
ஆடி மாதச் சூரியன் தன் திறன்களை இழந்து, வெளிர் மஞ்சளாக, கடும் மஞ்சளாக மாறி, சிவப்பேறி சிறுத்துத் தேய்ந்து மறையும் நேரம். கடைகளில் மின் விளக்குகள் ஏற்றும் தருணம். திடீரென மாயவனின் கைகளில் கிடைத்த அடர்த்தியான வண்ணங்களின் தீற்றலில் தெற்கு வீதியின் நிறங்கள் மாறி புதிய வண்ணம் ஏறியது. மாட்டு மேஸ்திரி சந்து மாடுகள் இல்லாமல் காலாவதியான நிலையில், புதியதாக வட நாட்டவர்கள் சந்தையடைத்து கடைகள் வைத்திருந்தனர். முழுக்க முழுக்க வட நாட்டவர் ஆக்கிரமித்து நிறைந்திருந்தனர். லாட்ஜ்களும் அதிகமாயிருந்தன.
குபேரா லாட்ஜ் காலத்தால் பழையது; ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. அதன் விசாலமான கட்டடம் பல்வேறு கால நிலைகளில் மாற்றம் கண்டு தற்போது மேற்பூச்சு பூசப்பட்டு அறைகளாகத் தடுத்திருந்தனர். முதல் தளத்தில் ஒன்பது அறைகளும் இரண்டாம் தளத்தில் ஒன்பது அறைகளும் கொண்டது.
குபேரா லாட்ஜில் முதல் தளத்தில் ஒன்பதாம் எண்ணில் அறுவர் கூடியிருந்தனர். வழக்கப்படி எட்டாம் எண்ணுள்ள அறை கிடையாது. காலக்கிரமமாக நடக்கும், மது விருந்தோ, புகை சூழ்ந்தோ இல்லாமல், பளீரென்ற அறை எல்ஈடி விளக்கு வெளிச்சத்தில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி தரமான நேர்த்தியான உடைகளில் வட்டவடிவ மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தனர்.
வெள்ளைச் சட்டையும் வெள்ளை பேண்டும் அணிந்தவரின் முகத்தை, அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைக்காக ஐவரும் காத்திருந்தனர். அவர்தான் அரவிந்தன். தலைவரை போல அக்குழுவை வழிநடத்தி வருகிறார். தலைமை நிர்வாகியைப் போன்ற தோற்றமும் நேர்த்தியான உடையும் தினமும் சவரம் செய்து பளபளப்பான முகமும் உடனே அனைவரையும் ஈர்த்து மரியாதை செய்ய வைக்கும் கண்ணியம் நிறைந்த தோற்றமும் கொண்டவர். ஐவரையும் பொதுவாகப் பார்த்தவர் நேர் பார்வையில்,
“ஒரு மாசத்து முன்னாடி வரையில நாம செஞ்சிட்டு வந்தது நமக்கு எந்தவிதமான தொந்தரவோ, நம்மை தேடும்படியோ நடந்து இல்ல. நாம செய்யுறது தப்பானதுன்னாலும் மாட்டினதா பதிவுகளும் இல்ல. நம்ம மேல கண்ணு பட்டிக்ருகுன்னு நெனக்குற மாதிரியான சம்பவம் நடந்துருக்கு. கணேசன் வீட்டுக்கு போலீஸ் போயிருக்கு. அவன் வேலை செய்யுற இடத்துலயும் விசாரிச்சிருக்காங்க ரெண்டு இடத்துலயும் சந்தேகம் வர்ற மாறி எந்தத் தகவலும் இல்லாத அளவு இருந்ததால தப்பிச்சோம். இனி நாம ரெம்ப ஜக்கிரதையா இருக்கணும், தொழிலையும் செய்யணும். கொஞ்ச நாளைக்கு நிறுத்திட்டு அப்புறமா அலை ஓஞ்ச பின்னாடி செய்யலாமா? நீங்கதான் சொல்லணும்” என்றார்.
“அதிகம் பதட்டமா பயமா இருந்தா சொல்லிடுங்க” என்றபடி எதையோ கூர்ந்தார்.
