
“ஏய்…சொந்தரம்…எலேய்…சொந்தரம்”
கேணி மதிலில் மார்பு அழுந்த கவிழ்ந்தபடி நீரின் அசைவுக்கு ஏற்றாற் போல் தலையை ஆட்டிக்கொண்டிருந்த சுந்தரம், முருகுவின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். அப்படி என்ன தான் இருக்கோ தெரியாது, சுந்தரத்துக்கு அந்த கொல்லையும் கேணியும்தான் போக்கிடம்.
அவன் சோட்டு பயல்கள் எல்லாம் நாககுளம் வண்ணாங்குட்டை செம்மங்குளம் என்று குளம் குட்டைன்னு சுற்றி திரிந்தால் இவனோ கொல்லையை விட்டு நீங்காமல் அங்கேயே கிடையா கிடப்பான்.
டிசம்பர் பூ செடிகள், கிளைவிட்ட பப்பாளி மரம், செம்பருத்தி மரம், மல்லிக்கொடி, புளியமரம், தென்னைகள், காய்க்காத மாமரம் ஒன்று, நெடிய வளர்ந்த நெட்லிங்கமரங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக எப்பவுமே அலுக்காத அந்த கெணத்தடியும் மழை காலங்களில் கைகளை விட்டு மொள்ளும் படியாக நீர் மேலேறி ததும்பும் அந்த கேணியும்தான், அதற்குக்காரணம்.
உச்சி வேளையில் கேணியின் அடிமண் பார்ப்பது அவனுக்கு அலாதி பிரியம். காலியான ஷாம்பு பாக்கெட்டில் ஜல்லியை இட்டு நிரப்பி கேணியில் விடுவான் சூரிய வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டே அது வெட்டி வெட்டி உள்ளே இறங்கும் அசைவை பார்த்து கொண்டேயிருப்பான். அடிமண்ணை அது தொடும் ஓசைகூட அவனுக்கு கேட்கும் மிகத்துல்லியமாக!
தப்தப் னு கிணத்து வாளி நீரில் விழுகிற சத்தமும், கிர்கிர் என்று சுழலும் சகடை விசிறியடிக்கும் நீர் திவலையும் அவனை பரவசம் கொள்ளச்செய்யும். சர சரவென இறைத்தும், ஒரே சாய்வில் இறைத்த நீரை மீண்டும் கொட்டியும் மகிழ்ச்சிகொள்வான். ‘த்த். த்து…டம்’ தண்ணீர் நுரைத்து எழுப்பும் சத்ததில் வசந்தம் திட்டுவது கூட அவனுக்கு கேட்காது.
“டேய் கேணிய குழப்பாத, வந்தேன்னு வையி முதுகு விரிஞ்சிடும் பாரு…” அம்மா சொல்வது அவன் காதிலும் விழுந்ததில்லை, அவன் முதுகும் விரிஞ்சதில்லை.
கேணியின் உட்படிகள் ஒவ்வொருன்றுக்கும் உள்ள இடைவெளி அவனைக் குழப்பமடையச்செய்யும். அவ்வப்போது அப்பயி சொல்லும் கிணத்து பூதக்கதைகளை நினைத்துக்கொள்வான்.
“பெரிய உருவமும், நீண்ட தடித்த கால்களையும் உடைய கிணத்து பூதங்கள் ஆழத்திலிருந்து மேலே ஏறிவரத்தான் தூர தூரமா படி இருக்குது. மூணு படியையும் சேர்த்துகூட சில பெரியய்ய பூதங்களும் தாண்டி வரும். பொங்க முடிஞ்சி வீட்டு தெய்வத்துக்கு படைப்போம்ல அது கிணத்து பூதங்களுக்கும் சேர்த்துத்தான். பாத்துக்க. படைச்ச சோறு சப்புன்னு இருக்கும். ருசிக்காது ஏன்னு தெரியுமா? கிணத்து பூதங்கள் சாரை உறிஞ்சிபோட்டு சக்கையை தான் நமக்கு விடும். அதுகளுக்கு வருஷ கணக்கா கொள்ள பசி”
ம்..
