
அறிமுகம்
வாழ்வின் ஆகப்பெரிய மற்றும் சிறந்த திருப்புமுனை என்பது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் உலகத்தில் நுழைந்தது. தற்செயலாக நிகழ்ந்ததுதான் எனினும் அது இறைவன் என்னைத் தக்க தருணத்தில் ஆற்றுப்படுத்தி அருளியது என்றே நினைக்கிறேன். தமிழகத்தின் பொதுப் போற்றுதலுக்குரிய சட்டகமான, “பள்ளிக்கல்வி, கல்லூரி, வேலை போன்றவை புறத்தாக்குதல்கள் ஏதுமின்றி” அடையப்பெறும் அந்த ஏமாப்புடைய இன்வாழ்க்கை அமைந்தும் அதில் ஏதோ ஒரு ஏமாற்றமே எஞ்சியிருந்தது. இணைய வசதி கையில் கிட்டிய தொடக்கநாட்களில் ஏதேச்சையாக ஒரு இணையப் புரட்டுதலின்போது வந்து சேர்ந்த இடம்தான் jeyamohan.in. அந்தத் தளம் எனக்கேயான மற்றும் என்னைச் சரியாக பொருத்திக்கொள்ளத் தக்க ஒரு தலத்தையும் தன்னகத்தே கொண்டிருந்ததும், அதில் நான் வந்து அமைந்ததும் வெறும் தற்செயல் அல்ல, நல்லூழ் என்றுதான் சொல்ல வேண்டும். அன்று முதல் ஒரு பதிற்றாண்டுக்காலம் தொலைவிலிருந்தே கண்டும் கற்றும் கலைந்தும் கட்டமைந்தும் ஒரு ஏகலைவனைப் போல ஏக்கமுற்று வாழ்ந்தது ஒரு காலம். காணநேரிடின் கட்டைவிரலை காணிக்கை கேட்கும் துரோணர் அல்ல ஆசிரியர் ஜெயமோகன் (ஜெ). கல்விச்சாலை அமைத்து அங்கு வருவோர்க்கு எண்ணற்ற காண்டீபங்களைக் கையளித்து ஆயிரமாயிரம் அர்ஜுனர்களை உருவாக்கும் நோக்கமும் வல்லமையும் கொண்டவர் என்பதற்கான சான்றே, ‘முழுமையறிவு’ எனும் இயக்கமும் வெள்ளிமலையின் நித்யவனமும்.
வாழ்வின் அடுத்த திருப்புமுனை என்பது நித்யவனத்தில் காலடி வைத்தது எனலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை பயணம் செய்வதற்கு தயக்கம் கொண்டிருந்த எனக்கு கவிஞரும் எழுத்தாளருமான சாம்ராஜ் அவர்கள் எழுதிய ஹம்பி பயணம் குறித்த பதிவை ஜெ. தளத்தில் படித்துவிட்டு ஆற்றாமையின் உச்சத்தில் அடுத்த கணமே பதிவு செய்து 2023 செப்டம்பரில் ஆலயக்கலை வகுப்பிற்காக முதன்முதலில் அங்கு சென்றேன். அது ஒரு வேறு உலகம், அங்கிருத்தல் என்பது வேறு ஒரு மனநிலை, அங்கிருந்து ஒவ்வொரு முறை வீடு திரும்பும்போதும் நாம் வேறொரு ஆளாகிறோம். ஆம், ஆலயக்கலை மூன்றாம் நாள் வகுப்பின் இறுதியில் ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள், ஸ்தபதி தான் வடித்த சிற்பங்களுக்கு கண்திறப்பு செய்யும் காட்சியை காண்பித்தார். அக்கணம் தோன்றிற்று ஆசிரியர் ஜெயமோகனும் தன்னால், தன்பெருஞ்செயலால் ஆட்கொள்ளப்பட்ட பல எளிய மனங்களுக்கும் கண்திறப்பு செய்து அவர்களையும் ஆளுமைகளாக ஆக்க முயலும் கருவறைதான் நித்யவனம் என்று.
அதன்பின் தொடர் வெள்ளிமலையேற்றம் ஒருபுறம் சிறக்க, மறுபுறம் ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டுதலில் ஆலயங்களை நோக்கிய அணிவகுப்புகளில் திளைக்க வாய்க்கப்பெற்றவர்களில் நானும் ஒருவன். தொடக்க நாட்களில் ஓரோர் குழுமமாக அறிவிக்கப்பட்டு வந்ததால் எறக்குறைய ஓராண்டு காத்திருப்புக்குப் பின்னரே முதல் பயணம் சாத்தியமானது. இப்பொழுது ஒரு பொதுக்குழுமம் தொடங்கப்பட்டு அறிவிக்கப்படுவதால் அனைத்து பயணங்களும் அனைவருக்குமான வாய்ப்பாக அமைகின்றன. ஆர்வமுள்ளவர்கள் அனைத்து வாய்ப்புகளையும் தனதாக்கிக் கொள்ளலாம்.
