இணைய இதழ்இணைய இதழ் 85சிறுகதைகள்

கவளம் – காளிப்ரஸாத்

சிறுகதை | வாசகசாலை

திர்வேலன் தன் இருக்கையைவிட்டு எழுந்து தண்ணீர் குடிப்பதற்காகச் சென்றான். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குளிர்ச்சியாகவும் சூடாகவும் இதமாகவும் மூன்று நிலையில் வைத்திருக்கும் இயந்திரம் ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து கீழே பார்த்தபோது சாலையின் அடிமுதல் நுனிவரை தெரிந்தது. எங்கும் வாகனங்கள். பேருந்து முதல் மிதிவண்டி வரை. அவ்வளவு நெரிசலாக. இடையில் இருக்கும் மூன்று சந்திப்புகளும் தெரிந்தன. பச்சை ஒளிர்வதற்குள் எதிர்த் திசையிலிருந்து கிளம்பும் வாகனங்கள். அதற்கு எதிராக சிகப்பு ஒளிர்ந்தும் நிற்காமல் செல்லும் வாகனங்கள். ஆனால், இருவருக்குள்ளும் ஒரு புரிதல் இருக்கிறது. ஒருவர் மற்றவரை இயல்பாக விலக்கிச் செல்கிறார்கள். அங்கிருந்து கிளம்பும் வண்டி சரசரவென முன்னேறி வேகமாக வந்து அடுத்த சிக்னலில் நிற்கிறது. மெதுவாகக் கிளம்பியவர்களும் அந்த வண்டியருகே வந்து நிற்கிறார்கள். மீண்டும் சிக்னல் விழும் தருவாயில் வேகமாகக் கிளம்புகிறது அவ்வண்டி. கண்ணை விட்டு மறையும் வரை அதையே நோக்கினான். அவ்வளவு வேகமும் அடுத்த சிக்னலில் நிற்பதற்குதானோ என்று நினைத்துக் கொண்டவன் போல தனக்குள் மெல்ல சிரித்துக் கொண்டான். 

இரு புறங்களிலும் வாகனங்கள் சாரைசாரையாக வந்துகொண்டே இருக்கின்றன. இத்தனைபேர் எங்கு செல்கிறார்கள் என வியப்பவன் போலப் பார்த்துக் கொண்டிருந்தான். அத்தனை பேருக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. இரு மடக்கு குடித்ததும் தண்ணீரை அப்படியே வைத்துவிட்டு ஒரமாக நின்று கொண்டிருந்தான். இந்தப் பன்னிரெண்டாம் மாடியின் கண்ணாடிச் சுவர் வழியாக நகரத்தை ஒரு பருந்து போல பார்க்க முடிகிறது. கண்ணாடிக்கு அந்தப் பக்கம் ஒரு மைனா கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைக் கண்டு குழம்பி அதைக் கொத்துகிறது. அது ‘டொக் டொக்’ என ஒலிக்கிறது. மேலே பொருத்தப்பட்ட சட்டத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் தொலைக்காட்சி ஏதோ ஒன்றை முக்கியமான செய்தி என கூவிக்கொண்டிருந்தது. அதில் சத்தம் முற்றிலும் குறைக்கப்பட்டிருந்ததால் செய்தி வாசிப்பவரின் தீவிரமும் களப்பணியாளரின் அவசரமும் அபத்தமாகத் தோன்றின. அதனாலோ என்னவோ யாருடைய மனமும் அதில் லயிக்கவில்லை. 

ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் தேவலைதான். ஆனால், அங்கிருந்து கிளம்பி வாயிலில் இருக்கும் காவலரிடம் சொல்லிவிட்டு, மின்தூக்கியில் கீழிறங்கி அது ஒவ்வொரு தளமாக நின்று இறங்கி, கீழ் தளத்தில் உள்ள காவலரிடம் சொல்லிட்டு வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, அந்த கட்டிடத்தை விட்டு வெளியே வந்து அதே தொழில்நுட்ப பூங்காவின் எதிர்க் கட்டிடத்தின் கீழே இருக்கும் உணவகத் தளத்தில் தேநீர் இயந்திரம் வைத்திருப்பவரிடம் இருபத்தைந்து ரூபாய் கொடுத்தால் ஒருகோப்பை தேநீர் கிடைக்கும். அதுவே இந்த தொழிற்நுட்ப பூங்காவின் வெளியே வந்து சாலையில் குடித்தால் அந்த பணத்தில் ஒரு சிகரெட்டும் கிடைக்கும். ஆனால், வழியில் ஒரு வருகைப் பதிவேட்டில் போகும்போதும் வரும்போதும் கையொப்பமிட வேண்டும். 

