இணைய இதழ் 97சிறுகதைகள்

காத்திருந்த சந்திப்பு – சாமி கிரிஷ்

சிறுகதை | வாசகசாலை

        அறிவியல் பாடம் என்றால் கதிருக்கு அவ்வளவு விருப்பம். அறிவியல்தான் அவனுக்கு இந்த உலகத்தின் அதிசயங்களையும் இயல்பென எடுத்துக் காட்டியது. அறிவியல்தான் சந்தேகத்திற்கு இடம் கொடாது ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ள உதவியது. அரசுப் பள்ளியொன்றில் அறிவியல் ஆசிரியராகப் பணியேற்று பத்தாண்டுகளைக் கடந்துவிட்ட கதிர் அறிவியலைக் கற்பிக்கும் விதமே அலாதியானது. மாணவர்கள் வகுப்பில் கவனித்தாலே போதும், வீட்டில் சென்றெல்லாம் படிக்க வேண்டிய அவசியமிருக்காது. அந்த அளவுக்கு பாடக் கருத்துகளைப் படிக்கிறோம் என்கிற உணர்வேயில்லாமல் மனதில் பதிய வைத்துவிடுவான். இன்று அறிவியல் பாடத்தில் பேராளுமையாக அறியப்படும் கதிர்  பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் காலாண்டுத் தேர்வில்  இயற்பியல் பாடத்தில் தேர்ச்சி பெற முடியாமல் தவித்தவன் என்பது சொல்வதற்கு தவிர்க்க முடியாத செய்தி. அதற்கு காரணம் புதிதாய் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டிருந்த அவனது பள்ளிக்கு ஒரு வருடம் ஆகியும்  பல பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்ததுதான். காலாண்டுத் தேர்வு கடந்தபிறகும் ஆசிரியர்கள் முறையாக நியமிக்கப்படாதது கதிர் உள்ளிட்ட மாணவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. குறைந்தபட்சம் தேர்ச்சியாவது பெற்றுவிட வேண்டுமென்பது அவர்களின் அந்த சமயத்து கனவு.  அந்த அக்கறையில் விசாரித்ததில்தான் பக்கத்து நகரத்தில் டியூசன் எடுப்பது தெரிந்து பள்ளிக்கூடமே படையெடுக்க ஆரம்பித்தது. அங்குதான் கதிருக்கு இயற்பியல் ஆசிரியராக அறிமுகமானார் அருள். அவரது வகுப்புகள் இயற்பியலை தமிழ் பாடம் போல எளிதாய்க் கற்பித்தன. ஒவ்வொரு இயற்பியல் கருத்துகளையும் காரண காரியங்களோடு அவர் விளக்கும் விதத்தில் வியப்படைந்த கதிர் அவரை தனது விருப்பமானவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் எழுதிக்கொண்டான். ‘என்னடே..புரிஞ்சுதாடே..’ என அவர் கேட்கையில் உண்மையில் ஒரு மாணவர்கூட தயக்கத்தோடு தலையாட்ட மாட்டார்கள். எல்லோருக்கும் பாடக்கருத்துகள் எளிமையாய் புரிந்திருக்கும். ‘இவர மாரி சார் இருந்தா ரெண்டு வால்யூம் என்ன எத்தன வால்யூம் வேணாலும் படிச்சு முடிச்சுறலாம்’ என கதிர் அந்த தருணத்தில் நினைத்துக்கொள்வான்.  காலாண்டு தேர்வில் பெயிலான கதிர் அரையாண்டு தேர்வில் 150 க்கு 110 மதிப்பெண் எடுத்து தேர்ச்சியடைந்திருந்த கொண்டாட்டத்தை அவன் எல்லோரிடமும் சொல்லித் திரிந்தான். இயற்பியல் பாடத்தில் இவ்வளவு மதிப்பெண் எடுப்பதை கதிர்  கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அதை சாத்தியப்படுத்திய அருள் வாத்தியார் அன்று முதல் அவனுக்கு ஆதர்சம் ஆகிப்போனார். காண்போர் எல்லோரிடத்தும்  அருள் வாத்தியாரின் புராணமே பாடித் திரிந்தான். ஒரு பாடத்தை விருப்பப்பட்டும் புரிந்தும் படிப்பதற்கு ஆசிரியர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததால்தான் கதிர் நிச்சயமாக தானும் ஓர் ஆசிரியராக ஆக வேண்டுமென முடிவு செய்து தனது கடின உழைப்பால் அதை இப்போது சாத்தியமும் படுத்தியிருக்கிறான். தான் விரும்பியபடி ஆசிரியராகி நிறைவானதொரு மத்தியதர வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் கதிருக்கு இருக்கும் ஒரே கவலை தனது வழிகாட்டியான அருள் வாத்தியாரை வாழ்நாளில் மீண்டுமொரு முறை சந்தித்துவிட வேண்டும் என்பதுதான்.

