இணைய இதழ்இணைய இதழ் 88சிறுகதைகள்

கண்ணீர்  அஞ்சலி  –  சாமி கிரிஷ்

சிறுகதை | வாசகசாலை

துக்க  வீட்டில்  இருந்த  எல்லோரும்  பலவற்றைப்  பார்த்தபடியும்  யோசித்தபடியுமிருக்க  மீனாட்சி  மட்டும்  எதிரே  வைக்கப்பட்டிருந்த  கண்ணீர்  அஞ்சலி  பதாகையினையே  வெறித்தபடி  பார்த்திருந்தாள்.  இறந்து  கிடப்பவர்  பதாகையில்  சிரித்தபடியிருந்தது  மீனாட்சிக்கு  ஆச்சரியமாக  தெரிந்தது.  பக்கத்து  வீட்டுக்காரியான  அவள்,  அவர்  அப்படி  சிரித்துப்  பார்த்ததேயில்லை.  தன்  வாழ்நாள்  முழுவதும்  எள்ளும்  கொள்ளும்  வெடித்தது  மாதிரியே  முகத்தை  வைத்துக்கொண்டு  திரிந்த  அவரது  இந்தப்  பற்கள்  தெரியும்  சிரிப்பு  மீனாட்சிக்கு  ஆச்சரியமாகத்தான்  தெரிந்தது.  இப்போதெல்லாம்  மீனாட்சி  எங்கு  சென்றாலும்  அங்கு  வைக்கப்பட்டிருக்கும்  பதாதைகளைத்தான்  உற்று  உற்றுப்  பார்க்கிறாள்.  அதிலும்  குறிப்பாக  கண்ணீர்  அஞ்சலி  பதாகைகளைத்தான்  நீண்ட  நேரம்  நின்று  பார்க்கிறாள்.  இள  வயது  பிள்ளைகளின்  மரணம்  அறிவிக்கும்  பதாகைகளை  பாவமாக  பார்த்துக்  கடக்கும்  மீனாட்சிக்கு,  வயது  முதிர்வால்  நிகழும்  இறப்புகளை  தெரிவிக்கும்  பதாகைகளை  வாஞ்சையுடன்  பார்த்து  நிற்பது  வாடிக்கையாகிவிட்டது.  அதிலும்  கண்ணீர்  அஞ்சலி  பதாகைகளில்  தெரியும்  புகைப்படங்கள்  அவளது  கனவிலும்  அடிக்கடி  வர  ஆரம்பித்துவிட்டன.  தனக்கும்  தனது  மரணத்திற்கும்  இடையிலான  தூரம்  நெருங்கி  வந்துகொண்டிருப்பதை  நினைக்கும்போதெல்லாம்  அவளின்  கண்முன்னே  இந்த  கண்ணீர்  அஞ்சலி  பதாகைகள்  வந்துவிடுகின்றன.

