
அன்று…
அப்படி நடக்குமென நான் எதிர்ப்பார்க்கவில்லை! ஆனால் நடந்துவிட்டது… எதிர்பாராமல் நடந்த அந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமேயில்லை என்று சொல்லிவிடவும் முடியாது. நான் சிறிது கவனமாக இருந்திருக்க வேண்டும். நடந்தது என்னவோ நடந்து விட்டது, இனி அதைச் சரிசெய்ய யாராலும் இயலாது. இருந்தாலும் அதை அப்படியே விடவும் முடியாது. சம்மந்தப்பட்டவரிடம் சென்று மன்னிப்பு கேட்பதுதான் சரி என என் மனதிற்குள் நானே சமாதானம் செய்ய… அதுயெப்படி நாமாகப் போய் நடந்த தவறினைச் சொல்லி நான்தான் குற்றவாளியென நானே தலைக்குனிந்து நிற்பது???
என்னதான் எனக்கு நானே சமாதானமாய் யோசித்தாலும் மனமோ குரங்காய் மீண்டும் மீண்டும் அதுயெப்படி அதுயெப்படியென அடம்பிடித்து அழிச்சாட்டியம் பண்ணியது…
முடிவில், நான் அந்தத் தப்பை மறைத்து எதுவுமே நடக்காதது போல வேலைக்குப் போய்வந்து கொண்டிருந்தேன்!
இது எனக்கு எதுவுமே தெரியாது என்பதைப் போலவும் காட்டிக்கொள்ள நான் தவறவில்லை…!
நான் குடியிருப்பது நான்கு மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிப்பு. ஒரு மாடியில் நான்கு வீடுகள். நான் நான்காவது மாடியில் வசித்தேன். நானிருந்த நான்காவது மாடியில் எனது வீட்டுக்கு எதிரில் ஒரு மலாய்கார குடும்பம் இருந்தது. மற்ற இரு வீடுகள் காலியாக இருந்தன.
அந்த மலாய்காரருக்கு நண்டும் சிண்டுமாக ஆறும் பிள்ளைகள். அவர் மட்டுமே வேலை செய்கிறார் போலும். அவரது மனைவி ஓரிரு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும், மீண்டும் பள்ளியிலிருந்து அழைத்து வருவதையும் சமயத்தில் நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு ஒரு ஊனமுற்ற பெண் குழந்தையும் உண்டு!
அந்த ஊனமுற்ற குழந்தைக்கு எப்படியும் ஒரு பத்து பன்னிரெண்டு வயதிருக்கும். கை கால்கள் சூம்பிப் போய் எழுந்து நடக்க முடியாதபடி படுத்த படுக்கையாகதான் இருக்கும். அந்த மலாய் பெண் அவளின் சில பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துப் போகும்போது இந்தக் குழந்தை ஹாலில்தான் படுக்க வைக்கப்டிருக்கும்…!!!
அன்று…..
எனது நண்பனுக்கு வீட்டில் என்னவோ பிரச்சனையென்று என் வீட்டில் தங்க அனுமதி கேட்டானென்று, நானும் அவனை வீட்டில் தங்க வைத்தேன். ஒரு வாரம் எனது வீட்டில் தங்கிருந்த அவன் ஒரு நாள் காலையில் உடல் நலமில்லையெனக் கூறி என்னுடன் வேலைக்கு வரவில்லை.