   தனது இன்றைய நல்ல நிலைமைக்கு காரணமான அருள் வாத்தியாரின் நினைவில் வாழ்வதுதான் அவருக்கு தான் செலுத்தும் நன்றிக்கடன் என்றே வாழ்ந்து வருகிறான் கதிர். பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல் பொதுத்தேர்வு முடிந்த அன்று நேரே பயிற்சி மையம் வந்த கதிரை அவனுக்காகவே  காத்திருந்தவர்போல் அருகில் அழைத்து கை குலுக்கினார் அருள் வாத்தியார். அந்த கை குலுக்கலின் இறுக்கத்தில் அன்பின்  காட்டாறு அலையடித்து ஓடுவதை அவன் உணர்ந்தான். பின்னர் முதுகில் தட்டிக் கொடுத்தார். அவனை இதுபோல நிறைய தடவை தட்டிக் கொடுத்து பாராட்டியிருக்கிறார் என்றாலும் அன்றைய முதுகுத் தட்டலில் ஒரு நெகிழ்ச்சி இருந்ததை உணர்ந்திருந்தான்.  வெகு நேரம் தேர்வு எழுதிய விதம் குறித்து கைகளைப் பிடித்தவாறே விசாரித்துக் கொண்டிருந்தார். அனைத்து கேள்விகளுக்கும் சரியாய் பதில் எழுதிவிட்டதை உறுதிப்படுத்திய அவர் கதிரை கட்டியணைத்துப் பாராட்டினார். அந்த அணைப்பில் இருந்த நேசத்தை இப்போது நினைத்தாலும் அவனுக்கு புல்லரித்துப் போகும். ஆனால்  இந்த நிகழ்வு நடந்த அடுத்த ஓரிரண்டு வாரங்களிலேயே அருள் வாத்தியார் மாணவர்கள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வேறு ஊருக்கு மாற்றலாகி சென்றுவிட்டார். இந்த செய்தியை தாமதமாகத் தெரிந்துகொண்ட கதிரின் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

  தேர்வு முடிவு வந்த அன்று இதற்காகவே ஊரில் இருந்து வந்திருந்த அருள் வாத்தியார் மாணவர்களின் மதிப்பெண்களைக் கேட்டு மகிழ்ந்தார். சிலரிடம் அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனைகள் சொன்னார். மதிப்பெண்களை காகிதமொன்றில் எழுதி வந்திருந்த கதிரைக் கண்டதும், ‘என்னடே ஒரு மாச கேப்புல நெடுநெடுனு வளந்துட்ட’ என்றது இன்னும் அவனுக்கு நினைவிலிருக்கிறது. அவர் எப்போதும் கதிரிடம், ‘உன்னோட கண்ணு ரொம்ப அழகா இருக்குடே’  என்பார். அதை அவன் நினைத்து நினைத்து இப்போதும் சிரிப்பான். அவர் அப்படி அடிக்கடி சொல்வதை அவன் தனது சக தோழர்களிடமும் தோழிகளிடமும் சொல்லி ரசிப்பதுண்டு. அவன் அப்படி ஒரு முறை சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் அவன் மேல் காதல் கொண்டிருந்த நிவேதா, ‘என்னடா ஒன்னய  என்னவிட அவருதான் ரொம்ப ரசிக்கிறாருபோல’ என்று குறும்பாய் சொன்னது அவ்வப்போது அவன் நினைவில் அரும்பும்.