சிறு  வயதிலிருந்தே  புகைப்படம்  எடுத்தால்  ஆயுள்  குறைந்துவிடும்  என்று  யாரோ  சொல்லியதை  தன்  வாழ்நாள்  லட்சியமாக  வைத்துக்கொண்டு  இந்த  அறுபத்து  எட்டாண்டு  வாழ்வில்  ஒரு  புகைப்படம்கூட  எடுக்காமல்  வைராக்கியமாய்  வாழ்ந்துவிட்டவளுக்கு  தனது  அந்திமக்  காலத்தில்  புகைப்படங்களின்மீது  ஆசை  ஊற்றெடுத்து  அவளை  படாதபாடு  படுத்துகிறது.  ஆதார்  அட்டை,  நூறு  நாள்  வேலை  திட்டத்திற்கெல்லாம்  புகைப்படம்  அவசியமென்பதால்  அதையெல்லாம்  வேண்டாமென்று  மறுத்து  விட்டவளை  அவளது  வீட்டார்கள்  இன்றுவரை  திட்டிக்கொண்டுதான்  இருக்கிறார்கள்.  குறிப்பாக  மீனாட்சியின்  மகன்  எவ்வளவோ  சொல்லியும்  கெஞ்சியும்  பார்த்துவிட்டான்.  ஆனால்,  அவள்  தன்  நம்பிக்கையில்  உறுதியாக  இருக்கிறாள்.  எந்த  புகைப்படம்  எடுத்தால்  தன்  ஆயுள்  குறைந்துவிடும்  என்று  நினைத்தாளோ  இப்போது  தன்  ஆயுள்  முடிவதற்குள்  தன்னை  ஒரேயொரு  புகைப்படம்  மட்டுமாவது  எடுத்துவிட  வேண்டுமென  உள்ளுக்குள்  பித்துப்படித்து  அலைவது  அவளுக்கே  முரணாகத்தான்  தெரிந்தது.  தன்னை  எடுக்கும்  அந்த  ஒரு  புகைப்படத்தையும்  அவளது  மறைவுச்  செய்தியை  மக்களுக்கு  அறிவிக்கும்  கண்ணீர்  அஞ்சலி  பதாகையில்தான்  பயன்படுத்த  வேண்டுமென  உறுதியாய்  நினைத்துக் கொண்டிருக்கிறாள்.  தனது  இந்த  விசித்திர  ஆசையை  எப்படி  தன்  மகனிடம்  சொல்வதெனத்  தெரியாமல்  அடிக்கடி  தவித்தும்  போகிறாள்.

