இணைய இதழ் 125

நுணுகிப் பார்த்தல் – மணி மீனாட்சிசுந்தரம்

கட்டுரை | வாசகசாலை

“பார்க்கப்படும் நிலவைப் போன்றதல்ல

   சொல்லப்படும் நிலவு”

பா.வெங்கடேசன்

நுணுகிப் பார்த்தல் என்பது எப்போதும் ஒரு சிறந்த கவிதையின் சிறந்த பண்பாக இருக்கிறது. நுணுகிப் பார்த்தல் என்பதில் யாரும் காணாததைக் கவிஞன் காண்பதும், யாரும் கண்டவற்றுள் கவிஞன் கண்டடையும் தனித்த ஒன்றும் உள்ளடங்கியிருக்கிறது.   இங்குக் காண்பது என்பது கண்ணால் காண்பதுவும் உணர்வால் அறிவதுமாகும்.

 கவிஞனின் கண்களும் மனமும் பார்வைப் புலன்களாவதில் இந்த நுண்மை கூடுகிறது எனலாம்.அல்லது கவிஞன் சதா ஓர் உருப்பெருக்கிக் கண்ணாடியைக் காண்பவர் அறியாது கைகளில் வைத்திருக்க வேண்டும். அதுவும் அவனது மனத்துக்கு நெருக்கமான ஒரு மாயச் சேர்க்கையுடன். இல்லாவிட்டால் எப்படிக் கைகூடும் எவரும் அறியாத அந்தப் பார்வைக் கோணங்கள்.

இப்படிச் சிந்திக்கும்போது, கவிஞன் ஒரு காட்சியையோ அல்லது ஒரு நிகழ்வையோ முதன்முதலில்  பார்த்தபோதே அவனுக்குக் காட்சி, நிகழ்வு பற்றிய இந்த நுட்பமான உணர்வுநிலை, புரிதல் வாய்த்து விடுகிறதா? அல்லது தொடர்ந்து பார்த்துப் பழகியதாக இருந்தாலும், அதைக் காணும் ஒரு குறிப்பிட்ட கணத்தில் கவிஞனிடம் செயல்படும் அறிவுநுட்பமோ, உணர்வு நுட்பமோ அல்லது இரண்டும் இணைந்த ஒன்றோ இதற்குக் காரணமாகி இருக்குமா? ஆகிய வினாக்களும் மனத்தில் எழுகின்றன. 

ஒரு காட்சியை வெறும் காணுதல் எனும் நிலையைத் தாண்டி, நிகழும் காட்சியில் தன்னையும் உள் நுழைத்துக் கொண்டு காட்சியைக் கவிதைக்குள்ளேயே விளக்கிச் செல்வது, காட்சியில் நிகழும் செயல்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு அக்காட்சியை நீட்டித்துக் காட்டுவது ஆகியவை கவிஞனின் செயல்களாக அல்லாமல் காட்சியின் செயல்களாகவே கவிதையில் வெளிப்படுத்துவது ஆகிய இவையெல்லாமே கவிஞனின் சாமர்த்தியம்தான். ஒரு காட்சியில் நுழைந்து கவிஞன் செய்யும் இந்த மாறுபாடு நாம் சாதாரணமாகக் கண்ட ஒன்றின் மீது ஒரு புதிய பார்த்தலுக்கான தேவையை வாசகனுக்குச் சொல்கிறது.

 கவிஞனுக்குத் தெரிந்திருக்கிறதே நாம் காணவில்லையே என்ற தாழ்வுணர்ச்சியையும், கவிஞனைத் தலை உயர்த்திப் பார்த்து “ஓ, நீதான் கவிஞனா?” என வியக்கும் நிலையையும் இக்கவிதைகள் ஏற்படுத்தத் தயங்கியதில்லை. அவ்வகையில் நாம் பலமுறை கண்ட காட்சிகளைக் கவிஞனும் கண்டு, அதை வேறொன்றாகப் பேசி நிற்பதை, பேசி மகிழவே இக்கட்டுரையும் முயல்கிறது.