     நிவேதாவும் அவனும் ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஒருவரையொருவர் விரும்பி வந்தனர். அந்த வகுப்பில் இன்னும் சில ஜோடிகளும் காதலிப்பதாய் அரற்றிக் கொண்டு பித்தேறி திரிந்தனர். பத்தாம் வகுப்போடு எங்கே தங்கள் காதல் முடிந்துவிடுமோ என்கிற பதற்றத்தில் இருந்தவர்களின் நெஞ்சில் பால் வார்க்கச் செய்திருந்தது அவர்கள் படித்து வந்த உயர்நிலைப்பள்ளியானது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது என்கிற அறிவிப்பு. கதிருக்கும் நிவேதாவுக்கும் இடையில்  நிலவியது காதலா ஈர்ப்பா அல்லது அன்பா என்று முடிவு செயவதற்குள்ளேயே பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்துவிட்ட வருத்தம் கதிருக்கு இப்போதும் உண்டு. அவர்களே உறுதிப்படுத்த முடியாமல் இருந்த காதல் செய்தி யார் மூலமோ அருள் வாத்தியாரின் காதில் விழுந்துவிட்டது. அவரும் அதனை உறுதிப்படுத்தப்பட்ட காதல் என நம்பி கதிரிடம் அறிவுரைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்தார். கதிர் எவ்வளவோ மறுத்தும் நம்ப மறுத்தது அருள் வாத்தியாரின் ஆழ்மனம். ‘சும்மாதான் சார் அதெல்லாம் ஒன்னுமில்ல…இந்தப் பசங்கதான் ஓட்டுவாய்ங்க சார்.. அததான் யாரோ உங்கள்ட்ட சொல்லிருக்காங்க சார்’ கெஞ்சியவாறு சமாளித்து கொண்டிருந்தவனை மறித்து ‘எனக்கு ஒன்னுமில்லடே..நல்லா படிக்கிற ஒன்னோட லைஃப் வீணாகிடக் கூடாதுடே’ என்றவர் திடீரென என்ன நினைத்தாரோ சட்டென கைநீட்டி, ‘நீ அந்த பொண்ண விட்டுறேன்னு சத்தியம் பண்ணுடே’ என்றார். ஒன்றும் புரியாத கதிர் தனக்கு மிகவும் பிடித்த ஆசிரியரின் பேச்சை  மீற முடியாது வேறு வழியின்றி சத்தியம் செய்ததை இப்போது நினைத்தாலும் அவனுக்கு சிரிப்புதான் உதிரும். அருள் வாத்தியார் அந்த காதல் விசயத்தை அதோடு விட்டுவிடவில்லை. இது தொடர்பாக அவர் நிவேதாவையும் தனியாக அழைத்துப் பேசினார். அவளுக்கும் அறிவுரை வழங்கி சரிபடுத்த முயன்றதில் நிவேதா அழுதபடியே அறைவிட்டு வெளியே ஓடிவந்த காட்சி அவனை ஒருமாதிரி மனங்குழையச் செய்துவிட்டது. அந்த நிகழ்வுக்குப் பிறகு கதிரும் நிவேதாவும் பேசிக் கொள்வது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.  நிவேதாவும் அன்றைய நாளுக்குப்பின் அருள் வாத்தியார் பற்றி சக நண்பர்களிடம் அடிக்கடி குறைசொல்லி நொந்து கொண்டாள். அவர்களோ ‘விடுடி அவரு ஒங்க நல்லதுக்குதானே சொல்றாரு’ என்றது அவளை இன்னும் அதிக கடுப்பில் ஆழ்த்தியது.  கதிரும் ‘நம்ம சார் நல்லதுக்குத்தான் சொல்வாரு’ என்றே எண்ணிக் கொண்டான். அவனுடைய வாழ்க்கை மேல் அவருக்கு இருந்த அக்கறையை பழகியவர்களிடம் சொல்லி இப்போதும் அவரது அன்பை மெச்சிக் கொள்வான்.

