
காலை நேரத்தின் முதல் வெளிச்சம் இன்னும் பூமியின் கண்களை முழுமையாகத் திறக்கவில்லை. கிழக்கு வானத்தின் விளிம்பில் மெதுவாகப் பிறக்கும் சூரியன், தன் தங்க நிற ஒளியை மெல்லப் பூமியில் ஊற்றிக்கொண்டிருந்தான்.
அந்த ஒளியில் நனைந்த புல்வெளிகள், இலைகளின் முனையில் தொங்கிய பனித்துளிகள், தூரத்தில் நின்ற மலைச்சரிவுகள், அனைத்தும் ஓர் அமைதியின் மௌன மொழியைப் பேசிக்கொண்டிருந்தன. அந்த அமைதியின் மத்தியில் ஒரு தேசாந்திரி மெதுவாக நடந்தாள். அவளுடைய காலடிகள் மண்ணைத் தொட்டாலும், அவளுடைய மனம் ஏற்கனவே உலகத்தின் பல பாதைகளைத் தொட்டுவிட்டு வந்திருந்தது. அவள் நடந்த பாதைகள் எண்ணற்றவை. அவள் பார்த்த மனிதர்கள் எண்ணில் அடங்காதவர்கள். ஆனால், இன்று அவள் செல்லும் பாதை வேறுபட்டது.
அவளுடைய கண்களின் முன், அந்த பரந்த வெளியில் உயர்ந்து நின்றார் 80 அடி புத்தர். அந்தச் சிலை வெறும் கல்லல்ல. அது அமைதியின் உருவம். அது மௌனத்தின் மொழி. அது மனித வாழ்வின் ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் பதில் சொல்லும் ஒரு நிலை. அவள் முதல் காலடியை வைத்தாள். அந்த ஒரு காலடியில் ஏதோ ஒரு விசித்திரமான அலை அவளுடைய உடலின் உள்ளே எழுந்தது. அது பயம் அல்ல; அது பக்தி அல்ல; அது ஒரு விளக்கமளிக்க முடியாத உள்ளொளி. முதலில் புத்தர் அவளிடம் கேட்டார், “மீண்டும் இங்கே நீ வந்துவிட்டாயா?” என்று. உடனே அவள் மெதுவாகச் சிரித்து, “ஆம், இந்த உலகம் முழுவதும் என்னை அலைக்கழித்த பிறகு நான் திரும்பி வர வேண்டிய இடம் இதுதான்” என்று பதில் அளித்தாள். பிறகு, அவள் பின்னால் எங்கிருந்தோ எழுந்த புல்லாங்குழல் ஓசை காற்றோடு கலந்து வந்தது. அந்த இசை யாருடையது என அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த ஓசை அவளது உள்ளத்தை மெதுவாக இழுத்துச் சென்றது.
அவள் ஒரு தேசாந்திரி. அவளுக்கு நிலையான ஊர் இல்லை; வீடு இல்லை. பாதைகள்தான் அவளின் உறவுகள்; காற்றுதான் அவளின் தோழன்; வானம்தான் அவளின் மாளிகை. மீண்டும் அந்தப் புல்லாங்குழல் ஓசை அவளிடம் கேட்டது. ஆனால், அவள் இப்போது திரும்பிப் பார்க்கவில்லை. ஏனெனில், சில அழைப்புகள் திரும்பிப் பார்க்கச் சொல்லாது. அவை முன்னே செல்லச் சொல்வதுதான் என்று அவள் உணர்ந்தாள். பிறகு,மீண்டும் புத்தருடன் உரையாடல் தொடங்கியது.

தேசாந்திரி:
“நான் உலகத்தைச் சுற்றி வந்தேன்; மலைகளையும் கடல்களையும் கண்டேன்; மனிதர்களின் சிரிப்பையும் துயரத்தையும் பார்த்தேன். ஆனால், இன்னும் என் மனம் அமைதியைக் காணவில்லை” என்றாள்.
புத்தர்:
“நீ உலகத்தைத் தேடி அலைந்தாய். ஆனால், உன் உள்ளம் உன்னை எப்போதாவது தேடியது உண்டா?” என்று கேட்டார். அந்தக் கேள்வி அவள் மனதின் ஆழத்தில் ஒரு கல்லைப் போல விழுந்தது. பிறகு அவள் புத்தரிடம்,
“அப்படியா, உலகம் முழுவதும் நடந்த என் காலடிகள் எல்லாம் என்னை என்னிடமே கொண்டு வர வேண்டியதா?” என்றாள். காலத்தின் பெருங்கடலைத் தாண்டி அமைதியாக நிற்கும் அவரின் முகம் சங்க காலக் கவிஞர்கள் பாடிய மௌனத்தின் உருவம் என அவளது கண்களுக்குத் தோன்றியது.