“சாக்கிரதயா இருந்துக்க. ராத்திரி கேணி பக்கம் போனா, பசியோடு இருக்கிற பூதம் ஒன்ன அப்படியே லபக்குன்னு பிடிச்சிட்டு போயி அவுக் அவுக்கெனெ மென்னு முழுங்கிடும்”
சூத்தா மட்டையை மறைக்காமல் பாதி கோமணம் கட்டி கிணத்தடிய அளந்தவாரே மேலுக்கு ஊத்திக்கொண்டே நடந்தபடி முருகு குளிக்கிறத பார்ப்பதற்கு சிரிப்பு முட்டும். சோப்பைக்குழைத்து வழுக்கைத் தலையில தேய்த்து விட்டுக்கொண்டு கால்களை நீட்டி உட்கார்ந்து குளிக்கும் அப்பாவை பார்க்கும் போதெல்லாம், மாரி அத்தை தங்கைச்சி பாப்பாவை குளிக்க ஊத்தினது தான் சுந்தரத்திற்கு ஞாபகம் வந்தது.
மாரி அத்தை மேலும் கீழும் குலுக்கி குழந்தையை குளிக்க ஊத்துவதைப்பார்த்தால் ஈரக்குலை கலங்கிவிடும் பெத்தவளுக்கு. அப்படி அலங்கமலங்க அடித்து விடுவாள். முழங்கால் வரையில் புடவையை ஏத்திவிட்டுக்கொண்டு காலை நீட்டியபடி உட்கார்ந்து, மாரி அத்தை பிள்ளையை வாங்கும் போது அவ்வளவு கம்பீரமாக இருக்கும். கால்களில் மல்லாந்து கிடக்கும் பிள்ளை மேல் சன்னமாக தண்ணீர் விட விட குழந்தை லேசாக முனகத்துவங்கும். பிள்ளையின் நாசியை நீள வாக்கில் நீவி விட்டு நாசியில் வாய்வைத்து லேசாக ஊதி, வாயில் ஆட்காட்டி விரலை கொக்கிப்போல மடித்து கோழை எல்லாம் வழித்து எடுத்து வெளியே போடுவாள். கை கால்களை மிதமான வெந்நீரால் நீவி விடுவா. குழந்தையின் தலையை உருண்ட பிடிப்பது போல அமுக்கி அமுக்கி உரு கொடுப்பா. மார பிதுக்கி பால் எடுத்துவிட்டு, சூடான தண்ணியை மார்ல சடிர் சடிர்னு அடித்து ஊத்த குழந்தை உச்ச குரலில் வீறிடும்.
கெண்டைசதைகளால் குழந்தையை கவ்விப்பிடித்து முகத்துக்கு மஞ்ச அரைத்து தேய்த்து விடுப்போம், சில பிள்ளைங்க தூங்கவே செய்துவிடும். நமட்டு சிரிப்பு சிரிச்சு கிட்டே குழந்தையை குப்புற போட்டு பின்மண்டையில தண்ணி விடுவா.
மைபூசி, திருட்தி பொட்டிட்டு குழந்தையை பாயில் கிடத்தினது தான் மிச்சம், குழந்தை அயர்ந்து தூங்கும், பசிக்கு கூட சிணுங்காது. தாயே உசுப்பி முலை ஊட்டினால் தான் உண்டு.
முருகு குளித்த ஈரம் கிணத்தடி முழுவதும் நிரம்பி இருக்கும். அரிதாக சில வேளைகளில் அவரே சுந்தரத்தை குளிக்க ஊத்துவார். அவனும் அவருடன் ஜோடி போட்டு நடப்பான். குளிப்பான். முண்டகட்டையாக சிமெண்ட் தரையில் தண்ணிய ஊத்தி விட்டு நீச்சல் அடிப்பான். குளித்தல் என்பது ஒரு சுகம். ஒரு விளையாட்டு. ஒரு பரவசம். நிம்மதி.
“என்ன பன்றான் இவன் இவ்ளோ நேரம், ஏலேய் சொந்தரம்…டேய்…. இவன…தம்பி…” மீண்டும் முருகுவின் குரல்.
