கவிதைகள்
Trending

கவிதைகள் – கதிர்பாரதி

1) அன்பின் ஒருவழிப் பாதை

1.  உன்னிடம்
திரும்பிக்கொண்டிருக்கிறேன்.
உன் மணற்கடிகை தீர்ந்துவிடாமல்
திருப்பிவைக்கும் வேலை
எனது.
உன்னைக் காதலிப்பதைவிட
இது
சுவாரஸ்யமாக இருக்கிறது.

2.  நிழல் நகர்கிறது
காற்று வீசுகிறது
கிளை அசைகிறது
பூ உதிர்கிறது.
அதனால் என்ன
தாமதமாகவே வா
ஒன்றும்
கெட்டுப்போய்விடவில்லை.

3. எனது தூரத்தை
அழைத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.
உன் அண்மையை
கூட்டிக்கொண்டு வா.
இரண்டையும் ஆசுவாசப்படுத்துவதே
நம் சந்திப்பின் திட்டம்.

4. என்னிடம்
ஒரு தொடுவான் விளிம்பு உண்டு
என்றுமே
தொட்டுவிட முடியாதபடி.
பட்டத்தில் தொற்றிக்கொண்டு
அலைக்கழிகிறது
வால்.

5. பூனையின்
பிஞ்சுப் பாத நகங்கள்போல்
கூராக வெளிவருகிறது
தனிமை.
அது
இதயத்துக்குள் இறங்குவது
சரிதான்.

6. ஒரு கரட்டின்
உச்சிக்கு ஏறிய கரட்டோணான்
தலையுயர்த்திப் பார்க்கிறது
சுற்றியும்.
பிறகு
அந்த அன்பின் ஒருவழிப் பாதைக்குள்
பாய்கிறது தலைக்கீழாக.

7.  வானத்தில்
ஒரே ஒரு பறவை பறக்கிறது
வானத்தை
தன் இணையாக நினைத்துக்கொண்டு.

8. உனக்கும் எனக்கும்
இடையில் ஓடும் கானலை
ரத்தம்போல குடிக்கிறது
வேட்டை விலங்கு.
பார்த்துக்கொண்டே இரேன்
அது
காதலில் வாய் துடைத்துக்கொள்ளும்.

*************************

2) ஈசல்பூச்சிக்கு அம்மா அப்பா உண்டு

1. கண்ணாடியில் தெரியும் ரத்தத்தில்
ஈரம் இல்லை
கண்ணீரில் உப்பும் இல்லை.

2. பூமியோடு சேர்ந்த சக்கரம்
தானும் சுற்றுகிறது
தனக்குள்ளும் சுற்றுகிறது.
சேர்க்கை அப்படி.

3. ஈசல் பூச்சிக்கு
வானம் பூமி உண்டு
அம்மா அப்பாவும் உண்டு.
அதனால்
பூமியில் உட்கார்ந்து
வானத்தில் பறக்கிறது.

4. ‘ஒரே ஒரு நாள்
நானாய் இரு’ என்று கேட்டார்.
‘முடியாது’ என்றேன்.
கடவுள்
கடவுளாக இருக்கும் கதை
இது.

5. காற்று
இதோ இங்கிருந்தது
அதோ அங்கிருந்தது
இதோ… அதோ …
சரியாகச் சொல் ‘எங்கிருந்தது?’
‘காற்றில் இருந்தன
அதோ… இதோ… எல்லாம்.’

6. நாற்காலி
முன்பு மரமாக இருந்தது
முன்பு கிளையாக பூவாக இருந்தது
ஆம்
விதையாக இருந்தது
நீ
அதில் அமரும் வண்ணம்.

7. குழந்தை முன் தோன்றிய கடவுள்
‘வரம் கேள்…’ என்றார்.
‘ஏன்?’
‘இல்லையேல்
அவருக்குக் கொடுக்கத் தெரியாது.’

8. வீடு திரும்பிய அப்பாவின் கைப்பற்றும்
மகன்/ மகள்
வீட்டை ஒப்படைக்கிறான்/ள்.
ஒழுங்காகப்
பெற்றுக்கொள்ளவும்
உடைக்காமல் இருக்கவும்.

9. தனக்குள் சுற்றிக்கொண்டே
சூரியனை நகர்த்துகிறது
கடிகாரம்.
அதைக் கையில் கட்டிக்கொண்டிருக்கிறாய்
நீ.
நிலவிடம் கொஞ்ச நேரம்
ஆசுவாசமாகப் பேசு.