பக்கத்து அறையினுள்ளிருந்து பாட்டுச் சத்தமும் யாரோ முனகும் சப்தமும் கேட்டன. இம்முறை சற்று அதிகமாக வருவதாகவும் தொந்தரவு செய்வதாகவும் இருந்ததாக அரவிந்தன் நினைத்தார், கொஞ்சம் கடுப்பாகவும் இருந்தார். அவருக்கு அதிகம் அமைதியாக இருக்குமிடமே பிடிக்கும். அருகிலிருந்த அழைப்பானை அமுக்கினார். இருப்புக்கொள்ளாமல் கைகளைப் பிசைந்தபடி இருப்பதை உணர்ந்து இலேசாகத் தளர்ந்தார்.
அறைகளில் தங்குபவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் இளம் வயதினன் ஐயப்பன் அறையின் கதவைத் தட்டினான்.
“யாரு ஐப்பனா?” என்றார் அரவிந்தன்.
“ஆமாண்ணே, என்னா வேணும் சொல்லுங்க” என்றான். கதவை இலேசாகத் திறந்தவர். அவன் தானா என உறுதிப்படுத்தியபடி, பக்கத்து அறையிலிருந்து வந்த சப்தத்தை அதிகம் உணர்ந்தவர், “எங்களுக்குத் தண்ணீர் பாட்டிலும், தோ கேக்குதே அந்த சவுண்ட கொஞ்சமா வக்க சொல்லு. தொந்தரவா இருக்கு” என்றார்.
“சரிண்ணே , உடம்பு சரியில்லாத பையனும் அவனோட அப்பாவும் இருக்காங்க சொல்லிடுறேன். பையனுக்கு மனநிலை சரியில்ல. சரி பண்றதுக்கு டாக்டர பாக்க வந்திருக்காங்க” என்றான்.
சரி என்பது போலத் தலையாட்டினார். பத்து நிமிடங்களில் சப்தம் குறைந்தது. அவருக்கு மகிழ்ச்சியாகவும், தன் திட்டங்களை மனதிற்குள் விரித்து பார்ப்பதற்கும் ஏதுவாக இருந்தது.
ஐவரையும் பார்த்து, “சரி விஷயத்திற்கு வர்றேன். நம்மோட திட்டப்படி இந்த மாசமும் செயல்படணும். இப்ப நமக்கிருக்கும் சங்கடங்கள் அதிகமாயிட்டே போவுது. கொஞ்ச நாள்ல திட்டத்த மாத்தணும். இல்லன்னா நம்மோட சொகுசு வாழ்க்க முடிவுக்கு வந்துடும், பாத்துக்குங்க”
ஆமோதிப்பது போல ஐவரும் தலையாட்டினர்.
அறுவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் சட்டை, பேண்ட் பைகளில், உள்ள பர்ஸ், கைப்பைகளிலுள்ள நகைகள், விலையுயர்ந்த பொருட்களை எடுப்பதில் திறமையும் உடனே கைமாற்றிப் பத்திரப்படுத்தி, அரவிந்தனின் தொடர்புகள் மூலம் ஓரளவு நல்ல விலைக்கு விற்று சொகுசான வாழ்க்கைக்குப் பழகிவிட்டனர். அறுவரில் கணேசன் கூர்மையான பிளேடைக் கையாள்வதில் சூரன் கையிலோ வாயிலோ வைத்து விளையாடுவான்.
போன மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ரயில் நீளப் பேருந்தில் நல்ல கூட்டத்தில், வியர்வை நாற்றமும் பலவித உடைகளின் சரசரப்பும், கூட்ட நெருக்கத்திலும். ஒரு பெண்ணின் பையைத் திறமையாக பிளேடினால் ஒட்டை போட்டு எடுக்கும்போது வியர்வையில் கை நழுவி பணப்பை கீழே விழுந்தது. குனிந்து எடுக்க இயலாத சூழல். அப்பெண்மணி எதேச்சையாகப் பையைப் பிடித்ததில் பிளேடால் கிழிந்தது தெரிந்துவிட்டது. கணேசனின் உடைகளாலும், முகத்தில் தெரிந்த அப்பாவித்தனமான, அசட்டுத்தனமான பாவனையில் சந்தேகப்பட முடியாமல் அப்பெண் போட்ட கூச்சலால் பஸ் நிறுத்தப்பட்டுத் தேடிடும்போது கீழே கிடந்த பணப்பையை எடுத்துக்கொண்டதால் அத்தோடு பிரச்சனை தீர்ந்தது. கணேசனுக்கு உள்ளூர உதறல் இருந்ததை மறைப்பதற்குள் உயிர்போய் உயிர் வந்தது. முகத்தில் அப்பாவித்தனமான களை இருப்பதால் தேடுவதுபோல நடித்து கண் செய்கை, கைகளில் வித்தியாசமான முத்திரைகள் காட்டுவதின் மூலம் மற்றவர்களுக்கு எச்சரிக்கையும் தன்னை நெருங்க வேண்டாம் எனவும் தரும் சிக்னல்களினால் அவரவர் வழியில் இறங்கி மூன்று நாட்கள் கழித்துத் திட்டப்படி இன்று இங்கு ஒன்று கூடியுள்ளனர்.