“ஏய். தம்பி அப்பா கூப்புடறது காதுல விழுதா இல்லையா? என்னன்னு கேளு போயி”, துணிய கசக்கிகிட்டே வசந்தம் சொன்னாள்.
“ஒருநாள் இல்ல ஒருநாள் கேணிக்குள்ள இருக்கிற பூதம் ஒன்ன உள்ள அப்படியே இழுத்துக்க போகுது பாரேன்” அம்மா பயமுறுத்துவது கூட அவனது காதில் வாங்கிக்கொள்ளாமல்,
“த்தோ… வத்துட்டேன் ….போவ்”, திண்ணைக்கு ஓடினான் சுந்தரம்.
“பொறுமையா வாடா, கீழ கீழ விளுந்து வைக்காத”னு அப்பயி வைதாள் செல்லமாக. தாய் தகப்பனை விட்டுட்டு பெரியப்பன் வீட்ல வளர்கிற பிள்ளையென்று அவன் மேல கொஞ்சம் கூடுதலான அக்கரை அவளுக்கு.
“சுந்தரம் பொறந்ததிலிருந்தே இங்க தான் வளர்றான். பொறந்தபோ ஓயாம சதா அழுதுகிட்டே இருந்தவன், வசந்தம் பக்கத்தில் போட்டவுடனே சட்டுனு அழுகிறத நிறுத்திப்பிட்டு விளையாட அரம்பிச்சிட்டான். சரி நல்லதா போச்சுன்னு அவன் அம்மாகாரியும் அப்படியே உட்டுட்டா. எல்லாம் வளந்தா சரியாகி விடும்னு தொலையட்டும்ன்னு விட்டா அது இன்னும் அதிகமால போச்சிது”, வீட்டிற்கு வருவோர் போவோரிடம் ஒரே அலைவரிசையில் அப்பயி அதே கதையை சலிக்காமல் சொல்லிக்கொண்டே இருப்பாள்.
“வெவரமெல்லாம் நல்லா புரியுது, இருந்தும் அவனுக்கு முருகு தான் அவன் அப்பா, வசந்தம் தான் அம்மா….ம்ம்ம்ம்..என்ன செய்றது”, அலுத்துக்கொள்வாள்.
“ஏன்ப்பா. எதுக்கு கூப்ட்ட”, என்றான் சுந்தரம்.
“எதுக்கு கூப்டீங்கனு சொல்லனும்”, அப்பயி திருத்தினாள்.
“டேய் தம்பி, எயித்த வூட்டு சாமிநாது கிட்டே, சாயங்காலம் தர்றதா சொல்லி நான் கேட்டேன்னு ஒரு இறநூறு ரூபா வாங்கிட்டு வாடா”, திண்ணையில் வெத்து உடம்போடு வெத்திலை மென்றபடியே முருகு சுந்தரத்திடம் இழைந்தார்.
கைமாத்துக்கு சொற்ப காசைக் கேட்டு எதிர் வீட்டுக்காரரிடம் மகனை அனுப்பும் அப்பாவின் முகத்தை உற்று நோக்கினான் சுந்தரம். முருகுவிற்கு ஏறிய பெரிய நெற்றி, கறுத்து ஒளிரும் கண்கள். மெல்லிய மீசை, நீண்ட பெரிய மூக்கு. செவத்த உடல். கட்டையான உருவம். வெத்து உடம்பில் வெளுத்த திருநீறு பட்டைகள், இடுப்பில் நாலு முழம் வேட்டி, சில்லறைகளை வைக்க சிங்கப்பூர் பச்சை பெல்ட். பார்ப்பதற்கு நல்ல கம்பீரமான ஆள்தான்.
