசும் மலாய் பிடிக்காமல் சரா ஒதுங்கி இருக்கிறான். அவள் ஆத்திரத்தின் உருவாக நினைவில் எழுகிறாள். அவள் வரும் போதெல்லாம் வெறுப்பைச் சுரப்பவனாக சரா மாறுகிறான். அதிலிருந்து விடுபடப் பெருந்தொற்றில் முகத்தை கூடப் பார்க்கமுடியாமல் செத்துப் போன அம்மாவையும், காமினியையும் தேடுகிறான். காமினியின் அழுத்தத்தின் காரணமாக முதல் காதலான கலையரசியை தேட முடிவெடுத்து செராஸில் அலைகிறான். கதையில் யாருக்குமே கல்வியறிவு போதுமானதாக இல்லை. அதன் வழியே கிடைக்கும் உதிரி வாழ்க்கை, நிலையில்லாத தொழில், குறிக்கோள் இல்லாத பயணம் நாவல் விரிவடைகிறது. இறுதியில் முதல் காதலை அடைந்தானா இல்லையா என்பதோடு நாவல் முடிவுறுகிறது.

இந்தக் கதையை அழகியலாக நவீன நாவலாக எழுதலாம். எழுத்தாளர் எடுத்துக் கொண்ட களம் பின்நவீன மொழியையும் அதன் வழியே இருத்தலியல் சிக்கலைப் பேசுகிறார். இந்தக் கோட்பாடுகள் மட்டுமல்ல நாவலை நேர்கோடற்ற முறையில் தொகுத்திருப்பது வியப்பளிக்கும் ஒன்று. கன்னிகளை ஒன்றோடொன்று இரையை லாகவமாகச் சிக்க வைக்கும் முயற்சி இந்த நாவல். சூழ்நிலைக்கேற்ற காட்சிகள் எழுத்தின் வழியே வாசகனுக்குக் காட்சிகளை உருவாக்குவது என நாவலுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

பீன்நவீனத்தில் உதிர்கள்தான் முதன்மை. பொதுவான நாவல்களில் அழகியல்தான் முதன்மை. இதில் ஒரு மூலையின் ஓரத்தில் சிதறிக் கிடக்கும் நாசி லெமாவும் அந்தக் குவளையின்மீது ஏறி நின்று உணர்கொம்புகளுடன் திசைகளை வெறிக்கும் கரப்பான்களே முதன்மை. அழுக்கேறிக் குழியாய் வீழ்ந்துகிடக்கும் படுக்கை, விந்து கறை படிந்திருக்கும் சுவர்கள், வீச்சமடிக்கும் அறை, நிலையில்லாத வேலை, அறைக்குள் பெட்டி பெட்டியாக அறை அமைத்துத் தங்கியிருக்கும் வங்காள தேசிகள், ஓர் ஆப்பிளுக்காக ஏங்கும் பெரும் முடக்கம் என எல்லாத் துயரங்களையும் அவலங்களையும் நேரிடையாக அல்லாமல் உணர்வெழுச்சியின் வழி பேசுவது சவாலான விசயம்.

கலையரசியைப் பற்றிப் பேசும் இடங்கள் பள்ளிக் காதல் குறித்துப் பேசும் இடங்கள் தொய்வான பகுதிகளாக இருந்தாலும். பள்ளிக் காலத்திற்கான மொழி எனக் கடந்துவிடலாம்.

கள ஆய்வு என்பது ஓர் எழுத்தாளனுக்கு மிக முக்கியம். எழுதும்போது எதை வேண்டுமானாலும் கற்பனையில் எழுதலாம். ஆனால் வாசனைகளை அதை உணர்ந்ததன் வழியேதான் எழுத முடியும். அந்தவகையில் சிறுவனாக இருக்கும்போது அப்பாவிற்கும் அம்மாவிற்கும் இடையில் அமர்ந்து, மோட்டார் சைக்கிளில் வரும்போது உப்பு பொரிந்த வியர்வை வாசம், எல்லாரும் தங்கியிருக்கும் அறையில் எழும் கரப்பான் வாசம், கரும்புச் சாற்றின் வாசமெனப் பல வாசங்களை நுகர வாசிப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

நாவல் பெரும்பகுதி ஓர் அறையினுள் கழிகிறது. அவ்வப்போது நலம் விசாரிக்கும் தோழன் ஜோ அவ்வளவுதான். வீடும் மேல்தளம், கீழ்த்தளம் மற்றும் பெருந்தொற்று காலத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப்பொருள்கள் அவ்வளவுதான். சிறிய சாளரத்தின் வழி பகலும் இரவும் இதை வைத்துக்கொண்டு நாவல் நினைவெழுச்சியின் வழி விரிகிறது.

பெருந்தொற்று காலத்தில் படிப்படியாக உயர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள். ஊரடங்கு காலத்தில் அதற்கென இயங்கும் அங்காடிகள். கண்ணுக்கெட்டும் தூரத்தில் நிகழும் மரணங்கள், இவ்வளவுக்கு மத்தியிலும் உணவளிக்கும் மசூதிகள் என எல்லாவற்றையும் நாவல் தொடுகிறது.

