
கனவு
தக்காளியையும்
வெங்காயத்தையும்
மாற்றி மாற்றிப் பயிரிடும்
வியாபாரச் சூதில்
எப்போதும் தோற்று நிற்கும்
அந்த உழவனுக்கு
தன் மூன்று ஏக்கராவில்
தென்னை நட்டு தேப்பாக்கி
பதறாமக் கொள்ளாம
விசுக்கென இருக்கனும்
என்றொரு கனவு இருந்தது.
வண்ணானுக்கு வாக்கப்பட்டு
வெடிய வெடிய வெள்ளாவிப்
பானைக்குப் பக்கத்திலிருந்தாளாமான்னு
காட்டுக்காரனுக்கு வாக்கப்பட்ட கதி
எம் புள்ளைக்கு வேண்டாம் தோப்புக்காரனுக்கே
மகளைக் கொடுக்கனும்
என்றொரு கனவு
அவனது மனைவிக்கு இருந்தது.
ஒத்தைக்கொரு மகளை
அலைபேசியில் பழகிய ஒருத்தன்
பக்கத்து மாநிலத்திற்கு
இழுத்துப் போன
பஞ்சாயத்திற்கு
காட்டை அடமானம் வைத்துச் செலவழிக்கும் வரை
அந்தக் கனவு
உயிரோடுதான் இருந்தது.
**********
உள்ளூரின் மும்தாஜ்
பின்னப் பொறகு
விற்க வேணும்னா
விலை குறையும்
நாளைக்கு பங்கு பாகம்
பிரிக்கையில் பிரச்சனை ஆகும் சின்னஞ்சிறுசுக
கால நேரம் பார்க்காமல்
வரப் போற இடம்..
இன்னும் எத்தனையோ
எடுத்துச் சொல்லியும்
ஒற்றைக் காலில் நின்று
பிடிவாதமாய்
பாட்டியைத்
தன் விவசாயத் தோட்டத்தில்
புதைத்த
தாத்தாவுக்கு
சத்தியமாய்த் தெரியாது
தாஜ்மஹால் குறித்து.
**********
பால் மரம்
கன்று ஈன்ற மாட்டின்
மடிக் காம்பு வீக்கத்திற்காக
இரண்டு நாளாய்
சாப்பிடாமல் அழும் மனைவியைத்
திட்டிக் குமித்து விட்டு
பால் மடியில் மருந்து கட்ட
சோற்றுக் கற்றாழையுடன்
வருவதாகச் சொல்லிப் புறப்பட்டவர்
நஞ்சுக் கொடியைப்
பால் மரத்தில்தானா
கட்டினேன் என
இன்னொரு முறை சென்று
பார்த்து உறுதி செய்யும்
இந்த உழவனுக்கு
மானே தேனே என்றெல்லாம்
மனைவியைக் கொஞ்சத் தெரியாது.
**********
ஒரு தானியம் போல் இல்லை
இன்னொரு தானியம்
தேங்காய் வியாபாரி
களத்தில் காய் எடுத்து
தரம் பிரிக்கையில்
வந்த மனத்தாங்கலில்
“பெரிய காயத் தூக்கி
சின்னக் காய்ல போட்றியே
அடுக்குமா இது…
உலகத்தில்
ஒரே மாதிரி
இரண்டு தேங்காய்
என் கண்ணில் காட்டினால்
என் தோப்பையே
உனக்கு எழுதித் தருகிறேன்”
என்ற மீசைத் தாத்தா
தோப்பை எழுதி வைத்திருந்தார்
மனைவி அல்லாத
வேறு ஒருத்திக்கு.
**********