   அருள் வாத்தியார் பகுதி நேரமாகத்தான் டியூசன் எடுத்தார். அவரது முழு நேர வேலையென்பது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பது. அதன் காரணமாக பணி நிமித்தமாக பல்வேறு பயிற்சிகளுக்கு கதிர் செல்லும்போதெல்லாம் பயிற்றுநராக ‘அருள் சார் வரமாட்டாரா என ஏங்கியிருக்கிறான். அப்படியொரு பயிற்றுநர் கிடைத்தால் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் இன்னும் மேம்படும் என நினைத்துக் கொள்வான். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவன்று பார்த்தபிறகு அருள் வாத்தியாரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இரண்டு முறை பேசியிருந்தான். பின்பு நிறைய முறை முயன்றும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. நண்பர்களிடம் விசாரித்ததில் அவர் தனது சொந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள பள்ளியொன்றில் பணிபுரிவதாகவும் அலைபேசி எண்ணையும் மாற்றிவிட்டதாகவும் தெரிய வந்தது.

     கல்லூரிக் காலம் முழுக்க அருள் வாத்தியாரைப் போன்று ஒரு ஆசிரியரையாவது அவன் பார்த்துவிட முயன்று தோற்றுப்போனான். அந்த ஏமாற்றம் தந்த வலிகளுக்கு தானே அருள் வாத்தியார் போல ஆகி தைலமிட்டுக் கொள்வதென முடிவெடுத்து அதற்கான முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்தினான்.

   ஆசிரியர் வேலை கிடைப்பதற்குமுன் கதிர் திருப்பூரில் வேலை செய்த சமயத்திலும் அருள் வாத்தியாரின் மாவட்டத்திலிருந்து வந்து வேலை செய்பவர்களிடம் பாசமாக பழகினான். அவர்களிடமும் அவரைப் பற்றி விசாரித்ததில் சரியான தகவல் கிடைக்காததில் அவனுக்கு வருத்தமே மிஞ்சியது. அவர்களிடம் நெருங்கிப் பழகுவதன் மூலம் அவர்கள் வீட்டுக்கு விருந்தாளியாக செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அப்படி சென்று தங்குகையில் நிச்சயமாக அருள் வாத்தியாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமென்று என்றோ தொலைத்த காதலியை சந்திக்க அலையும் காதலனைப் போல கதிர் அருள் வாத்தியாரை சந்திக்கும் நாளுக்காக தவமிருந்தான். அப்படி அவன் நினைத்தது போலவே ஒருமுறை உடன் வேலை செய்யும் நண்பரின் ஊர்த் திருவிழாவிற்குச் சென்று தேடியதில் அவன் வந்திருந்த ஊர் மாதிரி இன்னும் நூற்றுக்கணக்கான ஊர்கள் அந்த மாவட்டத்தில் இருப்பதும் அவற்றில் எந்த ஊரில் அருள் வாத்தியார் இருப்பார் என்று கண்டுபடிப்பது சிரமம் என்பதும் புரிந்தது. இவ்வாறாக அவனது பல கட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்தாலும் அவனது குருவைத் தேடும் படலம் என்றும் தொடர்ந்தபடிதானிருந்தது.

