இணைய இதழ் 125

இது கூடத் தெரியாதா? – கமலா முரளி

சிறுகதை | வாசகசாலை

இருப்பே கொள்ளவில்லை வேங்கட ராஜூவுக்கு! தன் அறைக்கும் வாசல் புறத்துக்கும் நடையாய் நடந்துகொண்டிருந்தார்.

இந்தக் கால ஆண்களின் அடையாள உடையான அரைக்கால் ட்ரவுசர்; அந்தக்கால நடுத்தர வயதுக்காரர்களின் கை இல்லாத முண்டா பனியன்; ஆங்காங்கே நடனமாடும் தொங்கும் தோட்டங்களாக உடற்பயிற்சி மறந்த தேகத்தின் கூறுகளோடு அவர், பரபரப்புடனும் பதற்றத்துடனும் நடந்துகொண்டிருப்பது பத்மஜாவுக்குச் சிரிப்பாக இருந்தது.

“அப்பா! இப்படி நீங்க வாசப்பக்கம் போய் பத்து தடவ பாக்கறதல என்ன பிரயோஜனம்?”

“அந்தப் பய போனவனக் காணோமே! நேரமாச்சே! வரானான்னு பாக்கறேன்”, என்றார் ராஜூ.

“ஆமா! இப்படிக் குறுக்கமறுக்க போயிட்டு இருக்காம, தோட்டத்தையாவது கூட்டலாம். சந்தோஷ் வந்துடுவான். அவன் ஒன்னும் சின்னப் பையன் இல்ல” என்றார் அவரது மனைவி ரமா.

“நீ பேசாத ரமா. உங்க சித்தப்பா வராரு. அதனால வீட்டுல இருக்கணும்ன்னு சொன்ன! இப்ப அந்தப் பாடாவதி சித்தப்பாவும் வரல”

“எங்க சித்தப்பாவ அப்படியெல்லாம் சொல்லாதீங்க. வயசுல பெரியவர். மேலுக்கு முடியல்ல; வரல. அதான் பொறுப்பா போன் போட்டு சொல்லிட்டாருல்ல” ரமா.

“அந்த போனை முன்னாடி போட்டு இருந்தா நான் சந்தோஷோட போயிருப்பேன்.”

ஒரு மணி நேரம் முன்பும் வீட்டில் பெரிய மதியாலோசனை நடந்தது.

சந்தோஷடன் தானும் செல்ல வேண்டும் என அப்பா சொல்ல, அம்மா தடுத்துவிட்டாள்.

“அப்ப, சந்தோஷ், கொஞ்சம் வெய்ட் பண்ணு. அந்தச் சித்தப்பா வந்துடட்டும். பார்த்துட்டு போயிடலாம்”, ராஜூ.

”அப்பா! அதுக்கு ரொம்ப லேட் ஆயிடும். நா போறேன். எனக்கு இப்பவே பசிக்குது. திரும்பி வந்து குளிச்சிட்டு சாப்பிடணும்”

“அடுத்த வாரம் போலாம்”, ராஜூ.

“அடுத்த வாரம் அமாவாசை இருக்கு. போக முடியாது”, அம்மா ரமா.

“சந்தோஷ்! பேசாம ஹிப்பி மாதிரி விட்டுக்கோ! இல்ல, சிம்பு மாதிரி கட்டிக்கோ!“ என்றாள் பத்மஜா.

“உக்கும். பள்ளிக்கூடத்தில நிக்க வச்சு கேக்கறாங்க!”, சந்தோஷ்.

“எங்கப்பாவால வர முடியல்ல. அதனால முடி வெட்டிக்க முடியலன்னு சொல்ல வேண்டியதுதான“, வேங்கட ராஜூ படபடத்தார்.

“அத மாதிரிதான் போன வாரம் சொன்னேன். எல்லாரும் சிரிச்சுட்டாங்க. பசங்கள்ளாம், “டேய் சந்தோஷ், உன் முடி வெட்டறதுக்கு அப்பா எதுக்குடா வரணும்?” அப்படின்னு கேட்டுக் கிண்டல் பண்ணிட்டாங்க”, சந்தோஷ் ஒருவித எரிச்சலுடன் சொன்னான்.

