
கோணவாச்சி சிறுகதைகள் – ஆங்கரை பைரவி
ஒரு படைப்பாளி தன்னைச் சுற்றி நடக்கும் எந்த நிகழ்விலும், எந்த இடத்திலும் தனக்கான படைப்புத்தளத்தை கண்டறிய முடியும். அந்த வகையில் ஆங்கரை பைரவி டெல்டா பிரதேசக் காவிரிக் கரையின் எளிய கிராமங்களிலிருந்து, தனக்கான கதைக்களத்தை, கதை மாந்தர்களைக் கண்டடைகிறார். கண்ட நிகழ்வுகளை, மனிதர்களைப் புனைவெனும் தன் கைச்சரக்கேற்ற மிகச் சிறப்பான யதார்த்த வகைக் கதைகள் வாசகனுக்குக் கிடைத்துவிடுகின்றன. அந்த வகையில் ‘கோணவாச்சி’ செறிவானதொரு இயல்புவாத யதார்த்தவாத சிறுகதைத் தொகுப்பு எனலாம்.
“இயல்புவாத யதார்த்தவாதம்: பிற இலக்கியக் கொள்கைகள் புனைவு செய்து வழங்குவது போன்று அல்லாமல் சமூகத்தின் சமூகத்தைச் சிறிது மாற்றியும் திரித்தும் கற்பனையாக இயல்புத் தன்மை மாறாமல் பதிவு செய்கிறது; நம்புகிறது; பின்பற்றுகிறது இயல்புவாத யதார்த்தவாதம். ஆக, சமூகத்தை உண்மையாகச் சித்திரிப்பதே பிரதானமாகிறது. மனிதனது நடவடிக்கை, உண்மை, சீரழிவு, முரண் என மானுடத்தின் கருப்பொருளும் மாந்தர்களின் நடைமுறை வாழ்வும் இயங்கியலே இதன் ஆதாரம்.” என்பார் பேரா.ந.இரத்தினக்குமார் [திறனாய்வுக் கோட்பாடுகளும் பன்முக வாசிப்புகளும். பக் 100]
தான் பழகிய மனிதரின் அனுபவத்துடன் தன் சொந்த அனுபவமும் இணையும்போது, வட்டார பேச்சு மொழியும் சேர்கையில் படைப்பாளிக்கு எத்தகைய இடர்ப்பாடுமின்றி புதிய கதைக்களமும் பாத்திரங்களும் அவர்கள் தேர்ந்தெடுத்த களத்துடனும், அங்கு வாழும் மனிதர்களுடனும் நிகழும் நிகழ்வுகளுடனும் இணைந்த ஒன்றாக அவர்களது இலக்கியப் படைப்பு அனுபவம் அமைந்திருக்கும் எனும் வகையில் கோணவாச்சி சிறுகதைத் தொகுப்பில் 12 கதைகள், ஒவ்வொரு கதையும் வித்தியாசமான கதைக்களன்; வித்தியாசமான மனிதரென வெவ்வேறு திசை நோக்கிப் பயணிப்பவை.
படு படைப்பாளன் தன் படைப்புகள் வழியாகத் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்துடன் காத்திரமான ஓர் உரையாடலை நிகழ்த்துகிறான். அத்தகைய உரையாடலில் மனிதச் சமூகத்தின் மகத்துவக் குணங்களை, தனி மனிதர்களின் வீழ்ச்சிகளை, அவர்களிடம் உறைந்துகிடக்கும் நுண்மான் நுழைபுலமிக்க அடிமன இயக்கங்களையும் உயிர்ப்பிக்கையில் அந்த விவாதத்திற்கு உரம் சேர்க்கும் உரிப்பொருளும் கருப்பொருளுமாகப் படைப்பாளியின் சித்தாந்தப் பின்புலங்கள், வித்தியாச அனுபவங்கள், நுபார்வையுடன் கூடிய தினசரி வாழ்க்கையின் புறவயம் மற்றும் அகவயப்பார்வைகள் போன்றவை அமைகின்றன. ஆங்கரை பரவியின் கதைமாந்தர்களும் நாம் இதுவரை சந்திக்காத திகைப்பூட்டும் அச்சு அசலான மனிதர்கள்.
