
இரவு விளக்கைச் சுற்றும் ஈசல் பூச்சி போல் புத்தியை சிறகுகள் அப்பிக் கிடந்தன. ஒரு கணம் சுதாரித்தபடி போன் காலை எடுத்து கொஞ்சம் கூட எதிர்பார்ப்பில்லாத குரலை வெளிப்படுத்திக் கொண்டு “என்னவாம்?” என்றேன். ராஜன் உலகம் முடியும் முன் கடைசியாய் சிரித்து வைப்போம் என்று சிரிக்கிறாற் போல் சிரித்தான்.
“என்ன தின்னியா?”
“உனக்கு ஃபோன் நம்பர் கொடுத்திருக்கக் கூடாது…”
“ஆமா.. எங்களுக்கு வாங்கத் தெரியாது”
“இம்புட்டு வருஷம் வாங்கல இல்ல”
“உனக்குத் தெரிமா? தெரிமாங்கறேன்”
“தெரியும் ..”
“ஏழு வருஷம் முன்ன உங்கிட்ட நான் பேசல? என்ன சொன்ன?”
“ஆமா.. முதல்ல பாக்கணும்னு சொன்ன.. என்ன தான் பாக்கணும்னு சொல்றியோன்னு நினச்சி சரின்னேன்…அப்றம் என்ன சொன்ன? உங்கல்யாணத்துல பிரச்சனயாமே.. நான் பேசவா..சரி பண்ணவான்னு சொன்ன..”
“ஆமா..சொன்னேன்”
“இந்த திமிருக்கெல்லாம் ஒண்ணுங் குறைவில்ல”
வாஷ்பேசின் கண்ணாடி மேலே மாட்டியிருந்த சாவி கீழே விழுந்தது. “என்ன சத்தம்டி? கீழ வுழுந்திட்டியா.. இங்கனருந்து அங்கன போறதுக்குள்ள சின்னதுலருந்து சொயிங் சொயிங்குனு விழ வேண்டியது”
“கொய்யால…சாவி விழுந்துருச்சு”
“தின்னியா.. சொல்லு…நேரமில்ல”
“போன வை..நீ சாப்டியா?”
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு…இல்லன்னா… மவளே.. வந்து பொடரிய பிடிச்சி..”
அவனும் நானும் அமைதியானோம்.
அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கலாம். அவன் எதிர் வீடு. அவன் அப்பாவும் என் அப்பாவும் நண்பர்கள். இரவெல்லாம் திண்ணையில் உட்கார்ந்து பாட்டுப் பாடுவார்கள். அப்போதுதான் மூடுபனி வந்த காலம். ‘என் இனிய பொன் நிலாவே..’ பாடலை அவர்கள் இருவரும் சேர்ந்து பாடுவதைக் கேட்டால் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் முன்னால் உட்கார்ந்து கை தட்டுவார். இரண்டு பேரிடமும் கிதாரும் வைனும் இருக்கும். நான் அதை மெல்ல கேட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ராஜன் என்னை உள்ளிருந்து கூப்பிடுவான். நான் அவசரம் போல என்று சாப்பிட்டபடியே உள்ளே போனால் என் தலைமுடியை இழுத்துப் பிடித்து உதட்டோடு ஒரு முத்தம். எங்களைச் சுற்றிப் பாட்டு ஒலிக்கும். முதல் முத்தம் கொடுத்த பின் கொஞ்ச நேரம் அப்படியே நிற்க தோன்றிற்று. உச்சந்தலை முதல் கால் வரை கிறுகிறுவென இழுத்தது. பாவாடை தாவணி மீறி உடல் சில்லிட்டது.
”ஏய் மதி…தட்ட இங்க வச்சிட்டு என்ன பண்ற?”
அம்மா சத்தம் கேட்டு கால் வழியாக பயம் மேலெழும்பியது. கண்ணைத் திறந்து பார்த்தேன். அவனில்லை. அம்மாவுக்கு பாதி சாப்பாட்டில் எழுந்தால் பிடிக்காது. அவளுக்குப் பல விஷயங்கள் பிடிக்காது. ஆனால் அந்தப் பல விஷயங்களையும் அவளிடம் சொல்லி விட்டுச் செய்தால் – அவள் அதற்கு ஒப்புக் கொடுத்துச் செய்தால் அவளுக்குப் பிடிக்கும்.
