1.கொடியரல்ல அவர்
*
பின்னலிட்ட சடையென
பிணைந்து கிடக்கையில்
துவாரம் புகும் நூலென
காற்றின் குளிர்மையை
உயிர் உணரத் துவங்க
பசலை பூக்கும் எனதுடல்
வெப்பத்தினால் வதங்கும்
அந்திப் பூவிதழ்களாக
அடைந்திடும் மாற்றம்
அதற்குள் கொடியோனென
சுடுச்சொல் விழுங்கும்முன்
ஊரார்க்கு உணர்த்திடு நெஞ்சே
மரம் விலக்கும் இலையல்ல
மறைந்து தாங்கும் வேர்களவன்.
*
2.நெஞ்சேடு உரைத்தல்
*
பட்டதும் பற்றிக்கொள்ளும்
நாயுருவிச் செடியின் விதைகளென
கண் தொட மனம் ஒட்டியவள்
கண்டும் காணாமலும்
இருப்பதேன் நெஞ்சே.
உண்டான காமமும்
உடனிருக்கும் நாணமும்
எனை விட்டு விலகாதிருக்க
ஏது செய்வேன் நெஞ்சே.
இயல்பான வாழ்வில் நகர
இடர் ஒன்றை தந்து
குணமாக்கும் மருந்தைக் கண்டடையாது
வலியை வளரப்பதேன் நெஞ்சே.
என்னுள்ளே இருப்பவளை
எதன் பொருட்டு வெளியில் தேடுகிறேன்
உள்ளிருப்பதை உணர்த்திடேன் நெஞ்சே
உயிர் பற்றி மலர்ந்திடுவேன்.
*
3. சூர்ப்பனகை
*
வண்டுகள் வந்தேமாறும்
பொய் பூ.
காண்போரை ஏக்கப் பெருமூச்சில்
கரைந்திடச் செய்யும் மெய் மலர்
சூர்ப்பனகை.
மனம் திரண்ட பிரிய சொட்டு
உடலுள் விரவி விக்கித்திட
அவா கொண்டாள்.
தன்மேல் ஏற்றப்பட்ட பிம்பம்
பட்டை தீட்டப்பட்ட வாளாக உருகொண்டு
அறுத்தெறியப்பட்ட அழகின் மூக்கு
வனமெங்கும் இலையாக சிதறிக் கிடந்தது.
பாதம் தொட்டிடாது
கவனமாக நடந்துகொண்டிருந்தார்கள்
அவதாரச் சகோதரர்கள்.