தொடர்கள்
Trending

கடலும் மனிதனும்:9- ஜுராசிக் மீன்- நாராயணி சுப்ரமணியன்

“இந்த மீனை எங்கே பார்த்தாலும் உடனே தெரிவிக்கவும். நூறு பவுண்ட் ஸ்டெர்லிங் சன்மானம்” என்று ஊரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. 

ஒரு மீனின் உடலை ஆராய்வதற்காக மட்டுமே நாட்டின் பிரதமரே தனி விமானம் ஒன்றில் விஞ்ஞானியை அனுப்புகிறார்.

அந்த மீனின்  உடலைக் காட்சிக்கு வைத்தால் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து பார்வையிடுகிறார்கள்!

அப்படி என்ன மீன் அது? அத்தனை பேர் தேடிப்போகும் அளவுக்கு என்ன மாதிரியான தனித்துவம் பெற்றது?

முதலில் விலங்கினங்களின் அழிவு பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.

பேசஞ்சர் புறா, டோடோ, ஸ்டெல்லரின் கடல்பசு என்று மனித இனத்தின் கண்முன்னே அழிந்த விலங்குகளின் பட்டியல் பெரிது. ஒரு இனம் முற்றிலுமாக அழிந்துபோவதை “Extinction” என்கிறார்கள். ஒரு இனத்தைச் சேர்ந்த விலங்கை நேரில் பார்த்தே 50 வருடங்கள் ஆகிவிட்டது என்றால் அது அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. 

டைனோசர்களை எடுத்துக்கொள்வோம். அவை அழிந்து 65 மில்லியன் வருடங்களாகிவிட்டன. மனிதர்கள் யாரும் டைனோசர்களை நேரில் பார்த்ததில்லை. டைனோசர் என்ற இனம் இருந்ததற்கான ஒரே சாட்சி அவ்வப்போது நமக்குக் கிடைக்கும் தொல்லுயிர் எச்சங்கள்தான் (Fossils).

66 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் ஒரு பேரழிவு நிகழ்ந்தது. K-T Mass extinction என்று இது குறிக்கப்படுகிறது. விண்கல் ஒன்றின் தாக்கத்தால் இது நடந்திருக்கலாம் என்பதே பல அறிவியலாளர்களின் கருத்து. மிகப்பெரிய பேரழிவு இது. அப்போது உயிருடன் இருந்த 75% விலங்குகள்  மொத்தமாக அழிந்தன, 25 கிலோவுக்கு மேல் எடை இருக்கும் எந்த விலங்கினத்தாலும் தப்பிக்க முடியவில்லை. நீரில், நிலத்தில், விண்ணில், எங்கும் கோலோச்சிக்கொண்டிருந்த டைனோசர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. 

உலகத்தின் வரலாற்றில், ஏன் மனிதனின் வரலாற்றில்கூட முக்கியமான நிகழ்வு இது. இந்த அழிவுக்குப் பின் பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது, மீனினங்கள் பல்கிப் பெருகின. உண்மையில் சொல்லப்போனால் டைனோசர்கள் மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருந்த ஒரு உலகில் மனித இனம் உருவாகியிருக்குமா என்பதே சந்தேகம்தான்! வேறு மாதிரி இயங்கிக்கொண்டிருந்த ஒரு கணிப்பொறியை ஒற்றை பட்டனால் திருத்தியமைத்தது போல இந்த நிகழ்வு நடந்தேறியது, மனித இனத்தின் உருவாக்கத்துக்கு வித்திட்டது!

நம் கட்டுரையின் நாயகனான சீலகாந்த் (Coelacanth) மீனின் கதையும் இந்தப் பேரழிவின்போதுதான் தொடங்குகிறது.

 

350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான மீன் இனம் இது. 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களை அழித்த பேரழிவு இந்த மீன்களையும் அழித்துவிட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினார்கள். தொல்லுயிர் எச்சங்களின் வரைபடங்களை எடுத்து, அதிலிருக்கும் எலும்புகளை அடிப்படையாகக் கொண்டு “இந்த மீன் இப்படித்தான் இருக்கும்” என்ற யூகத்தில் வரையப்பட்ட படங்கள் தொல்லியல் புத்தகங்களில் அச்சிடப்பட்டன. “டைனோசர் காலத்தில் வாழ்ந்த மீன்” என்று இந்த மீன் வகைப்படுத்தப்பட்டது.

“அழிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்த டைனோசர், இன்னும் உலகத்தில் ஒரு மூலையில், ஒரு சின்னக் காட்டுக்குள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது” என்ற செய்தி வந்தால் எப்படி இருக்கும்?! அப்படிப்பட்ட ஒரு சிலிர்ப்பூட்டும் கதை இது!

புத்தகங்களில் மட்டுமே இருந்த இந்த மீனை உயிருடன் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் மார்ஜரி கோர்ட்னே லாட்டிமர் என்ற பெண். இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இவர் ஆராய்ச்சி செய்து பட்டங்கள் பெற்ற அறிவியலாளர் அல்ல!

அறிவியலில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த ஆர்வம் மட்டுமே போதுமானது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் லாட்டிமரின் கதை. தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த லாட்டிமருக்கு சிறு வயது முதலே அறிவியலிலும் சூழலியலிலும் ஆர்வம் இருந்தது. உடல்நலக் குறைபாடுகள் அதிகம் இருந்தாலும் தன்னைச் சுற்றியுள்ள சூழலைப் பற்றிய தனது அறிவை நேரம் கிடைக்கும்போதெல்லாம் கூர்தீட்டிக்கொண்டார்.

செவிலியர் பட்டம் பெற்ற லாட்டிமருக்கு அருகிலிருக்கும் ஒரு அருங்காட்சியகத்தில் பணியிடம் காலியாக இருப்பதாகத் தகவல் வந்தது. பட்டம் பெற்றது வேறு துறையில் என்றாலும் ஆர்வம் தாளாமல் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டார். செவிலியராகப் பயிற்சி பெற்ற ஒருவர், தேர்ந்த சூழலியலாளரைப் போலத் தென்னாப்பிரிக்காவின் இயற்கைக் கூறுகளை விவரிப்பதைப் பார்த்து வியந்துபோன தேர்வாளர்கள் லாட்டிமரை உடனே பணியமர்த்தினார்கள்.

இயற்கை அருங்காட்சியகத்தில், கிடைத்த வேலையில் பராமரிப்புப் பணிகள் மட்டும் செய்துகொண்டு காலம் கழித்திருக்கலாம். லாட்டிமரின் ஆர்வம் அவரை சும்மா இருக்க விடவில்லை. அரிதான விலங்கினங்களையும் தாவரங்களையும் தேடியலைந்தார். “ஏதாவது வித்தியாசமான விலங்கு கடலில் கிடைத்தால் எனக்குத் தகவல் அனுப்புங்கள்” என்று உள்ளூர் மீன்பிடிக் கப்பல்களில் சொல்லிவைத்தார்.

மார்ஜரி கோர்ட்னே லாட்டிமர்

1938, டிசம்பர் 22ம் தேதி அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “வித்தியாசமான மீன் வந்து இறங்கியிருக்கு” என்ற தகவல் கேட்டதும் மீன்பிடித்துறைமுகத்துக்கு விரைந்தார் லாட்டிமர்.
“இப்படி ஒரு அழகான மீனை நான் பார்த்ததேயில்லை, ஐந்தடி நீளம், வெளிர் நீலத்தில் மின்னும் புள்ளிகள்” என்று அந்த மீனை விவரிக்கிறார் லாட்டிமர்.

அந்தப் பெரிய மீனை டாக்சியில் தூக்கிப் போட்டுக்கொண்டு அருங்காட்சியகத்துக்கு விரைந்தார். மீன்களின் வகைப்பாட்டியல் புத்தங்கங்களில் இந்த மீனைத் தேடித் தேடி அலுத்துப் போனார். “இது வேறு ஏதோ ஒன்று” என்று அவருக்குப் புரிந்துபோனது. மீனைப் பதப்படுத்தும் வசதி அருங்காட்சியகத்தில் இருக்கவில்லை. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையின் பிணவறைக்குச் சென்று அங்கு இருந்த பணியாளர்களிடம் இந்த மீனைப் பதப்படுத்த உதவுங்கள் என்று கெஞ்சினார். யாரும் அவருக்கு உதவவில்லை.

அருங்காட்சியக அதிகாரிகளோ, “இது சாதாரணமாகக் காணப்படும் கலவா மீன் தான். என்ன ஒன்று, இது பெரிதாக இருக்கிறது, ரொம்ப அலட்டிக்கொள்ளாதே” என்று லாட்டிமரை உதாசீனப்படுத்தினார்கள்!