“தோ வாரேன்” என்றேன். ஒரு ராணுவ அதிகாரியின் அதட்டலுக்குப் பயந்து ஓடி வேலை பார்க்கும் சிப்பந்தியின் மனநிலையே எனக்கிருந்தது.
“எங்க போன…ஈ கீ வந்து தொலையப் போகுது”
“ராஜன் அப்டித் தான் ஈ உக்காந்த மாதிரி உதட்டுல முத்தம் கொடுத்தான்” என்று சொன்னால் என்ன ஆவாள் அவள் என்று யோசித்தேன். எனக்கே சிரிப்பு வந்தது.
“சும்மா கெக்கபிக்கன்னு சிரிக்க வேண்டியது..இந்த புக் வாசிக்கிற கிறுக்கு எங்க கொண்டு போய் இவள நிறுத்த போகுதோ?”
நான் சிரித்தபடி சோறு சாப்பிட்டேன். உலகமே புதிதாக இருப்பது போல் தோன்றிற்று எனக்கு.
“என்னடி.. கொத்தா புடிச்சிக் கொடுத்த முத்தம்லாம் ஞாபகம் வருதாக்கும்?”
ராஜன் சிரித்துக் கொண்டே ஒரு கடும் குழியை லாவகமாகக் காலை எட்டு வைத்துக் கடப்பது போலக் கேட்டான்.
”ச்சீ.. மயிரு…என்ன பேச்சு?”
“என்னடி சொன்ன? என்னது?”
நான் நாக்கைக் கடித்துக் கொண்டேன். “உங்க ஊர்ல பஸ் ஓடுதா?”
“ஆமா.. நானூறு மைல் தூரம்… நாப்பது கிலோமீட்டர்… கெளம்பி வந்தேன்னா..”
“சாப்டுட்டேன்..”
“மொதல்லயே சொல்லித் தொலைக்க வேண்டியது தான”
“எனக்கு ஒரு ஃபோன் வருதுன்னு..”
“செம்ம ஆக்டிங்டி நீ… சத்யமா ஒரு போனும் வரல.. நீ நான் கிஸ் கொடுத்தத… உங்கம்மாவ நினைக்கலன்னு சொல்லு”
“ஆமா.. பெரீய்ய கிஸ்”
“ஆமா.. பெரிசு தாண்டி. அப்றம் கூட நாலஞ்சு பேருக்கு கொடுத்திருக்கேன்.. ஆனா… வேலைக்காகல”
“ப்ரஸ்லருந்து ஒரு கால்”
“கோவம் வரணுமே.. என்ன ஏமாத்திட்டு கல்யாணம் செஞ்சிட்டு போன இல்ல”
“வேணாம் ராஜன்… இப்ப கோவம் வருது.. நீயென்ன கொய்யாப்பழம் பறிச்சியா?”
ராஜன் அமைதியாய் இருந்தான், பின் பெருமூச்சு விட்டான். ”திடீர்னு சின்ன புள்ளயா ஆயிடுறேன் மதி“
“சின்னப் புள்ளயா இருக்கது தான் வாழ்க்கையோட பெஸ்ட் கிப்ட்”
”நான் ஒன்ன மறக்கல மதி”
“வேலைக்காவாது ராஜன்.. வேற பேசு.. இல்லன்னா போன வை”
“என்ன சாப்ட்ட?”
அவன் வேண்டுமென்றே பேச்சைத் தொடர்ந்தான் என்று தெரிந்தது. சுட்டை வாட்ஸ் அப்பில் அவன் கதையை அனுப்பி இருந்தான்
“யாரோ வந்திருக்காங்க”
”அப்றமா பேசுற.. அதான… பொழச்சிப் போ”
அவனே கட் செய்து விட்டுப் போனான். இவள் சுட்டையின் கதையை வாசிக்க ஆரம்பித்தாள். இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் எரிந்ததை வைத்து ஆரம்பித்த கதையைத் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. அப்படியே கண் மூடி உட்கார்ந்திருந்தேன். ஒரு தீ எரிவது போல் புகைமூட்டம் புத்திக்குள் ஏற்பட்டது. மூச்சுத் திணறியது. அப்படியே உறைந்தாற் போலிருந்தேன்.