‘நம்ம  வீட்ல  உள்ளவங்க  நம்மளோட  மரணத்தப்பத்தி  எதுவும்  நெனைக்குறாங்களா..  அதுல  ஒரு  சடங்கா  கண்ணீர்  அஞ்சலி  ப்ளக்ஸ்  வைக்கனுமே..அதக்கு  நம்மளோட  போட்டோ  வேணுமே.  இது  பத்திலாம்  அவுங்க  கவலப்படுறமாறி  தெரியலயே..’நினைக்க நினைக்க மீனாட்சிக்கு மிகவும் கவலையாக இருந்தது.  ‘ஒருவேளை நான் அதற்கெல்லாம் ஆசைப்பட மாட்டேனென அவர்களாகவே வச்சுருக்காங்களா..’  மனதிற்குள்  எண்ணிய  மீனாட்சிக்கு  துக்கம்  தொண்டையை  அடைத்தது.  இதுகுறித்து  உடனே  தன்  வீட்டாரிடம்  பேசியாக  வேண்டுமென  நினைத்துக்கொண்டாள்.  இதே  நினைப்போடு  படுக்கைக்குச்  சென்ற  மீனாட்சிக்கு  அவளது  மரணம்  நிகழ்ந்துவிட்ட  நாளினது  காட்சிகள்  கனவாக  விரிந்தன.  பூமாலைகள்  அழுந்தப்  படுத்திருக்கும்  தன்னைச்  சுற்றி  ஒரு  சில  மெய்யழுகைகளும்  நிறைய  பொய்யழுகைகளும்  ஒப்புக்கு  சில  நெஞ்சடித்தல்களும்  நிகழ்ந்துகொண்டிருந்தன.  அதுகுறித்தெல்லாம்  கவலைப்படாத  அவள்  கண்ணீர்  அஞ்சலி  பதாகைகள்  ஏதும்  இருக்கிறதாவென  மூடிக்கிடக்கும்  கண்களால்  துழாவினாள்.  ஒன்றும்  அகப்படவில்லை.  அதிர்ச்சியில்  கண்விழித்து  எழுந்தவள்,  ‘ச்சே..கனவா..’  என  மனதைத்    தேற்றிக்கொண்டாள்.  ஆனால்,  கனவில்  வந்தது  உண்மைதானே  என்கிற  எண்ணம்  மீனாட்சியை  அலைக்கழித்ததில்  அன்றைய  இரவு  தூக்கம்  அறவே  இல்லாது  போனது.  விழித்தபடியே  படுத்திருந்தவளுக்கு  பல்வேறு  யோசனைகள்  ஓடின.  ‘தனது இறப்பிற்கு ப்ளக்ஸ் வைக்காது போனதற்கு தான் புகைப்படம் எடுக்காததுதான்  தவறா..  இல்லை  அதுபற்றிய  அக்கறையில்லாதுபோன  தன்  வீட்டாரின்  தவறா..?’ என்று  பலவாறு  யோசித்தவள்,  ‘வயோதிகத்தில்  இருக்கும்  தான்  மட்டுந்தான்  இந்த  இறப்பு..  இறுதி..  பதாகை..  சடங்கு  என்று  சதா  சிந்தித்துக்கொண்டே  இருக்கிறோமா?  தன்  வீட்டார்களுக்கு  இதையெல்லாம்  பற்றி  எந்த  யோசனையுமே  கிடையாதா..சரிதான்  அவர்களுக்குஎன்ன..  சாகப்போவது  நாமதானே..’மீனாட்சி  சமாதானப்படுத்திக் கொண்டாள்.  ‘வீட்ல  இருக்குறவங்களுக்குக்குத்தான்  நாம  வாழ்றது  பத்தியே  கவல  இல்லியே..  இதுல  எங்க  நாம  சாவுறதப்பத்தி  அவுங்க  கவலப்பட  போறாங்க..  இந்த  பூமில  பொறந்த  மனுசன்,  வாழ்றத  பத்தி  கவலப்படுற  அளவுக்கு  சாவுறதப்  பத்தியும்  கவலப்படத்தான்  செய்யுறான்..  தன்னோட  சாவுக்கு  எத்தன  பேரு  வருவாங்க..  சடங்கெல்லாம்  சரியா  நடக்குமா..  சவ  ஊர்வலத்துல  எத்தன  ஆளுங்க  வருவாக..  இப்டி  எத்தன  எத்தனயோ  கவலைங்க..  அதுல  எனக்கு  புதுசா  ஒரு  கவல..  அதுதான்  இந்த  ப்ளக்ஸ்  வைக்கிறது..  இந்த  பாழாப்போன  ஆச  எப்புடி  வந்துச்சோ  இப்புடி  போட்டு  என்னய  படாப்படுத்துது.  யாருக்கு  வேணுனாலும்  இந்த  ஆச  வரலாம்..  பாவி  எனக்குப்  போயி  இந்த  ஆச  வரலாமா.’  எத்தனை  சமாதானம்  தனக்குத்தானே  சொல்லிக்கொண்டாலும்  மீனாட்சி  இப்படியாக  அடிக்கடி  புலம்புவதை  நிறுத்தியபாடில்லை.  புகைப்படமே  எடுக்கக்கூடாதென்று  எந்த  நம்பிக்கையால்  தன்  வாழ்வைக்  கடத்தி  வந்தாளோ  இன்று  தனது  இறப்பை  அறிவிக்கும்  கண்ணீர்  அஞ்சலி  பதாகையில்  வைக்க  ஒரு  கடவுச்சீட்டு  அளவு  புகைப்படம்  எடுத்தே  ஆக  வேண்டுமென்ற  ஆசை  மீனாட்சியை  போட்டு  வதைக்கிறது.  நம்பிக்கையா..  ஆசையா..  என்ற  இரண்டு  விரல்களில்  அவள்  நம்பிக்கையென்ற  விரலை  ஒதுக்கிவிட்டு  ஆசையென்ற  விரலை  கெட்டியாய்  பிடித்துக்கொண்டாள்.  நம்பிக்கையென்ற  நங்கூரத்தை  ஆசை  என்னும்  அலை  அவ்வப்போது  அசைத்துதான்  பார்த்துவிடுகிறது.  வீட்டில்  உள்ளவர்கள்  மீனாட்சியின்  மனதறிந்து  அவளது  திடீர்  ஆசை  குறித்து  கேட்பதுபோல்  தெரியவில்லை.  அதனால்  அவளே  அவளது  கடைசி  ஆசையை  வெட்கத்தைவிட்டு  வீட்டார்களிடம்  வெளிச்சொல்வதென  முடிவெடுத்தாள்  மீனாட்சி.