வேறு வழியின்றி, மீனின் உள்ளுறுப்புகளைத் தூக்கியெறிந்துவிட்டு மீனைப் பாடம் செய்யும் இடத்துக்கு அனுப்பினார். சுருக்கமான குறிப்புகள், கிறுக்கலான ஒரு படத்துடன் மீனின் விவரங்களை மீனியலாளர் ஜே.எல்.பி.ஸ்மித்துக்கு அனுப்பினார். 

அது டிசம்பர் மாதம் என்பதால் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இருந்த ஸ்மித்துக்குத் தகவல் போய்ச்சேரவே சில நாட்களாயின.

1939 ஜனவரி 3ம் தேதி லாட்டிமருக்கு ஸ்மித்திடமிருந்து ஒரு தந்தி வந்தது. “மிகவும் முக்கியம்: அந்த மீனைப் பாதுகாக்கவும்” என்று சுருக்கமான தந்தி. ஏற்கனவே உள்ளுறுப்புகள் எடுக்கப்பட்டு சுமாராகப் பாடம் செய்திருந்த மீனை நினைத்துப் பார்த்த லாட்டிமர் மனமுடைந்துபோனார். 

மீனின் உள்ளுறுப்புகள் இன்னும் குப்பைத்தொட்டியில் பாக்கியிருக்கின்றனவா என்று பணியாளர்கள் தேடித் தோற்றுப்போனார்கள். எடுத்து வைத்திருந்த புகைப்படங்களும் ஏனோ உருக்குலைந்து போயிருந்தன.

ஜே.எல்.பி.ஸ்மித்

1939, பிப்ரவரி 3ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு வந்து இறங்கிய ஸ்மித் அருங்காட்சியகத்துக்கு ஓடி வந்தார். பாடம் செய்யப்பட்டிருந்த மீனைப் பார்த்து வியப்பில் துள்ளிக் குதித்தார். “சில நூறு மில்லியன் வருடங்களுக்கு முன்னால் தொலைந்த உயிரினம் இது! இப்போது மீண்டும் உயிருடன் வந்திருக்கிறது” என்று கூச்சலிட்டார். லாட்டிமரால் கண்டெடுக்கப்பட்ட இந்த மீனுக்கு Latimeria chalumnae என்ற அறிவியல் பெயரை வழங்கினார். லாட்டிமெரின் பெயரும் புகழும் என்றும் நிலைத்திருக்கும்படி செய்தார்.

பாடம் செய்யப்பட்ட மீனின் உடல் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.  டைனோசர் காலத்திலேயே அழிந்ததாகக் கருதபட்ட இனம் இன்னமும் இருக்கிறது என்ற ஆச்சரியத்தில் 20,000 மக்கள் கண்காட்சியைப் பார்வையிட்டார்கள்!

உலக வெளிச்சம் தன் மேல் இருந்தாலும் ஸ்மித்துக்கு அது எதுவுமே தலைக்குள் ஏறவில்லை. “என்ன இருந்தாலும் நாம் பார்த்தது பாடம் செய்யப்பட்ட மீன் தானே” என்று யோசித்தார். மீனை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை தொற்றிக்கொண்டது. பாடம் செய்யப்பட்ட மீனின் புகைப்படம் சுவரொட்டியாக ஊரெங்கும் ஒட்டப்பட்டது. “மீனைப் பற்றித் தகவல் அளித்தால் 100 பவுண்ட் ஸ்டெர்லிங் சன்மானம்” என்று அறிவிப்பு வேறு!

ஸ்மித்தின் இந்தத் தேடுதல் வேட்டையில் இணைந்துகொண்டார் கடல்சார் உயிரியல் ஆர்வலர் காப்டன் எரிக் ஹண்ட். ஸ்மித்தின் வேட்கை அவருக்கும் தொற்றிக்கொண்டது.

ஒன்றல்ல இரண்டல்ல, பதினான்கு ஆண்டுகள் இந்த மீனைத் தேடி அலைந்தார் ஸ்மித்!