அரவிந்தன் என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கவனிக்க ஐவரும் தங்களைத் தயார் செய்து கண், காதுகளை அவரை நோக்கிக் குவித்து நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அறையைச் சுற்றிக் கவனித்த அரவிந்தன் அறையின் அமைதியும் வழக்கமான லாட்ஜ் அறைகளில் வரும் மடித்த, அவிந்த வாசனைகள் இன்றி சுத்தமாக இருந்ததை உணர்ந்து தலையைக் கோதியபடி ஐவரையும் உற்று நோக்கி,
“வருகிற அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை ஏழு மணிக்கு மேல் எட்டரைக்குள்ள நம்ம வேலைய முடிச்சசிக்கிட்டு மறுநாள் மதியம் இங்க வந்தா போதும். கவனமாயிருங்க, தனித்தனியா வாங்க யாரும் யார்கிட்டையும் பேசிக்க வேண்டாம். குறிப்பா செல்போன்ல பேச வேண்டாம். கைல சிக்னல் காட்டுங்க புரிஞ்சிக்குவாங்க. சரியா? வேற எதும் கேள்விகள் உண்டா?” என்றார்.
கணேசனுக்கு பக்கத்திலிருந்த குணசேகர், “தீபாவளிக்கு இந்த முறை கொஞ்சம் கவனமாயிருக்கணும். சாதாரண உடையில காவல் துறையினர் அதிகமாயிருப்பாங்க. அவசரப்பட்டு ஏடாகூடமா செஞ்சிறாதீங்க. வழக்கப்படி எல்லோருடைய செய்கையும் பாத்துட்டு சிக்னல் குடுத்துட்டு செய்யுங்க. உங்களுக்குத் தெரியும் போன் பே, எடிஎம் கார்டு வந்தப்புறம் நமக்கு திண்டாட்டமா போய்டிச்சி. நல்ல பார்ட்டியா, வெயிட்டான ஆளா பாத்து அடிக்கணும். ஒரே நாள் போதும். அதுக்கும் மேல வேண்டாம். உசாராய்டுவாங்க. கண்காணிப்பு பலமாய்டும். மாட்டிக்குவோம். சிக்னல் தர்றது எல்லாருக்கும் தெரியும். அதுல எந்த மாற்றமும் பண்ணல சரியா?” என அரவிந்தனைப் பார்த்தார்.
சரி என்பது போல அனைவரையும் பார்த்துவிட்டு குழுவின் ஒரே பெண்ணான வர்ஷினியை உற்றுப் பார்த்து,
“இதுல ஒனக்கு ஓகேதானே?’ என்றார்.
கல்லூரி படிக்கும் பெண்ணைப் போலத் தோற்றமும் உடையும் சத்தியமாக வர்ஷினி ஒரு திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர் என்பதைக் கணிக்கவே முடியாது. சிவப்பான, ஒல்லியான, அனைவரையும் குறிப்பாகப் பெண்களே பொறாமை கொள்ள வைக்கும் தோற்றம். கொஞ்சம் மேக்கப் செய்தால் போதும், மயங்க வைத்துவிடுவாள், பேச்சிலும் அப்படியே எல்லாவிதமான இக்கட்டிலும் தடுமாற்றமோ, பதற்றமோ இல்லாமல் பதிலளிப்பதில் டாக்டர் பட்டம் தரலாம்.
“எனக்கு ஒகே அஞ்சாம் தேதி சரியான நேரத்துக்கு அங்க வந்துர்றேன்” என்றாள்.
