கவிதைகள்
Trending

கவிதைகள்- ஸ்டாலின் சரவணன்

ஸ்டாலின் சரவணன்

மனநலமிக்கவர்கள் மாற்று பாதையில் பயணிக்கவும்

நகரத்து  இதயப்பகுதியின்
உயர்ந்த அடுக்ககம்
போதும்…. குனியுங்கள் கழுத்து வலிக்கப்போகுது.
குளிர்மிகு அறையில்

டோக்கன் எண்ணை தொலைத்துவிட்டு

தலைகவிழ்ந்து அமர்ந்தபடி
“சிறந்த ஆலோசகரே!
எனக்கு எதுவுமில்லை ” என்று
உரக்கக் கத்த வேண்டும் போலிருக்கிறது
அவரோ அதற்கும் சேர்த்து
மாத்திரையின் வீரியத்தை அதிகப்படுத்திவிடுவார்.
பார்த்த இடத்தையே பார்க்கிறேன்
தனக்குத்  தானே பேசிக்கொள்கிறேன்
சிரித்துக்கொள்கிறேன்
என் மேசை முன்  பரப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் இவை .
பார்க்கும் பெண்களையெல்லாம் புணர நினைப்பவர்கள்
போகும் வருமிடமெல்லாம் பேசியே தாலியறுப்பவர்கள்
எந்திரம் போல் அளவாய் காரியமாய் சிரிப்பவர்கள்
இவர்கள் வாழும் அதே ஊரில்தான் என் மீது இந்த வழக்கு.
எனக்கு நானே போதுமானதாக  இருக்கிறேன்
சிக்கனத்தைத்தானே இந்த அரசாங்கமும் வலியுறுத்துகிறது!?

ஏன் இந்த ஊர் பொறுப்பானவர்களையே அதிகம் சோதிக்கின்றது !?

மேலும்

என்னை யாரேனும் எங்கேனும் கண்டால்

என்னிடம் தெரிவிக்க இயலுமா!?

தொடர்பு எண் என் முதுகில் இருக்கிறது

இப்போது புரிகிறதா

நான் ஏன் பின்னோக்கியே நடக்கிறேன் என்று!?

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button