நினைத்துப் பார்த்தே மலைத்தவனாக தேநீர் அருந்தும் எண்ணத்தை ஒத்தி வைத்தான். மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான். கைபேசி அமைதியாக்கப்பட்டு காவலரின் அருகே உள்ள அலமாரியில் உள்ளது. எப்படியும் தன்னை அழைக்க குறைந்தது ஒருமணி நேரமாகலாம். இன்னும் பலர் முன்னால் இருக்கின்றனர். தன்னருகே அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தான். சென்ற வருடத்தில் கல்வி முடித்தவர்கள் அல்லது இவ்வருடம். சிலர் மீண்டும் மீண்டும் தன் சுயகுறிப்புத் தாளையும் சான்றிதழ் நகலையும் பார்த்துக் கொண்டிருந்தனர். நேர்முகத் தேர்வில் எழுத்துப் பிழைநோக்கி மதிப்பெண் குறைப்பார்களா என எண்ணிக் கொண்டான். பத்துமணிக்கு வந்து இரு மணிநேரங்கள் ஆகிவிட்டன. இன்னும் பத்துபேர் கூட உள்ளே செல்லவில்லை

மதிய உணவுக்கு கீழேயே உணவகம் இருந்தது. சிலர் சென்று வந்தனர். ஆனால், இவனுக்குச் செல்ல விருப்பமில்லை. பொறுமையாக காத்திருந்தான். இரண்டு மணிக்கு இவனை உள்ளே அழைத்தார்கள். உள்ளே அறையில் இருவர் இருந்தனர். 

பரஸ்பர அறிமுகத்திற்குப் பின்னர் தெளிவான ஆங்கிலத்தில் அவர்களின் உரையாடல் நிகழ்ந்தது.

‘உங்கள் விவரங்களைப் பார்த்தோம். நீங்கள் அதிகம் அனுபவஸ்தர் போலத் தோன்றுகிறீர்கள்…’

‘ஆமாம் ஐயா’ என்ன சொல்வதென விளங்காமல் ஒரு வரியில் கூறினான்

‘எங்களுடைய வேலைக்குப் புதியவர்களே கூட போதும். அந்த அளவிலான முதல்கட்ட பொறியாளர்களுக்கான நேர்முகம்தான் இது. பரவாயில்லையா?’

‘தெரியும். எனக்கு இதுவுமே சரிதான்’ என்றான் சற்று படபடப்பாக

‘ஆரம்பத்தில் மூன்றாண்டுகளுக்கு ஐந்தாண்டுகளுக்கு என சில அறியப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறீர்கள்.. அப்புறம் உள்ளது ஒரு அறியப்படாத சிறய நிறுவனத்தின் பெயர் போல இருக்கிறதே’

‘ஆமாம். அது என்னுடைய நிறுவனம்தான். ஏழாண்டுகளுக்கு நடத்தினேன். இப்போது அதை மூடி ஆறு மாதங்கள் ஆகின்றன’

‘அது மூன்று வருடங்களாகவே அங்கு இல்லை என்றும், அந்த விலாசத்தில் ஒரு ப்ளே ஸ்கூல்தான் இருப்பதாக பிண்ணனி சோதனையில் சொல்லியிருக்கிறார்களே..”

“வாடகை கட்ட முடியாமல் அலுவலகத்தை வீட்டிற்கு மாற்றிக்கொண்டேன். உண்மையாக மூடி ஆறு மாதங்கள்தான் ஆகின்றன..” 

‘ஓ.. சாரி..’ என்றவன் தொடர்ந்து’ நன்று.. இங்கு இரவுப்பணி இருக்கும்.. விடுமுறை நாளில் வரவேண்டியிருக்கும்… எல்லாம் சம்மதமா?’

‘ஆம்’ என்றான். கடைசியாக இரவில் தூங்கியது என்று என மனம் ஒருகணம் யோசித்தது

‘என்ன உத்தேசித்து இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள்?’ 

இது ஒரு தந்திரமான கேள்வி என அவன் அறிவான். இருபத்தைந்தாயிரம் ரூபாயாக வரப்போகும் சம்பளம்தான் என்று சொன்னால் அது நேர்மையான பதிலாக இருந்தாலும் சரியான பதிலாக ஏற்கப்படாது. இந்த வேலை மீதான ஆர்வம்தான் என்று சொன்னால் சரியான பதிலாக இருந்தாலும் நேர்மையான பதிலாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது

‘கணினி உபயோகிப்பாளர்களின் சிக்கலைத் தீர்க்கும் இந்த வேலையை நான் முன்பு சுலபமாகச் செய்திருக்கிறேன். மீண்டும் என் தொழில்துறையில் நீடிக்க இந்த முதல்படியிலிருந்தே செல்வது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்’ என்றான்

சொல்லி முடித்ததும் ஓரளவு சரியாகச் சொன்னதாகவே அவனுக்குத் தோன்றியது. 

எதிரில் இருந்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுப்பாக பேசிக்கொண்டனர்

‘சரி.. நாங்கள் எங்கள் ஹெச் ஆரிடம் ஆலோசித்து வருகிறோம்’ ஒருவன் மட்டும் எழுந்து சென்றான்

மற்றவன் கைபேசியை பார்த்திருக்க சிறிது நேரத்தில் வெளியே சென்றவன் திரும்ப வந்தான்

‘உங்கள் வருகைக்கு நன்றி. உங்களுக்கான நேர்காணல் முடிந்தது. எங்கள் ஹெச் ஆரிலிருந்து உங்களைத் தொடர்பு கொள்வார்கள்’

சரியென தலையசைத்து பதிலுக்கு கைகுலுக்கி, மெல்ல எழுந்து வெளியே வந்தான்.