மனசுக்குள் ராஜன் வந்தான். சிரித்தான். என்ன நினைக்கிறான்? வேறு வழியில்லை என்று அவனோடு ஹோட்டலில் தங்கியது தப்பா? தனியாய் இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டு என்ன சொல்கிறாள் என்று பார்க்கிறானா? இல்லை. ராஜன் அப்படி இல்லை. அது எனக்குத் தெரியும். நான் பேச நினைப்பதை அவன் பேசுகிறான். அவ்வளவு தான். போலி முகமூடிகளை நான் அணிந்து கொண்டு மனசிலிருக்கும் நிஜம் பேசும் அவனைப் போலி என்று நானே நினைப்பது அசிங்கமில்லையா. அப்படி நினைப்பதை விட முத்தம் என்ன அத்தனை அசிங்கமானதா?
வாசல் காலிங் பெல் அடித்தது ஹீனமாய் கேட்டது. நான் பக்கத்து வீட்டிலாய் இருக்கும். அமுதாவின் கணவர் வந்திருப்பார் என்று நினைக்கும் போது வீட்டுக்கதவு தட்டப்பட்டது. எழுந்து போவதற்குள் மறுபடி ஒரு முறை. திறந்தால் சுட்டை நின்றிருந்தான். கையில் ஒரு எவர்சில்வர் தூக்கு.
“க்கா.. ஓடியல் கூழ் செஞ்சாங்க.. அதான் மனசு கேக்கைல்ல.. தூக்கிட்டு வந்துட்டேன்.. நீங்கள் வீட்லருந்துட்டே வீட்ல இல்லன்னு பொய் சொல்றீகளெண்டு தெரியும்…” அவனாகவே டேபிள் மேல் அதை வைத்து ஊற்ற டம்பளர் தேடி கிச்சனுக்குப் போனான். எனக்கு இப்படியான ஒருத்தனாகத் தான் சிவகுமார் அறிமுகமானான். அப்போதெல்லாம் லேண்ட் லைன் போன்தான். அதில் அழைத்து, “என் பெயர் சிவகுமார். போன வார குங்குமம்ல 87ம் பக்கம் என்னோட கதை வந்திருக்கு. நான் உங்க ஊருக்கு வாரேன்.. உங்களப் பாக்கணும்” என்று சொன்னவன் சொன்ன நேரத்திற்கு வரவில்லை.
வெயில் காய்ந்து உலர்த்திப் போட்ட சூடான பஞ்சு போல திரிந்து கிடந்த போது வேர்த்து வழிய வந்து சேர்ந்தான். முகம் கழுவணும் என்று சொன்னதும் பாத்ரூமைக் காட்டினேன். துண்டு கொடுத்தேன். நன்றாகத் துடைத்து விட்டு அவனாகவே சமையலறை போனான். “என்ன சமைச்சிருக்கீங்க“ என்றான். நான் அதிர்ச்சியாக நின்றேன். அவன் அதெல்லாம் சற்றும் சட்டை செய்யாமல் ஒரு தட்டை எடுத்து சாப்பாடு போட்டு குழம்பு பாத்திரம் மூடியைத் திறந்து “என்ன குழம்பு?” என்றான்
“புளிக்குழம்பு”
அவன் மூக்கை குழம்பு சட்டிக்குப் பக்கம் கொண்டு போய் “எங்கூர்ல இத வத்தக் குழம்பும்போம்.. அந்தப் பக்கம்லாம் வந்திருக்கீங்களா?”
“இல்ல..”
அவன் இயல்பாய் ஒரு கரண்டி குழம்பு ஊற்றி ஒரு கையால் பிசைந்து ஒரு வாய் சாப்பிட்டு வாயில் சோறு பிதுக்க “நல்லாருக்கு..இன்னொரு கரண்டி ஊத்துங்க..” என்றான். நான் அவனை உட்காரச் சொல்லி சாப்பாடு வைத்தேன். என்னவெல்லாமோ பேசி பின், “இந்தக் குழம்ப மறக்க மாட்டேன் சாகுற வரைக்கும்” என்று சொல்லிக் கிளம்பிப் போனவன் சில வருடங்கள் முன் செத்துப் போனான் என்று நினைக்கும் போதே வேர்த்தது.