முதல் பயணமே பள்ளிக்காலம் தொட்டு கனவு கண்டிருந்த அஜந்தா எல்லோரா பயணம். ஒரு பயணம் பேரனுபவமாக மாறுவதும் அது வாழ்நாள் வரை நீடிக்க்கூடுமென அறிந்ததும் அப்பயணத்தில்தான். இன்றும் கனவு போல வந்து செல்லும் நாட்கள் அவை. தனிப்பட்ட முறையில் என் வாழ்வின் மிகப்பெரும் இக்கட்டான நாட்களில் அமைந்த அப்பயணமே என்னை அதிலிருந்து மீட்டது எனலாம். புத்தரின் கருணை பொங்கும் புன்முறுவலன்றி பிறிதொன்று அதைச் செய்திருக்குமா என்பதறியேன். புத்தனென்னும் புணையில் செலுத்தி எனை கரைமீட்ட ஆசிரியர்களுக்கும் நண்பர் குழாமுக்கும் நன்றிகள். அப்பயணத்தைப் பற்றி தனியாகத்தான் எழுத வேண்டும்.
பொதுவாக இந்த ஆலயக்கலைப் பயணங்கள் என்பவை சிற்பங்களையும் ஆலயக் கட்டுமானங்களையும் நேரில் கண்டு ரசிப்பதற்காக ஒருங்கிணைக்கப்படுபவை. ஆனால் அது மட்டுமல்ல அவை. பயணத்திற்கு முன்பே காணப்போகும் ஆலயங்கள் உள்ள நிலப்பரப்பு, அவை கட்டப்பட்ட காலம், வரலாறு, தொன்மங்கள், காலப்போக்கிலான அவற்றின் வளர்சிதை மாற்றங்கள் என பல்வேறு விஷயங்களை ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் ஓரிரு இணைய அமர்வுகளில் அறிமுகப்படுத்தியே அழைத்துச் செல்கிறார். அந்த அடிக்கட்டுமானத்தின் மேலே நின்று ஆலயங்களை கலையரசனையோடு அணுகும்போது பேரனுபவமாக மாறுகிறது. இப்பயணங்கள் தமிழகம் அல்லது தென்னகம் மட்டுமென்றில்லை, ஆலயங்கள் மொத்தம் அழிந்துபட்டுவிட்டன என நம்பப்படும் இந்தியாவின் மற்ற பல பகுதிகளிலும் ஆலயங்களைத் தேடி தேர்ந்து இத்தகு பயணங்களை சாத்தியப்படுத்துகிறார் ஆசிரியர். இலங்கை, அங்கோர்வாட் என கிழக்கு தொடங்கி எகிப்து, ரோமாபுரி, கிரேக்கம் என மேற்கு நோக்கியும் பல்வேறு வருங்காலத்திட்டங்களையும் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.

சில ஆலயக்கலைப் பயணங்கள் கட்டிடக்கலையை விட மற்ற கூறுகள் ஓங்கியவையாகவும் உள்ளன. ஓவியக்கலை ஓங்கியது அஜந்தா பயணம். அதேபோல கடந்த ஆகஸ்டில் சென்னையைச் சுற்றியுள்ள ஆலயங்களை (திருமுக்கூடல், உத்திரமேரூர், கூழமந்தல், பிரம்மதேசம்) நோக்கிய பயணமோ கல்வெட்டுகள் சார்ந்தது. அங்கு சென்று கல்வெட்டுகளை தேடித்தேடி படித்தது ஒரு திறப்பு. வரலாறு என்பது பொதுவில் நாமறிந்த வரலாறு மட்டுமல்ல, அது பல தளங்களைக் கொண்டது என உணர்த்தியது. சோழ மன்னர்களின் வரிசையையும் அவர்களின் வெற்றி தோல்விகளையும் அறிவது வரலாற்றின் ஒரு முகமெனில், திருமுக்கூடலில் அவர்கள் காலத்து மக்கள் பிணிதீர்த்த ஆதுரசாலையையும் (மருத்துவமனை) அதன் அமைப்பு மற்றும் நிர்வாக முறையையும் சமூகத்திற்கு அது ஆற்றிய பங்களிப்பையும் அறிவதென்பது வரலாற்றின் வேறொரு தளம். மேலும் இப்பயணங்கள் இந்து மதம் சார்ந்தவை மட்டுமல்ல. பௌத்தம் சமணம் என பரந்துபட்டது, இனி மேலும் விரியக்கூடியது. ஆகமொத்தம் இப்பயணங்கள் நம்மை நம் சிறுமைகளிலிருந்தும் கண்காணா நமது நவீனச்சிறையிலிருந்தும் விடுவித்து பறந்தெழச்செய்பவை, நாம் பறக்கும் வானத்தை (மண்ணிலிருந்தவாறே!) முடிவற்றதாக்குபவை.
