இணைய இதழ் 125

என். ஸ்ரீராம் கதைகளின் மாயாதீதம் – ராணி கணேஷ்

கட்டுரை | வாசகசாலை

நதிப்பிரவாகம்

அமராவதியின் பெருஞ்சீற்றத்தை அருகிருந்து கண்ணுற வைக்கும் கதை. என்.ஸ்ரீராம் அவர்கள் எந்தக் கதைக் கருவாய் இருந்தாலும் அதில் தரவுகளைக் கண்டறிந்து தெளிவாக எழுதிச் செல்கிறார். இந்தக்கதையில்தான் எத்தனை வகையான சேவல்களின் பெயரை அடுக்கியுள்ளார். அவரின் கதைகளில் பூவாகட்டும், புல்லாகட்டும், பறவைகளாகட்டும், மரங்களாகட்டும் கேட்டிராத பெயர்களை எல்லாம் எழுதி அதனைத் தேடிப் பார்க்கும் ஆர்வத்தை விதைக்கின்றார். வாசிப்பின் மூலம் தான் எத்தனை அறிகிறோம். எல்லாவற்றையும் அனுபவித்து அறிய அவசியமற்று போகும் புத்தகம் வாசிக்கும் பழக்கமிருப்போருக்கு. தாழம்பூவின் வாசத்தில் தன் காதலை உயிர்ப்போடு வைத்திருக்கிறாள் அந்தப் பெண் காளியம்மாள். சில விடயங்களுக்குக் காலமே மருந்து, காலமே பதில்.

தேர்ப்பலி

நினைத்துப்பார்க்கக் கூட துணியாத காரியத்தை ஊருக்காக நெட்டையாண்டி எப்படிச் செய்யத் துணிந்தான் என்னும் வியப்பு கதையின் ஆரம்பத்திலேயே பதிந்து விடுகிறது. சில நேரத்தில் அந்தந்த பொழுதிற்கான தீவிரத் தீர்மானங்கள் அதன் விளைவுகளையோ, அதன் ஆழத்தையோ உணராத வண்ணம் ஒருத்தனை மூடனாக்கி விடுகிறது.  எனது இசக்கி கதையை ஞாபகப்படுத்திய கதையம்சம். காலதாமதமாய் உணரும் மடத்தனத்தால் என்ன பயன்? இதற்குப் படித்தவர்களும் விதிவிலக்கல்ல. இந்தக் கதையில் நல்லவேளை கோவணச்சாமியார் வந்தார் என ஆசுவாசமாக இருக்கிறது. கனகா மட்டும் மன்னித்திருக்கவே மாட்டாள்.

பிடார வடிவம்

பிடார வடிவம் என்றால் பாம்பின் வடிவம். பிணையல் பாம்புகளும் அதனைக் குறித்த நம்பிக்கைகளையும்  சார்ந்த கதை. பாம்பு, பேய் சார்ந்த கதைகளைச் சிறுவயதில் கேட்ட ஆர்வத்தோடே இந்தக் கதையையும் வாசிக்க முடிந்தது. சாரையும் நல்லபாம்பும் இணையும் என்று நம்பியதை இப்பொழுது கட்டுக்கதை என்கிறார்கள். இன்றும் பச்சைப்பாம்பை கையால் நீவி விட்டால் சமையல் ருசியாகச் செய்ய முடியும் என நம்புபவர்களும் இருக்கின்றார்கள். பிணையல் பாம்புகள் குறித்த அப்படியான ஒரு நம்பிக்கையிலேயே கூட தாமோதர மாமா பிழைத்து வாழக் கூடும். நம்பிக்கை தானே வாழ்க்கை.