     கதிருக்கு அரசுப் பள்ளியில் வேலை கிடைத்த அன்று முழுக்க அவன் அருள் வாத்தியாரின் நினைப்பிலேயே திளைத்திருந்தான். அவர் அவனை ஊக்கப்படுத்திய விதத்தையும் தாய்மை உணர்வுடன் அரவணைத்து கை குலுக்கி அறிவுரை வழங்கிய தருணங்களையும் நினைவிலும் கனவிலும் காட்சியாக்கி மகிழ்ந்தான். தான் ஆசைப்பட்ட வேலை கிடைத்துவிட்ட சந்தோசத்தைவிட அந்த மகிழ்ச்சியை தனது ஆத்மார்த்த குருவுடன் பகிர்ந்துகொள்ள முடியாத வருத்தமே கதிரை அன்றைய நாள் முழுதும் மூழ்கடித்தது. அவன் இயற்பியல் வகுப்புத் தேர்வொன்றில் நூற்றுக்கு தொண்ணூற்று ஏழு மதிப்பெண்கள் எடுத்த அன்று அவனது கையைப் பிடித்து குலுக்கியபடி நெடு நேரம் விடாது அவர் இறுக்கமாக பற்றியிருந்தது  நினைவில் வந்து வந்து போனது. அவரது அந்த இறுகப்பற்றுதல்தான் படிப்பின்மீதும் வாழ்வின்மீதும் ஒரு பற்றுதல் வரக் காரணமென நினைத்தவன் தன் வாழ்வின் பெருங்கனவு நிறைவேறிய நாளில் தனது கனவு நாயகன் கண் முன் இல்லாதது கதிரின் கொண்டாட்ட மனநிலையை குழி தோண்டி மூடியது என்றுதான் சொல்ல வேண்டும். அன்று அவன் மீண்டும் ஒருமுறை அவரது அலைபேசி எண் வாங்க முயன்று எத்தனையாவது முறை என்று எண்ணி சொல்லிவிட முடியாதபடிக்கு மறுபடியும் தோற்றுப்போனான். தனது ஆசிரியரின் ஆசீர்வாதம் அன்றைக்கு கிடைக்காமல் போனாலும் என்றைக்காவது கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடே கதிர் தனது பணியினை தொடர்ந்து வருகிறான். அவனது ஒவ்வொரு வகுப்புமே அருள் வாத்தியாரின் நினைப்போடுதான் தொடங்கவும் முடியவும் செய்தது.

அருள் வாத்தியார் குறித்து கதிர் அவனுடன் படித்த சக பள்ளித் தோழர்களிடம் பேசும்போதெல்லாம், ‘என்னடா நீயி எப்ப பாத்தாலும் அவரு நெனப்பிலேயே திரியிற..வேற ஏதாவது பேசுடா என்ற கிண்டலையும் பொருட்படுத்தாது மேலும் உரையாடலை அவர் குறித்தே ஆரம்பிப்பான். அவர்களும் ‘டேய் அவரு ஒனக்கு மட்டுமாடா சாரு..எங்களுக்குந்தான் சாரு..நாங்களெல்லாம் அவர மறக்கலீயா.. சும்மா எப்ப பாத்தாலும் அவரு புராணத்தயே வாசிச்சுகிட்டு..அவரு மட்டும் நம்ம எல்லாரயும் மறந்துட்டு ஒரு வார்த்தகூட சொல்லாம போகலீயா..போய் பொழப்ப பாருடா..லைப்னா அப்டிதான்’ என்ற அவர்களின் எரிச்சலிலும் ஓர் நியாயம் இருக்கவே செய்தது. சமயங்களில் அவர்கள் ‘நாயமா பாத்தா அருள் சார் மேல ஒனக்கு கோபந்தாண்டா வரனும்.. நாலு வருசமா ஒன்னயவே நெனச்சுட்டு இருந்த அந்த நிவேதா புள்ளய ஓங்கிட்டருந்து பிரிச்சதே அந்த ஆளுதாண்டா.. இதுகூட புரியாம சும்மா அருள் சார் அருள் சார்னு பெனாத்திட்டு இருக்கேனு கடுமையாய் கோபிப்பார்கள். ‘ஆமாண்டா கதிரு அன்னைக்கு அந்த ஆளு பேசுனதுக்கு அப்றம் நிவேதா புள்ள எவ்ளோ அழுதுச்சு தெரியுமா.. அதுக்கு அப்புறமும் ஏன் இப்பகூட அருள் சார பத்தி அந்த ஆள கண்டாலே புடிக்காதுனு  கோபம் கோபமா திட்டிக்கிட்டேதான் இருக்கு.. ஆனா நீ அந்த புள்ள இப்போ என்ன பண்ணுதுனுகூட கேட்க மாட்டுற.. அவரதான் நெனச்சு நெனச்சு உருகுற’ என்பார்கள். நண்பர்களின் சொற்களில் இருக்கும்  நிதர்சனம் அந்த நேரத்தில் அவன் மனதை சுடவே செய்யும். ஆனால் அடுத்த கணமே அவன் மனதை அருள் வாத்தியாரின் நினைவே ஆக்கிரமிக்கும்.

