
மதுரவாயல் பைபாசிலிருந்து கடைசியில் மல்லிகை நகர் உள்ளே செல்லும் கரடுமுரடான சாலை. நகரின் முடிவில் வறண்டு போன கிணறுகளும் வயல்களும் சில வருடங்களுக்கு முன் கைவிடப்பட்ட பெரிய சுடுகாடும் கொண்டது. நடுவில் நெருப்பில் கருகிய சுடுகாட்டு மேடையும் அதில் மக்கிப் போன சாம்பல் குப்பல்களும் எலும்புத் துண்டுகளும் கொஞ்ச தூரத்தில் சின்னக் கட்டிடமும் பாழடைந்துச் செங்கற்கள் சிதறிக் கிடந்தன. அதைச்சுற்றி, கொஞ்சம் தள்ளி அங்கங்குத் தனி வீடுகள் ஏனோதானோவென முளைத்திருந்தன.
மாலை ஆறு மணி. சீக்கிரமே இருட்டிவிட்டது. ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது.
காற்றில் மார்கழி மாத சிலுசிலுப்பில் ‘மாரியம்மா… எங்கள் மாரியம்மா’ ஈஸ்வரியின் அம்மாவை இறைஞ்சும் குரல் வெகு தூரத்தில் காற்றில் அலைபாய்ந்துகொண்டிருந்தது. சுடுகாட்டின் மேல் பறவைகள் கீச்கீச்சென்று விபரீதமாக அலறிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்துகொண்டிருந்தன.
அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் தெருமுனையில் பூட்டப்பட்டிருந்த இலக்கம் 12A வீட்டை நோக்கி அந்தப் பெண் வந்துகொண்டிருந்தாள். வயது 21-24 இருக்கும். அவள் அணிந்திருந்த நவீன உடை அவளின் அழகை இன்னும் எடுப்பாகக் காட்டியது. ரம்யாவைக் காப்பாற்றியே ஆக வேண்டும். இன்று வீடு திறந்திருக்குமா? ‘ப்ளீஸ் ரம்யா டோண்ட்’ மனதில் மொபைல் உரையாடல் ஓடிக்கொண்டிருந்தது.
எதிரே வந்த ‘காடு’ சலீம்பாய் கஞ்சா போதையில் கண்களைச் சுருக்கி குழம்பியபடி அவளைப் பார்த்தான். யார் இவ? இந்த நேரத்துல? ஹை கிளாஸ் பிராத்தல் அயிட்டம் ஏரியாவுல ஓடுதா?
“மேடம்…! ரென்டுக்கு வீடு பார்க்கப் போறீங்களா?”
“இல்ல ரம்யாவ பார்க்கப் போறேன்”
“ரம்யாவ….?” கேட்ட மாத்திரத்தில் சிறிது போதை தெளிந்து அதிர்ச்சியான சலீம் அதை மறைத்து இளித்தபடி,
“கெமிகல் ஃபேக்டரில கெமிஸ்ட் வேல பார்த்திட்டு இருந்தாங்களே அந்தச் சின்னப் பொண்ணுங்களா?”
“எஸ்”
சலீம் அதிர்ந்தான்.
“டாட்டா பஞ்ச்ல போவாங்களே”
“எஸ் ரம்யாதான்”
“அவங்க மவுத் ஆயிட்டாங்களே?”
“மவுத்தா?”
“சூயிசைடுல டெத் ஆயிடிச்சி. ஒன்னேகால் வருசமா வூடு பூட்டி கிடக்கு. உள்ள ஆவி சுத்துது”
“இல்ல உள்ளதான் இருக்கா” சிரித்துவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
சலீம் கழுத்தில் இருந்த மந்திரித்த காப்புத் தாயத்தைப் பிடித்துக்கொண்டான். மெதுவாக நகர்ந்து திரும்பிப் பார்க்க அவளும் பார்க்க ஓட்டம் பிடித்தான்.
பேராசிரியர் வேணுமாதவன் மதுரவாயல் செந்தில் நகர் வீடு.
“அங்கெல்லாம் வாடகை ஜாஸ்தியா இருக்கு? வேற இடம்? அந்த மல்லிகை நகர் ரெண்டாவது தெரு 12A”
“சார்…….. வேணாம்” அலறிய வீடு புரோக்கர் சத்யன்.
“சும்மா கதங்க. நா போயி சரி பண்றேன்” வேணு புன்னகைத்தார்.
“சார்…..! நீங்க பகுத்தறிவு பார்டியா?” சிரித்தபடி கேட்டார் சத்யன்.
“ஹார்டுகோர் முருக பக்தன். வீட்டு டெனண்ட் ரம்யா சூயிசைடா?”
