
அபயம்
ஆக்கிரமித்து அபகரித்துச் சென்ற அன்பு
பூனைக்குட்டி போல்
ஒடுங்கிய குரலில் அழுகிறது
உன் கரங்களில்
தயவுசெய்து
தடவிக் கொடுப்பதாய் நினைத்து
கருணைக் கொலை
செய்துவிடாதே
எல்லா அன்பும்
நசுக்கிய பாதங்களை
மறுபடியும் வந்து நக்காது.
***
அயற்சி
சின்னச் சின்ன
பாராட்டிற்காக ஏங்கிப் புழுங்கும்
அற்பமான மனதின்
தொடர் அயற்சி தாளாமல்
எடுத்த முடிவே தற்கொலை
சாவதற்கு முன்
கடைசியாக நீண்டதொரு
கடிதம் எழுதினேன்
தற்கொலைக் கடிதம்
ஆசுவாசமாய் இருந்தது
வாசித்து முடித்ததும்
“என்னவொரு அழகான கையெழுத்து” என்று
யாரேனும் பாராட்டுவார்கள்தானே…
***
வழிப்போக்கன்
சத்திரத்தில்
தோதான ஓரமாய்ப் பார்த்து
உடலைச் சாய்த்தான்
எட்டிவிடும் தூரத்தில்தான் இருந்தன
நட்சத்திரம்
நிலவு
உறக்கம்.
***
அதே குரல்
அப்பாவின் வயதிருக்கும்
அவருக்கு,
“சார்..
சேர்வா கலக்கி”
இலையில் வைத்தார்.
ஒடுங்கிய ஸ்தாயில் ஒலிக்கும்
அப்பாவின் அதே குரல்
சட்டென்று
பேய் மழையில்
ஒதுங்கச் சிறு கூடாரம் தேடி அலையும்
தெரு நாயைப் போல்
அப்பாவின் நினைவுகளில்
நொண்டியது மனம்
வீட்டிற்குச் சென்றதும்
உறங்கிக் கொண்டிருந்த மகனை
இறுகக் கட்டிக் கொண்டேன்
சற்று ஆறுதலாக
இருந்தது.
***
நன்றியா? சாபமா?
சிறகொடிந்து
மழைச் சாலையின் ஈரத்தில்
வீழ்ந்து கிடந்த ஓர் தட்டானை
மிதித்து விட்டேன்
அதன்
விழிகளில் வழிந்தது
நன்றியா?
சாபமா?
***
மிதமான இசையில்
மெல்லிய இருள் பரவிய அறையில்
கோப்பையில் தளும்பும்
மது
விளிம்பைத் தடவி
நழுவும் காலம்
புகையாய் வெளியேறி
மதுவாய் உருமாறி
போதையாய் மிஞ்சிப் போன
நினைவு சக்கைகள்
தொலைத்து மீட்டெடுக்கும் இரவின் மடியில்
திருவிழாவில் தொலைந்து போன
சிறுவனாய் இக்கணத்தில்
நான்.
***
ஒரு வார்த்தையில் என்ன இருக்கிறது?
ஒரு வார்த்தையில்தான் எல்லாம் இருந்தது
நானும் இருந்தேன்
நீயும் இருந்தாய்!
*********