அவசரமாகப் போய் சுட்டையிடமிருந்து தம்பளரை வாங்கி நான் கூழை ஊற்றினேன்
”அந்த டொம்ளர நான் எடுத்துப் போக மாட்டேனக்கா”
நான் பதில் பேசாமல் ஊற்றி அவனிடம் நீட்டினேன். பின் நான் அதைக் குடிக்க ஆரம்பித்த முதல் வாயில் எனக்காக அதைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்த அவனது அன்பு மனசை என்னமோ செய்தது. இதெல்லாம் சாதாரணம் என்று நினைத்து விடக் கூடாதெனத் தோன்றியது.
“தேங்கஸ் சுட்டை “ என்றேன்
“என்ற கத வாசிச்சியா?”
“இவ்ளோ தூரம் நினச்சி கொண்டு..”
“காரியமாத்தான் கொண்டு வந்தேன்.. இத ஒரு இலக்கிய இதழுக்கு அனுப்புனேன்னா அப்றம் நீ கதய வாசிக்கிற ரெண்டாவது அல்லது மூணாவது ஆளாயிருவீங்க இல்ல… அதான்…இந்த அமோக கதையை வாசிச்ச முதல் ஆள் நீங்கங்கிற பெருமய வேற ஆருக்கும் விட்டுக் கொடுக்க மனமில்ல அக்கா”
நான் விழுந்து விழுந்து சிரித்தேன். கஞ்சி என் சுரிதாரில் சிந்தியது.
“பகடியோ?”
“நான் மேலோட்டமா தான் வாசிச்சேன் சுட்டை… அப்டி ஒண்ணும் ஸ்பெஷலா படல”
“அதுக்கேன் இவ்ளோ சிரிப்பு…உங்கட்கு மேஜிக்கல் ரியலிசம் தெரியல்லையக்கா… போங்கோ”
”எல்லாரும் காம்யூ ஆயிற முடியாது. நீ சுட்டை”
“நீ கட்டைங்கிறாற் போல கதைக்கிறாய்க்கா”
“சொல்லு.. இப்ப நான் என்ன சொல்லணும்?”
“சொல்ல வேணாம்… ஒரு போஸ்ட் எழுது – சுட்டையிண்ட கதை வாசிச்சேன். அற்புதம். அபாரம். நிகரில்லாததெண்டு”
“நான் எழுதுறத விட்டு பத்து வருஷம் ஆச்சு.. எனக்கு மார்க்கெட் கெடையாது”
“என்ன பத்தி எழுதினா உனக்கு மார்க்கெட் ஏறுமக்கா”
நான் அவனையே பார்த்தேன். அவன் அறை முழுக்க புத்தகங்கள்தான். எட்டுக்குப் பத்து அறை. அதில் சுற்றிச் சுற்றிப் புத்தகங்கள்தான்.எப்படியும் விரைவில் பேசப்படும் ஒரு எழுத்தாளராக ஆகி விடுவோம் என்கிற நம்பிக்கை சுட்டைக்கு உண்டு. நிறைய இலக்கிய விழாக்களில் பங்கெடுத்தால் அறியப்படுவோம் என்ற கருத்து உண்டு. “நல்லா எழுது சுட்டை. நிறைய வாசி” என்று ஒரு முறை சொன்னதற்கு என்னையே சுற்றி வந்து கும்பிடு போட்டான். நான் வாழுற காலத்துலயே என்னைக் கொண்டாட என்ன வழியுண்டெண்டு பாக்கறேன் என்றான்.
சுட்டையின் காதலிகள் இறக்கை முளைத்து பறந்தபடியான ஒரு கதையை அவன் மேஜிக்கல் ரியலிசம் என்றபடி இருந்தான். நான் அவனையே பார்க்க அவன் என்னை உற்றுப் பார்த்து
“உண்மைய சொல்லக்கா.. உண்ட்ட கதையொன்றுல ஒரு பெண் பிள்ளையோட சம்மதம் இல்லாம அவ கல்யாணம் செஞ்சவன்…”
நான் கண்களை மூடினேன். அவன் என் கைகளைப் பற்றி கொண்டான்.
“அது எதுக்கு சுட்டை?”
“உண்மய சொன்னா அதான் அக்கா இந்த கதயோட இன்ஸ்பிரேஷன். உன் கதாநாயகிக்கு தான் றெக்க முளச்ச மாதிரி இருந்துச்சு”
“தீபா தன்ராஜோட ஒரு டாக்குமெண்டரி பாரு… ஒரு அம்மா சொல்லும்… ராத்ரியானா என் மேல ஏறி வுழுற ஒரு மூட்டைக்குப் பேர் தான் புருஷன்னு..”