“போன மாசம் வியாழக்கிழமைகூட ஒருத்தர் பார்த்திருக்காரு. ஆவின்றாங்க”
“சூயிசைட்ல செத்த பின்னாடியே ஃப்ரீயா ஆவி ஒன்னு விடுவாங்க. ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ போல” சத்தம் போட்டுச் சிரித்தார்.
முகம் சுருங்கி சத்யன் எதுவும் பேசவில்லை.
“சூயிசைடு, ஆவி, அடிக்கடி ரம்யாவ தேடிட்ட வரப் பொண்ணு ஆவி எல்லாத்தையும் டீல் பண்ண வசதியா இருக்கும்”
“சார்…! பத்துப் பேர் பார்த்திருக்காங்க. சுடுகாடேன்னு கெடக்கற சலீம் பாய் மிரண்டுட்டான்”
“அந்தச் சுடுகாடு இப்ப ஏன் யூஸ்ல இல்ல?”
“ரெசிடென்ஷியல் ஏரியா ஆயிடிச்சி சார். காண்ட்ராக்ட் முடியவரை வச்சிருப்பாங்க போல. எரிக்கற வழக்கம் எல்லாம் இல்ல. சில வருசம் முன்ன அங்க வேல பார்த்த மூர்த்தி, மாவா ஜேம்ஸ் சூயிசைட்ல செத்துட்டாங்க. ஆவி மேட்டர்னாங்க. சலீம் பாயோட காட்ல வேல செஞ்சவங்க. குடி, கஞ்சா போதை, சூது உண்டு”
“ரம்யா செத்து ஒரு வருஷத்துக்கு மேலதான ஆவுது”
“ஆமாங்க, ஆனா வேற ரெண்டு பொண்ணுங்க. அடிக்கடி சுடுகாடத் தேடி வந்ததாக ஊர்ல பேசிப்பாங்க”
“இன்னும் ரெண்டு ஃப்ரீ ஆவியா?”
“அமுதவள்ளி & வாணிமலர் சூயிசைட் கேஸுங்க. ஈக்காடுதாங்கல்ல வீடு. ரெண்டு வருஷம் ஆச்சு. அங்கதான் எரிச்சாங்க”
“இட்லிப் பானை கணக்க நிறைய ஆவி இருக்கும் போல. வீட்ட தொறந்துப் பார்க்கணும்” அடக்க முடியாமல் சிரித்தார்.
“பேசினா அன்லக்கி ஆகுது. நா சொன்ன வீடு செட் ஆகல. நா கிளம்பறேன்”
“தேங்க்ஸ்…. ரம்யா வீட்டு கேர் டேக்கர் நம்பர் கொடுங்க”
“கிஷோரும் சாவிய வச்சுகிருதல்ல சார்…! கெட்ட கனவெல்லாம் வருதுன்னு ஓனர்கிட்டயே கொடுத்திட்டான்”
சத்யன் பைக்கில் திரும்பிப் பார்க்காமல் பறந்தார்.
ஒரு மணி நேரம் கழித்து வேணுவின் மனைவி பேராசிரியை சிவஸ்ரீகார்த்திகா தன் இரு பெண்களுடன் வெளியே போய்விட்டு வீட்டிற்குள் வந்தாள்.
“என்ன 12ஏ வீடு டீல் முடிஞ்சுதா?”
“ஓனர்ட்ட வாடகை அட்வான்ஸ் எல்லாம் பேசிட்டேன். கேட்டதும் பயங்கர ஷாக்குல ஓரமா ஒட்டி இருக்கற சந்தோஷத்தோடுப் பேசினாரு. சுத்தம் பண்ணி பெயிண்ட் அடிச்சுத் தந்து அப்பறம் அவர் செலவுல பெரிய கணபதி ஹோமம் பண்ணிடறேன்னாரு”
“அப்பா வேண்டாம். பயமா இருக்கு. ஒய் இன்வெய்டிங் ட்ரபிள் கேஸ் ஸ்டடி பண்றேன்னு” இரண்டு மகள்களும் கெஞ்சினார்கள்.
“வாடகை சீப்பா முடிக்க ஹெல்ப் பண்ண ரம்யா ஆவி வாழ்க”
“நாங்க ரெண்டு பேரும் விமன்ஸ் ஹாஸ்டல்” அழகுக் காட்டிவிட்டு நகர்ந்தார்கள்.
“நீங்க யாருன்னு சொல்லலயா வேணு?”