அவர்கள் தன்னிடம் துறைசாரந்து எதுவுமே கேட்கவில்லை என்பதும் மற்றவர்களைப் போல தான் இரண்டாவது சுற்றுக்கே அனுப்பப்படவில்லை என்பதும் மெல்ல உரைக்க தன் கைபேசியை வங்கிக்கொண்டு தரைத்தளம் வந்து வண்டியை எடுத்துக் கொண்டு அனைத்து அனுமதி சீட்டுகளையும் திரும்ப அளித்து கையொப்பமிட்டு அந்த தொழில்நுட்ப பூங்காவில் இருந்து வெளியே வந்தான். பசியெடுத்தபடி இருந்தது. வீட்டிற்கே போய் சாப்பிட்டால் போதும். இதை வண்டி பெட்ரோலுக்கு வைத்துக்கொள்ளலாம் என நினைத்தபடி உணவகம் செல்லும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு வெளியேவந்தான். அங்கு அவன் பன்னிரெண்டாம் மாடியிலிருந்து கண்ட அந்த சாலையில் அப்பொழுதும் புற்றீசல் போல வாகனங்கள் சாரைசாரையாக வந்துகொண்டிருந்தன. வண்டியை மெல்ல முறுக்கியபடி அவனும் அந்த வரிசையில் சென்று இணைந்துகொண்டான்

********

தேஜா தனது காட்டன் சேலையை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டாள். குழந்தையை தூக்கிச் சென்று பாத்ரூமில் நிற்க வைத்து அப்படியே அதன் டயப்பரைக் கழற்றி குப்பைத்தொட்டியில் வீசினாள். தண்ணீர் விட்டுக் கழுவிய பின் குழந்தையை இருக்கையில் அமரச் செய்தாள். 

‘உங்க பேக்லேந்து டயப்பர் எடுத்துக் கொடுங்க’ என்றாள்

‘அச்சச்சோ.. அம்மா வேற டயப்பர் தரலை மிஸ். ஒரு நாளைக்கு ஒண்ணுதான்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க’ என சிணுங்கியது.. ‘அச்சச்சோ’ என்று சொல்லும்போது கைகளால் வாயைப் பொத்திக் கொண்டதிலேயே அவள் மனம் லயித்து சுழன்று கொண்டிருந்திருந்தது

‘அச்சச்சோ’ என்றாள் அவளும் அதேபோல

அலுவலக அலமாரியைத் திறந்து புது டயப்பரை எடுத்தாள். அங்கு அந்த மழலையர் விளையாட்டுப் பள்ளியின் கணக்காளர் இருந்தாள். 

‘தேஜா, டயப்பர்ஸை குழந்தைங்கதான் அவங்கவங்க வீட்டிலேந்து எடுத்துட்டு வரணும். நீங்க இப்படி ஒவ்வொரு டயப்பர்னு எடுத்தா அதுவே பெரிய செலவாகிடுது. இப்படி எடுக்கக் கூடாதுன்னு சேர்மன் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு. இனிம இப்படி அனுமதிக்க மாட்டேன்’

‘அச்சச்சோ ‘ என்றாள் தேஜா

கூட்டிப் பெருக்கும் ஆயா வந்தாள்

‘யூகேஜில மஷ்ரூம் கட் பண்ணிட்டு ஒரு பாப்பா இருக்கும்ல. அதுக்கு கண்ணு சொருகுது பாருங்க’

‘அச்சச்சோ’ என்று ஓடினாள் தேஜா

அந்தக் குழந்தைக்கு உடல் தகித்துக் கொண்டிருந்தது. அலமாரியிலிருந்து ஜுர மருந்து எடுத்து வந்தாள். ஒரு மூடியளவு மருந்து எடுத்துப் புகட்டினாள்

‘நேத்து நைட்டு எப்படி தூங்கின?’ என்றாள்

‘இதே மாதிரிதான் சிரப் கொடுத்தாங்க மிஸ்.. காலேல கூட கொடுத்தாங்க..’ என்றது 

‘அச்சச்சோ’ என்றாள்

அவளை மட்டும் நகர்த்தி ஓரமாக உட்கார படுக்க வைத்தாள். 

தாளாளருக்குப் போன் செய்தாள்

‘காலையில வரும் போது தொட்டுப் பாத்தீங்களா இல்லையா.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்..’ 

‘காலையில மருந்து கொடுத்து கொண்டு வந்து விட்டிருக்காங்க போலிருக்கு சார். போன வாட்டியும் இப்படித்தான் செஞ்சாங்க.. இப்ப போன் பண்ணினா ரெண்டு பேரும் ஆபீஸ்ல இருப்பாங்க.. நீங்க பத்திரமா பாத்துக்கங்க.. சாயங்காலம் வந்து கூப்டுக்கிறேன்னு சொல்லுவாங்க சார்..:

‘இப்ப மத்த குழந்தைங்களுக்கு ஜுரம் வந்தால் யாரு பதில் சொல்றது.. அப்புறம் இவங்களே வந்து உங்க இடத்துல தண்ணி தேங்கியிருக்கான்னு நம்மளயே கேட்பாங்க.’

‘அவங்க இப்படித்தான் ட்ரிக் பண்றாங்க சார்..’