கதிர் வகுப்பில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போதெல்லாம் அவனுக்கு தோன்றும் ‘இப்படித்தான் அருள் சாரும் பசங்ககூட ஜாலியா பேசிட்டு இருப்பாருல்ல.. அவர்ட்ட படிக்கிற பசங்கலெல்லாம் கொடுத்து வச்சவுங்க.. வெறும் எட்டு மாசம் அவருகிட்ட படிச்ச நமக்கே அவர இவ்ளோ புடிக்குதுன்னா ஆறு வருசமும் அவருகிட்ட படிக்கிற பசங்க எவ்ளோ கொடுத்து வச்சவுங்க’ என்ற பொறாமை எண்ணத்தில் மூழ்கி விடுவான். ஒருவேளை அவர் புதிதாய் போயிருக்கும் பள்ளியில் நிறைய மாணவர்கள் இருப்பார்கள் என்றும் அவர்களுடன் இணக்கம் கொண்டிருப்பதால் தம்மை மறந்திருக்கலாம் என தனிமையில் நினைத்து தன்னைத்தானே தேற்றிக் கொள்ள கதிர் முயல்வதுமுண்டு.

கதிரும் அருள் வாத்தியாரைப் போலத்தான் மாணவர்களுடன் நெருக்கத்தை கடைப்பிடிக்க நினைப்பான். ஆனால் அருள் வாத்தியாரைப் போல பாடம் நடத்த கற்றுக்கொண்டவனுக்கு எவ்வளவு முயன்றும் அவரைப் போல மாணவர்களிடம் நெருங்கிப் பழக வரவில்லை. அதெல்லாம் அருள் சார் போன்ற மனித நேயர்களுக்கு மட்டுமே வாய்த்த அருட்கொடையென அவன் நினைத்துக் கொள்வதுண்டு. பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் பொதுத் தேர்வன்று தேர்வு அறை வரை வந்து தைரியம் சொல்லி தோள்மேல் கை போட்டு ‘ஆல் த பெஸ்ட்’ சொன்ன காட்சியைத்தான் அவனது இதுவரையான வாழ்வின் உச்சக் கட்ட ஓவியமாக மனதில் வரைந்து வைத்திருக்கிறான். அன்று அவனை கை குலுக்கி பிரியும்போது அவர் ஒவ்வொரு விரலாய் விடுவித்த நெகிழ்வில் அன்பின் பசை ஊறிக் கிடந்நது. அந்த அன்பின் ஈரம்தான் மனித வாழ்வின் சாரமென அவன் உணர்ந்திருந்தான். அவ்வாறாக அன்று விடை சொல்லி புறப்படும்போது அவர் கொடுத்த பறக்கும் முத்தத்தைதான் இன்று வரை ஒரு பாசப்பறவையாய் தேடித் திரிகிறான் கதிர்.