மீனாட்சிக்கு  இந்த  படமெடுக்கும்  ஆசை  கொஞ்ச  காலம்  முன்பே  வந்திருந்தால்  நன்றாக  இருந்திருக்குமென  அவள்  அடிக்கடி  நினைப்பதுண்டு.  ‘அப்டி வந்துருந்தா  நம்மளோட  அம்மாவும்  அப்பாவும்  சாவுறதுக்கு  முன்னாடி  ஒரு  போட்டாவாச்சும்  அவுங்கள  எடுத்து  நாம  சாவுற  வரைக்கும்  ஆச  தீர  பாத்துகிட்டே  இருந்துருக்கலாம்.  அதுவும்  நடக்காம  போச்சு.‌  நம்மளோட  மயன்  கல்யாணத்துல  சொந்த  பந்தமெல்லாம்  சேந்து  நின்னு  எடுத்த  போட்டாவுலயும்  நிக்க  முடியாம  போச்சு..  நினைத்து  நினைத்து  ஏங்கினாள்.  இதையெல்லாம்விட  எத்தனையோ  தடவை  மீனாட்சியின்  எட்டு  வயது  பேத்தி  ஹேமா  தன்னுடன்  புகைப்படம்  எடுத்துக்கொள்ள  அழைத்திருக்கிறாள்.  அத்தனை  முறையும்  அவள்  முடியவே  முடியாதென  மறுத்துவிட்டதை  நினைத்து  இப்போது  வருந்தினாள்  மீனாட்சி.

தனது  அந்திம  காலத்தில்  வந்து  தொலைத்த  ஆசையை  வீட்டாரிடம்  எப்படிச்  சொல்வதென  தெரியாமல்  ஒவ்வொரு  நாளாய்  கடத்தி  வந்தாள்  மீனாட்சி.  ஒழுங்காய்  அவளது  மகன்  சொல்வதைக்கேட்டு  நூறு  நாள்  வேலை  அட்டை  வாங்கியிருந்தால்  ஏதோ  அவ்வப்போது  குடும்பச்  செலவுக்காது  ஆகியிருக்கும்.  அவ்வாறு  நடக்காததால்  மகனின்  கடுங்கோபத்திற்கு  ஆளாக  வேண்டியாகிவிட்டது.  அதுமட்டுமல்லாது  ஆதார்  அட்டை  எடுக்கவும்  அறவே  மறுத்துவிட்டதால்  குடும்ப  அட்டையிலும்  பெயர்  சேர்க்க  முடியாததால்  குடும்பத்தாரின்  கோபத்திற்கும்  அவள்  ஆளாகியிருந்தாள்.  இப்படிபட்ட  சூழ்நிலையில்  எப்படித்தான்  தனது  காலம்போன  கடைசியில்  வந்த  ஆசையை  சொல்வதென  நினைத்து  தவித்தாள்  மீனாட்சி.  ஆனது  ஆகட்டும்  இனிமேல்  காலம்  கடத்தினால்  தனது  கடைசி  ஆசையும்  நடக்காது  போய்விடும்  என்பதால்  ஒரு  தீர்க்கமான  முடிவுக்கு  வந்தாள்  தனது  சாவிற்கான  நாட்களை  எண்ணிக்கொண்டிருந்த  மீனாட்சி.

