கவிதைகள்-ஸ்டாலின் சரவணன்

1.
குயில் பாடிக்கொண்டே இருக்கிறது
யாரும் கவனிக்காத போதும்
இன்பத்தை இசைக்கலாம்
துன்பத்தைக் கூறலாம்.
அது ஒரு நாடோடியின் பாடல் போல
அதனை நீயும் உணர
வழிதவறிய பயணங்கள் வாய்க்க வேண்டும்
மலைகள் பள்ளத்தாக்குகள் பீடபூமிகள்
கடல்கள் தாண்டி
ஒரு குயில் கொண்டு வந்திருப்பது
இன்னொரு குயிலின் காதலை.
உன் கண்களுக்கு
அதன் கொழுத்த பாகம்தான் தட்டுப்படுகிறது
என்ன செய்ய
உன் நாக்கைத் தாண்டி
உனக்கு வாழ்வில்லை.
***********
2.
ஒரே வேலையைச் சுருதிப் பிசகாமல் செய்பவர்கள்
கடவுளின் தூதுவர்கள்
பல்பொருள் அங்காடி கண்ணாடிக் கதவை
ஒவ்வொருவருக்கும் மிகுந்த பணிவோடு
திறந்து மூடுகிறார்.
பணிவைக் கண்கள் வரை பழக்கியிருக்கிறார்
அவரின் உலகம் கதவுக்கு
அப்பால் நிற்கிறது
திறந்து மூடி
விளையாட்டுக் காட்டுவதை
இந்த வாழ்வு ரசிக்கிறது
குரூரமென்பது தூரத்தில் இல்லை
உன் நிழலை நீயே குனிந்து பாரும்.
***********
3.
சிறுபுள்ளியாய் இருப்பது
இலகுவானது
இருளோ வெளிச்சமோ
ஒரு மூலையில் இருந்து
வானத்தை ரசிக்கலாம்
மல்லாந்த புள்ளியென.
வானமோ முதியவளின்
கண்கொண்டு சுருக்கிப்
பார்க்கிறது
களுக்கென சிரிப்பொலி கசிகிறது
சூரியகாந்தி பூவின் மகரந்த துகள்களில்.
***********