      கதிர் பாடம் நடத்தும்போதெல்லாம் அருள் வாத்தியாரின் நினைவு அடிக்கடி வந்துபோகும். அவர் மாணவர்களை உற்சாகம் குறையாமல் வைத்திருக்கும் பாங்கு, எல்லோரையும் கனிவோடு அரவணைக்கும் கருணை, எந்தவொரு சந்தேகம் கேட்டாலும் அருகில் அழைத்து தட்டிக்கொடுத்து சொல்லிக் கொடுக்கும் பொறுமை என அவனது பள்ளிக்கால நினைவலைகளில் வகுப்பறையிலேயே மூழ்கிவிடுவதுண்டு. அதிலும் அவர் இயற்பியலில் வரும் கடினமான கணக்கீடுகளையெல்லாம் நன்கு தெரிந்த ஊருக்கு வழி சொல்வது போல எளிமையாய் எடுத்துரைக்கும் திறமைதான் எவ்வளவு கடின முயற்சி செய்தும் கதிருக்கு இன்னும் சரிவர கைவராத காரியம். சமயங்களில் மாணவர்களை ஏதோ கோபத்தில் கதிர் அடித்துவிட நேரும். அப்போதெல்லாம் தன் ஆசிரியரது அன்பின் ஈரம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் கையால் மாணவர்களை அடித்துவிட்டதை நினைத்து குற்றவுணர்வு கொள்வான்.

   அருள் வாத்தியாரை தேடித்தேடி அலுத்துவிட்ட களைப்போ என்னவோ சமீபமாய் கதிருக்கு அவரை விரைவில் சந்திக்கப் போவது போன்ற நினைவுகள் வந்து வந்து படுத்தியெடுக்கிறது. சமீப நாட்களில் அவன் சந்திக்கும் மனிதர்கள் பெரும்பாலும் அருள் வாத்தியாரின் மாவட்டத்துக்காரர்களாகவே  இருந்தார்கள். அவர் ஊருக்கே போய் பார்த்துவிடலாம் என்றாலும் எந்த ஊர் என்பது கதிருக்கு சரியாகத் தெரியாது. அதனால் அவர் சார்ந்த மாவட்டத்துக்காரர்கள் மீது ஒருவித மரியாதை அவனுக்கு எப்போதும் உருக்கொண்டு விடுகிறது. அப்படியானவர்களை அவன் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது சற்று ஆசுவாசமாய் உணர உதவியது. அவன் தினமும் பார்க்கும் செய்தி சேனல்களில் அருள் வாத்தியாரின் மாவட்டத்தின் செய்திகளே அதிகம் இடம் பெற்றன. இதுவெல்லாம் சேர்ந்துதான் அவனுக்கு அவரை விரைவில் சந்திக்கப் போகிறோம் என்கிற உணர்வை ஏற்படுத்தியிருந்தது. கதிர் அந்த உணர்வு உண்மையாகும் தருணத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தான். இதற்கு வலு சேர்க்கும் விதமாக அவன் வீட்டு தொலைக்காட்சியில் சமீபமாய் ஓடும் படங்களும்கூட பிரிந்திருந்த காதலர்கள் சேர்வது, நெடுநாள் சந்திக்காதிருந்த நண்பர்கள் சந்தித்துக் கொள்வது, சிறு வயதில் தொலைந்துபோன குடும்ப உறவுகள் மீண்டும் சேர்வது என இதே கதைக்களத்தை கொண்டதாக அமைந்ததும் கதிருக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