“பாராநார்மல் ஆவி, பூதம், பேய், ஆத்மாக்கள ஆராய்ச்சிப் பண்ற பாராசைக்காலஜிஸ்ட் புரொபஸர்னா (Parapsychologist)? அந்த வீடுதான் வேணும்னு பிடிவாதம் பிடிச்சதுக்கே மிரள ஆரம்பிச்சாரு. சொல்லி இருந்தா அவருக்கும் ஒரு ஆவியா ப்ரீயா வீட்டுக்கு அனுப்பிச்சுடுவாருன்னு பீதி ஆயிருப்பாரு”
“வேணூ! ஞாபகம் இருக்கா, தாம்பரம் வீடு? ஓனர் அம்மா நானும் அதே புரொபஸர்னு சொன்னதும் அன்னிலேந்து நம்ம ரெண்டு பேரையும் ஏதோ ஆவி போல மிரள மிரளப் பார்த்திட்டு இருப்பாங்க”
இருவரும் செல்லமாகக் கட்டியணைத்தபடி சிரித்துக்கொண்டார்கள்.
ஒரு வாரம் முன்பே இருவரும் ரம்யா தற்கொலையான வீட்டை காலை, மதியம், இரவு மூன்று வேளைகளில் சுற்றிப் பார்த்துவிட்டார்கள். ஆவி தாக்கத்தை உணர்ந்தார்கள். சலீம் பாய் மிரண்ட தெருவின் வழியே அந்தி மயங்கும் நேரத்தில் இரண்டு முறை நடந்தார். உள்ளுக்குள் அதே அதிர்வுகளை உணர்ந்தார் வேணு.
மதுரவாயலில் தகனம் செய்யப்பட்ட ரம்யா, அமுதவள்ளி மற்றும் வாணிமலர் மூன்று சூயிட் சைட் கேஸ்கள் முதல் தேடி வரும் பெண் உட்பட A-Z எல்லா விவரங்களையும் தூண்டித் துருவிச் சேகரித்துவிட்டார்கள். முக்கியமானது போலீஸுக்கு வந்த ஒரு மொட்டைப் புகார்க் கடிதம். புகாரில் இருந்த மூன்று பேரில் இருவர் இறந்துவிட்டார்கள்.
இது அடுத்த கட்டத்திற்கு யோசிக்க வைத்தது.
“ஞாபகம் இருக்கா, வேளச்சேரில ஒரு தற்கொல கேஸ் நாம கேஸ் ஸ்டெடி பண்ணோமே?”
“அனுஷாவா வேணு? அங்கேயும் அந்தப் பொண்ணத் தேடி இன்னொரு பொண்ணு ஆவியா வர்துன்னு பேசிப்பாங்க. அந்த வீடும் பூட்டிக் கிடக்குது”
“அதுவும் இதே நாள்லதான் சூயிசைட்ல இறந்திருக்கு?”
“கிரேட் வேணு. எனி கனெக்ஷன்”
“டீகோட் பண்ணினேன். ஆல்மோஸ்ட் கிட்ட வந்துட்டேன்”
ஒரு வாரம் கழித்து ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணி. வெறிச்சோடிக் கிடந்தது அந்தத் தெரு. அதில் அனுஷா நடந்து வந்துகொண்டிருந்தாள். ரம்யாவின் இம்சை தாங்க முடியவில்லை. எப்போதும் வீடு பூட்டி இருக்கிறது. எப்படிக் காப்பாற்றுவது. வழக்கம் போல மனதில் கடைசி செல்போன் உரையாடல் ஓடியது.
“ஷாக்கிங் ரம்யா செல்லம். என்ன திடீர்னு இந்த ஸ்டெப். ப்ளீஸ் டோண்ட்…! டோண்ட்….! ரம்யா ப்ளீஸ் ஸ்டாப்…! பன்னெண்டு ஆச்சு. மெடிடேட் ஃபார் 15 மினிட்ஸ் அண்ட் ஹாவ் குட் ஸ்லீப்”
“அதெல்லாம் முடியாது. இப்ப வா அனு. பேசு”
“என்ன ரம்யா? நீ கொழந்தயா? தி அனுஷா ஆஸ் எ ஃபிரண்டா போன்ல சொன்னா கேட்க மாட்டயா?”
“இல்ல நேர்ல வாடி அனுஷா”
“இப்பவா செல்லம்? யூ நோ 35-40 கிலோமீட்டர் தூரத்தல இருக்க ரம்யா. முட்டாள்தனமா எதுவும் பண்ணாத”
“இது முட்டாள்தனமா? என் வலி எனக்குத் தெரியும் அனு. நீ இப்ப வா. வரலேன்னா யூ ஆர் எ நாட் எ குட் பிரெண்ட்”
“ஹர்டிங்கா இருக்கு ரம். எப்படியான மெட்சூர்டு கேர்ள். சூயிசைட் இஸ் நாட் எ சொல்யூஷன். அவமானப்படறதெல்லாம் கார்பரேட் வேர்ல்ட்ல சகஜம்தானே? நா படலயா? தப்பு உன் பேர்ல? மறந்துடு. என்னவிட்டுப் பிரிய எப்படி மனசு வந்தது. என்னால தாங்க முடியுமா?”