குடியின் பிடியில் சிக்குண்டு, குடும்பம் மறந்த பொறுப்பற்ற தந்தை இறந்ததாய் பள்ளியில் சொல்லும் 11 ஆம் வகுப்பு மாணவியின் மனநிலை மிகச் சிறப்பாகப் பதிவாகி உள்ளது.
“எங்க அப்பா இன்னிக்கு மட்டும்தான் டீச்சர் செத்துப்போனாரு.. ஆனா நானும் எங்க அம்மாவும் தினமும் செத்துச் செத்துப் பிழைக்கிறோம் டீச்சர்” [ ப.19] சரஸ்வதியின் பொய்யில் அவளுக்கான நியாயம்.குடியால் குடை சாய்ந்த குடும்பம் ஒன்றில், தாய் மகளைத் தினந்தோறும் துயரம் தின்னும் கொடுமை எவருக்குமே வாய்க்கக் கூடாது என நினைக்கக்கூடிய கதை ‘அப்பா’
வசவுச் சொற்களும் கவிதையாகுமா? பைரவியின் பார்வதி துப்புவதும் கவிதையாகிறதே..!
“இருக்கிறது சாணு எடம். அதையும் அடிச்சுக் கட்டிக்கலாம்னு பாக்குறீங்குளா? உங்க எண்ணத்துல இடி விழுக.. உங்க ஊடு மம்மோடா போவ. உங்க ஆணு தலயில அள்ளி வைக்க..பொண்ணு தலயில புடிச்சுவைக்க ..” [ப.16]. கொடுப்பது யாரென்று பொறுத்தே கொடுக்கப்படும் பொருளின் மதிப்பும் ஏறவோ இறங்கவோ செய்கிறது. மனித மனங்களில் டிசைன் அப்படி என்பதைக் காட்சி படிவமாக விவரிப்பது, ‘ஒரு கவுளி வெத்தலை’.
“மதம் எனும் நோய் பிடியாமல் இருக்க வேண்டும்” என்றார் வள்ளலார் பெருமான். இலவசக் கண் சிகிச்சை செய்ய அழைத்து மகனுக்கு நேரமில்லை. ஆனாலும் தானம் கொடுக்கும் மாட்டைப் பல்லைப் பிடிக்கும் பாட்டிகள்தான் சமகால சங்கிகளுக்கு முன்னோடியோ என்னவோ..? ‘சிகிச்சை’ கதையில் மிக அற்பமான மனிதர்கள் காட்டப்படுவது கசப்பான யதார்த்தம்
‘கோணவாச்சி’ சற்றே பெரிய கதை..! கொஞ்சம் முயன்றிருப்பின் இது ஒரு புதினமாக மாறக்கூடிய உள்ளடக்கம் கொண்டது. உடலெனும் மாயவாக்கியத்தின் மொழி அலாதியானது தி.ஜாவோ.. அன்றி நா. விசுவநாதனோ இக்கதையை எழுதியிருந்தால் இன்றைய இலக்கிய உலகம் இன்னமும் கோணவாச்சியைக் கொண்டாடி இருக்கும். ஆனால் பைரவியின் கோணவாச்சி ஏதோ ஓர் உள்ளார்ந்த கிராமத்தின் வித்தியாசமான பாத்திரம். ஆனாலும் தொகுப்பின் வாயிலாக வாசகன் மனதில், நினைவில் நிற்பாள் கோணவாச்சி .
அரசு எந்திரம் பார்வையற்றது; கேட்கும் செவித்திறன் அற்றது; ஆனால் வாய்கிழியப் பேசுவது என்பதைக் குறியீடாகச் சொல்வதே ‘நம்ம ஆள் கதை’
‘இவரா என் கணவர்’ கதையின் நாயகன் வாசிக்கப் புதுசு. உடலை மட்டும் விரும்பும் கணவன்களில் கருப்புசாமி விதிவிலக்கு. மனைவியை நேசிப்பவனுக்கு அவள் உடலும் சொந்த உரிமை என்று நினைக்கும் சனாதன மனப்பான்மை பெரும்பான்மை ஆண்களிடம் இருப்பதின் சிறு எடுத்துக்காட்டு இக்கதை. நிகழ்வுகளால் நகரும் கதையில் உரையாடல்கள் பலம் சேர்க்கின்றன. “இவரா என் கணவர்? இத்தனைக் கேவலமானவரா? கட்டில் சுகம் மட்டும்தான் வாழ்க்கையா? பெண்ணின் நிலைகளுக்கு மதிப்பு ஒடுக்காத வர்க்கமா என் கணவர்?” என வித்யா தன்னைத்தானே கேட்டுக்கொள்ளும்பொழுது அது பெண் சமூகத்தின் ஒட்டுமொத்தக்குரலாக எதிரொலிக்கிறது.