தேசாந்திரி: “இந்த மனிதர்களின் ஆசைகளையும் அச்சங்களையும் பார்த்தேன். ஆனால், என்னுள் இன்னும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடம் என்ன?” என்று கேட்டாள்.
புத்தர்: “மனிதன் உலகத்தை நிரப்ப முயல்கிறான். ஆனால், அவன் உள்ளத்தின் வெற்றிடம் நிரப்பப்பட வேண்டியதல்ல. அது புரிந்துகொள்ளப்பட வேண்டியது”
தேசாந்திரி:
“நான் அலைந்த எல்லாப் பாதைகளும் வீணானவையா?”
புத்தர்:
“ஒரு பாதையும் வீணாகாது. அலைந்த காலடிகள்தான் மனிதனை அவன் உள்ளத்தின் வாசலுக்குக் கொண்டு செல்கின்றன”.
தேசாந்திரி:
“மனிதர்கள் எல்லோரும் ஏன் இவ்வளவு ஓடுகிறார்கள்? அவர்களுக்கு என்ன தேவை?”
புத்தர்:
“அவர்கள் தேடுவது அமைதி. ஆனால், அவர்கள் தேடும் வழி சத்தமாக இருக்கிறது”.
தேசாந்திரி:
“அமைதி எங்கே இருக்கிறது?”
புத்தர்:
“நீ இப்போது அமர்ந்திருக்கும் இந்தத் தருணத்தில்”.
தேசாந்திரி:
“என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு நிலையான இடம் இல்லை. அது ஒரு குறையா?
புத்தர்:
“நிலையான இடம் இல்லாதவன் உலகத்தையே தன் இல்லமாகக் காண்கிறான். அது குறையல்ல.
பிறகு, அவள் வாழ்க்கையின் அடுத்தடுத்த கேள்விகளை மெதுவாகக் கேட்கத் தயாரானாள். அந்த உரையாடல் இன்னும் நீளப் போகிறது என்று உணர்வோடு இருந்தாள்.
தேசாந்திரி:
“நான் ஏன் எப்போதும் பயணம் செய்கிறேன்?”
புத்தர்:
“உன் உள்ளம் இன்னும் ஒரு கதையைச் சொல்ல விரும்புகிறது”.
அந்தப் பதில் அவள் உள்ளத்தை ஆழமாகத் தொட்டது. அவள் தலை நிமிர்ந்து வானத்தைப் பார்த்தாள். அந்த வானம் மிகவும் நீலமாக இருந்தது. அந்த நீலத்தின் உள்ளே எந்த எல்லையும் தெரியவில்லை.
தேசாந்திரி:
“ஒரு மனிதன் தன்னை மாற்ற முடியுமா?”
புத்தர்:
“மனிதன் தன்னை மாற்ற முயல்கிறான். ஆனால், அவன் உண்மையில் செய்ய வேண்டியது, தன்னைப் பற்றிப் புரிந்துகொள்வது”.
தேசாந்திரி:
“இந்த உலகத்தில் உண்மையான வெற்றி என்ன?”
புத்தர்:
“தன் மனதை வெல்லும் மனிதன்தான் வெற்றி பெற்றவன்”.
அந்த வார்த்தைகள் அந்தக் காலை காற்றில் நீண்ட நேரம் நிலைத்திருந்தன.
தேசாந்திரி:
“மனிதன் எப்போது சுதந்திரம் ஆகிறான்?”
புத்தர்:
“அவன் தன்னைப் பற்றிய கதைகளை விடும்போது”.
தேசாந்திரி:
“இந்த உலகத்தில் மனிதன் உண்மையில் தேடும் ஒன்று என்ன?”
புத்தர்:
“அவன் தேடுவது அவனுக்கே தெரியாத ஒன்று “அமைதி”.
அந்த வானம் இப்போது வெள்ளை மேகங்களால் மெதுவாக நிரம்பியிருந்தது. காலை மெதுவாக மதியமாக மாறிக்கொண்டிருந்தது. ஆனால், அந்த உரையாடல் இன்னும் முடியவில்லை. அது அந்த மௌனத்தின் ஆழத்தில் தொடர்ந்து விரிந்துகொண்டே இருந்தது.