10. வற்றாத குளம்
வற்றிய குளத்திடம் சொன்னது…
‘நான் வற்றிப்போகப் போகிறேன்.’
அதற்குள் குதித்த தவளையே
மகிழ்ந்திரு.
நீ குதித்தது அதற்காகவே.

*************************

3) கானல் குமிழ் பறவை

1. தயவுசெய்து
உன்னிடம் இருந்து
என்னைக் காப்பாற்று.

2. பிளந்துவரும் சிசு
தாயை
ரத்தச் சகதியாக்கிற்று என்பீர்களா?

3. சாக்கடை நிலவொளிக்கு
பன்றிக்குட்டி மீது
வாஞ்சை பிறக்கிறது.

4. ஒரே பாதையில்
எதிரெதிர் சந்திக்கும் பாதங்கள் நடப்பது
வெவ்வேறு பாதைகளில்.

5. அனைவரும் காத்திருக்கிறோம்
அவரவர் அற்புதத்துக்கு.
அதன்பிறகு அது அற்புதமில்லை.

6. ஓநாய்
முயலைவிட சாது
முயலும் முயலைவிட சாது
அப்படி ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

7. ஒரு தெரு
தான் முடியும்வரை
அதே தெருவாய் இருப்பதில்லை.
மேடு பள்ளங்கள்
அதை ஏமாற்றிவிடுகின்றன.

8. ஒரு பூ
எல்லா நேரமும் பூ இல்லை.
பூநாகம்
பூவிதழாகப் படமெடுக்கும்.

9. நெடுஞ்சாலை மீது மொய்க்கும் வெய்யில்
குறுக்கே பறக்கும் கானல் குமிழ்.
அதை
பறவை என்றழைக்க வெறிகொள்ளும்
மனம்.

10. ஓடுமீன்
உறுமீன்
ஒற்றைக்கால்.

*************************

4) புள்ளிவிவரம்

1. நேற்றைய ஒற்றையடிப் பாதை.
தனித்தப் பொடிநடையில்
முதன்முதலாகப் பார்த்தேன்
எனை.
அட
இதுதானா நான்.

2. ஒன்றுமில்லையை
ஒன்றும் செய்யாதே.
அதற்குள் இருப்பது
ஒன்று, இரண்டு அல்ல
ஜாக்கிரதை.

3. நீ
இந்த வாசலில் வரப்போவதில்லை
தெரியும்.
உனை அல்ல
உன் வாசல் பார்க்கவே வந்தேன்
உட்கார்ந்திருக்கிறேன்.

4. மோதித் திரும்பிவந்த பந்துக்கு
சுவர்மீது
பிணக்கும் அல்ல
இணக்கமும் அல்ல.
மோதுவது
பந்தின் இயல்பு,
திருப்பி அனுப்புவது
சுவரின் இயல்பு.

5.  பூஜ்ஜியத்தில் இருந்து
ஏறுவதாக நினைக்கும் எண்கள்,
உண்மையில் பூஜ்ஜியத்தை
இழக்கின்றன.
வேறு எங்கேயும் சந்திப்பதில்லை.
இறங்கிவந்தால் அடைவதும்
முன்பு
ஏறிப்போன பூஜ்ஜியம் அல்ல.

6. ஊஞ்சல் பற்றியிருக்கும்
புள்ளி
ஆடாமல் ஆடுகிறது
அசையாமல் அசைகிறது
தனக்குள்.

7. புள்ளி
கிடைமட்டக் கோடு
சக்கரம்
பூமி உருண்டை
சூர்ய நீள்வட்டப் பாதை
பால்வெளிக் கோணம்
கருந்துளைத் தோற்றம்
பிரபஞ்ச ஆசை
கருந்துளைத் தோற்றம்
பால்வெளிக் கோணம்
சூர்ய நீள்வட்டப் பாதை
பூமி உருண்டை
சக்கரம்
கிடைமட்டக் கோடு
புள்ளி.

8. ஒரு பறவை
ஆகாயத்தில் பறக்கிறதா
தனக்குள் பறக்கிறதா.
இதையெல்லாம் யோசிப்பதில்லை
பறக்கிறது கூடுநோக்கி.

9. கத்தி கூர்மைமீது
ஊரும் எறும்பு.
கூர்மை மீதே ஊரும் அளவுக்கு
எதை நோக்கி ஊர்கிறது
எறும்பு.

10. நீர்ப்பூச்சிகள் உருவாக்கும்
வளையத்தில்
நீர் பயணிக்கிறது
பூச்சியின் அனுபவமாக.

*************************

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button