கவிதை -1

31-08-2013 ; மாலை 5.10

——————————————-

சாலையோரங்களில்

கிடக்கும் 

சிறகுகளை, மாலைக்காற்று

மெதுவாக எடுத்துப் பார்க்கிறது

ஏனோ

கையில் வைத்துக்கொள்கிறது

சற்று நேரம்…

சற்றுநேரம்…

கவிஞர் தேவதச்சனின் கவிதை இது. இந்தக் கவிதையைப் படித்தவுடன் சட்டென்று கவிஞர் பிரமிளின் கவிதை ஒன்று நினைவுக்கு வரும். இரண்டுமே காற்றில் பறக்கும் இறகுகளைப் பற்றிய கவிதைதான். ஆனால் பிரமிளின் கவிதை, காற்றின் பறக்கும் இறகுடன் ஒரு தத்துவச் சரட்டை நம் கையில் கட்டிவிடுகின்றது.அக்கவிதையைப் படித்த நாளிலிருந்து அந்தச் சரட்டை நம்மால் உதறவிட முடிவதில்லை.

 ஆனால் கவிஞர் தேவதேவனின் இக்கவிதை ஒரு மெல்லிய சலனக் காட்சியை நம்முன் காட்டுகிறது, “அதைப் பாரேன்” என்று ஒரு தோழமையுடன் நம் தோளைப் பற்றிக் காண்பிக்கிறது. நிகழும் ஓர் இயல்பான காட்சியுடன் ஒரு தோழமை உணர்வை மிக இயல்பாக இணைத்துக் காட்டுகிறது. சற்று நேரம் … சற்று நேரம்… என்ற கடைசி வரிகள். இந்தக் கவிதைக்கான வரிகள் மட்டுமல்ல என்பதைச் சற்று நேரம் இந்தக் கவிதைக்குள் இருந்தாலே உணர்ந்துகொள்ளலாம்.

கவிதை – 2

——————–

மொழி

————

பார்த்தாயா?

இதைத்தான் இவன்

இவ்வளவு நாள்களாகப் 

படித்துக்கொண்டிருக்கிறான்

என்று

மேசைப் புத்தகத்தின் பக்கங்களை

ஒவ்வொன்றாக விரித்துக் காட்டுகிறது

மின்விசிறி சன்னலருகில்.

எழுத்தறிவற்ற அந்தியொளியோ

மஞ்சள் கைகளால் தடவித் தடவி

இல்லாத சித்திரங்களைத் தேடுகிறது.

கவிஞர் யூமா வாசுகியின் கவிதை இது.ஓர் அறையில் சன்னலருகில் மின்விசிறி ஒன்று சுழல்கிறது. அதன் காற்றால் மேசை மீது வைக்கப்பட்ட புத்தகத்தின் பக்கங்கள் படபடக்கின்றன. சன்னல் வழியே சூரிய வெளிச்சம் புத்தகத்தின் மீது படிகிறது.இதுதான் காட்சி

.இந்தக் கவிதையைப் படித்ததும் மரபுக் கவிதைகளில் பயின்று வரும் தற்குறிப்பேற்றணி நினைவுக்கு வரலாம். அதாவது இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது.இங்கும் அதுதான் நிகழ்கிறது என்றாலும் நவீனக் கவிதை அதைக் கொஞ்சம்  மாற்றித் தருகிறது.கவிஞன் திட்டமிட்டு ஒரு கருத்தை வலியுறுத்த இயல்பான ஒரு நிகழ்வைக் காட்டிப் பேசுவதே மரபுக் கவிதைகளின் இயல்பாக இருக்கும். காட்சியின் இயல்பை விடக் காட்சியை முன்னிறுத்தும் கருத்தே அங்கு முதன்மை பெறும். அதில் காட்சி என்பது கருத்தை விளக்கப் பயன்படும் ஒரு கருவி மட்டுமே. ஆனால், இந்தக் கவிதை, ஒரு காட்சியைக் காட்டி இன்னொரு கருத்தை வலிந்து கூறாமல் இயல்பாக உணர்த்தி நிற்கிறது. இங்குக் காட்சியை முன்னிறுத்திக் கவிஞன் சொல்வது அவனது எண்ணமாக மட்டுமல்லாமல் கவிதையைப் படிப்பவர் எண்ணமாகவும் உணர வைத்திருப்பதே கவியின் வெற்றியாகிறது. கவிஞனும் காட்சியும் எத்துணை இயல்பாகக் கவிதைக்குள் கலந்து நிற்கிறார்கள் அல்லவா? 