ஒரு சில கணங்கள் மௌனமாக அமைதியாகக் கழிந்ததும், “எல்லோரும் புறப்படலாம். நீங்க போட்டுட்டு வர்ற உடைகள்ள ரெம்ப கவனமாயிருங்க.”
ஒவ்வொருவராக பத்து நிமிட இடைவெளியில் அறையைவிட்டு வெளியேறி தெற்கு வீதியின் மக்கள் கூட்டத்தில் கலந்து தங்களைக் கரைத்தனர்.
தீபாவளிக்குப் பதினைந்து நாட்கள் முன்பாக அரவிந்தன் திட்டப்படி அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஏழு மணிக்குப் புறப்பட்ட பேருந்தில் பின்புறம் ஏறி கடைசி இருக்கையில் அரவிந்தன் அமர்ந்தார். பேருந்து புறப்படத் தயாராக இருந்தது. மக்கள் கூட்டமாக அதிகமாக ஏறினர். பேருந்து புறப்படும் வேளையில் வர்ஷினி வேகமாக வஸந்தபவன் வாசலின் வழியே ஓடி வந்து அப்பேருந்தினுள் ஏறினாள். ஒரே ஒரு முறை ஏறும் முன்பு தன் தலைவிரி கோல முடியைக் கோதி அரவிந்தனைச் சாதாரணமாகப் பார்த்தாள். உடையும் எளிமையான அலங்காரமும் அவளைத் தனித்துவமாகக் காட்டியது.
பேருந்து காவேரி நகர் நிறுத்தம் வந்தபோது கணேசன் எளிமையான தூய வெண்மையான வேட்டி சட்டையுடன் ஏறினான். சாதாரணமாகப் பார்ப்பதுபோல இருவரையும் ஒருமுறை பார்த்து தலையைக் கோதிவிட்டான். பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் நிறுத்தத்தில் குணசேகர் ஏறினார். வெளிர் நிற சபாரி சூட்டுடன் வழக்கப்படி ஒரு பார்வை, தலைகோதுதல். காண்வெண்ட் நிறுத்தம் வருவதற்குள் அறுவரும் பேருந்தில் ஏறி ஒருவரை ஒருவர் முன்பின் தெரியாதபடி நின்றுகொண்டனர்.
அறுவரும் நோட்டமிட்டதில் குணசேகரின் அருகிலிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்கப் பெண்மணியிடம் கழுத்திலும் கைப்பையிலும் நகையும் பணமும் நிறைய இருப்பது அவரின் உடல் மொழியிலும் தேர்ந்த உள்ளுணர்வால் தெரிந்து கொண்டார். சற்றே நெருங்கி நோட்டமிட்டார். கிராமமும் இல்லாமல் நகரத்தையும் சாராத தன்மை அப்பெண்மணியிடம் இருந்தது. எளிதாகச் சுருட்டிவிடலாம் எனக் கணக்கு போட்டு கொஞ்சம் சப்தமாகவே தும்மினார். இதுவும் ஒருவகையான உணர்த்துதல் மற்ற ஐவரும் உஷாராக இருக்கத் தும்மல் மூலம் எச்சரிக்கைவிட்டார். ஐவரும் தயாராக ஊசி முனையின் மேல் நிற்பது போல் துடிப்புடன் இருந்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் சாதித்துவிட்டார் குணசேகர். அப்பெண்மணியின் கைப்பையிலிருந்து பணமும் நகையுமிருந்த சிறிய கையடக்கப் பையை எடுத்து இரண்டு பேருக்கு முன்னாளிருந்த கணேசனிடம் தருவதற்காகச் சட்டென்று தாவி, அவன் கையில் ரகசியமாகத் திணித்து மீண்டும் தன்னிருப்பிடத்திற்கே திரும்பினார். பேருந்து தரைப்பாலம் வரும்போது அப்பெண்மணி கூச்சலிட்டார். “திருடன் திருடன் என் பணப்பையும் நகையும் காணவில்லை” எனக் கூச்சலிட்டுக் கதறி அழ ஆரம்பித்தார். தலையிலும் அடித்துக்கொண்டு புலம்பினார். சுற்றுமுற்றும் அனைவர் மேலேயும் சந்தேகப் பார்வை பார்த்தார். சுற்றியிருந்தவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நகர்ந்துகொண்டு கீழே தேடினர். அப்பெண்மணியின் அழுகை பெரும் குரலெடுத்தது. பேருந்தை நிறுத்தச் சொல்லிச் சப்தமிட்டார். கூட்டத்தில் ஒருவர் பேருந்தை அப்படியே போலீஸ் ஸ்டேசனுக்கு விடச் சொல்லி அறிவுறுத்தினார்.