வழக்கமாய் வெகு சீக்கிரமாகவே பள்ளிக்கு வந்துவிடும் கதிர் வரும் வழியில் அன்றைக்கான நாளிதழை வாங்கி வந்திருந்தான். இப்படி எப்போதாவது அதிசயமாய் நாளிதழ் வாங்கும் பழக்கம் அவனுக்கு இருந்தது. ஆனால் வாங்கி வந்துவிட்டால் அந்த நாளிதழை ஒரு பக்கமும் மிச்சமில்லாது படித்து முடித்தால்தான் அவனுக்கு அன்றைக்கு உறக்கம் வரும். அப்படிதான் அன்றைக்கும் நாளிதழை விரித்துப் படித்துக் கொண்டிருந்தான். முதல் பாடவேளைக்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. பரபரப்பாய் ஒன்று  இரண்டு மூன்று பக்கங்களை விரைவாய்ப் படித்துப் புரட்டியவனின் கண்கள் நாளிதழின் நான்காம் பக்கத்தில் நிலைகுத்தி நின்றன. அதுவரை சத்தமாய் இருந்த சுற்றம் அமைதியில் உறைந்தது போலிருந்தது. ஒன்றுக்கு மூன்று காற்றாடி ஓடிக்கொண்டிருந்த அந்த அறை குளிர்காலத்திலும் அவனுக்கு வியர்வையை வெளித்தள்ளியது. அவனது கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. தனது முப்பத்தாறு ஆண்டு கால வாழ்வில் எந்த சந்திப்புக்காக தவமிருந்தானோ அந்த சந்திப்பு தற்போது கண்முன் நிகழ்கிறது. ஆனால் அவனால் அது குறித்த எந்த பிரஞ்சையையும் வெளிப்படுத்த முடியவில்லை. அவனது இதயத் துடிப்புகள் இயல்பைத் தாண்டி எகிறத் தொடங்கியது. நிலை குத்திய கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிந்து கழுத்தை நனைத்துக்கொண்டிருந்தது. இப்படி ஒரு செய்தியை அந்த நாளிதழ் சுமந்து வந்திருக்கக்கூடாதென நொந்து கொண்டான். இன்றைக்கென பார்த்து  நாளிதழ் வாங்கிய தனது பொறுப்புத்தனத்தை திட்டித் தீர்த்தான். வெறும் செய்தி மட்டும் என்றால்கூட யாரோவென வருத்தத்தோடு மட்டும் கடந்துபோக நேர்ந்திருக்கும். ஆனால் புகைப்படத்தையும் வெளியீட்டு அதற்கு கீழேயே அருள் வாத்தியாரின் முழுப்பெயரையும் போட்டிருந்தார்கள். ஒருவேளை இது பிரம்மையோ என்று கண்ணீரில் ஊறியிருந்த கண்களை துடைத்துவிட்டு மீண்டுமொரு முறை கவனமாய்  படித்துப் பார்த்தான். “மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்”. அவனது இதயத்தில் இடியென இறங்கிய செய்தி பல மின்னல் பொறிகளை உடனே அவனது மூளையில் கிளறிவிட்டது. நாளிதழை தாங்கியிருந்த தனது கைகளை அவமானமாய் உணர்ந்தான். அந்த கைகளுக்குள் இதுவரை காத்து வந்த ஈரம் கருகி காந்தத் தொடங்கியது. அவனது முதுகில் புழுக்கள் ஊர்வது போலிருந்தது. தனது தோள்பட்டைகளை அசிங்கமாய் குறுக்கிக் கொண்டான். அவனது விரல்களை வெட்டியெறிய வேண்டுமெனத் தோன்றியது. அதுவரை அணைப்பாகத் தெரிந்த நினைவுகள் அனைத்தும் அனலென பற்றியெரிந்தன. மேசைவிட்டு கீழிறங்கி கசிந்து கிடந்த கண்ணீரைப் பார்த்தான். அன்றைக்கு அறைவிட்டு அழுதுகொண்டு ஓடிவந்த  நிவேதாவின் கண்ணீர் முகம் அதில் தெரிந்தது.

samykrish90@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button