கவிதை – 3

——————–

உருமாற்றம்

———————-

சாப்பாட்டு மேசையில் 

கை தவறவிட்ட குவளையிலிருந்து

குளமொன்று உருவானது

நடந்து நடந்து மேசை இறுதிக்குச் சென்று

வீழத் தயாராகிய

குளம்

மெல்ல மெல்ல

அருவியாவதை

அப்பொழுதுதான் பார்க்கின்றன

மேசை மீதிருந்த எல்லாமும்.

கவிஞர் ச.மோகனப்ரியாவின் கவிதை இது. மிகச் சாதாரணமான காட்சி.  ஆனால், எவ்வளவு அழகான கவிதையாக ஆக்கப்பட்டுள்ளது பாருங்கள். சொல்வதின் அழகு மிக இயல்பான ஒன்றையும் உயரத்தில் வைத்துவிடுகிறது.இங்கு மிக இயல்பான ஒரு காட்சியின் மீது கவிதைக் கிரணங்கள் பாய்ந்து ஒளி பெருக்குகின்றது. ஒரு குளம் எப்படி உருவாகும் என்பது குறித்த நம் மூளைச் சேகரங்களை இந்தக் கவிதை இயல்பாகத் தள்ளிவிடுகிறது. புதிய குளம் ஒன்றின் உருவாக்கம் ஒரு சாப்பாட்டு மேசையில் வைத்துக் காட்டப்படுகிறது. கண்களை இடுக்கிக் கொண்டு ஆர்வமுடன் நாமும் பார்க்கிறோம். நம்மோடு மேசையில் உள்ள பொருள்களும் சேர்ந்து கொள்கின்றன.கவிஞன் சதா தன்னைச் சுற்றியுள்ள எவற்றினோடும் உரையாடலை நிகழ்த்திய வண்ணமே இருக்கிறான் என்பதற்கு இந்தக் கவிதை சான்றாகிறது.

கவிதை – 4

——————–

ஒரு இடையன்

—————————

ஒரு இடையன்

பத்துப் பன்னிரண்டு ஆடுகள் 

ஒரு இடையன்

பத்துப் பன்னிரண்டு ஆடுகள் 

ஆனால்

எண்ணிலிறந்த தூக்குவாளிகள்

எண்ணிலிறந்த மழைகள்

எண்ணிலிறந்த தலைப்பாகைகள்

எண்ணிலிறந்த காற்றுகள்

எண்ணிலிறந்த தொரட்டிகள்

எண்ணிலிறந்த பகல்கள்

ஒரு இடையன்

பத்துப் பன்னிரண்டு ஆடுகள் 

ரயில்வே கேட் அருகில்

எப்படா திறக்குமென்று.

