
1) ஸ்திரீயின் நிழல்
இரண்டாயிரம் வருடங்களாய்
ஆகாயத்திலிருந்தபடி நான் புகைத்துக்கொண்டிருந்த
சிகரெட்டின் நுனி கங்கு
ஒரு ஸ்திரீயின் நிழல்பட்டு
அணைந்து போனது.
அன்றுதான் இருளின் நீளம்
ஒவ்வொரு மனிதர்களையும்
மிச்சம் வைக்காமல் மிடறியது.
***************
2) இப்படியாக
இறுதியில் இப்படியாக
தொடங்குகிறது
சாத்தான்களின் புனிதப்பயணம்
பைபிளின் பக்கங்களை புரட்டிக்கொண்டு
கேதவீட்டின் கொல்லைப்புறத்தே
திரண்ட கண்ணத்து மயிர்களோடு
புணர்விரும்பி ஒருவன்
நா தொட்டு புனித பக்கங்களை
திருப்பிக்கொண்டிருக்கிறான்
கைம்மையானவள் சிரிக்கிறாள்
பிணம் எழுந்து
சவப்பெட்டியை திறந்து
அமைதியாக படுத்துக்கொண்டது
அந்த சாத்தான்கள் பைபிளை தீயிலிட்டது
மீண்டும் மீண்டும்
பைபிள்களை அச்சடித்தது அக்கினி
புணர்விரும்பியை காணவில்லை
கைம்மையானவள் அழுகிறாள்
சவப்பெட்டிக்குள் லேசாக
சிரிப்பு சத்தம் கேட்டது.
***************
3) அணங்கு
அணங்கின் அங்கச்சூடு
நழுவி வெளிக்கிடும் அந்நேரத்தில் புணர்ந்து கொண்டிருந்த நாய்களை நோக்கி கல்லெறிந்தேன்
குற்ற உணர்ச்சி புரிந்த மனதை
தூக்கிக்கொண்டு பெரு வெற்றிடத்தில்
ஒருவன் என்னைநோக்கி ஓடி வந்தான்
நிமிர்ந்திருந்த அவனுடைய வால்
நீண்ட சிசினத்தை ஒத்திருந்தமையால்
அதனை அறுத்தெறிந்தேன்
சூடு முழுவதுமாக
வெளியேறியிருந்தது
நாய்களை கூட்டி வந்து ரொட்டிகளை
திங்கச் செய்தேன்
அவைகளின் நாவிலிருந்து சொட்டிய
எச்சிலை குடித்துவிட்டு
வேறொரு அணங்கை நோக்கினேன்
***************