1952ல் கொமோரோஸ் தீவுகளைச் சேர்ந்த இரு மீனவர்கள் எரிக் ஹண்ட்டைத் தேடி வந்தார்கள். “மாமே என்றும் காம்பெஸா என்றும் இந்த மீனை அழைப்போம். இது அரிதாக எங்கள் வலைகளில் மாட்டும்” என்று ஒரு மீனைக் காட்டினார்கள். அவர்கள் கூடவே வந்த ஒரு உள்ளூர் பள்ளி ஆசிரியர் “இந்த மீனின் புகைப்படத்தை எப்போதோ சுவரொட்டியில், அறிவிப்பில் பார்த்த ஞாபகம், அதுதான் உங்கள் நினைவு வந்தது” என்றார். படகில் பதப்படுத்தும் ரசாயனங்கள் எதுவும் இருக்கவில்லை. உப்பை அள்ளி மீனின்மேல் போட்டுக்கொண்டு அவசரமாகக் கரைநோக்கி அனைவரும் விரைந்தார்கள். கரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஃபார்மலின் ரசாயனத்தைக் கேட்டு வாங்கி மீனைப் பதப்படுத்தினார்கள்.

அப்போது ஸ்மித் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வேறு ஊருக்குச் சென்றிருந்தார் (வழக்கம்போலத்தான்!!). ஸ்மித்துக்குத் தந்தி அனுப்பினார் எரிக். அப்போது கொமோரோஸ் தீவுகள் பிரெஞ்சுக்காரர்களால் அடிமைப்படுத்தப்பட்டிருந்தன. “இந்த மீனுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் தர முடியாது” என்றபடி மீனைக் கையகப்படுத்திக்கொள்ளத் தயாராக நின்றுகொண்டிருந்தார்கள் பிரெஞ்சு அதிகாரிகள்.

பதற்றமடைந்த எரிக், “எப்படியாவது இங்கே வந்துவிடுங்கள்” என்று மீண்டும் தந்தி அனுப்பினார். அப்போது கிறிஸ்துமஸ் நேரம் என்பதால் விமானங்கள் அவ்வளவாக இயங்கவில்லை. விஷயத்தின் தீவிரம் புரிந்த ஸ்மித், தென்னாப்பிரிக்காவின் பிரதமரைத் தொடர்பு கொண்டு எல்லாவற்றையும் விளக்கினார். அவருக்குத் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

வந்து இறங்கி மீனைப் பார்த்த ஸ்மித் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்! பதினான்கு ஆண்டு நீண்ட தேடல் ஒன்று முடிவுக்கு வந்தது!

“ஒரே ஒரு மீன், அதுவும் பாடம் செய்த மீன் தானே கிடைத்திருக்கிறது, அதை வைத்து அந்த இனம் உயிரோடு இருப்பதை எப்படி நம்புவது?!” என்று கேள்வி கேட்டவர்கள் வாயை மூடிக்கொண்டார்கள். உலக அளவில் இந்த செய்தி கொண்டு செல்லப்பட்டது.

 

46 வருடங்களுக்குப் பின்னர்……

1997ல் மார்க் எர்ட்மென் என்ற கடல்சார் அறிவியலாளர் இந்தோனியாசியாவின் சுலவசி தீவுகளுக்கு மனைவியுடன் தேன் நிலவுக்குச் சென்றிருந்தார். சுலவசியின் கடைத்தெருக்களை சுற்றிப் பார்த்தபோது மார்க்கெட்டில் ஒரு மீன் கண்ணைக் கவர்ந்தது. அதைப் புகைப்படம் எடுத்து தனது வலைத்தளத்தில் சும்மா பகிர்ந்துவிட்டு மறந்துவிட்டார் எர்ட்மேன்.

பேலோன் என்கிற மீனியல் ஆய்வாளரிடமிருந்து சில நாட்களில் எர்ட்மேனுக்கு அழைப்பு வந்தது. “இதைப் பார்த்தால் சீலகாந்த் போலத் தெரிகிறது. ஆனால் நீ தேன்நிலவுக்குப் போனது இந்தோனேசியத் தீவுக்கு. தென்னாப்பிரிக்காவுக்கும் இந்தோனேசியாவுக்கும் குறைந்தது பத்தாயிரம் கிலோமீட்டர் தூரம். அங்கு எப்படி இந்த மீன் வந்திருக்கும்?! வாய்ப்பில்லை. எதற்கும் இப்போதைக்கு அந்தப் புகைப்படத்தை நீக்கிவிடு, வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்று பார்ப்போம்” என்று பேலோன் அறிவுறுத்தினார்.