”சரிதான.  கழுத வயசு ஆச்சு. இன்னும் அப்பாவோடதான் போய் முடி வெட்டணுமா?” என்ற ரமா, “உங்க அப்பாதான் சும்மா கூத்தடிக்கிறாரு” என்றாள்.

“இங்க பாரு! நாம பெரியவங்க கூடப் போனாத்தான் நல்லா வெட்டிவிடுவாங்க. எல்லாப் பக்கமும் சீரா இருக்கான்னு பாக்கணும்”, குரலை உயர்த்தினார் ராஜூ.

“அப்பா, நா இன்னிக்கு முடி வெட்டியாகணும். இல்லன்னா, நாளைக்கி பள்ளிக்கூடத்திலேருந்து உங்களையே கூப்பிடலாம். நா போயிட்டு வரேன்.”

“சரிடா, நானும் வரேன். ரமா உங்க சித்தப்பா வந்தா கொஞ்ச நேரம் உக்காரச் சொல்லு.”

”அவர் அவங்க மாப்பிள்ளையோட வரேன்னு சொல்லி இருக்காரு. நீங்க இல்லன்னா மரியாதையா இருக்காது. சந்தோஷ் தனியாவே போகட்டும்.“ என்று கறாராகச் சொன்னாள் ரமா.

”அப்பா! இப்பல்லாம் பொண்ணுங்களே தனியா போய் ஐ ப்ரோ, ஹேர் ஸ்டைலிங் எல்லாம் பண்றாங்க” என்ற சந்தோஷை, “அதென்ன… பொண்ணுங்களே…“ என பத்மஜா கொக்கி போட்டாள்.

“சரிம்மா! பொண்ணுங்க… ஒகே?”

சந்தோஷ் அருகே வந்து அவனது தலைமுடியைக் கோதிவிட்டார் ராஜூ.

“ஒரு எட்டு வந்து, கடைக்காரரைப் பார்த்து, ஒரு வார்த்தை சொல்லிட்டு ஓடி வந்துடட்டுமா?”

ரமாவின் குரல் உயர்ந்தது. “சந்தோஷ் நீ கிளம்பு! ஏங்க, நீங்க சாப்பிட வாங்க! நல்லா வளந்துட்டான், இதுகூடத் தெரியாதா அவனுக்கு? ‘எப்பவும் வெட்டறாப்ல அங்கிள்’ன்னு சொன்னா வெட்டிவிடப் போறாங்க!”

“ஆமாம்பா! நான் பாத்துக்கறேன்! டோண்ட் வொரி!”, சந்தோஷ்.

“அப்படிச் சொல்லுடா என் கண்ணு! இதப் போய் அரை அவரா பேசிகிட்டு! என் பையனும் வெளிய தெருவப் போயிட்டுத்தான் வாரான். அவனுக்குத் தெரியும்! நீங்க வாங்க“ எனக் கணவனிடம் சொன்னாள் ரமா.

ஆக, அத்தனை வாக்குவாதங்களுக்குப் பின் முதன்முதலாகத் தனியாக முடி வெட்டிக்கொள்ளக் கிளம்பினான் அவர்கள் செல்ல மகன் சந்தோஷ்.

எதிர்பார்த்துக் காத்திருந்தது குடும்பம், ரமாவின் சித்தப்பா வரவுக்காக. சித்தப்பாவும் வரவில்லை; அவரது மாப்பிள்ளையும் வரவில்லை. மீண்டும் சண்டைதான் வந்தது, ரமாவுக்கும் ராஜூவுக்கும்.

“உங்கக் குடும்பத்தில எப்பவாவது சொன்ன சொல்லைக் காப்பாத்தி இருக்காங்களா?”

“ஆமா! இவங்க குடும்பம் எல்லாம் சத்யசந்தருங்க!”

“சரி! நா போய் என் பையனையாவது பாக்குறேன்.”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். சந்தோஷ் அவனே மேனேஜ் பண்ணிப்பான். நீங்க சாப்பிட வாங்க. இந்நேரம் சந்தோஷ் முடி வெட்டி முடிச்சு இருப்பான்”

ராஜூவும் அப்படித்தான் நினைத்தார். அவரது டூவீலர் வேறு சர்வீசுக்குப் போய் இருக்கு. நடந்துதான் போகணும்.