சுட்டை சட்டென வாய் பொத்தி, “யக்கா..நான் தம்பி..என்ன பேசுறீங்க?”
“டுபாக்கூர்.. செக்ஸ் பத்தி குடும்பத்துல பேச மாட்டீங்க.. போங்கடா”
அவன் மடக்மடக்கென தண்ணீர் குடித்தான். முகத்தை விடாமல் மூன்று முறை துடைத்தான். “ஏன் பேசாம..என்ற தங்கய வன்புணர்ந்து கொன்றன்..என்ன செய்தீர் எம் நாட்டை.. என்ன நியாயம் செய்தீர்?”
நான் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டேன்
“குடும்பமென்று இல்லியக்கா… சமூகத்திலே.. நாட்டிலே… உலகத்திலே.. பெண்ணை உடலா நினைக்கிறவனுக்கு எந்த தண்டனையுமில்லே… பின்ன ஏன் பேசணும்.. அந்தப் படத்திலே பேசினதா சொல்லிறியளே.. அப்பொண்ணு திரும்ப வீட்டுக்குத்தானே போயிருக்கணும்.. அந்த மூட்டையோடு தானேயக்கா தூங்கியிருக்கணும்..”
சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவன் மூச்சு வாங்கினான். பின் வேகமாக எழுந்து பாத்ரூமில் போய் வாந்தி எடுத்தான்
“சுட்டை…”
“ஒண்ணுமில்லயக்கா.. பேடிக்க வேணாம்” என்றபடி வாந்தியெடுத்தான். நான் அவன் பிடரியைப் பிடித்தேன். அவன் ஒருகணம் என்னைத் திரும்பிப் பார்த்து “என்ற தங்கச்சி இப்டித்தான் பிடிக்கும்” என்றழுதான்.
நான் அப்படியே வாசலில் நின்றேன். என் கைகள் அன்னிச்சையாய் அவன் முதுகை தடவினபடி இருந்தன.
என்னுடல் இப்படி சுவர்களில் மோதி கீழே விழுந்திருக்கிறது. காரணமே இல்லாமல் அடி விழும். அது கிறிஸ்துமஸ் . அது வரை ஜெரால்ட் விவாகரத்து வாங்கித் தருகிறேன் என்று சொல்லியபடி இருந்தான். நான் அவனைப் பரிபூரணமாய் நம்பினேன். ஆனால் எல்லாமே பொய் என்பது அந்த முதல் கிறிஸ்துமஸில் தான் தெரிந்தது. அதற்கு முந்தினம் குடித்து விட்டு வந்திருந்தான்.
“யாரு அவன்?”
எனக்குப் புரியாமல், “யாரு?” என்றேன்
“அதான்.. அந்த மசுராண்டி.. நீ அவங்கூட தான் வாழ்வேன்னு சொல்லிக்கிட்டு என் வாழ்க்க மயிர நாசமாக்குனியே ..அவன்… அவரு யாருன்னு கேட்டேன்”
என்னால் ஒரு நிமிடம் அது என் வாழ்வில் நிஜமாய் நான் கடந்து போக வேண்டிய நொடி என்பதையே உணரக் கூட முடியவில்லை. அவன் என் மேல் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குக்கரில் பருப்பு வைப்பதற்காக அடியில் வைத்த வெந்நீரை ஊற்றினான். என் கைகளில் அது கொதி கொதித்து ஒரு கணம் சுருண்டு விழ அவன் என்னை சுவரில் மீண்டும் மீண்டும் தூக்கி வீசினான். ணங்கென்று என் கையின் தோலுரிந்து உயிர் போவது போல எரிந்தது
“நல்லா வாழ்வேன்னு சொன்ன இல்ல… பெரீய்ய வீரனா அவன்? படுத்திட்டியா அவங்கூட”
மிச்ச குக்கர் நீரை சுவர் பூராவும் வீசியடித்தான். அதன் சிதறல்கள் என் மீது அடித்தது. எனக்கு நினைவு மெல்ல மெல்ல மங்கியது. காலடி சத்தம் வெளியே போவதை உணர முடிந்தது. நான் கண் விழிக்கும் போது வலது கை உள்பக்கமாய் பூராவும் தோல் உரிந்திருந்தது. தத்தி எழுந்து குழாயில் நீரில் வைத்தேன். ஒட்டியிருந்த மிச்ச தோலும் உரிந்து போயிற்று.