2015 ல் ஜெ வின் ‘ஹொய்ச்சாள கலைவெளியில்’ என்ற பயணக் கட்டுரைகளை படித்தகாலம் முதல் ‘அந்த சிற்பங்களடர்ந்த ஹொய்சாளக் கோவில்களையும் அவற்றின் மிளிரும் கருந்தூண்களையும் கண்டுகளிக்கும் நாள் எந்நாளோ?’ என்று ஒரு பதிற்றாண்டு காலம் ஏங்கியிருந்த மனதிற்கு இந்த அறிவிப்பு வந்தநாள் முதலே கொண்டாட்டம் தான். வழக்கம்போல பயணத்திற்கு சில நாட்கள் முன்பு, ஒரு இணைய அமர்வில் ஹொய்சாள கலையினைக் குறித்த அறிமுகத்தை அதன் வரலாற்றுப் பின்னணியுடன் அளித்தார் ஆசிரியர் ஜெயக்குமார்.
ஒருநாள் முன்பாகவே மைசூரு சென்று சேர்ந்தேன். கர்நாடக சுற்றுலாத்துறையின் ஒரு பழைய ஆனால் நன்றாகப் பராமரிக்கப்பட்ட தங்கும் விடுதியான, ‘ஹோட்டல் மயூரா ஹொய்சாளா’வில் ஒருநாள் தங்கல். ஓவியர் ஜெயராம் அவர்கள் அளித்த இரு பரிந்துரைகளின்படி, ஒரு நூற்றாண்டைத் தொடவுள்ள ஹோட்டல் அனுமந்தாவில் சுவையான, ‘ஆட்டிறைச்சி புலவு’ உண்டுவிட்டு மைசூர் அரச மாளிகைகளில் ஒன்றான ஜெகன்மோகனா மாளிகையிலுள்ள, ‘ஸ்ரீ ஜெயசாமராஜேந்திரா ஆர்ட் கேலரி’யை பார்க்கச் சென்றேன். போகும் வழியிலெல்லாம் மைசூரில் பல பழைய அரசர்காலத்து கட்டிடங்கள் நன்றாக பராமரிக்கப்பட்டு இன்றும் நல்லமுறையில் பயன்பாட்டில் உள்ளதைக் காணமுடிந்தது, மைசூர் மருத்துவக் கல்லூரி, அரசு ஆயுர்வேத கல்லூரி என. தமிழகத்தில் மட்டும்தான் பழைய கட்டிடங்களை கூடுமானவரை இடித்துத்தள்ளி அல்லது கைவிட்டு கான்க்ரீட்காடுகளை உருவாக்கியேத் தீருவோம் என்ற சபதம் கொண்டு செயல்படுகிறார்கள். மற்றொரு அண்டை மாநிலமான கேரளத்திலும் பல பழைய கட்டிடங்களை மெனக்கெட்டு நன்றாக பராமரித்து வருவதைக் காணலாம். இவ்விஷயத்தில் தமிழகத்தின் இன்றைய செயல்பாடுகளைக் கொண்டு பார்த்தால் ‘அழகிய பழையன கழிதலும் ஆபாச புதியன புகுதலும்’ என்பது தமிழகத்தின் எழுதப்படாத புதுமொழி என்று தோன்றுகிறது.

அந்த அருங்காட்சியகம் ராஜா ரவிவர்மா உட்பட பல ஓவியர்களின் ஓவியங்களையும் பண்டைய இசைக்கருவிகள் முதலாய பல பழம்பொருட்களையும் கொண்டிருந்தது. அரச குடும்பத்தால் நடத்தப்படுவதாலோ என்னவோ அருங்காட்சியத்தின் நேர்பாதி அரச குடும்பத்தினரின் ஓவியங்களாகவே இருந்தன. அதிலும் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் படங்களே மிகுதி. மைசூர் சமஸ்தானம் மற்றும் பெங்களூரு நகரின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் இவருடைய பங்கு இல்லாமலில்லை எனலாம். இவர் திருவிதாங்கூர் அரசர் சித்திரை திருநாள் போலவே மிகவும் புகழ்பெற்றவர். இவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டம் மற்றும் இந்திய மறுமலர்ச்சி காலகட்டத்தில் ஆட்சிக்கட்டிலில் இருந்ததாலும் அன்றைய இந்தியா தன்னை நவீனம்நோக்கி செலுத்திக் கொண்டிருந்த பெரும்பாய்ச்சலின் ஒரு பகுதியாக ஆனதாலும், இயல்பாகவே இவர்களை முக்கியமானவர்களாக ஆக்கிவிடுகிறது வரலாறு. காலம் தன்போக்கில் உருவாக்கிய நட்சத்திரங்கள் அவர்கள் எனலாம்.