அதனால்தான் கிளம்பிப் போகாமல், முணுமுணுவென எதையோ சொல்லிக்கொண்டு வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்துகொண்டிருந்தார்.

டூ வீலர் சத்தம்! வேங்கட ராஜூ ஓடோடி வெளியே வந்தார்.

அவரது நண்பர் நடராஜன்தான். அவர் வால்மீகி தெருவில் குடியிருந்தார். இவர்கள் இருப்பது பாரதமாதா தெருவில். இருவரும் தினமும் காலை தாம்பரம் ரயில் நிலையத்தில் சந்தித்து, மேற்கு மாம்பலம் வரை உடன் பயணிப்பவர்கள்.

நடராஜன் பதற்றமாக இருந்தார்.

“ராஜூ சார்! என்கூட வர முடியுமா?”

“என்னாச்சு சார்! ஏன் டென்ஷனா இருக்கீங்க?”

பத்மஜாவும் பேச்சுக்குரல் கேட்டு வெளியே வந்திருந்தாள். சின்ன விஷயத்துக்கெல்லாம் பதற்றமாகும் அப்பா, இன்னொருவரைப் பார்த்து டென்ஷன் ஆவதைப் பற்றிப் பேசுவது அவளுக்கு நகைப்பூட்டியது.

“சார்! என் தங்கச்சி சீதா இருக்காளே…”

“யாரு, லட்சுமிபுரத்துல இருக்கறவங்களா?”

“ஆமா, அவ வீட்டுக்காரருக்கு முடியல்லன்னு போன் போட்டா. அங்கதான் போயிட்டு இருக்கேன்.“

ரமாவும் வாசப்பக்கம் வந்தாச்சு.

“ரமா! சட்டையை எடுத்து வா”, என்றார் ராஜு.

“ஒரு போன் பண்ணியிருந்தா ரெடியா இருப்பேனே!”, என்றார் ராஜு தன் நண்பரிடம்.

“வீட்டுலேர்ந்து கிளம்பி வந்துட்டேன். இங்க நம்ம ஸ்டீரிட்டைக் க்ராஸ் பண்ணும்போதுதான் உங்களுக்கு அங்க டாக்டர்ஸ் தெரியும் சொல்வீங்களே! உங்களைக் கொஞ்சம் அழைச்சுகிட்டு போலாம்ன்னு”

”என்னாச்சாம் ? எந்த ஆஸ்பத்திரியில சேத்து இருக்காங்க?” என்றாள் ரமா.

“நீ இன்னும் சட்டை கொண்டு வர போகலயா?” என எரிந்து விழுந்தார் ராஜூ.

அதற்குள் நடராஜனுக்கு ஏதோ போன் வந்தது.

“நீங்க கொஞ்சம் உள்ள வாங்க” எனப் பற்களைக் கடித்து ஓர் உத்தரவு போட்டாள் ரமா.

ரமா பற்களைக் கடித்தாலே ராஜு அடங்கிவிடுவார்.

இருவரும் உள்ளே போனார்கள்.

”ஒருத்தர் உதவின்னு வந்து இருக்காரே! மாப்பிள்ளைக்கு என்னவோ ஏதோன்னு துடிக்கிறாரே… கொஞ்சம் சட்டுன்னு நாம கிளம்பி உதவ வேண்டாமா? ஒரு சட்டைகூட கொண்டு வந்து கொடுக்கமாட்டியா?”

“சட்டைய வேணா வாசல்ல கொண்டு வந்து கொடுக்கறேன். ஆனா, நீங்க முழுசா ஒரு பேண்ட்டைப் போடுங்க” என்றாள் ரமா.

சந்தோஷ் தன் சிகை அலங்காரத்தை முடித்து வீட்டுக்கு வந்துவிட்டான்.

“சார்! வாங்க! பத்மஜா ஒரு சேரை எடுத்துப் போடு! அப்பாவக் கூப்பிடு” என்றான் சந்தோஷ் அப்பாவின் நண்பரைப் பார்த்து.