தேசாந்திரி:
“ஓர் ஆணை எப்படிப் புரிந்துகொள்வது?
புத்தர்:
“ஓர் ஆணை புரிந்துகொள்வது அவன் சொற்களைப் பார்த்து அல்ல, அவன் செயல்களைப் பார்த்துத்தான். அவன் பல வேடங்களில் இருப்பான். அப்பா, சகோதரன், நண்பன், கணவன். ஆனால், அவன் உள்ளத்தின் உண்மை ஒன்றுதான். அவன் பலவீனமாக இருக்கும் நேரங்களில் அவன் உண்மை வெளிப்படும்”.
தேசாந்திரி:
“என் வாழ்க்கையில் மிகவும் சிறிய வயதிலேயே பல விஷயங்கள் தெளிவாகப் புரிந்துவிட்டது. வாழ்க்கையின் உண்மை, மனிதர்களின் மனம் எல்லாம் விரைவாகத் தெரிந்துவிட்டது. அது தவறா, சரியா?”
புத்தர்:
“தெளிவு வயதைக் கேட்டுப் பிறக்காது. சிலருக்கு அது முதிர்ந்த வயதில் வரும். சிலருக்கு அது பிறந்த நாளிலிருந்து விதையாக இருக்கும்.
ஒரு மலர் காலம் வந்தால் மலர்கிறது. சில மலர்கள் விடியற்காலையில் மலரும். சில மலர்கள் மாலையில் மலரும். அதனால், முன்பே மலர்ந்த மலர் தவறு அல்ல. அது இயற்கையின் தன்மை. உனக்கு வந்த தெளிவு, அது ஒரு சுமை அல்ல, அது ஒரு பொறுப்பு”.
தேசாந்திரி:
“எல்லாரும் போலக் காலை வேலைக்குப் போய், மாலை வீட்டிற்கு வந்து வாழும் வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு எழுதுவது பிடிக்கும்; பயணம் செய்வது பிடிக்கும்; புத்தகங்கள் வாசிப்பது பிடிக்கும். நான் கற்றதை மற்றவர்களுடன் பகிர விரும்புகிறேன். ஆனால், இந்தச் சமூகம் என்னைப் பைத்தியம், சம்பாதிக்கத் தெரியாதவள் என்று சொல்கிறது. இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?”
புத்தர்:
“உலகம் பெரும்பாலும் புரியாததைப் பைத்தியம் என்று அழைக்கும். அவர்கள் நடக்கும் பாதை நேரான சாலை. நீ நடக்கும் பாதை காடு வழி. சாலையில் நடப்பவர்களுக்குக் காடு பயமாக இருக்கும். ஆனால், காடுதான் உண்மையான வாழ்க்கையைக் கற்றுத் தரும். நீ உன் உள்ளம் சொல்லும் பாதையில் நட. உண்மையாக வாழ்பவர்களை முதலில் உலகம் கேலி செய்யும். பிறகு, சந்தேகிக்கும்… கடைசியில் அதே உலகம் அவர்களைப் புரிந்துகொள்கிறது. அதனால், மற்றவர்களின் வார்த்தைகளைச் சுமையாக எடுத்துக்கொள்ளாதே. உன் உண்மையை மட்டும் இழக்காதே”.
தேசாந்திரி:
“பள்ளி, கல்லூரி, குடும்பம், அரசு, சமூகம். இவை எல்லாம் ஒரு வாழ்க்கை முறையைக் கட்டமைக்கின்றன. நான் என் வாழ்க்கையை என் வழியில் கட்டமைக்கிறேன். ஆனால், அவர்கள் என்னை ஒதுக்கி, ‘நீ என்ன வாழ்க்கை வாழ்கிறாய்?’ என்று இழிவுபடுத்துகிறார்கள்”.
புத்தர்:
“சமூகம் பெரும்பாலும் பழக்கப்பட்ட பாதையைப் பாதுகாக்கும். அந்தப் பாதையை விட்டு வெளியே நடப்பவர்களை அது முதலில் புரிந்துகொள்ளாது. ஒருவர் தன் வாழ்க்கையைத் தானே கட்டமைப்பது தவறு அல்ல. ஆனால், நினைவில் கொள், உலகம் புரிந்துகொள்ளாததைக் கேலி செய்யும். உன் வாழ்க்கை உண்மையானதாக இருந்தால், அவர்களின் வார்த்தைகள் உன்னை வரையறுக்க முடியாது”.