அந்த அருங்காட்சியக ஓவியங்களில் அரசர்களின் ஆடை அலங்காரங்கள் பெரும்பாலும் முகலாய /மேற்கத்திய சாயல் கொண்டதாகவும் ஆடம்பரமானதாகவும் இருந்தது. மாறாக கேரளத்து அருங்காட்சியகங்களில் செல்லும்போது அரசர்களின் எளிய பாரம்பரிய உடை (பெரும்பாலும் முண்டு எனப்படும் வேட்டி ஒன்றே ஆடை; சில விதிவிலக்கான தருணங்களைத் தவிர) நம் கவனத்தை ஈர்ப்பதை தவிர்க்க இயலாது. மேலும் கேரள அருங்காட்சியகங்களில் மன்னர்காலத்து பல பழமையான விஷயங்களை சற்றே விமர்சன ரீதியில் அணுகும் பகுதிகள்கூட இருப்பதையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.
மைசூர் அரசகுடும்பத்து ஒட்டுமொத்த மன்னர்களின் தொகுப்பு வரைபடம் சில காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் மன்னர்களின் ஆடை, ஆசனம், அமரும் விதம், பாவனை, ஹஸ்தம் (பெரும்பாலான அரசர்கள் காலை மடித்தமர்ந்து ஏதேனுமொரு மலரைக் கையிலேந்தி உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்!) என அனைத்தும் முகலாய மன்னர்களின் அச்சுஅசலான நகல் எனலாம். முகலாயர்களுக்கு வெகுகாலம் முன்பு 1399 ல் அரியணையேறிய யதுராஜ உடையாரும் கூட இந்த வேஷத்திலிருந்து தப்பவில்லை. பொ.யு 1399 முதல் 1947 வரையிலான அனைத்து அரசர்களுக்கும் ஏறக்குறைய ஒரே வார்ப்பு. அவர்களை வேறுபடுத்தி அறிவதென்பது 24 சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களை நோக்கி பிரித்தறியத் துணிவது போன்றதொரு பெரும் சவால்தான் (இத்தனைக்கும் தீர்த்தங்கரர்களைப் போலல்லாது அரசர்கள் சர்வபூஷிதர்களாக இருந்தும்!). கர்நாடகம் சமணத்தின் பெரும் தாக்கம் கொண்ட நிலம் என்றறிவேன் ஆனால் இந்த அளவுக்கென்று அறிந்திலேன். பின்னர் தென்னகத்தின் பெரும்புகழ்மிக்க நன்கு பராமரிக்கப்பட்ட மைசூர் அரண்மனைக்குச் சென்றேன். அதன் கட்டுமானத்திலுள்ள முகலாய, ராஜபுத்திர மற்றும் கோத்திக் பாணிகளின் தாக்கமும் அனைவரும் அறிந்ததே.
எனில் நமது சுயமும் நமக்கேயான கலையழகும் எங்கே எனத் தோன்றியது. புறத்தாக்கம் இருக்கலாம், அதைத் தவிர்க்கவும் இயலாது தவிர்க்கவும் கூடாது. ஆனால் அகத்தை முழுதும் இழந்து புறத்தாக்கமே தானென ஆவதில் ஏதோவொரு இழப்பின் துயர் கனக்கிறது. அத்தகைய நமது சுயத்தைக் காண காலத்தில் பின்னோக்கி பயணிப்பதன்றி இந்தியர்களான நமக்கு வேறு வழியில்லை. வாருங்கள் பயணிப்போம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு!.
தொடரும்…
குறிப்பு:
செந்தில் ஆர் அமுதன், தர்மபுரியைச் சேர்ந்தவர். கேரள மாநிலம் கொச்சி நகரில் வசித்து வருகிறார். இவரது சில கட்டுரைகள் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்திலும் (தருதலும் கொடுத்தலும் தமிழும் மலையாளமும்) மற்றும் இம்பர்வாரி இணையதளத்திலும் (கம்பநாடன் மொழியும் சேரநாட்டு மொழியும்) வெளியாகியுள்ளன.



