
ஆறு இலக்க எண்
உன் முகநூல் கணக்கு
எதுவென்று தேடியதில்லை.
இன்ஸ்டாவில் உன் ஐடி என்ன?
மொபைல் எண்ணே இல்லை
என்றான பின்
வாட்ஸ் அப்புக்கு வாய்ப்பே இல்லை.
ட்விட்டரிலோ எனக்கு கணக்கில்லை.
டெலிகிராமில் இருப்பாயோ?
ஆடி மகிழ்ந்து விடியோ போடும்
தளங்களில் நீ இருக்கமாட்டாய்
என்பது என் மூடநம்பிக்கையாகவும்
இருக்கலாம்.
தபால்காரராவது பரவாயில்லை
ஒரு வாரம் கழித்து வந்தார்.
அனுப்பிய மின்னஞ்சலோ
திரும்புகிறது சில நொடிகளில்.
ஆறு இலக்க எண்ணையும்
கடைசியாய் கேட்ட கேள்விக்கு
நீ அளித்த இருண்மையான பதிலையும் மட்டும்
இருபதாண்டுகள் கடந்தும்
அழிக்க மறுக்கிறது மூளை.
************
குவளைக் காணிக்கை
மாநகர சுழற்சியின்
பேரிரைச்சலினூடே
பிளாஸ்டிக் குவளையில்
குலுங்கி அமர்கிறது
சில்லறைக் காசுகளின்
சலக் சலக் ஓசை.
உச்சந்தலையை
உற்றுப் பார்ப்பதைத் தவிர
வேறு வேலை இல்லையென
ஊர்ந்து செல்கிறது
மதிய வெயில்.
வயிற்றின் ஓலத்தை
குவளையின் ஓசையால் மௌனமாக்க
ஜென் சாமியின் நிதானத்துடன்
கைத்தடியைப் பின் தொடர்கிறான்
பார்வையற்ற யாசகன்.
முகங்கள் கோணலாகி
விலகி ஓடுகின்றன
பெருந்தொற்று கவலைக் கால்கள்.
கையிலிருந்த கடைசி நாணயங்களையும்
குவளையுள் காணிக்கையாக்க
சற்றே புன்னகைத்து மறைகின்றன
என் முகத்தில் அவன் கண்களும்
அவன் கண்களில் என் முகமும்.
************