‘அவங்க ட்ரிக் பண்றாங்கன்னா நீங்களும் ஜாக்கிரதையா இருக்கனும்.. எல்லாத்தையும் எங்கிட்ட ஒப்பிச்சா நான் என்ன பண்ண முடியும்.. இது என்ன ப்ளேஸ்கூலா இல்ல நர்ஸரி வார்டா.. இப்ப மத்த பேரண்டஸ் வந்து நம்மளாலதான் அவங்க குழந்தைக்கும் வந்துடுச்சிம்பாங்க.. அப்பத்தான் புரியும்.. ரெண்டு பேரும் வேலைக்கு போற அவசரத்துல ஜூரம் வந்த குழந்தைய நம்மகிட்ட விட்டுட்டு போறாங்க.. நாம என்ன ஆயாவா இவங்களுக்கு.. நீங்க அவங்களை நாலு பேர வச்சுகிட்டு கடுமையா வார்னிங் கொடுங்க.. அடுத்த வாட்டியும் இப்படிப் பண்ணினா நான் டி.ஸி கொடுத்து விட்டுடறேன்’

‘அச்சச்சோ’ என்றாள் தேஜா

கதிர்வேலன் அந்த மழலையர் பள்ளி வாசலில் வண்டியை நிறுத்தி மூன்று முறை ஒலி எழுப்பினான். தேஜா அவசரமாக வெளியே ஓடிவந்து பார்த்தாள். சந்தோஷமாக வந்தவள் முகம் அவன் முகத்தைப் பார்த்ததும் லேசாக அதிர்வதும் பின் இயல்பாக வைத்துக் கொள்ள முயற்சித்து தடுமாறுவது போலவும் அவனுக்குத் தோன்றியது.

“சாவி கொடு” என்றான்

வீட்டுச் சாவியை எடுத்து நீட்டியபடி நின்றாள். கையிலிருந்து சாவியை அவசரமாக பிடுங்கிக் கொண்டவன் அவள் அப்படியே நிற்பதைக் கண்டு நிமிர்ந்து பார்த்து’என்ன?’ என்றான்

‘ஒண்ணுமில்லை..’

சிறிது நேரம் அவனும் அப்படியே நின்றவன்,’சக்ஸஸ் ஆவல’ என்றான்

“அச்சச்சோ” என்றாள்

**********

கதிர்வேலன் வீட்டுக்கு வந்து பாத்திரங்களைப் போட்டு உருட்டினான். எல்லாம் கழுவி வைக்கப்பட்டிருந்தது. சில டப்பாக்களைத் துழாவினான். நேற்று பசங்க கையில் எட்டாமல் இருக்கட்டும் என்று ஒரு டப்பாவை மேலே வைக்கச் சொல்லியிருந்தாள். பரணில் அவன் நடத்தி மூடிய நிறுவனத்தின் கணிப்பொறிகள் அடைந்து கிடந்தன. அதனருகில் அவள் அளித்த டப்பாவை வைத்திருந்தான். அதை எடுத்துப் பார்த்தான். உள்ளே அரிசிப்பொரி அரை டப்பா அளவிற்கு இருந்தது. உள்ளங்கையில் அள்ளி எடுத்து வாயில் நிரப்பிக் கொண்டான். இரண்டு கவளம் தின்ற பின்னர் வாசலில் வந்து அமர்ந்துகொண்டான். கழட்டிப் போட்ட ஷூவில் ஆங்காங்கு மேல்பட்டை உறிந்திருந்தது. பொரியை மென்றபடியே ஷூவைத் திரும்ப எடுத்து பாலிஷ் போட்டபடி அமர்ந்தி்ருந்தான். மேலே இருந்த அட்டைப் பெட்டிகளைப் பார்த்தபடி தன்னை மறந்து பாலீஷ் போடுவதில் லயித்திருந்தான்..

போன் ஒலித்ததில் மீண்டு வந்தான். செந்தில்குமரனின் அழைப்பு. நிலம், சாகுபடி என்றெல்லாம் பேசிவிட்டு விஷயத்திற்கு வந்தான்

“டேய்.. இந்தவாட்டியாவது பூஜைக்கு வறியா.. பெரியாத்தா இங்க ஏங்கிகிட்டு கெடக்கு..”

“இந்த மாசம்தான் வேலை ரொம்ப அதிகம்டா.. கண்டிப்பா அடுத்தவாட்டி வறேன்னு சொல்லு”

“பங்குனியில கேட்டப்ப இயர் எண்டுன்னு சொன்ன.. சரின்னு ஆவணியில வந்தா இப்ப என்ன காரணம் சொல்லுவ..”

“செப்டம்பர் மாசமும் அக்கவுண்ட் க்ளோஸிங்தான்.. உனக்குத் தெரியாதா.. டேக்ஸ் கட்டனும்..”