‘ பனைமரம்’ சிறுகதை, இரண்டு குழந்தைகளோடு நாதியற்று நிற்கும் தாய்க்கு நம்பிக்கை விதைப்பது..! யார் சென்றாலும் பணி கொடுக்கும் பசி தீர்க்கும் அட்சய நகரமாக திருப்பூர் என்பது ஒரு குறியீடாகிறது.
வீனியக்கா பாத்திரம் தமிழுக்கு மிகப் புதுசு. உடல் என்பது உழைக்கும் எந்திரம் மட்டுமல்ல உணர்வுத் தளும்பலும் என்பதை உணர வைக்கும் குறுநாவல். ‘வீனியக்கா’ கதையை வாசித்து முடித்தவுடன் எதார்த்தச் சினிமா பார்த்தது போல் ஓர் உணர்வு. புதினமாய் விரிய வேண்டிய நீண்ட நெடுங்கதை. குறுநாவலாய் குறுகிவிட்டது இலக்கிய நட்டம். நான்கு முக்கிய பாத்திரங்களை மையமாகக்கொண்ட கதையின் நிகழ்வுகள் இதுகாறும் சொல்லப்பட்ட புனிதம் உடைப்பவை. தமிழ்க் கதை வரலாற்றில் மிகப் புதிதான கதைக்கரு. வீனியும் அவன் அக்காவும் புதிரான கதாபாத்திரங்கள். அக்காவுக்குச் சேவகம் புரியும் வீனி தமிழில் கதைப்பாத்திரங்களின் மிக வித்தியாசமான பாத்திரம்.. அதிர்வு மதிப்புகளைப் பரப்பும் வீனி அக்காவும்தான்.
“ஓர் இலக்கியப் படைப்பு சிறந்து விளங்க வேண்டுமானால் அதில் இடம்பெறும் மாந்தர்களும் அம்மாந்தர்களின் பின்புலத்திலுள்ள சகல இயக்கங்களும் உரிய பொருட்களும் மிக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட வேண்டும். இலக்கியத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய இன வரைவியல் செய்திகள் அவ்விலக்கியத்தில் இடம்பெறும் பாத்திரங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் பொருத்தமான பின்புலத்தை உருவாக்க உதவுகின்றன.” எனக் குறிப்பிடுவார் பேரா ஆ.சிவசுப்பிரமணியன் [இனவரையிலும் தமிழ் நாவலும்]. தொகுப்பில் எனக்குப் பிடித்த கதை ‘அழுக்கு’. பைரவியின் விவரிப்பு மொழியில் காட்சிகள் படமாய் நகர்கின்றன. கவிதை கலந்த கதாமொழி வாசிப்பு சுகம். ரா.சோ.வின் ‘கோணல் வடிவங்கள்’ கதையின் பெண் பாத்திரம்போல இக்கதையின் நாயகியும் தாலி ஆதிக்கத்தால் வெம்புகிறாள். எனினும் எதிர்த்து குரல் கொடுப்பவளல்ல.
”துக்கத்தை அடக்கி பழகிவிட்டது எனக்கு… கசப்பும் வெறுப்பும் பழகிப்போய்விட்டதால் படித்துறை கல்லு போலக் கிடக்கிறது வாழ்க்கை” எனக் கதைநாயகி தனக்குத்தானே புலம்பி உள்ளுக்குள் பேசிக்கொள்ளும் மனமொழி உத்தி கதையை உரையாடல் வழியாக வாசகனுக்குக் கடத்துவது வித்தியாசமான நுட்ப உத்தியும் கூட.