முருகு வயதில் சம்பாரித்ததும் செலவழித்ததும் சரியாக இருந்திருக்கு. அவர் கைகளில் அச்சாரம் இருந்தபோது ஒரு ஆட்டம்தான். வர்றவன், போறவன், அவன், இவன், அவன் ஊட்டு புள்ளைக, இவன் ஊட்டு புள்ளைக என்று வீட்டில் எப்பொழுதும் ஒரே கூட்டமா கசா முசாவென தான் இருக்கும். பிள்ளைகள் அடித்துக்கொண்டு அலறும் சத்தமும், பெண்கள் கொல்லை நடையில ஊர்கதைகள் பேசிக்கொண்டே பாத்திரம் கழுவுகிற சத்தமும், திண்ணையில் அப்பயியோட மொவளாசியும், தீடிர் விருந்தினருக்கு விருந்தோம்ப, அடுப்பாங்கரை நீர்தொட்டியில் கெண்டையும், விராலும் சதா சலப் சலப் னு சலம்பிக்கொண்டே இருக்கும் சத்தமும் அந்த வீட்டை உயிர்புடன் வைத்திருந்த காலங்கள் எல்லாம் இப்போது நினைவில் மட்டுமே இருக்கிறது.
ஊர் பேர் தெரியாத முகமறியா ஆட்களை மதிய உணவுக்கு முருகுவின் வீட்டிற்கு வருவதும், திண்ணையில் தூங்குவதும், வந்த சுவடு தெரியாம புறப்படுறதும் வழக்கமான நிகழ்வாய் இருந்தது அந்த வீட்டில். நிலைமை இப்போது அப்படியில்லை. விஞ்சி நிற்பது இந்த வீடும், கடையும் தான். கடையை கூட வாங்குன கடனுக்கு சரிகட்ட சேட்டு ஒருத்தன் நிதம் கடைக்கு வந்து வந்து போறான். அவனுக்கு பதில் சொல்ல முடியாம நெதம் முக்கிக்கொண்டே இருக்கிறார் முருகு.
சுந்தரம் சாமிநாதன் வீட்டிற்கு போக தயங்கித்தயங்கி நின்றான். தயக்கத்திற்கு இரண்டு காரணங்கள். இருந்தன அவனிடம். காரணம் ஒன்று. சாமிநாதன் சுந்தரத்தின் வகுப்பு தோழனின் அப்பா. கொஞ்சம் கவுரவ பிரச்சனை.
காரணம் இரண்டு. இந்த அப்பாவிற்கு இதே வேலை அவன்கிட்ட போய் கேளு, இவன்கிட்ட போய் கேளுன்னு “ச்சை”.
எதிர் வீட்டிற்கு போக அடி அடியாக எடுத்து வைத்தவன் மனதில் தெரு திடீரென நீண்டு விட்டது போல தோன்றிற்று. சாமிநாதன் வீட்டில் கொதிக்கும் மீன் குழம்பு வாடை வாசல் வரை வந்து அறைந்தது. சின்ன தட்டு ஒன்றில் சில வறுத்த மீன் துண்டுகளை வைத்து மொறு மொறுவென மென்று கொண்டு நின்றான் அவன் தோழன். சுந்தரத்தை பார்த்தவுடனே ஏனோ அவன் கொல்லை பக்கம் ஓடினான், தட்டை தூக்கிக்கொண்டே.
“வாடா தம்பி, வா, சாப்பிடுறியா வா”, அன்போடு அழைத்தார் சாமிநாதன்.
“இல்லைங்க, நான் அப்புறமா….” இழுத்தான்.
முருகு சொல்லிவிட்டது நன்றாக நினைவிலிருந்தும் விட்டு விட்டு, கேட்டான். “அப்பா, ஒரு இருநூறு ரூபாய் காசு கேட்டாங்க, சாயந்திரம் தரனு சொன்னாங்க. கொஞ்சம் அவசியம்னு சொல்ல சொன்னாங்க”, ஒவ்வொரு எழுத்தா கூட்டி பெருக்கி நின்றான்.
அவனுக்கு ஏனோ சாமிநாதன் வீட்டில் இப்படி காசு கேட்டு நிற்பது ஒரு மாதிரியாக இருந்தது.
“அட…ஏங்…டா…டெய்…நீங்க…” வேக வேகமாய் தலையை ஆட்டினார் சாமிநாதன். அது அவன் தோழன் கொல்லைக்கு ஓடியதை விட வேகமாக இருந்தது.
“தம்பி…அப்பா கிட்ட சொல்லு, இன்னைக்கு வேலைக்கு போகலயாம். இப்போ காசு இல்லைன்னு” என்றார் சாமிநாதன்.