மறுமுனை அமைதியாக இருந்தது

“டேய்.. இவன் ஊர்லதான இருக்கான். அதனால் இவனுக்கு ஒண்ணுந் தெரியாதுன்னு நினைக்கிறியா.. கண்டவனையெல்லாம் கூடப்படிச்சவன்னு நம்பிகிட்டு எல்லாத்தையும் சொல்லிகிட்டு இருக்க… அவன் உளறாம இருப்பானா.. உனக்குக் கடன் கொடுத்தவனோட ஆத்தாக்காரி இங்க உம்பேரேயே கெடுத்துகிட்டு கெடக்கா.. கம்பெனிய மூடிட்டு இப்ப டெம்பரவரியா சிசிடிவி போடற கம்பெனில வேலை பார்க்கிற.. அதுலயும் மாசக்கடைசிக்கு கடன் வாங்கி ஓட்டறேன்னு..”

“அது அவன் எனக்கு கொடுக்க வேண்டிய பழைய பாக்கி.. அவளுக்கு என்னத்த தெரியும்?” என்றான் மெதுவாக..

“நான் உனக்குப் பங்காளிதான்; பகையாளி இல்ல.. கிளம்பி வந்து பூஜை போட்டுட்டு போ.. அப்புறம் பாரு எல்லாம் சரியாகிடும். சரியா வராட்டிக் கேளு..”

“எல்லாம் சரியானதுக்குப் பொறவு வறேன்..”

“டேய்.. நம்ம சாமியே பஞ்சத்துல ஊரு மாறி வந்து கஷ்டப்பட்ட ஜனத்தால வைக்கப்பட்டது தானடா.. அதுக்கு எதுவும் புதுசு இல்ல.. வந்து சேரு”

பெரியாத்தா அவனை மடியில் போட்டுக் கொண்டு அந்தக் கதையைச் சொல்லியிருக்கிறது.

காவிரியின் கடைசிக் கிளையாறும் முத்துப்பேட்டையில் கடலில் கடக்க, அதற்குத் தெற்குப் பக்கம் இருந்த நிலமெல்லாம் வானம் பார்த்த பூமியாக ஆனது. அந்த ஆண்டுச் சுழற்சியில் வந்த பிங்களத்தில் மழை நின்றது. பின் துந்துபி ஆண்டு வரை மழைப் பொழிவு இல்லை. பஞ்சத்தில் பயிர் போக, மரநாய், பூனை, சாரைப்பாம்பு எனத் தின்னத் துவங்கி ஊரில் இறுதியாக எஞ்சியிருந்த கடைசி எலியும் தீர்ந்து போன சமயத்தில் ஊரைவிட்டு மொத்தமாக கிளம்பி வடக்குத்திசை பார்த்து நடந்தார்கள். விதைநெல்லை சமைத்து கட்டுச் சோறாக்கிக் கொண்டனர். பத்துக் கல் தூரம் போனதும்தான் அதைப் பிரித்து தின்ன வேண்டும் என சொல்லி வைத்துக் கொண்டனர். ஆனால், ஊர் எல்லையைத் தொடும் முன்னரே ஒருத்தி அதைப் பிரித்து ஒரு கவளம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். அதைப் பார்த்த அத்தைக்காரி முகத்தைக் கோணிக் கொண்டு, “எனக்குந்தான் ஒரு மகளிருக்கா. ஆனா, இவ மகளை மாதிரி அலையறவள் இல்லை. மேலக்காட்டுக்காரியோட ரத்தம் ஓடறதாலதான் இவ கட்டுப்பாடு இல்லாம அலையறா”ன்னு சொன்னதும் அம்மாக்காரிக்குப் பொறுக்கவில்லை. தன் கணவனின் முன்னால் போய் நின்று, “இப்படி என்னைப் பார்த்து எத்திச் சிரிக்கிற வாயத் தைக்கிற துப்பு இல்லாத உன்னைய கட்டிகிட்டு வந்தேன். வந்தவளுக்குப் பொறந்த ஊரும் போச்சு.. இருந்த மானமும் போச்சு” எனக் கரைந்தாள். “உனக்கு விரிச்சதுக்கு தெருவுல விரிச்சிருந்தா இப்ப வயித்துக்குச் சோறாவது எஞ்சியிருக்கும்”னு கத்தினாள். அவளை அடக்கத் துப்பில்லாத அவனோ தனது மகள் பக்கம் திரும்பி’ஏட்டித் தட்டுவாணிச் சிறுக்கி’ எனக் கத்தி அவள் முடியைப் பிடித்து உலுக்கி மொத்த விரலையும் அவள் வாய்க்குள் விட்டு சோற்றை வெளியே எடுத்ததான். கக்கிய சோற்றை அள்ளி அவள் மீதே வீசி எறிந்தான். அவமானமாகிப் போன அந்தப் பெண்ணுக்கு வெறி வந்தது. கடகடவென குதித்து ஓடி தூரத்தில் உயர்ந்து நின்ற பனை மரத்தின் மீது விறுவிறுவென ஏறியது. உச்சியிலிருந்து குதித்து மாண்டது. மாரிலடித்துக் கொண்டு அப்பனும் அம்மாவும் அங்கேயே விழுந்தனர். ஊர்மக்கள் அந்தப் பனையின் அடியில் மூன்று கல்லை வைத்துக் கும்பிட்டுக் கிளம்பினர். அப்படி அப்படியே வாரக்கணக்காக நடந்து வந்தவர்களை பூம்புகார் தாண்டி இருந்த கிராமத்துப் பண்ணையார்கள் தங்கள் இடத்தில் கூலியாகச் சேர்த்துக் கொண்டனர். அவர்கள் அத்தனை ஆண்டு கழிந்து அதன் பின்னர்தான் தினம் ஒருவேளை அரிசிச் சோறு உண்ணத் துவங்கினர். அடுத்து வந்த அட்சய வருடம் வளத்தைக் கொட்டியது. அவ்வருடம் தைப்பொங்கலில் பானை பொங்கி கிழக்காக வழிந்தது. அனைவரும் குதூகலித்தனர். மறுநாள் கனு வைத்த போது கன்னி ஒருத்தி அருள் வந்து துள்ளி ஆடினாள். பனை மரத்தைச் சுற்றி ஓடினாள். அது அந்தப் பனை மரத்தில் மாண்ட பெண்தான் எனத் தெரிந்து கொண்ட மக்கள் அங்கு சென்று பார்க்கச் சொல்லி சிலரை அனுப்பினர். அவர்கள் வந்து பார்த்த போது வைத்துப் போன கற்கள் எல்லாம் அப்படியே இருந்தன. அந்த இடத்தில் ஊருணி உருவாகியிருந்தது. வேறு மக்கள் அங்கிருந்தனர். 