நான் மெல்ல மெல்ல நடந்து வீட்டைப் பூட்டி விட்டு அப்பா வீடு நோக்கி நடந்தேன். பர்னால் போட்டு அப்புறமாக என்ன ஆனது என்று அம்மா கேட்டாள்
“தெரில..குடிச்சிட்டு…”
“உன் வாய் சும்மாவா இருந்திருக்கும்…. ஏதாச்சும் பேசிருப்ப…”
”நான் என்ன பேசிருப்பேன்”
“ந்தா.. நீ சும்மாரு… டாக்டர்ட்ட போய் ஒரு டிடி எஸ் போட்டுட்டு வாங்க ….அப்றம் பேசிக்கலாம்.. எனக்கு வேல இருக்கு கிறிஸ்துமசுக்கு”
உள்ளே தாம்சன் மாமா இருந்தார். அவருக்கு பல் லேசாக தெத்தி இருக்கும். அதை எவ்வளவு சோகமென்றாலும் மேல் உதட்டால் மூடி தான் பேசுவார். பெரும்பாலும் அவர் ஒரு வரியிலேயே பதில் சொல்லி முடித்து விடுவார். அவர் எட்டிப் பார்த்து, “இதென்ன புள்ளய…” என்றதும் அம்மா “நீ சும்மா கெட.. சண்டயில்லாத வீடா?” என்று சொல்ல– மாமா கர்ட்டனை இழுத்து விட்டு விட்டு உள்ளே போய் விட்டார்.
அப்பா டாக்டரிடம் போகும் வரை எதுவும் சொல்லவில்லை. பின் முகத்தை மூடிக் கொண்டு டாக்டர் வீட்டு வாசலில் அழுதார்
“மன்னிச்சிக்கோ”
எனக்கு அந்த மன்னிப்பு தேவையில்லாமல் இருந்தது.
“எனக்கு டைவர்ஸ் வேணும்ப்பா”
அப்பா சட்டென நகர்ந்து முன்னால் போனார். டாக்டர் வீட்டு வளவுக்குள் நுழைந்து அங்கிருந்த பெஞ்ச் பக்கம் நின்று கொண்டு என்னை உட்கார சொல்லி கை காட்டினார்.
”ப்பா..”
டாக்டர் உள்ளே கூப்பிட அப்பா என்னை உள்ளே போகச் சொல்லி கை காட்டி விட்டு பின்னால் வந்தார்.
டாக்டர் கையைப் பார்த்துப் பற்றி “என்னதிது..” என்று கேட்க நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள் அப்பா “கைத்தவறி குக்கர கைல சரிச்சிட்டா..நாங்க இருக்கப் போயி சரியாப் போச்சு”
என் கண்களில் கண்ணீர் வழிந்தது . “வலிக்கில்ல… ஏம்மா இப்டி பண்ண?”
ஊசி இடுப்பில் இறங்கியது தெரியவேயில்லை. வாய் உதடு உயிர் எல்லாமே “ராஜன்..ராஜன்.. வா.. வந்து என்ன கூட்டிட்டுப் போயிடுறா” என்றபடியே இருந்தது.
டாக்டர் மருந்து எழுதிக் கொடுத்து விட்டு “என்ன வயசு?” என்றார்.
“இருவது”
“ஏன் சார் இப்பவே கல்யாணம் பண்றீங்க” என்றார்.
அப்பா அசட்டுத்தனமாய் கண் கலங்க சிரித்து விட்டு பின் பீசைக் கொடுத்து விட்டு, “தேங்க்ஸ்” என்றார்.
அப்பாவை எனக்குப் பிடிக்காமல் போனது. ஆனால் பின்னால் நடந்தேன். வீட்டு வாசலில் ஜெரால்டுக்கு அம்மா கேக் துண்டு கொடுக்க அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் சகஜமாக “குக்கர பாத்து தெறக்கக் கூடாது?” என்று விட்டு அப்பாவிடம் “மருந்து வாங்கிட்டீங்களா? நான் வாங்கவா?” என்றான்.
கிறிஸ்துராஜா பிறந்தார் என்று பாடல் எங்கேயோ கேட்டது
தொடரும்…