அதற்குள்ளாகப் பேருந்து ஆற்றுப் பாலத்தை நெருங்கியிருந்தது. கூட்டத்தில் யாரோ மயங்கி விழுந்தது போலச் சப்தம் கேட்டது. வர்ஷினிதான் மயங்கி விழுந்திருந்தாள். கையின் மணிக்கட்டு பகுதியிலிருந்து ரத்தம் வந்த வண்ணமிருந்தது. கூச்சல் குழப்பமும் அதிகரித்து. யாரோ ஒருவர் “இந்த பையா பாருங் இங்க கீழே விழுந்து கெடந்திச்சி” என்று கையைப் பையுடன் தூக்கிக் காட்டினார். நகைப் பையைப் பறிகொடுத்த பெண்மணி பார்த்தவுடன் என் பைதான் என அலறி அவரின் அருகே முண்டியத்துச் சென்றார். கூச்சலும் குழப்பமும் ரத்தம் வருவதைக் கேள்விப்பட்ட நடத்துநரும் டிரைவரும் ஆற்றுப் பாலம் அருகே பேருந்தை ஓரமாக நிறுத்தினார்.
பணப்பை கிடைத்தும் அப்பெண்மணி மகிழ்ச்சியில் திக்குமுக்காடி எடுத்துக் கொடுத்தவருக்கு நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்தார்.
“சரி பை கிடைச்சிருச்சில்ல வண்டிய கிளப்புவோம். யாராவது ஆம்புலன்சுக்கு போன் பண்ணுங்க அந்த பொண்ண ஆஸ்பிடல் கொண்டு போகணும்” என்றார் நடத்துநர். குழப்பமான பதற்றமான சூழ்நிலையில் நிறைய பேர் இறங்கி ஓடினர். சிலர் தயாராக இருந்த பைக்குகளில் ஏறி வெவ்வேறு திசைகளில் போய்விட்டனர். இருபது நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. வர்ஷினியை ஏற்றி அனுப்பிவிட்டு பேருந்தைப் பழைய பேருந்து நிலையம் நோக்கி ஓட்டிச் சென்றார் டிரைவர்.
இரு வாரங்களுக்குப் பிறகு குபேரா லாட்ஜ் முதல் தளம் ஒன்பதாம் எண்ணுள்ள அறையில் அறுவரும் கூடியிருந்தனர். ஒருவரை ஒருவர் பார்த்து குழப்பமும் ஆச்சர்யமும் பரிதாபமும் ஏற்பட்டது. அறுவரின் மணிக்கட்டிலும் காயம் ஏற்பட்டுச் சரியானதற்கான சாட்சியாகக் கட்டுப் போடப்பட்டிருந்தது. அங்கே குழப்பமான சூழல் நிலவி அமைதியில் அமைதி தோற்றுவிடும் போல அறை அமைதியாக இருந்தது. அரவிந்தன் ஏதோ சொல்ல முயன்றார், வார்த்தைகள் வெளிவரவில்லை. சில கணங்கள் கழித்து,
“நம்மை யாரோ தொடர்ந்து கண்காணித்துப் பழிதீர்த்த மாதிரி இருக்கு. எங்கேயோ தப்பு நடந்திருக்கு, சொல்லி வச்சா மாறி நமக்கு மட்டும் காயம் உண்டாக்கியிருக்காங்க. எப்படி, ஏன்னு தெரியல, புரியல. அங்கிருந்து தப்பிச்சதே பெரிசு. உங்களுக்கு ஏதாவது தொரிஞ்சிச்சா?”
ஐவரும் தெரியாது எனத் தலையாட்டினர்.