இதைத்தான் அவர் சொல்லுவார் என்று ஏனோ முன்னரே முடிவு செய்து வைத்திருந்தான் சுந்தரம். ஆனால் முருகு தான் சாமிநாதனை நம்பினார்.
பணம் கிடைக்கவில்லை என்று அப்பாவிடம் சொன்னால் பயங்கரமாக சத்தம் போடுவார். கோபப்படுவார். அட்டதரித்திரம்னு ஏச்சு விழும் என்று பயந்து நடுங்கினான் சுந்தரம். போன வேகத்தைவிட பொறுமையா நடந்தான்.
“இல்லையாம்” திண்ணையை தாண்டி வாச கதவை துணைக்கு பிடித்துக்கொண்டே சொன்னான் சுந்தரம்.
“…..” மௌனமாக இருந்தார் முருகு.தரையை வெறித்தவாறே இருந்தார் கொஞ்ச நேரம்.
சுந்தரத்திற்கு ஒன்றும் புரியவில்லை. இல்லை என்ற சொல்லை கேட்டாலே கண்டபடி வையும் அப்பா இப்போது அமைதியாக இருப்பதைக்கண்டு மறுபடியும் அழுத்தி சொன்னான், “இல்லையாம்”.
“இருக்கிறத வாங்கிட்டு வாடா, சாயங்காலம் கொடுத்துரலாம் ரொம்ப அவசியம்”, என்றார் முருகு.
“எப்பாவ் அவங்க என்னிய ஒரு மாரிதி பாக்குறங்கப்பா. நான் போகல போ”, அடம் பிடித்தான் சுந்தரம்.
“தம்பி, என் செல்லம்ல செத்த போய்ட்டு வாடா என் தங்கம், அப்பாவுக்கு அவசிய தேவைடா”, முருகுவின் குரல் உடைந்துவிடும் போல இருந்தது.
மீண்டும் அதே நடை. அதே வசனம்.
“ப்ச்.ஐயய்ய. அதான் இல்லைனுடேன்ல டா,,, பின்ன என்ன வந்து உங்களுக்கு சும்மா சும்மா வந்து நிக்குறீங்க, எதுக்கு இப்ப காசாம் “, கேட்டுக்கொண்டே எழுந்து நடந்து கொல்லைப்புறம் மறைந்தார்.
சுந்தரம் அழுகாத குறையாக படி ஏறியபோதே தெரிந்துவிட்டதுபோலும், ஒன்றும் கேட்காமல் இருந்தார் முருகு.
மீண்டும் அதே கனத்த மௌனம். யோசனை.
“ஏன்டா தம்பி, அப்பா வீட்டுலதான இருப்பான். இன்னைக்கு லீவுதான”.
“ம். ஆமா”.
செத்த வீட்டுக்கு போய்ட்டு வந்துடுறியா:, சமிக்ஞை மொழியாடினர்.
தலையை சாய்த்து முருகுவைப் பாத்துக்கொண்டே படியிறங்கி தன் அப்பாவிடம் அதே வசனங்களை சொல்லி நடித்து காட்ட, வீடு நோக்கி நடந்தான் சுந்தரம்.
அப்பா என்ன சொல்லும்ன்னு தெரியாது. வைசாலும் வைசும். அம்மாவையும் சேர்த்தே வைசும். “நம்ம வீட்டுல எல்லா அப்பாவும் ஒரே மாதிரி இருக்காங்க…”, .பாசு தனக்குள் கேட்டுக்கொண்டான்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக தான் அப்பா எழுந்திருச்சி இருக்கும். என்ன செஞ்சிகிட்டு இருக்கோ பயந்து கொண்டே நடந்தான். எப்படியும் திட்டு வாங்க போறோம். கோவதுல ரெண்டு அடி கூட விழலாம். ஒன்னும் சொல்வதற்கில்லை. சிரித்துக்கொண்டான்.
ஒருக்களித்து சாத்திய வாசற் கதவில் கண்ணாடியை சாய்த்து வைத்து, இடுப்பு துண்டோடு முகம் நுரைக்க சோப்பு பூசி சவரம் செய்ய தயார் நிலையில் இருந்தார் சுந்தரத்தின் அப்பா குருசாமி. பக்கத்தில் இருந்த டம்பளரின் அடியில் காபி நுரை படிந்து இருந்தது.