மாயாதீதமும் வேட்டை பூதமும்

மாயாதீதம் தலைப்பிலேயே  ஆர்வத்தை அதிகப்படுத்திய சிறு புத்தகம். இந்தக் கதையை இன்னும் பெரிதாகவும், விரித்தும் எழுதியிருக்கலாம், அதற்கான முகாந்தரங்கள் நிறையவே இருந்தபோதும் ஆச்சரியங்களுக்கும், ஆர்வத்திற்கும் குறைவில்லாமல் சுருங்க எழுதி முடித்திருக்கின்றார் ஆசிரியர். முதல் பகுதியிலேயே மாயங்களைப் பரவவிட்டு கோட்டை மாரியம்மனை ஒருவிதப் பயத்தோடு பார்க்க வைக்கிறார். விஸ்வரூபக் குதிரையை நாமும் கண்ணுறுகிறோம். அதன் பின்னனா பகுதிகளில் கோவில், நம்பிக்கை, நீராடல், அன்னமெடுத்தல், காத்திருப்பு, வலி, வேதனை, தேசாந்திரக்காரன், கருப்பு நாய் என்று நகரும் கதை பார்கவியின் வரவுக்குப் பின் வேறு ரூபம் கொள்கிறது. காதலின் வாசம் ராமபாணபூவாக நம்முள்ளும் மணக்கிறது. நாகமடை ஓடையில் நாமும் விலாங்கு மீனைத் தேடுகிறோம். மாயாதீதம் எல்லோருக்கும் வாசிக்க விருப்பமாய் இருக்கக்கூடிய கதை. நம் நம்பிக்கைகளைப் பற்றிக் கொண்டு கதைகளை வசீகரமாய் நூர்க்கிறார் ஆசிரியர். இந்தக் கதையில் வேணுவிற்காக  சித்தப்பாவின் பிரயத்தனம் இறுதியில் மீண்டும் எழுதப்பட்ட சரித்திரமென வேணுவின் வடிவில் மாயங்களை நிரப்பிக் கொண்டு நதியாகப் பிரவாகம் எடுத்து ஓடுகிறது. அம்மாவைப் பற்றிய ரகசியமாய் இருக்கக் கூடும் என்பதில் நம் அனுமானங்களுக்கு வித்திடுகிறார். அப்பாவை விடச் சித்தப்பாவின் தீர்க்கமும், பிடிவாதமும், வேணுவிற்கான தியாகமும் அளப்பரியது. கஷ்டப்பாடு பட்டாவது அவனுக்கு விருப்பமான ஓவியக்கல்லூரியில் அவனைச் சேர்த்து விடுகிறார். தன் மனைவியின் துரோகத்திற்குப் பிராயச்சித்தம் தேட துணிச்சலான ஒரு முடிவை எடுக்கத் துணிகிறார். வேணுவைக் காட்டிலும் சித்தப்பா தான் கதையின் நாயகன் போல உயர்ந்து நிற்கிறார். அவரின் கருணை தேசாந்திரக்காரன் வரையிலும் நீள்கிறது.  எதார்த்தங்களோடு, மந்திரங்களையும், மாயங்களையும் பிணைத்து ஓடும் மாயநதி மாயாதீதம். நல்லதொரு வாசிப்பனுபவம்.

மாயை மறைக்க மறைந்த மறைபொருள்

மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்.

வேட்டை பூதம் என்னும் சிறுகதை காவல் தெய்வங்களைப் பிரதானமாய் கொண்டது. முயல் வேட்டை, சேவல் சண்டை, ரேக்ளா ரேஸ் எல்லாவற்றிலுமே பணயமாய் நிற்பது பெண்ணும் மண்ணுமே.  பொதுவாக முயல் வேட்டைக்குச் செல்பவர்கள் ஒன்றிரண்டு முயல்களோடு வந்து விடுவார்கள். இங்கே அதையே பிரதானமாகவும், தெளிவான திட்டமிடலோடு, வழிகளை வகுத்து கூட்டுச்செயலாய் செய்கிறார்கள்.

தமிழ்வெளி வெளியீடான என்.ஸ்ரீராமின் தேர்ந்தெடுத்த குறுநாவல்களில் ஏழு கதைகள் உள்ளன. தன் கதைகளில் அமானுஷ்யங்களைப் புகுத்தி அதே ஆர்வத்துடன் சலிப்பு தட்டாமல் வாசிக்க வைக்கிறார்.

நீலவானம், துருத்தி நடனம் இரண்டுமே சேராத காதல் குறித்த கதைகள் தாம். சம்சாரி வாழ்கை, கால்நடை சார்ந்த வாழ்க்கை என விரிகிறது. கிட்டாத காதல் காலமெல்லாம் கதலாகவே நிலைத்து விடுகிறது.

 மூன்றாம் நதி ஓடும் ஊரின் கதை ஒரு பெண் பெண்ணாக இருப்பதனால் மட்டுமே சந்திக்கும் துன்பங்களைப் பற்றிப் பேசுகிறது. கிட்னியை விற்கப்போகும் ஆணுக்கு இத்தனை வங்கொடுமை நடக்குமா என்று தெரியவில்லை. பாலியல் துன்புறுத்தல்களும், தன் எதிர்ப்பைச் சிறு சத்தமாகக் கூட வெளியிட முடியாத அவலமும் வசதியற்ற பெண்களுக்கு அன்றாடக் காட்சி. கணவனோ, தகப்பனோ, தமையனோ பணத்திற்காகப் பெண்ணை ஒரு பொருளாகப் பாவிக்கையில் வாழ்க்கை எத்தனை கொடுமையானதாக மாறிவிடுகிறது. இறுதியில் எல்லா ஆண்களும் அவள் பார்வையில் ஒன்றுபோல இருப்பதாகவே முடிகிறது கதை. அழுத்தம் தரக்கூடிய கதை.