படுக்கையிலிருந்தபடியே  தண்ணீர்  கேட்ட  மீனாட்சிக்கு  வேண்டா  வெறுப்பாய்  தண்ணீர்  கொண்டுவந்து  கொடுத்தான்  மகன்  முருகன்.  குவளையோடு  மகனின்  கையையும்  சேர்த்துப்  பிடித்தாள்  மீனாட்சி.  ஒன்றும்  புரியாது  பார்த்த  மகனை  அவள்  அருகில்  அமரச்  சொன்னாள்.  தன்  வாழ்நாளெல்லாம்  ஓடியோடி  உழைத்துக்  களைத்த  தனது  தாயின்  வெடிப்புற்ற  பாதங்களை  ஒட்டியவாறு  அமர்ந்தான்  முருகன்.  தனது  தாயின்  பாதங்களை  பார்த்த  அவனது  நினைவுகள்  பால்ய  காலந்தொட்டு  பலவாறு  ஓடியது.  மீனாட்சி  நூறு  நாள்  வேலைக்குப்  போக  முடியாதுபோன  வருத்தம்  அவனுக்கு  இருந்தாலும்,  திருமணமான  ஆறு  ஆண்டுகளிலேயே  கணவனை  இழந்த  அவள்  தனது  மூன்று  பிள்ளைகளை  வளர்த்து  ஆளாக்கிட  படாதபாடு  பட்டவள்.  பிள்ளைகள்  தலையெடுக்கும்  வரை  இக்குடும்பத்தை  தனியாளாய்  தாங்கியவள்.  அவளின்  வலி  நிறைந்த  வாழ்வுக்கு  அவளது  ஆணியேறிய  பாதங்களே  சாட்சி  என்பவனாய்  மீனாட்சியின்  கால்களையே  கண்ணீர்  தழும்ப  பார்த்தபடியிருந்தான்  முருகன்.  தனது  நடுங்கும்  விரல்களால்  மகனின்  கையை  பிடித்துக்கொண்ட  மீனாட்சியின்  பேச்சு  பல்வேறு  விசயங்களைத்  தொட்டு  கடைசியில்  தனது  இறப்பு  குறித்து  வந்து  நின்றது.பொறுமையாக  கேட்டுக்கொண்டிருந்த  முருகன்,  ‘நீ  ஒன்னும்  கவலப்படாதம்மா..  ஒன்னோட  சாவ  திருவிழா  மாறி  அடிச்சி  மொழக்கிப்புடுறேன்..  நீ  நிம்மதியா  இரும்மா’  என  ஆறுதல்  சொன்னான்.  ‘நீ  தடபுடலா பண்ணீருவடா..  அது  எனக்கு  தெரியாதா..?  இருந்தாலும்  எனக்கொரு  ஆசடா..  அததான்  ஓங்கிட்ட  எப்படி  சொல்றதுனு  தெரியாம  நானே  மென்னு  முழுங்கிட்டுருக்கேன்’  என்ற  மீனாட்சியை  ஒருமாதிரி  உற்றுப்  பார்த்தான்  முருகன்.  ‘என்னம்மா  ஆச  ஒனக்கு?  சொல்லும்மா..  ஆட்டம்  பாட்டம்  தார  தப்பட்டனு  அடிச்சு  தூள்  கௌப்பிடுறேன்.  தயங்காம  சொல்லும்மா’  ஆர்வத்தோடு  சொன்னான்  அவன்.  ‘அதுக்கு இல்லடா இது வேறொன்னு..’  என்று  இழுத்தவள்,  ‘ஏஞ்சாவுக்கு  நீ  என்ன  பண்றீயோ  இல்லயோ  என்னோட  போட்டா  போட்டு  ஒரு  நாலஞ்சு  கண்ணீர்  அஞ்சலி  கட்  அவுட்டாச்சும்  வைக்கனும்’  வியர்வை  வழிய  விருட்டென  சொல்லி  முடித்தாள்  மீனாட்சி.  தனது  அம்மாவின்  ஆசையைக்  கேட்டதும்  என்ன  சொல்வதெனத்  தெரியாமல்  மலைத்துப்போய்  எழுந்தான்  முருகன்.  அவன்  இயல்பு  நிலைக்கு  வரவே  சற்று  நேரம்  பிடித்தது.  ஒருவழியாய்  நிதானமானவன்,  ‘அப்டினா  நாம  ஒடனே  போட்டா  புடிச்சுடுவோம்  சரியா.ம்மா?’  என்றவன்,  ‘இப்போ  நீயிருக்கிற  நெலமல  டவுனுக்கெலனலாம்  போக  முடியாது..  அதனால  நானே  போயி  போட்டா  எடுக்குற  ஆள  கூட்டிட்டு  வந்துடுறேன்’  என்று  பரபரப்பான  முருகன்,  ‘நாளைக்கே  போயி  ஆதார்  அட்ட  வீட்டுக்கே  வந்து  புடிக்கனும்னு  கலக்டர்கிட்ட  மனு  குடுத்துட்டு  வந்துறேன்..ஏன்னா  இந்த  எறப்பு  சான்றிதழ்  வாங்க  ஆதாரட்டை  அவசியமாம்’  –  .படபடப்பு  கலந்த  மகிழ்ச்சியுடன்  தன்  தாயிடம்  கூறி  முடித்தான்.  ‘இங்காருப்பா என்னய எடுக்குற மொத  போட்டா  என்னோட  சாவ  சொல்லுறதுக்கா  இருக்கனும்பா..’வாஞ்சையாய்  சொன்னாள்  மீனாட்சி.