குருசாமி முருகு மாதிரி இல்லாமல் கொஞ்சம் உயரம், கருத்த உடல், கோபம் கொப்பளிக்கும் கண்கள், பார்த்தாலே புரியும் கொஞ்சம் சீரியஸான பேர்வழி என்று.
வந்தவனின் காலைப் பார்த்தபடியே சவரகத்தியை கிருதாவிற்கு கீழே வைத்தார் அவர்.
:சித்தி…. சித்தி…”, கூப்பிட்டுக் கொண்டே அடுப்படியில் நுழைந்த சுந்தரத்தை அப்படியே ஆசையோடு அள்ளிக்கொண்டாள் முத்து .
“சாப்பிடு வா வா. ஏன் லீவு தான காலையிலே வந்து தங்கச்சி தம்பி கூட விளையாடலாம்ல. அங்கேயே இருக்கியே. இங்க வந்து கிந்துட்டு போனா தானே அதுகளுக்கு தெரியும் அண்ணன்னு. ம்ம்ம்”, முத்து சுந்தரத்தின் ஒவ்வொரு விரல்களையும் பிடித்து பிடித்து பேசினாள்.
சுந்தரத்திற்கு சவர கண்ணாடி வழியாக அப்பா அவனையே பார்ப்பது போலவே இருந்தது. ஒன்னும் பேசாமல் வெறுமுனே நின்று கொண்டிருந்தான்.
“சரி…சாப்பிட்டயா. அம்மா காலையில என்ன செஞ்சுது”
“ம்ம்….ம்ம்ம்….ம்தோச”
“அண்ணன் கடைக்கு போய்ட்டானா. அப்பயி என்ன செய்யிது”
“ம்ம்”
“என்னடா சொல்லு. ஏன் உம்முன்னு இருக்க. சொல்லு சொல்லு அம்மா ஏதும் சொல்லி அனுப்பிச்சா சுந்தரம் வந்த நோக்கத்தை புரிந்து கொண்டவள் போல பேச்சு கொடுத்தாள் அவள்.
“ம்ம்ம்ம்….அப்பா வந்துனு…..”, அவன் அரம்பிக்கும்போதே குருசாமி திரும்பி பார்த்தார். சுருக்குன்னுச்சு ஒரு நொடி.
“அப்பா இறநூறு ரூபா பணம் கேட்டிச்சு அதான்..வந்தன்”, ஒருவழியாக சொல்லி முடித்தான்.
“நினைச்சன்”, அதக்கி கொண்டே திரும்பினார், குருசாமி.
“இதே வேல மயிரு. கொடுத்து வச்சது மாதிரி நூறு குடு இறநூறு குடு னு. காலங் காத்தால. அவனவன் டீ காபிய கூட குடிக்காம ரெண்டு ரூவா காச மிச்சப்படுத்தி சூத்தெரிய வாங்குற நாலணா சம்பலத்துல குடும்பம் நடத்தினா, இவனுங்க வேற அண்ணன், தம்பி, அக்கா தங்கச்சி, சொந்தம் பந்தம்ன்னு சாவடிக்கிறானுவோ. மனுஷன் இருக்கிற இருப்புக்கு”
கொடுத்தா ஒரு பேச்சு, இல்லைனா ஒரு பேச்சு. ச….ச்சை. இது வேற பொல்லாப்பு எனக்கு. இப்போ என்ன வந்துதுன்னு பணம் கேக்குறாராம்”,
“ஏங்க, புள்ளைய ஏன் திட்றீங்க, அவனுக்கு என்ன தெரியும் உங்க கஷ்டம்லாம். ஏதோ மொடை போல உங்க அண்ணனுக்கு. இருந்தா குடுங்க, இல்லைனா இல்லைனு சொல்லி அனுப்புங்க. அதுக்கு ஏன் புள்ளைய கோவிச்சிக்கிறீங்க. பாவம்”
“அங் .. வச்சிருந்தா நீ தான் எடுத்து கொடேன்,வந்துட்டா பெரிசா பேச. போடி உள்ள. சனியனே”.