“நா டிசைட் பண்ணிட்டேன் அனுஷா”
“அப்படியா? நானும் டிசைட் பண்ணிட்டேன் ரம்யா. நீ எங்க போறீயோ அங்க வரேன். பாரு இத”
“அனு… அனு… அனு…!”
“நீயும் இதப் பாரு”
“ரம்யா… ரம்யா ரம்யா..!”
ரம்யாவின் வீட்டை நெருங்கினாள். வீடு திறந்திருக்கிறது. விளக்கெல்லாம் எரிந்து பளிச்சென்று இருக்கிறது. ரம்யாவைக் காப்பாற்றிவிடலாம்.
அதே இரவு எட்டு மணி. இடைவிடாமல் சிணுங்கிய போனை ஓடி வந்து எடுத்தார் வேணு.
“வேணு சார்….. இந்த ஏரியா ஆள் சலீம் பாய் இறந்து கிடக்கறான்”, பெயிண்டர் ஆதவன்.
“சலீமா…? அங்கயா…? உங்க ஹெல்பரா?”
“இல்ல சார், தெரிஞ்சவன். என்னடா வீடு தொறந்துருக்கு, லைட்லாம் எரியுதுன்னு உள்ள வந்துருக்கான். பனிகால கஞ்சா போதை சார். டர்பண்டைன் ஆயில மோந்து மூக்குல இழுத்துட்டு ஆடிட்டே உள்ளாற சுத்திப் பாத்துட்டு விடுவிடுன்னு மாடிக்குப் போனான். கொஞ்ச நேரத்துல தொப்னு சத்தம் கேட்டது. வீட்டு பக்கவாட்ல மண்டைல அடிப்பட்டு விழுந்து கிடக்கறான் சார். சன் ஷேட்ல ரத்தம் அப்பிச் சொட்டுது. ஹெல்பர் சந்திரன் பார்த்துட்டு அலறிக்கிட்டே ஓடி வந்து சொன்னான்”
“சரி போலீசுக்கு சொல்லிட்டு அங்க வரேன்” மார்பில் கைவைத்து ஒரு நிமிடம் கண்ணை மூடி பிறகு புன்னகைத்தார்.
வீட்டில் விஷயம் கேள்விப்பட்டதும், “ஐய்யோ… டாடி பயமா இருக்கு. அங்க குடி போக வேணாம். அதுவே வராதேன்னு சொல்லுது” இரு மகள்களும் அலறினார்கள்.
“இல்ல, ‘மேட்டர் ஓவர் வா’ன்னு சொல்லுது. மூனாவது செக்ஸ்ஷுவல் அப்யூசர் சலீமும் இறந்துட்டான்”
“செக்ஸ்ஷுவல் அப்யூசரா? ரம்யாவயா?”
“ரம்யாவோட டெட்பாடியோட. ஒன்னு இல்ல மூனு டெட்பாடிங்களோட போதைல செக்ஸ் வச்சுட்டு இருக்காங்க. இதுக்கு நெக்ரோபிலியான்னு பேரு”
“டிஸ்கஸ்டிங்…! ஹாரிபிள் கைஸ். குமட்டுது.”
“எப்படி டாடி? காட்ல சொந்தக்காரங்க இருப்பாங்களே?”
“மூனும் அகால சூயிசைட் மரணம். வரட்டில கற்பூரம் கொளுத்திட்டுத் திரும்பிப் பார்க்காம போயிடணும். ஆத்மா சாந்தி அடையாம வீட்ட சுத்தும்னு கத வுட்டதும் பயந்துட்டாங்க. பயத்துக்கு இருக்கவே இருக்கு ஆவி பயம். ஆனா இது என்னடா புதுசா இருக்குன்னு சடங்கு அய்யர் உஷாராகி ’சம்திங் ராங்க்’னு மொட்ட கடிதாசி எழுதி போட்டிருக்காரு. ஆளுங்க செத்துட்டாங்க சுடுகாடே மூடியாச்சுன்னு போலீஸ் மொட்டக் கடிதாச சீரியஸ்ஸா வியூ பண்ணல”
“ஸ்டில் பயமாயிருக்கு டாடி”
“டோண்ட் ஒர்ரி டியர். டோர் நம்பர் ராசியில்ல, மாத்திடுவோம்”
“என்ன நம்பருக்கு?”
“13க்கு”
முற்றும்
கே.ரவிஷங்கர்