இவர்கள் கிளம்பிப் போன தருணத்தில் இவர்களுக்கும் தெற்கிலிருந்து கிளம்பி அங்குப் பஞ்சம் பிழைக்க வந்த அந்த மக்கள் அங்கு தங்கி வசிக்கத் துவங்கியிருந்தனர். மூன்று மாதம் முன்பு வந்த ஒரு புயலில் சுற்றியிருந்த அனைத்தும் அடித்துக் கொண்டும் போனாலும் அந்தப் பனை மட்டும் அப்படியே நிற்பதாகக் கூறினர். சூறைக் காற்றில் கூட ஆடாமல் நிற்பதையும், அருகில் சோறு பொங்கும் நேரத்தில் மட்டும் அது தலையை ஆட்டுவதையும் அவர்கள் கண்டிருந்தனர். அந்தப் பக்கமாக கடந்து போனவர்கள் கனவில் கன்னிப் பெண் ஒருத்தி வந்து வயிற்றில் அடித்துக் கொண்டு அழுவதாகவும் கூறினர். அங்குப் புதிதாக ஊருணி எழுந்திருப்பதால் அது பிசாசு இல்லை என்று நம்பியவர்கள் அங்கு விளக்கு ஏற்றி வைக்கத் துவங்கினர். ஆனாலும் அச்சத்தால் அனைவரும் அந்தப் பக்கம் போகாமல் சுற்றிக் கொண்டு போகத் துவங்கியிருந்தனர். வந்தவர்கள் இதைக் கேட்டு மாரிலறைந்து கொண்டனர். தனது கண்ணீர் கொண்டு அவளை நனைத்தனர். நன்னீரும் பன்னீரும் இளநீரும் கொண்டு அவளை ஆற்றுப் படுத்தினர். அங்கேயே கறியும் சோறும் சமைத்து அவளுக்குப் படையலிட்டனர். பின் அங்கு வந்த அடுத்த தலைமுறையினர் சுதையால் உருவம் செய்து வைத்தனர். இப்போது கற்சிலையாக இருக்கிறது. அருகே உருவம் இல்லாமல் இருவர் இன்னும் கற்களாகவே நிற்கின்றனர்..

கதிர்வேலன் போனை இன்னமும் காதில் வைத்துக்கொண்டிருந்தான். 

“கதை எல்லாருக்கும்தான் இருக்கு. ஊரு மொத்தம் கஷ்டப்படறப்போ விழுவுற எதுவுமே சாமியாகிடும். ஆனா, ஒத்தையில கஷ்டப்பட்டு விழுவுறான் பாரு, அவன் ஊருமுன்னால எப்பவுமே தோத்தவனாத்தான் நிப்பான்.. அவன் சாமியாக முடியாது. ஊருக்கு அவன் கோமாளிதான்..”

“டேய்.. நீ வராம பூஜையும் போட முடியாது. பங்காளிங்க ஒரு வாட்டி பிரிஞ்சா பிரிஞ்சதுதான்.. அப்புறம் சேர்த்து போடறது மொத்தமா நடக்காது. அது பெரியாத்தா கண்ணு முன்னால் நடக்க வேணாம்.. அது காலம் முடிஞ்சப்புறம் என்ன வேணாலும் பண்ணிக்க.. இப்ப அது கண்ணு முன்னால பொண்டாட்டி புள்ளக் குட்டிங்களோட வந்து நில்லு வா..”

“அதெல்லாம் நூறு வயசுக்கு இருக்கும்.. இன்னொரு கால் வருது… நான் வைக்கிறேன்..”

கதிர்வேலன் கைபேசியை வைத்துவிட்டு உள்ளே சென்றான். டப்பாவைத் திறந்து இன்னொரு கவளம் பொரியை அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். மீண்டும் ஷூ பாலீஷை எடுத்துப் போடத் துவங்கினான்.