‘குணவதியம்மாள்’ கதை துயரம் நிறைந்தது. வயோதிகம் எவ்வாறு மூத்தவர்களை, முதியவர்களை, உறவுகள் புறக்கணிக்கக் காரணமாகிறது என உணர்வு போங்கச் சொல்லும் கதை. காசியில் பிண்டம் வைப்பதற்குப் பதிலாக, ஆதரவற்றோர் இல்லத்தில் புகலிடம் தேடி வசிக்கும் அம்மாவுக்கு மகன் உணவளிப்பதும், மகனை மறைமுகமாய் தாய் வாழ்த்துவதும் தமிழுக்குப் புதிய நிகழ்வு.
‘வீழ்வேன் என்று நினைத்தாயோ..?’ பாரதியின் தலைப்பு! கதைநாயகி விஜியின் சொற்களில் கதை இன்னமும் விரிவடைந்து இருப்பின் பெருமிதம் கூடிய பெருங்கதை ஒன்று தமிழ் இலக்கியத்திற்கு வாய்த்திருக்கும். மிகத் தைரியம் கூடிய பெண்ணாக விஜியின் பாத்திரப் படைப்பு.
‘வேலம்மாவின் கூரை வீடு’ ஒரு குறும்படம் பார்த்த உணர்வு! வெள்ளையம்மாள் கிழவி, பாலகிருஷ்ணன் அண்ணன் எனச் செய்நன்றி பாராட்டும் கிராமத்து மனிதர்களின் ஊடாக நன்றி மறந்த வேலு போன்றவர்கள்..! கசப்பும் துவர்ப்புமான வாழ்வின் கடைசி வரிகளில் நன்னம்பிக்கை முனையைக் கண்டடைகிறாள் வேலம்மா..! திசைகாட்டியாக ஆங்கரைபைரவி.
ஆங்கரை பைரவியின் பெண் பாத்திரங்கள் பிரத்தியேகமானவர்கள்! கோணவாச்சியோ, வீனி அக்காவோ தி.ஜா.வின் பாத்திரங்கள் அல்ல.. சுதந்திரமாய் தன் அபிலாசைகளைத் தீர்த்துக்கொள்ளும் தைரியமில்லாதவர்கள்.. ரகசியக் குகைக்குள் சிக்கி உடலினும் மாய அவஸ்தை நித்தமும் பாவம் பகலும் அனுபவிப்பவர்கள்; துன்புறுபவர்கள்; அல்லலுறுபவர்கள்.
தொகுப்பு முழுக்க கதாபாத்திரங்களாகும் பெண்கள், சமூகவியல் மற்றும் உளவியல் ஆய்வுக்கு உட்படுத்தி விரிவாக இலக்கிய விசாரணை செய்யப்பட வேண்டிய தனித்துவப் பாத்திரங்கள்.
புழுங்கிப் புழுங்கியே பொழுது கழிப்பவர்களிடம் எதிர்ப்புணர்வு என்பது எங்கோ யாருக்கோ ஒரு சிலரிடத்தில். சமகாலத்திலும் பெண்ணிய அரசியல் நுழையாத கனத்த எஃகு கோட்டைக்குள் வாழ்பவராய் பெயர் சொல்லி வெறும் வாக்காளர் அட்டையாய் இருப்பவர்கள். சிலரோ சுவைக் குறைந்த இந்த வாழ்வைத் தைரியமாய் எதிர்கொள்பவர்கள்; போராடுபவர்கள்..! இப்படி விதவிதமான பெண்களைக் கதைக்குள் நுழைத்து வாசகனுக்கு ஒரு கதை கலைடாஸ்கோப் செய்திருப்பது ஆங்கரை பைரவியின் வெற்றி.
உரையாடலின் ஊடாக மிளிரும் பழமொழிகள், பேச்சு வழக்குகள், கொஞ்சம் ரசிக்கக்கூடிய வசவு சொற்கள் என எல்லாம் கலந்த பைரவியின் மொழி மிக இலகுவாக வாசகனை வாசகனிடம் வந்தடைகிறது. கருத்தாழமிக்க முகப்பை உருவாக்கிய கவியோவியத் தமிழனுக்கும் ஒரு பூங்கொத்து. சிறந்ததொரு சிறுகதைத் தொகுப்பை வழங்கியதற்காகச் செவ்வி பெருமிதம் கொள்ளலாம்.
அன்பாதவன்
4 அலமேலுபுரம் ,
விழுப்புரம் 605602
7829985000
anbaadhavanjp@gmail.com