அத கொடு இத கொடுனு பெரிய தொல்லையா போச்சு. ஆத்திரத்தோடு மீசையை திருத்த முயன்றவர், மேல் உதட்டை கிழித்து கொண்டார். கொப்பளித்த ரத்தம் அவரின் கோவமான முகத்தை மேலும் சிவப்பாக மாற்றியது. அவரின் வார்த்தைகள் இன்னும் ஏரிந்தது.
“எதுக்கான்னு கேளு டா,, அப்பதான்னு சொல்லு போய்”, விரட்டிவிட்டார்.
வீட்டுக்கு வரும் வரையில், அப்பாவின் வசுவுகள் அவன் காதில் கேட்டுக்கொண்டே இருந்தன.
வீட்டைவிட்டு வரும்போ முருகுவின் இழைந்த வார்த்தைகளும் கலங்கி கலங்காதிருந்த கண்களும், அப்பாவின் வசைகளும், கத்தி கிழித்து ஒழுகிய ரத்தமும், சித்தியின் கண்ணீரும் சுந்தரத்தை என்னவோ செய்தன.
அழுகை கண்ணை முட்டியது. அழுதுவிடும் குரலில், இப்ப காசு எதுக்குனு கேட்டு கண்ணாபிண்ணானு திட்டுது, செருமிக்கொண்டே சொன்னவன் வேகமாக கிணத்தை நோக்கி அமுதபடியே ஓடினான்.
அழுது கொண்டே ஓடிவந்த புள்ளைய ஓய செய்யவும் முருகு கேட்ட காசை எடுத்துக்கொண்டும் பெரிய வீட்டிற்கு வந்துசேர்ந்தாள் முத்து.
“வாம்மா…”, வாஞ்சையா கூப்பிட்டார் முருகு.
“அவுங்க ஏதோ ரோசனையில்லாம ஏசிட்டாங்க. இந்த பய வேற அழுது கிட்டே ஓடியாந்தானா அதான் மனசு கேக்காம வந்தேன். இந்தாங்க த்தான் இத்த வச்சிகோங்க. இவ்ளோ தான் எங்கிட்ட இருந்திச்சு”, நூறு ரூபா தாளை கொடுத்தாள் முத்து.
“அட என்னமா இது. அதை உள்ளவை. காசை எடுத்து நீட்டிக்கிட்டு. தேவை இருந்தது உண்மைதான், ஆனா பணத்தை இப்பதான் நம்ம பாய் வந்து கொடுத்துட்டு போனாருமா, இப்பதிக்கு தேவைபடாது. வேணும்னா சொல்லி அனுப்புறேனே. என்ன வந்துச்சி. இப்ப வச்சிக்க. புள்ளைகளுக்கு வேண்டியத வாங்கிகொடு”,
”இல்ல த்தான்.. அது வந்து” முத்து.
“ச்சீ… கழுத… இதுக்காவா இந்த வெய்யில்ல வந்த. நல்ல புள்ளமா நீ. போ போ. ஒங்கக்கா உள்ளதா இருக்கா. போ போயி பாரு… இத போயி பெரிசா பேசிகிட்டு… போ மா”, சொல்லிக்கொண்டே முருகு சட்டையை மாட்டி கொண்டு வெளிய நடக்க ஆரம்பித்தார்.
எல்லாவற்றையும் கேணி மதிலில் கவிழ்ந்தபடியே கேட்டுக்கொண்டிருந்த பாசுவின் கண்களிலிருந்து மேலும் இரு சொட்டு கண்ணீர் கிணத்தில் விழுந்தது. கொல்லையிலிருந்து ஓடிவந்த சுந்தரம் முருகு தெருவில் நடந்து போவதையே பார்த்து கொண்டிருந்தான். காற்று சன்னமாக வீசிக்கொண்டிருந்தது.
எதற்காக இருநூறு ரூபாய் தேவைபட்டது என்றோ, முத்து கொடுத்த நூறு ரூபாய ஏன் வாங்கவில்லை என்றோ இதுவரையில் யாரிடமும் முருகு சொல்லவேயில்லை.
****