தேசாந்திரி:
“ஓர் ஆண் புத்தகம் வாசிக்கிறான்; எழுதுகிறான்; சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கிறான். ஆனால், ஒரு பெண் அவனுக்கு எதிராக உண்மையைப் பேசினால், அவளை மிகவும் இழிவாகப் பேசுகிறான். அவனுக்கும் மனைவி, மகள், சகோதரி, தோழிகள் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் இன்னொரு பெண்ணை எப்படி இழிவாகப் பேச முடிகிறது? இதை எப்படி எடுத்துக்கொள்வது?”
புத்தர்:
“அறிவு என்பது புத்தகம் வாசிப்பதால், எழுதினால் மட்டும் வராது. அறிவு, அவனது மனதில் கருணையாக மாற வேண்டும். ஒரு மனிதன் சமூகத்தின் முன் வேடம் அணிந்தாலும், அவன் வார்த்தைகள் இழிவாக இருந்தால், அவன் உள்ளம் இன்னும் வளரவில்லை. ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது அவன் தன்னுடைய பலவீனத்தை வெளிப்படுத்துவது. அதனால், அவன் வார்த்தைகளை உன் மதிப்பாக எடுத்துக் கொள்ளாதே”.
தேசாந்திரி:
“ஒரு பெண் தன் எதிரில் இருக்கும் மனிதரின் முகமூடியைக் கண்டுபிடிக்கிறாள். ஆனால், அந்த உண்மையை எதிர்கொள்ளாத முடியாதவர்கள், அவளை “நீ டாக்ஸிக்; நீ பெண்ணே இல்லை; உனக்கு உடம்பில் உறுப்புகளே இல்லை; உனக்கு நோய் உடம்பு” என்று கேட்க முடியாத வார்த்தைகளைப் பேசுகிறார்கள்”.
புத்தர்:
“உண்மை கண்ணாடி போன்றது. அதைப் பார்க்கத் தயங்குபவர்கள் அந்தக் கண்ணாடியை உடைக்க முயல்வார்கள்.
அவர்கள் உண்மையை மறைக்க முடியாது. ஆனால், உண்மையைச் சொன்னவரை ‘டாக்ஸிக், பைத்தியம்….’ என்று சொல்ல முயல்வார்கள். ஒரு மனிதன் மற்றவரின் உடம்பை, மனதை இழிவுபடுத்துகிறான் என்றால், அது உண்மையை மறைக்க அவன் தேர்ந்தெடுத்த பலவீனமான வழி”.
தேசாந்திரி:
“நான் ஒரு தேசாந்திரி. புத்தகம் எழுதுவது என் அடிப்படை வாழ்க்கை. நான் என் பயணங்களில் கண்ட அனுபவங்களை எழுதுகிறேன். இது சரியா, தவறா?”
புத்தர்:
“உன் மனம் எந்தப் பாதையை அமைதியுடன் தேர்ந்தெடுக்கிறதோ அது தவறு அல்ல. பயணம் என்பது இடங்களைப் பார்ப்பது மட்டுமல்ல. அது உள்ளத்தை அரியும் ஒரு வழி. ஒரு பறவை வானத்தில் பறக்கிறது என்றால், அது தன் கூட்டை மறந்துவிட்டது என்பதல்ல. உன் எழுத்தும், உன் பயணமும், உன்னையும் மற்றவர்களையும் விழிப்பூட்டுகிறதெனில் அது தவறல்ல. அது ஒரு தர்மம்”.
தேசாந்திரி:
“நான் நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறேன், மாநிலம் விட்டு மாநிலம் தனியாகப் பயணம் செய்கிறேன். ஆனால், நான் அறிவாளி என்று சொல்லிக்கொள்ளவும் இல்லை; அந்தப் பட்டமும் வேண்டாம். ஆனால், சிலர் “நீ புத்தரின் பேத்தியா?” என்று கேலி செய்கிறார்கள். அவர்களுக்கு நான் எப்போதும் முட்டாளாகவே இருக்க வேண்டுமா?”
புத்தர்:
“மனிதர்கள் சில நேரங்களில் மற்றவர் அறிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் கேலி செய்வார்கள். அவர்கள் உன்னை முட்டாளாகப் பார்க்க விரும்புவது, அவர்களுக்கு வசதியாக இருப்பதால் மட்டுமே இப்படிச் செய்கிறார்கள். ஆனால், அறிவு என்பது அவர்களின் அனுமதியைப் பெற்று வருவதல்ல”.
தேசாந்திரி:
“இச்சமூகத்தில் பலர் ருத்ராட்சம் அணிந்து ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் பார்த்தது வேறு மாதிரி. ஏன் இப்படி?”