சராவை எடுத்துக்கொண்டால் அவனுடைய பால்யம், அந்தப் பருவத்தில் இருந்த தனிமை. தானாகப் பேசிக்கொள்ளும் அம்மா. ஒரு கட்டத்தில் முடங்கிப்போய் இறந்துபோகும் அப்பா. நண்பர்கள் கிடைக்காதபோது அவன் வீட்டிற்குப் பின்புறம் இருக்கும் மாமரத்தை வெட்டி வடு ஏற்படுத்தும் போக்கு. அம்மாவும் அப்பாவும் வெளியே சென்று வட்டி வசூலித்து வரும் வரை வானத்தில் நட்சத்திரங்களைப் பார்த்து தனியாகப் பேசிக்கொண்டிருக்கும் தன்மை. கைகூடாத கல்வி. நாவலில் இருக்கும் மனவெழுச்சி அவன் பால்யத்திலிருந்து தொடங்குகிறது என்பதை அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொல்லி, தொடர்பு கன்னி அறுபடுமானாலும் துருத்தாமலும் சொல்லியிருப்பது சிறப்பு.

நுட்பங்கள் எனப் பார்த்தால் வாசகனுக்கு என்ன மாதிரியான மனநிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதை எழுத்தில் கொண்டுவருவது. செராஸில் கலையரசியை தேடிப்போகும் போது தங்கியிருக்கும் விடுதியில் ஒரு முதியவரைச் சந்திக்க நேரிடும். அந்தக் காட்சியில் உடைகளைத் துவைத்துக் காயவைத்துக்கொண்டிருப்பார். உரையாடலின் வழி சரா தான் செராஸ் வந்ததையும் எப்போதோ தொலைத்த முதல் காதலைப் பற்றிச் சொல்வான். முதியவர் எத்தனையோ காதல் கதையை கேட்டவராக எந்த அதிர்ச்சிக்கும் உட்படாதவராகத் துணி துவைத்த கழிவு நீரைக் கழிவறையில் கொட்டிவிட்டு வருவார். சரா அதே இடத்தில் நிற்பான்; நீர் சொட்டுச் சொட்டாக வழிந்துகொண்டிருக்கும். வாசிக்கும்போது இது காட்சிதான். ஆனால் வாசிக்கும்போது அந்தச் சூழலின் மனநிலையைப் பிரதிபலிப்பதை உணரலாம். கழிவுநீராக அந்தக் காதலை முதியவர் பார்ப்பதும். சொட்டிக்கொண்டிருக்கும் நீர்த்துளிகளாக சராவுக்கு அந்தக் காதல் இருப்பதும் படிமங்களின் விளையாட்டாய் எழுத்தாளர் நிகழ்த்தியிருப்பார். இதேபோல இன்னொரு இடத்தில் சக்கரங்கள் இல்லாத மிதிவண்டியைக் காட்சியாக வாசிக்கும் போது. திக்கு திசையற்று நிற்கும் சராவின் மனதோடு ஒப்பீடு செய்யலாம்.

நாவல் முழுவதும் வரும் விவரணைகள், வர்ணனைகள், தத்துவார்த்தக் கூற்றுகள் எனக் குவிந்து கிடக்கின்றன. போகும் இடமெல்லாம் இருக்கிற இடத்தில், கிடைத்த இடத்தில் பிழைக்கும் மனிதர்களைப் பற்றியும் நாவல் பேசுகிறது. செராஸில் இருக்கும் தையல் கடைக்காரர், காவலாளி வேலை பார்ப்பவர், சரசு அக்கா, வங்காளிகள் என நாவலின் பரப்பு மிகப் பெரியது.

பகல் வெளீரென்று வெளிச்சத்தின் மொத்தத் தோலையும் உரித்துப் போட்டிருந்தது. இது பகலைப்பற்றி நாவலில் வரும் ஒரு வரி. இரவைப்பற்றி எழுதும்போது ‘கம்பியின்மீது நின்றிருந்த கருப்புப் பூனை எங்களை வெறித்துப் பார்த்தது. அன்றைய இரவின் பெருந்துளி அதன் மஞ்சள் விழியில் பளபளத்தது’ என்று எழுதியிருப்பார். தத்துவார்த்தக் கூற்றாக வரும் இந்த வரி, ஒருவரின் துயரம் அல்லது தேடல் இன்னொருவருக்கு முக்கியமானதாகத் தோன்ற வேண்டும் என அவசியமில்லை. துருத்தாமல் சுழலுக்குப் பொருத்தமாக வரும்.

இந்த நாவல் எங்கேயும் தொடங்கவில்லை, எங்கேயும் முடியவில்லை, எந்தவொரு அத்தியாகத்திலிருந்தும் தொடங்கலாம். எதோடு வேண்டுமானாலும் முடித்துக்கொள்ளலாம். முதன்முறை நாவலை வாசிக்கும்போது மிகுந்த சிக்கலுக்கு உள்ளாவோம். சிக்கல் வரும் போதெல்லாம் முதல் அத்தியாயத்தை வாசித்துப் பார்த்தால் தெளிவாகப் பிடிபடும். இந்தக் கட்டமைப்புதான் இந்த நாவலின் பலமும் இலேசான பலவீனமும். இத்தகைய இலக்கிய முயற்சிகள் எப்பொழுதாவது அரிதாய் நடக்கும். இது தேவையா எனும் விவாதத்தைவிட்டு இந்த முயற்சியைப் பாராட்டி அங்கீகரித்தால், இன்னும் உத்வேகத்தோடு வருவான் எக்காலத்திற்கும் பரிதாபத்துக்குரிய எழுத்தாளன்.

– தமிழ் ஐயப்பன், சிங்கப்பூர்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button