“இல்லப்பா. ஒரு அவசரம். எங்க மாப்பிள்ளைக்கி முடியல்ல. அப்பாவையும் கூப்பிட்டுகிட்டுப் போறேன்.”

“எதனா… ஆக்ஸிடண்ட்டா அங்கிள்?”

“இல்லப்பா! ஹார்ட் பிரச்சினை! தாம்பரத்தில கஜானனுக்குக் கூப்பிட்டு போறாங்க”

நடராஜன் குரல் தழுதழுத்தது.

“அப்பா! அங்கிள் வெயிட் பண்றாங்க”, என்று குரல் கொடுத்தபடி சந்தோஷ் உள்ளே போனான்.

காலையிலிருந்து அவன் சிகை அலங்காரத்தைப் பற்றிப் படபடத்துக்கொண்டிருந்த அப்பா, அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. ரமாவிடம் அதிதீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

“எதுக்கு இப்ப என் கார்டை வாங்கிறதுல குறியா இருக்க? எதுக்கு உனக்கு கார்டு?”

“இல்ல நீங்க கார்டை வச்சுட்டுப் போங்க. நீங்க பாட்டுக்கு அவசரத்துக்கு உதவறேன்னு இருக்கற காசைத் தேச்சுட்டு வந்துடுவீங்க”

“ஆமா! அப்பிடியே லட்சமா லட்சமா வச்சுருக்கேன். இருக்கறதே நாற்பதாயிரம்தான்”, ராஜூ.

“அதுவும் போயிடக் கூடாதேன்னு பாக்கறேன்”

வாசலிலிருந்து சப்தம் எழுப்பினார் நடராஜன்.

“பாவம்டி. எனக்கு டாக்டர்ஸைத் தெரியும்ன்னு என்னைக் கூப்பிடறாரு. படுத்தாத”

“கார்டைக் குடுத்துட்டுப் போங்க.”

‘டாட்’ என்று சொல்லாததுதான் குறை.

சந்தோஷுக்கு நிலவரம் புரிந்தது.

ஜிபே கணக்கில் மினிமமாகத்தான் பணம் இருக்கும். பெரிய செலவு என்றால் கார்டு.

“மாப்பிள்ளைக்கு உடம்பு சரியில்லை. அவர் சம்சாரத்தைக் கூப்பிட்டுகிட்டு போக வேண்டியதுதான! உங்கள ஏன் கூப்பிடணும்.”

“தாம்பரத்தில எனக்குச் சில டாக்டர்ஸ பரிச்சியம். அவருக்குத் தெரியும்”

“உக்கும். சார்! அவசரம்ன்னா, தாராளப் பிரபு ராஜூ சார் கொடுப்பருன்னுதான்!”

“அம்மா! ஏம்மா! விடும்மா அவரை! அவருக்கு இதுகூடத் தெரியாதா? எல்லாம் அவரு பாத்துப்பாரு”  நன்றாகக் குரலை உயர்த்தி சந்தோஷ் சொன்னான்.

உறுதியான ஒரு கட்டளை போல இருந்த அவன் குரல், ரமாவிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது.

“சரிங்க, பாத்துக்குங்க” என மெல்லிய குரலில் சொல்லிவிட்டு மௌனமானாள்.

வாசலில் நடராஜன், “எனக்கு டயமாவுது. அப்பாவை முடிஞ்சா வரச் சொல்லுமா. நா கிளம்பறேன்” என்றார் பத்மஜாவிடம்.

“இல்ல. அப்பாகிட்ட வண்டியில்ல, ஒரு நிமிஷம்… அப்பா அப்பா” என்றபடி பத்மஜா உள்ளே வந்தாள்.

“இதோ வந்துட்டேன்” என்றபடி, கார்டை சட்டைப் பையில் கவனமாக வைத்தபடி, சந்தோஷைப் பார்த்தார் ராஜூ.

அந்தப் பார்வையில் ஒரு புரிதல்!  “நீ வளர்ந்துட்டடா!” என்ற செய்தியெல்லாம் இருந்தது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button