கவிஞர் தேவதச்சனின் கவிதை இது.  ஒரே மாதிரியான காட்சியின் கேமரா பதிவுகள் பலவற்றையும், மனத்தில் படிமமாய் உறைந்துவிட்ட காட்சிப்பதிவுகள் பலவற்றையும் ஒரு சேரக் கவிதைக்குள் கொண்டு வந்த அரிய காட்சி. கவிஞனின் கண்ணும் மனமும் பூரணமாய் இணைந்து தொழிற்பட்ட இந்நிலை, வாசகனை ஒரு புதிய காட்சி அனுபவத்தைக் காண, உணர முன் தள்ளுகிறது.நம் வாழ்வில் ஒரே காட்சியைப் பலமுறை நாம் கண்டதில்லையா? நிறைய நிறைய. ஆனாலும் அகக்கண் இல்லாதவர்க்குப் புறக்கண்களால் தரிசனங்கள் வாய்ப்பதில்லை. 

இரயில் வருவதற்காகப் பூட்டியிருக்கும் கேட். ஒவ்வொரு நாளும் ஓர் ஆட்டிடையன் தன் ஆடுகளுடன் அதைக் கடக்கக் காத்திருக்கும் காட்சி, தொடர்ந்து அதைக் காணும் கவிஞனின் மனநிலை.இதுவே கவிதையின் அடித்தளம்.எழுத்தாளர் கந்தர்வன் தனது ‘தண்ணீர்’ என்ற சிறுகதையில் இரயிலில் தண்ணீர் பிடிக்க இடம் பிடித்து நிற்கும் நாயகியின் நிலையை “ அவள் பதற்றமேயில்லாமல் அலட்சியமாக நிற்கிற அழகைப் பார்த்தால் ஐந்தாறு வருடங்களாக அதே இடத்தில் நிற்பது போல் தெரிகிறது” என்று எழுதியிருப்பார். அது ஒரு கணத்தில் வெளிப்படும் காலமற்ற நிலை. கவிதையில் வெளிப்படுவது காலங்களை உள்ளடக்கிய ஒரு கணத்தின் நிலை.கவிஞன் தான் காணும் காட்சிகளை எந்த நிலையில் தன் ஆழ்மனதிற்குள் இருத்திக்கொள்கிறான் எனச் சிந்திக்க வைக்கிறது இக்கவிதை.

இப்படிக் காட்சியின் மீது கவிதைக்கான வெளிச்சம் எப்படி, எங்கிருந்து வந்து விழுகிறது என்பதைப் பற்றி வாசகன் சிந்திப்பது, கவிதை தரும் காட்சியின் வெளிச்சத்தில் மூழ்கி இன்புறுவது என்ற நிலைக்கு எதிராகவும் அமைந்துவிடும் என்றாலும், கவிதை காட்டும் உணர்வு நிலைக்கு ஆட்பட்ட வாசகன் கவிதையின் உள்நோக்கிய பயணத்தில்  இந்தக் கேள்விகளை எழுப்பியபடியேதான் இருப்பான்.

 அதற்குக் காரணம், கவிதையை அனுபவித்த வாசகன், கவிதை தரும் உணர்வுடன் ஒன்றிவிட்ட வாசகன் அந்நிலையில் தன்னையும் கவிஞனையும் ஒரே உணர்வுடையவர்களாகக் கருதுகிறான். ஆனால், தான் உணர்ந்த உணர்வுநிலையைத் தனக்குக் காட்டியவன் கவிஞன் என்பதால் அவனுடைய அந்த உயரத்திற்கான காரணம் என்னவாக இருக்குமென்று அவனது மனம் துழாவித் திரிகையில் இந்தக் கேள்விகள் தவிர்க்கமுடியாதவையாகின்றன.

 – மணி மீனாட்சிசுந்தரம்.

துணை நின்ற நூல்கள்:

1. தேவதச்சன் கவிதைகள் (கவிதைத் தொகுப்பு)  தேசாந்திரி பதிப்பகம், சென்னை – 600093

2. யூமா வாசுகி கவிதைகள், தன்னறம் நூல்வெளி, சிங்காரப்பேட்டை – 635307

3. ஞாபகப் பெருங்களிறு- ச.மோகனப்ரியா, சால்ட் பதிப்பகம், சென்னை – 600024

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button