பரஞ்சேர்வழி

பரஞ்சேர்வழியை வாசுவுடன் சேர்ந்து நாமும் சுற்றிப்பார்க்கிறோம், முயல் வேட்டைக்குப் போகிறோம்; தட்டான் பிடிக்கிறோம்; உடுக்கையின் ஓசையையும் அப்புச்சியின் பாடலையும் கேட்கிறோம்; பொன்வண்டு தேடியலைகிறோம்; தசரதப் பட்டாம்பூச்சிக்குப் பின்னால் சுற்றியலைகிறோம். பால்யத்தின் ஞாபகங்களை நினைவுப் பெட்டகத்திலிருந்து ஒவ்வொன்றாய் கைகளில் தாங்கி எழுதியது போலவே இருக்கிறது இந்தக்கதை. குழந்தைமையின் வெகுளித்தனத்தோடு ஆரம்பித்த கதை, காதல், துரோகம், சண்டை எனக் கடந்து செல்கிறது. ரவியின் நியாயங்கள் புரியாமலே போகட்டும். இது வாசு எழுதும் கதை.

கருப்பணவெளி வேட்டை பூதம், மாயாதீதத்தின் அருகிருக்க வேண்டிய சிறுகதை. சாமியாடியின் கதை. வேண்டுதல் எனப் பேருக்கு வேண்டி வைத்து நிஜமென வரும்போது பதற்றமே எஞ்சுகிறது. சாமி வராமல் தவிக்கும் சாமியாடி கோவிலில், வீட்டில், தனக்குள் என மருகி சோரும் கதை. தழிஞ்சி புதரையும்,நாய்த்துளசியையும், கொருவை முள்ளையும், ஊசி, கொழுக்கட்டைப் புற்களையும் அறியும் ஆவல் மிகுந்தது. விருத்தங்களாய் தன் கவிதை அழகையும் ஆங்காங்கே எழுதிச் செல்கிறார்.

பொம்மலாட்டத்தில் மகாராஜாக்கள்

பொம்மையைப் போலத்தான் இந்தக்கதையில் அந்த மாமா இருக்கிறார். விதியின் பேரில் சாட்டிவிட்டு தன் பொறுப்புகளை உதறிச் செல்ல எத்தனை எளிதாக இருக்கிறது அவருக்கு. இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு கடன்காரர்களைச் சமாளிக்க அந்த அத்தை என்ன பாடுபட்டிருப்பாள். சில கதைகளின் முடிவுகள் கதைக்காக என்றில்லாமல் எதார்த்தமாய் முடிகிறது. இப்படித்தான் கதை முடியவேண்டும் என்ற விதிமுறைகள் இல்லைதானே.

சீமை அம்பத்தாறு தேசமும்

முதல் கதையைப் போலவே பெண்களின் அவலநிலையை அதிகாரத்தின் பலத்தை எடுத்துக்காட்டும் கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் பரிசு வென்ற கதை. யதார்த்த வாழ்க்கையில் வீம்பிற்கும், கோபத்திற்கும் கூட வழியற்று பசித்த வயிற்றுக்குச் சோறே முக்கியம் என்பதாகப் போகிறது. சாதியினால் ஏற்படும் இழிவுகளும், அவமானங்களும் துடைத்தெறிய முடியாத கரையெனத் துணிகளைப் பற்றிக் கொள்கிறது. மாற்று உடுப்பு இல்லாத சனம் அதையே உடுத்த வேண்டிய கட்டாயம். தாழ்த்தப்பட்டோரின் வாழ்க்கைமுறையும், உணவும், பேச்சு முறையும் இந்தக்கதையில் பதிவாகிறது. ராமாயி வைக்கும் ஒப்பாரி போல அவர்களின் கஷ்டப்பாடு நீங்காமல் நீண்டு கொண்டே இருக்கிறது. அவர்கள் அதனோடே வாழப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள். பாவத்தின் சம்பளம் மரணமென அழுத்திச் சொல்லும் கதையாக மாறுகிறது இந்தக் கதை. வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தரும் கதைகளின் தொகுப்பு இது.  நம்பிக்கைகளை வேரோடியாய் கொண்டு கிளைபரப்பி நிற்கும் கதைகளின் ஆலமரம் எல்லோருக்கும் விருப்பமான நிழல் தருவியாகவும், ஊசலாட்டம் ஆடத் தோதானதாகவும் உறுதியாக நிற்கின்றது.  ஆசிரியருக்கு வாழ்த்துகள். 

மாயாதீதம், என்.ஸ்ரீராம் தேர்ந்தெடுத்த குறுநாவல்கள் இரண்டுமே தமிழ்வெளி வெளியீடு. புத்தகம் வாங்க : +919094005600

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button