புத்தர்:
“ஆன்மீகம் உடலில் அணியும் மாலையில் இல்லை. அது மனதில் இருக்கும் கருணையில் உள்ளது. ஒருவர் ஆன்மீகத்தைப் பற்றிப் பேசலாம். ஆனால், அதை வாழாமல் இருக்கலாம். மனிதன் வெளியில் அணியும் முகமூடி அவன் உள்ளத்தை மறைக்கலாம். ஆனால், அவன் மனசாட்சியை முழுவதும் மௌனமாக்க முடியாது. சிலர் அதைக் கேட்காமல் அதை அடக்கி வாழ்வார்கள். அதனால், அவர்கள் தவறு செய்தாலும், வெளியில் பக்தன் வேடம் போட முடிகிறது. கடவுளை வணங்குவது மனிதனை நல்லவன் ஆக்கும் என்றில்லை. உள்ளம் விழித்திருப்பதே மனிதனை நல்லவனாக்கும்”.

தேசாந்திரி:
“அப்படியென்றால், அவர்களின் தவற்றை உணர்வார்களா? அல்லது உணராமல் வாழ்ந்து இறந்து போய்விடுவார்களா? இந்தச் சட்டங்கள் எல்லாம் எதற்காக இருக்கிறது?”
புத்தர்:
“சட்டம் என்பது மனிதர்களின் வெளிப்புறச் செயல்களைக் கட்டுப்படுத்த உருவானது. ஆனால், மனசாட்சியைச் சட்டம் கட்டுப்படுத்த முடியாது. அதனால், சிலர் தங்கள் தவற்றை உயிரோடு இருக்கும்போதே உணர்வார்கள். சிலர் துன்பத்தின் வழியே உணர்வார்கள். சிலர் ஒருபோதும் உணராமல் வாழ்ந்துவிடுவார்கள். ஏனெனில், உண்மையாக விழித்திருக்கும் உனது மனம் இந்த உலகில் மிகவும் அரிய ஒன்று. மனிதன் அணியும் மாலை அவன் உள்ளத்தை மாற்றாது. அவன் உள்ளம்தான் அணியும் மாலையும் அர்த்தத்தைத் தீர்மானிக்கும். ஒருவர் ‘பக்தன்’ என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அவன் வார்த்தைகள், செயல்கள் அதை உண்மையாக்க வேண்டும். வெளியில் காட்டும் பக்தி உள்ளத்தில் இல்லாவிட்டால், அது ஒரு வேடம் மட்டும். நீ அவர்கள் இருமுகத்தையும் பார்த்திருக்கிறாய் என்றால் , அது உனக்கு ஒரு விழிப்பு. அவர்களைப் பார்த்துக் கோபப்பட வேண்டாம். அவர்களைப் போல ஆகாமல் இருக்க அதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். நினைவில் கொள்…. உண்மையான ஆன்மீகம் கழுத்தில் அணிவதில் இல்லை.. நீ உண்மையாக இருக்கிறாய் என்றால் அது அந்த மாலையையும் விட உயர்ந்தது”.
அந்த உரையாடல்களுக்கு முடிவே இல்லை. கேள்விகள் முடிந்த இடத்தில் பதில்கள் தொடங்கின. பதில்கள் முடிந்த இடத்தில் புதிய கேள்விகள் பிறந்தது. தேசாந்திரியின் மனம், ஓர் அலை போலத் தொடர்ந்து அசைந்தது. புத்தரின் பதில்கள், அந்த அலைகளை மெதுவாக அமைதிக்குள் கொண்டு சென்றன. இறுதியில், அவள் அங்கே இருந்து எழுந்தாள். அது ஒரு சாதாரணமான எழுச்சி அல்ல. கேள்விகளில் சிக்கியிருந்த மனம் பாதையைக் கண்டு கொண்ட ஓர் எழுச்சி. அப்போது புத்தர் சொன்னார், ” இங்கே தொடக்கம் கண்டாய், இப்போது நீ மீண்டும் உனது பயணத்தைத் தொடர வேண்டும். மகாபோதி ஆலயத்திற்கு போ” என்று கூறினார்… அந்த வார்த்தைகள் கட்டளை அல்ல. அது ஒரு வழிகாட்டல். அவள் புத்தரைத் திரும்பிப் பார்த்தாள். அவரின் அமைதி அவளுக்குப் பின்னால் இருந்தது. முன்னாள் ஒரு புதிய பயணம்.
தொடரும்…