வர்ஷினி மட்டும்,
“பக்கதிலிருந்தவள்தான் பண்ணியிருக்கணும். அவளோட கண்ணுல வெறிய பாத்தேன். முகத்த முழுசா பாக்குறத்துக்குள்ள கூட்டத்தில தள்ளி விட்டுட்டா, மயக்கம் வந்துருச்சி. நிச்சயமா திட்டமிட்டுதான் செஞ்சிருக்காங்க” என்றாள்.
குணசேகர் ரெம்பவும் நொந்து போயிருந்தான். கையில் வீக்கம் இன்னும் வடியவில்லை. இடதுகையில் வெட்டுப்பட்டதால் அந்தக் கையை பயன்படுத்த, குணமாக நாளாகும் என்பதால் கவலை படர்ந்த முகத்தினனாக வலம் வந்தான்.
அறையின் கதவு மெதுவாகத் தட்டப்பட்டது. உஷாரான அரவிந்தனும் குழுவினரும் மேலும் அமைதியானார்கள்.
“யார்?” என்றார் அரவிந்தன்.
‘நான்தான் சார் ரூம்பாய் ஐயப்பன்” வந்திருக்கேன்.
“இதோ வர்றேன்” என மெதுவாகச் சென்று கதவைத் திறந்தார்.
ஐயப்பன் வெளியே நின்றிருந்தான்.
முகக் குறி சரியில்லை என உடனே கண்டு கொண்டு கதவை அடைப்பதற்குள், ஐயப்பனைத் தாண்டி ஒருவன் கதவின் இடையே புகுந்து அரவிந்தனை அறையினுள் தள்ளிவிட்டு தானும் நுழைந்தான். கதவை மூடிவிட்டுத் திரும்பி அறுவரையும் ஒரு பார்வையிட்டான்.
அரவிந்தனுக்கு மட்டும் சட்டென்று அவனைப் பார்த்த ஞாபகம் வந்தது. ஒரு கணம் பார்த்திருந்ததும் மனத்திரையில் ஓடியது. தீபாவளி திட்டம் போட்ட அன்று பக்கத்து அறையில் பையனுக்குப் பைத்தியம் என்று அதிகமான சப்தம் வைத்து டிவி பார்த்தவன்.
என்ன என்ற முகக்குறியோடு அனைவரும் அவனைக் கோபத்தோடும் வெறுப்போடும் கவனித்தனர்.
உள்ளே புதியதாய் வந்தவன்,
“என்னா ஒரே குழப்பமா இருக்கா? நீங்க சொகுசா வாழ எத்தன குடும்பத்த சீரழிச்சிருப்பீங்க? உங்கள நியாயமா பாத்தா ஜெயில்ல போட்டுருக்கணும். எப்படியும் வெளிய வந்து அதே வேலைய பாப்பீங்க. உங்க பேர்ல எந்த குற்றச்சாட்டும் சந்தேகமும் வராதபடி செயல்பட்டதாலயும் போலீஸ்க்குப் போனாலும் சாட்சி வேணும். அதான் இப்படி செஞ்சிவிடணுன்னு செஞ்சோம். சுருக்கமா சொல்லிட்டுப் போய்டுறேன்.
போன வருஷம் தீபாவளிக்கு முன்னாடி ரெண்டு லட்சம் பணமும் இருபது பவுன் நகையும் அடிச்சீங்களே, அத பறிகுடுத்ததால, எம் பையனுக்கு ஆப்ரேசனுக்கு ஆஸ்பிடல்ல பணம் கட்ட முடியாம, ஒரு கையும் காலும் விளங்காம போனதும் உங்களால. போலீஸ்ல கம்ளைண்ட் பண்ணியும் பிரயோசனம் இல்ல. அவுங்களால கண்டுபிடிக்க முடியல. எனக்கு ஒரு சந்தேகம் மட்டும் இருந்திச்சி. அது நீதான், ஒம் பேர் அரவிந்தன்னு தெரிஞ்சிகிட்டு தொடர்ந்து உனக்கு தெரியாம கண்காணிச்சி, ஆறு பேருக்கும் நாள் குறிச்சி இப்ப தண்டனை கொடுத்தாச்சி. இனிமேலும் இந்த வேலைய தொடர்ந்தா உங்க உயிர எடுக்குற மாறி இருக்கும். இல்ல ஜெயிலுக்கு போறதுக்கு தயாரா இருங்க. எச்சரித்துவிட்டு கதவைத் திறந்து வெளியேறினான்.