*******

“இந்த இடத்தோட ஓனர் இதை எங்களுக்கு வாடகைக்கு விடும்போது வேண்டி கேட்டுகிட்டதாலதான் இவங்களை வேலைக்கு எடுத்துக்கிட்டோம். நீங்க இங்க உங்க சர்வீஸ் சென்டரும் பிரெளசிங் சென்டரும் வச்சிருந்தீங்க.. அப்ப வந்த சென்னை வெள்ளத்துல தண்ணி உள்ள வந்து மொத்தமும் வீணாப் போச்சுன்னு சொன்னாரு.. உங்களுக்கு வேற ஒரு நல்ல வேலை கிடைக்கும்வரை இவங்களை வேலைக்கு வச்சுக்கலாம்னுதான் பார்க்கிறேன். ஆனால், பேரண்ட்ஸ் கம்ப்ளைண்ட் பண்றாங்க.. பேரண்ட்ஸ் கம்பளைண்ட் பண்ணினா அப்புறம் நாங்களும் க்ளோஸ் பண்ணிட்டுப் போக வேண்டியதுதான்.. அதனாலதான் வரவேண்டாம்னு சொல்லிட்டோம்..” என்றார் தாளாளர்

“பேரண்ட்ஸ்தான் ஜுரத்தோட குழந்தைகளைக் கொண்டு வந்து விட்டுட்டுப் போயிடறாங்களாமே.. நீங்கதான் எல்லார் முன்னாடியும் கேட்கச் சொல்லிருக்கீங்க.. அதனாலதான கேட்டிருக்கா..”

“எல்லாம் அப்படித்தான நடக்கும்.. நாமதான் அதை கவனிச்சு சரியா கேட்கனும். அவங்க அப்படி இல்லை. சரின்னா சரிங்கிறாங்க இல்லைன்னா இல்லைங்கிறாங்க.. இவங்களைச் சமாளிக்க இன்னும் கொஞ்சம் சூட்டிகை வேணும் சார்.. தேஜா மேடம்க்கு அது இல்லைன்னுதான் டெர்மினேட் பண்ண வேண்டியதயிடுச்சி..”

கதிர்வேலன் சற்று நிதானித்து, “ இப்ப டெம்பரரியா ஒரு சிசிடிவி கம்பெனில சேர்ந்திருக்கேன். ஆர்டர் கிடைத்தால் அதுக்கேத்தா மாதிரி கொஞ்சமா சம்பளம் வருது. நேத்துகூட ஒரு இன்டெர்வியூ போயிருக்கேன். இன்னும் ஒரு வாரத்துல ஆஃபர் வந்துடும்னு தோணுது. ஒரு மாசம் அவ வேலையில இருந்தால் அப்புறம் சமாளிச்சுக்குவோம். அதனால லாஸ்ட் சான்ஸா பாருங்களேன்..”

தாளாளர் சாய்ந்து உட்கார்ந்தார். “இன்னொரு காரணம் இருக்கு” என்றார். கதிர்வேலனின் முகபாவனை அவன் அதை எதிர்பார்த்திருந்ததைப் போல இருந்தது.

“அவங்களுக்கு வேற ஒரு பிரச்சனையும் இருக்கு சார். மனநல பாதிப்புன்னு சொன்னா நீங்க கோபிச்சுக்கக் கூடாது. சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்றாங்க. போன மாசம் ஒருநாள் முழுக்க’அச்சச்சோ’ன்னே சொல்லிகிட்டு இருந்திருக்காங்க. இப்ப ரெண்டு நாள் முன்னாடி கூட’ஸோ ஸ்வீட்’னு நாள் பூராவுமே சொல்லிகிட்டு இருந்திருக்காங்க.. மத்த ஸ்டாஃப்லாம் ரொம்ப மிரள்றாங்க.. ஒரு டயப்பருக்கு மேல தரமாட்டேன்னு ஆஃபீஸ்ல சொன்னதுக்குப் போய் பாத்ரூம்ல கதவைச் சாத்திகிட்டு யூஸ்டு டயப்பர் எல்லாத்தையும் சோப்பு போட்டு ஊற வச்சு தோய்ச்சு காயப்போட்டிருக்காங்க.. அவங்ககிட்ட பேசவே சிலர் பயப்படறாங்க.. என்னால இவ்ளோதான் முடியும்.. வேலையோ பணமோ ஏதும் தரமுடியாது. வேற ஹெல்ப் ஏதாவது தேவைன்னா சொல்லுங்க.. நம்ம ஃப்ரெண்டு சைக்யாஸ்டிரிஸ்ட் இருக்காரு. ஃபீஸ் கம்மியா போட்டுக்க சொல்றேன்..”

கதிர்வேலன் தலையை கீழே தொங்கப்போட்டு முன்னும் பின்னும் அசைத்தான். எழுந்தான்.. வெளியே சென்றவன் திரும்ப வந்தான்..

“எங்கிட்ட ஆஃபீஸ்ல யூஸ் பண்ணின கம்ப்யூட்டர்ஸ் இருக்கு.. தண்ணி போனதெல்லாம் சரி பண்ணியாச்சு.. செகண்ட்ஹாண்ட்ல தேவைப்பட்டா சொல்லுங்க.. ஒண்ணு பத்தாயிரம்னு போட்டுத் தரேன். கொஞ்சநாள் ஓட்டனுமே.. அதுக்கு ஹெல்ப்பா இருக்கும்”

“நாங்க இங்க வந்தப்போ ஓனரும் கேட்டாரு. நாங்க செகண்டஸ் வாங்குறதில்லை.. வாங்கினாலும் மூவாயிரத்துக்கு மேல ஒத்துக்க மாட்டாங்க..”