மீனாட்சியை  புகைப்படம்  எடுக்க  ஆள்  வருகிறார்  என்றதும்  மீனாட்சி  வீட்டின்முன்  தெருவே  கூடிவிட்டது.  தனது  கடைசி  ஆசை  நிறைவேறப்போகும்  குதூகலத்திலும்,  தனது  முதல்  புகைப்படத்தை  எடுக்கும்  நேரம்  நெருங்கிவிட்டது  என்ற  ஆவலோடும்  வெட்கம்  கலந்த  புன்சிரிப்போடு  எல்லோரையும்  கட்டிலில்  அமர்ந்தவாறு  பார்த்திருந்தாள்  மீனாட்சி.  தனது  தாயை  அமர  வைத்து  புகைப்படம்  எடுப்பற்காக  வாங்கி  வந்த  புத்தம்புது  நாற்காலியொன்றை  தூக்கி  வந்து  போட்டான்  முருகன்.    மீனாட்சியின்  மகளும்  இளைய  மருமகளும்  சேர்ந்து  மீனாட்சியை  குளிக்க  வைப்பதற்காக  கை  தாங்கலாக  கூட்டி  வந்து  அமர  வைத்தனர்.  அவள்  வாழ்வு  மீதான  அத்தனை  அழுக்குகளும்  வலிகளும்  நிராசைகளும்  கரைந்துபோகும்படி  நிறைய  நீர்  ஊற்றி  மீனாட்சியை  குளிக்க  வைத்தார்கள்.  புதுப்புடவை  அணிவித்து  தலை  வாரி  புதுப்பெண்  கணக்காய்  சிங்காரித்து  நாற்காலியில்  அமர்ந்திருந்தாள்  மீனாட்சி.  அருகில்  சென்ற  புகைப்படக்காரர்  சில  சரிசெய்தல்கள்  செய்தார்.  கூடி  நிற்கும்  கூட்டத்தைப்  பார்த்தால்  ஏதோ  திரைப்பட  படப்பிடிப்பை  பார்க்க  காத்திருப்பதைப்போல  இருந்தது.  புகைப்படம்  எடுப்பவர்  புகைப்பட  கருவியை  தன்  பையிலிருந்து  வெளியில்  எடுத்ததைப்  பார்த்ததும்  ஏதோ  ஒரு  பயத்தில்  அனிச்சையாய்  எழ  முயன்றாள்  மீனாட்சி.  பின்பு  சுதாரித்தவளாய்  படமெடுப்பவரின்  கட்டளைகளுக்கு  பதில்  சொல்பவளாய்  சில  முகபாவனைகள்  செய்தாள்.  ‘ஓகே,  இங்க  பாருங்க..  ஆங்..  ஓகே..  நேரா  பாருங்க..  கண்ண  சிமிட்டாதிங்க..  ஓகே..  சிரிங்க..’  என்று  சொல்லிவந்த  புகைப்படக்காரர்  தன்  தொழில்  அனுபவத்தில்  மிக  முக்கியமான  புகைப்படமொன்றை  ‘கிளிக்’  என  எடுத்து  முடித்தார்.  சுற்றியிருந்த  எல்லோரும்  கத்தி  கை  தட்டி  ஆரவாரம்  செய்தனர்.  அந்த  இடமே  கோலாகலமானது.  தனது  தாயின்  ஆசை  நிறைவேறிய  திருப்தியோடு  மீனாட்சியின்  அருகில்  சென்ற  முருகன்  விழித்த  நிலையிலேயே  இருந்த  மீனாட்சியின்  கண்களை  தன்  கையால்  மூடி  கதறத்  தொடங்கினான்.

*****

samykrish90@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button