இதை நானும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால்,வீட்டில் பிரச்சனையெனச் சொல்லி எனது வீட்டில் தங்க அவன் அனுமதி கேட்டது உண்மையில் அவனுக்குப் பிரச்சனையா அல்லது இப்படி என்னை பெரிய பிரச்சனையொன்றில் மாட்டிவிடத்தானா என்பது அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்…
எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என எனது உள்மனம் என்னை எச்சரித்துக்கொண்டேயிருந்து…
நான் அதிகமாக வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்த்தேன். வீட்டின் கதவினை எப்பொழுதும் மூடியே வைத்திருந்தேன். எப்படியும் காலையில் வேலைக்குச் செல்ல வாசல் கதவைத் திறந்துதான் ஆகவேண்டும். சரி என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போமென மனதை சமாதானப்படுத்திக்கொண்டு படுக்கையில் விழ… தூக்கம் கண்ணா மூச்சியாடியது…
நான் நினைத்தது போல காலையில் எதுவுமே நடக்கவில்லை. எதிர் வீட்டு கதவு இன்னும் திறந்திருக்கவில்லை. அது… வழக்கத்திற்கு மாறாக மூடியேயிருந்தது…
நான் வழக்கமாக வேலைக்குக் கிளம்பி விட்டேன்..
ஒரு மாதம் முழுதாய் கடந்திருந்தது…எந்த பிரச்சினையும் இல்லை. எல்லாம் வழக்கமாய் நகர்ந்து கொண்டிருந்தது. நான் எனது எதிர்வீட்டை கடக்கும் போதெல்லாம் மனதிற்குள் குற்ற உணர்ச்சியோடுதான் அந்த வீட்டைக் கடப்பேன். இதில் எனது தவறு எதுவுமே இல்லையென்றாலும், நானும் இந்தத் தவறுக்கு மன்னிப்பு கேட்காதது தவறுதான். அதற்கு மிக முக்கியமான காரணம், மலாய்காரர்களின் பலம் என்னவென்பதை நானறிவேன். இரண்டாவது காவல்துறை என்னையும் கைது செய்து விசாரிக்கும். அதற்கும் முன்பாக அந்தக் (மலாய்கார) கூட்டமே கூடி என்னை பந்தாடிவிடும் என்பதால் நான் மௌனமாய் நாட்களை நகர்த்தினேன், ஆனால், என்னால் நிம்மதியாய் மட்டும் இருக்கமுடியவில்லை…
வீட்டை மாற்றிடலாமா என நான் யோசித்த நேரம், ஆச்சர்யமாய் எதிர்வீட்டு மலாய்காரக் குடும்பம் வீடு மாறிப் போக, வீட்டு சாமான்களை கீழே இறக்கிக் கொண்டிருந்தை பார்த்ததும் நான் எனது எண்ணத்தை உடனே மாற்றிக் கொண்டேன்…
அந்த மனிதர் போகும் போது, எனது வாசல் கதவைத் தட்ட, தடதடக்கும் மனதோடு தயங்கியபடி நான் போய் கதவைத் திறந்தேன்.
அதே சாந்தமான முகம். அமைதியாய் எனது தோளினைத் தொட்டவர், “நான் வேற இடத்துக்கு குடும்பத்தோடு மாறிப் போகிறேன்! அதனால் உன்னிடம் விடை பெற வந்தேன்…” எனக்கூறி “Selamat tinggal adik…” (நான் போய் வருகிறேன் சகோதரா…) என்றார்.
என்னையுமறியாமல் எனது கண்களிலிருந்து பொலபொலவெனக் கண்ணீர் வழிய நான் அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டேன்… அப்போது எனது வாயிலிருத்து ஒரு வார்த்தைகூட வரவில்லை, கண்ணீர் மட்டுமே வழிய…
எனது கண்களிலிருந்து அநத மனிதரின் முகம் முழுதாய் மறைந்தது…
என்ன மனிதன் நான்… ‘இப்போதுகூட நடந்ததற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கலாமே…’ உள்ளுணர்வு என்னை கேள்வி கேட்கத் தொடங்கியது…
மௌனமே எனது ஆயுதமாகக் கண்ணீர் வழிய ஜன்னலின் அருகே நின்றேன்…
அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் முன் “குங்குமாங்கி காளியம்மன்” கோவிலின் கோபுறம் தெரிகிறது…
‘தாயே… அம்மா…நீயே எல்லாத்தையும் பார்த்துக்கொள்ளம்மா, என் தாயே…’ தலைக்கு மேலே கையை உயர்த்தி மானசீகமாய் வேண்டினேன்…
******