கதிர்வேலன் வெறுமையாகச் சிரித்தான்.. “இப்ப நான் கையில பத்து பழைய டப்பாவை வச்சுக்கிட்டு நிக்கிறேன்.. மூழ்கினது நான்தானே.. அதனால நீங்க சொல்றது ரேட்டுனு ஆயிடுது. எதுக்கும் நான் சொன்ன ரேட்டுக்கே வேற யாராச்சும் கேட்டாலும் கொஞ்சம் பாருங்க.. “- சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

வீட்டில் தேஜா சோறும் ரசமும் வைத்திருந்தாள். எடுத்துப் பறிமாறினாள். 

“என்ன சொன்னாரு?” எனக் கேட்டாள்.

“வேற பாத்துக்க வேண்டியதுதான்”

“அச்சச்சோ” என்றாள்

தொடர்ந்து, “பசங்களுக்கு ஐநூறு ரூபா தரணும்னு கேட்டாங்க. ஸ்கூல்ல வேன் வச்சு மகாபலிபுரம் கூட்டிட்டுப் போறாங்களாம்.. சாயங்காலம் வந்தவுடனே கேப்பாங்க”

‘இப்ப இல்ல.. அடுத்தவாட்டி போயிக்கலாம்னு சொல்லு”

“ஸ்கூல்ல எல்லாரும் போறாங்க.. நாம மட்டும் போகலேயேன்னு அவங்க ஏமாந்து போயிற மாட்டாங்களா.. ஒரு ஐநூறு கூட பொரட்ட முடியாதா..?”

“ஏதாவது ஆர்டர் வந்தாதான கேட்கலாம்.. இப்ப எப்படி கேக்குறது? மகாபலிபுரம் அங்கயேதான இருக்கப் போவுது.. இன்னொரு நாள் போகலாம்.. இப்ப பேசாம ஏதும் கேட்காம சோறு போடு..”

“உங்ககிட்டப் பேசாம யாருகிட்ட பேசறது.. நானும் வேற யாருகிட்ட கேட்கிறது.. ரோட்டுல போறவன்ட்டயா ஐநூறு கேட்க முடியும்? “

கதிர்வேலன் விருட்டென எழுந்தான். காலை உயர்த்தி தட்டை மிதித்தான்..

“தேவ்டியா முண்ட… ரோட்ல போய் விரிடி.. யாரு வேணாம்னா..? இங்க எல்லாம் மொத்தமா முழுகிப் போய்க் கெடக்கு.. இப்ப என்னடி எளவு சுற்றுலா மயிரு..?”

அவள் அதிர்ச்சியாகப் பார்த்தாள்..

“மொத்தமா முழுகிடுச்சா.. அச்சச்சோ “ என்றாள்

கதிர்வேலனின் கையிலும் காலிலும் உணவுத்துளிகள் அப்படியே இருந்தன. கொஞ்சம் சுவற்றில் தெறித்திருந்தன. கை, கால்களைக் கழுவிக்கொண்டு வந்து வாசலில் உட்கார்ந்தான். கைகளில் நடுக்கம் இன்னமும் இருந்தது. திரும்பிப் பார்த்தான். உள்ளே அவள் இன்னமும் அதே இடத்தில் கல்போல உட்கார்ந்திருந்தாள்.

இவனும் சிறிது நேரம் அவ்வாறே உட்கார்ந்திருந்தான். பிறகு கைபேசியை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைத்தான். அந்தப் பக்கம் எடுக்கவில்லை. அதே எண்ணிடம் வாட்ஸப் வழியாக ஐநூறு ரூபாய் கடனாக அனுப்பக் கேட்டான். கால்மணி நேரம் சென்ற பின்னர், தருவதாக பதில் வந்தது. வந்துவிட்டதாக செய்தியும் வந்தது

எழுந்து உள்ளே வந்து தட்டை எடுத்துக் கழுவி வைத்தான். தட்டு உட்பக்கமாக நசுங்கியிருந்தது. தட்டி நிமிர்த்தினான். அனைத்தையும் எடுத்து வைத்தான். இடத்தைக் கழுவினான். அவளை அழைத்து கூடத்தில் அமர வைத்து, “பணம் வந்துடுச்சி.. பசங்களுக்குக் கொடு” என்றான்

அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் கண்ணில் நீர் திரண்டிருந்தது.. அது அவள் முகத்தை மறைத்தது. வெறும் ஒளி மட்டுமே தெரிந்தது. அவள் அவன் கண்ணில் முத்தமிட்டாள். பின் எழுந்து சென்று கதவைத் தாழிட்டு வந்தாள். அவனை அணைத்துக் கொண்டாள். 

தான் மொத்தமாக உள்ளே மூழ்கிச் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தான். ‘மொத்தமா மூழ்கிடுச்சா.. அச்சச்சோ’ என்று ஒரு குரல் அவனுக்குக் கேட்டது.

*******

kaliprasadh@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button