கவிதைகள்
Trending

கவிதைகள்- சௌவி

உதிரும் இலை

மேய்ந்துவிட்டு வந்து
வெயிலுக்கு இளைப்பாறிக்கொண்டிருக்கும்
மாடுகளின் மேல்
உதிர்ந்துகொண்டிருக்கும்
வேப்ப மர இலைகளில்
ஒரு இலையாக நானிருக்கிறேன்
மாடுகள் எழுந்துபோகையில்
சில இலைகள்
மாட்டின் முதுகிலமர்ந்து
மாடுகளோடு போய்விட்டன
அந்தியில் கோலம்போடுவதற்காக
வாசல் கூட்டுகையில்
சில இலைகள் குப்பைகளாகி
குப்பை மேட்டுக்குப் போய்விட்டன
அடித்த காற்றோடு காதலுற்றுக்
கைகோர்த்து
நடந்துபோய்விட்டன சில இலைகள்
கொசுவராமலிருக்கப்
புகைபோடவேண்டுமென
எடுத்துக்கொண்டு செல்லப்பட்டன
சில இலைகள்
அத்தனைக்குப் பிறகும்
நான் உதிர்ந்துகொண்டிருக்கிறேன்
மரத்துக்கும் தரைக்கும்
இடைப்பட்ட வெளியில்
ஒரு இலையென

**********

தேடல்

நான் மலையிலிருந்து அருவியாய்க்
குதித்துக்கொண்டிருக்கிறேன்
நீங்கள் என்னை
என் வீடிருக்கும் தெருவில்
தேடிக்கொண்டிருக்கிறீர்கள்
ஞாயிறு விடுமுறையில்
மைதானத்துக்குப் போயிருக்கிறானென்று
அம்மா சொல்லக்கேட்டு
நீங்கள் மைதானத்துக்கு வந்திருக்கிறீர்கள்
நான் ஒரு மேகமாகி
வானத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறேன்
கச்சேரி கேட்கப் போயிருப்பேனென்று
ஊர்த்திடலுக்கு வருகிறீர்கள்
நான் வேப்பமரத்துக்குயிலாக மாறி
இலைகளுக்குள் உட்கார்ந்து
கூவிக்கொண்டிருக்கிறேன்
வெயிலுக்கு
வாய்க்காலில் குளிக்கப் போயிருப்பேனென
வெயிலில் நடந்து
வாய்க்காலுக்கு வருகிறீர்கள்
நான் மலைகளுக்கு அந்தப்புறம் சென்று
மழையாகப் பெய்துகொண்டிருக்கிறேன்
அந்தியின் அழகை ரசிக்கப் போயிருப்பேனென
காட்டுமேட்டுக்கு
வாகனமெடுத்து வருகிறீர்கள்
அந்தியின் வர்ணங்களை
அருகே சென்று ரசிக்க
நான் பறவையாகிப் பறந்துகொண்டிருக்கிறேன்
இரவில் வீட்டில்தானிருப்பேனென
வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு
ஏமாற்றத்தோடு திரும்பிப்போகிறீர்கள்
நான் ஒரு நட்சத்திரமாக
வானத்திலிருந்து
உங்களைப் பார்த்துச்
சிரித்துக் கொண்டிருக்கிறேன்
உங்களால்
என்னைக் கண்டுபிடிக்க முடியாது

**********

பிரிவுத்துயர்

நீளும் நாட்கள்
பிரிவின் பெருந்துயரைக்
கழுத்தின் மேலிட்டு இறுக்குகின்றன
தொண்டைக்குள் வலிக்கிறது
அருகிலிருந்த ஊரெல்லாம்
போக்குவரத்தற்றுப்போனதால்
செல்லவே முடியாத
தூரத்தில் நின்று கொண்டு
கைநீட்டி அழைக்கின்றன
கூட்டிப்போய்ச்சேர்க்கவும்
திரும்ப அழைத்து வரவுமென
உதவிகள் செய்துகொண்டிருந்த சாலைகள்
கையறுநிலையில்
வெறுப்போடு படுத்திருக்கின்றன
காற்றிலேறி வந்து
காது தீண்டும் குரல்களால்
ஏங்கும் மனதைச்
சமாதானப்படுத்தமுடியவில்லை
அப்பாவைப் பார்க்காத மகள்
தலையணையில் கண்ணீர்வடிக்கிறாள
மனதைப் பிசையும் துயரில்
மகளைப் பார்க்கமுடியாத அப்பா
எல்லோரும் உறங்கியபிறகு
யாருக்கும் தெரியாமல்
குளியலறைக் கதவைச் சாத்திக்கொண்டு
அழுதுகொள்கிறார்
துயரங்களைச் சுமந்துகொண்டிருக்கும் காற்று
நீள்சாலையில்
கண்ணீரின் ஈரமேந்தி
அலைந்துகொண்டிருக்கிறது
அங்குமிங்கும்

**********

இயல்பு

வானத்தில் வெவ்வேறு வடிவங்களில்
உட்கார்ந்திருக்கும் மேகங்கள்
யார் யாரையோ ஞாபகப்படுத்துகின்றன
ஒருவரைக் காட்டும் மேகம்
சட்டென தன் உருவத்தை மாற்றி
வேறொருவரை ஞாபகப்படுத்துகிறது
ஒரு காட்சியைச் சுட்டும் மேகம்
அக்காட்சிக்குஊடாக நடந்துபோகையி்ல்
வேறொரு காட்சிக்குள் தள்ளிவிடுகிறது
பார்க்கப் பார்க்கப்
பல முகங்களாகவும்
பல காட்சிகளாகவும்
மாறிக்கொண்டேயிருக்கும் மேகம்
எப்போதும்
மேகமாகவே இருக்கிறது

**********

இசையின் மௌனம்

என் பியானோவின்
ஒரு கருப்புக் கட்டையையும்
ஒரு வெள்ளைக் கட்டையையும்
திருடிக்கொண்டுபோனவன்
அதற்கு பதிலாக பியானாவையே
திருடிக்கொண்டு போயிருக்கலாம்
மீதமிருக்கும் கட்டைகளை
அழுத்துகையில்
அழுதுகொண்டே அவை
அவன் பெயரை உச்சரிக்கின்றன
இரண்டு கட்டைகளுக்காக
பியானோவில் மற்ற கட்டைகள்
அழுதுகொண்டிருக்கின்றன
திருடிப்போகப்பட்ட கட்டைகள்
அழுவது
எங்கோ தூரத்திலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறது
பியானோவுக்கும்
திருடுபோன கட்டைகளுக்குமிடையில்
மௌனமாகப் படுத்திருக்கிறது
பேசமுடியாத இசை

**********

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button