பொறுமையாகக் காத்திருந்தார் எர்ட்மேன். சரியாக ஒரு வருடம் கழித்து இந்தோனேசியாவில் மீண்டும் ஒரு மீன் கண்டெடுக்கப்பட்டது. அதைப் பார்த்த மீனவர்கள் சர்வசாதாரணமாக “இதுக்குப் பேரு ராஜா லௌட். அதாவது கடலின் அரசன், அப்பப்போ வலையில் மாட்டும், இங்கே இது பொதுவாகக் காணப்படும் இனம்தான்” என்றார்கள். 

மீனின் உடலிலிருந்து மரபணுக்கள் சேகரிக்கப்பட்டன. அது தென்னாப்பிரிக்க இனத்தோடு ஒப்பிடப்பட்டது. மரபணுக்கள் இரண்டும் வித்தியாசமாக இருந்தன. இது ஒரு தனி இனம் என்பது உறுதியானது!

உலகில் உள்ள சூழலியலாளர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள்! அழிந்தது என்று நினைத்த உயிரினங்கள் மீண்டும் கண்டறியப்பட்டால் அவை லாசரஸ் இனம் என்று அழைக்கப்படும். லாசரஸ் இனங்களின் பட்டியலில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொண்டது ஐந்தடி மட்டுமே நீளம் கொண்ட சீலகாந்த்!

“கேவலம் ஒரு மீன் கண்டுபிடிக்கப்பட்டதுக்கு இவ்வளவு கூச்சலா?” என்ற கேள்வி எழலாம். அழிந்துவிட்டது என்று நினைத்த உயிரினங்கள் மீண்டும் கண்டறியப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய செய்திதான். ஜுராசிக் பார்க் படத்தில் “இது தப்பு”என்று தர்க்கம்பேசும் விஞ்ஞானிகள்  டைனோசர்களை நேரில் பார்த்தவுடன் வாயைப் பிளந்து ஆச்சரியப்படுவார்கள், இல்லையா?! இந்த வியப்புதான் வருடக்கணக்கில் ஒரு மீனைத் தேடி அலைவதற்கு உத்வேகமாக இருக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்த மீன் தனித்துவமானது. நான்கு கால்களில் நடக்கும் உயிரிகளுக்கும் மீன்களுக்கும் இடையே இது ஒரு இணைப்புப் புள்ளி என்றும் ஒரு கருதுகோள் உண்டு. சராசரி மீன்களைப் போலல்லாமல் சதைப்பற்றுள்ள கால்களைப் போன்ற இதன் துடுப்புக்களைப் பார்த்தால் இந்த இணைப்பு புரியும். 

இந்த மீன் சாப்பிடத்தகுந்த மீன் அல்ல,இதன் தசைப்பகுதியில் உள்ள யூரியா, எஸ்டர் போன்ற வேதிப்பொருட்கள் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் இந்த மீனின் தொன்மம் அறிவியல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவும். மீன்களிலிருந்து விலங்குகள் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்தன என்பதில் நமக்குப் பல கேள்விகள் உண்டு, அவற்றுக்கு இந்த மீனின் மரபணுக்கள் பதில் சொல்லும்!

இந்த மீனின் வரலாறு சிறப்பானது என்றால், இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறும் தனித்துவமானது. விஞ்ஞானிகளின் பொறுமை, தீவிரமான தேடல், சாமானியர்களே அறிவியலாளர்களைப் போல செயல்படும் அளவுக்கு அவர்களுக்கு இருந்த ஆர்வம், மீனியல் ஆராய்ச்சியில் மீன்பிடித் தொழில் செய்பவர்களின் பங்களிப்பு என்று இதில் பல அடுக்குகள் உண்டு. சமீபகாலமாக Citizen scientists என்ற சொற்றொடர் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைச் சுற்றி வாழும் இயற்கையைப் படம்பிடித்து வைத்தால் அதுவே ஒரு ஆவணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். அறிவியலுக்கு பங்களிப்பதற்குப் பெரிய பட்டங்களும் பதவிகளும் முக்கியம் இல்லை, தேவை ஆர்வம் மட்டுமே என்பதை உலகுக்கே காட்டிய நிகழ்வு இது!

ஃபீனிக்ஸ் பறவையைப் போல உயிர்த்தெழுகிற மீன்களின் கதை ஒருபுறம் என்றால், மீன்களால் மனிதர்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்த ஒரு கதையும் உண்டு! அது என்ன வரலாறு?

 

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button