சிறுகதைகள்
Trending

கூடுதலாய் ஒரு நாப்கின் – மு.ஆனந்தன்

சிறுகதை | வாசகசாலை |

உள்ளாடையில் சொதசொதவென பரவியது பிசுபிசுப்பு. ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை எழுப்ப மனமில்லாமல் சிறிது நேரம் அமைதி காத்தது அந்தப் பிசுபிசுப்பு. அதன் காத்திருப்பின் எல்லை முடிவுக்கு வந்துவிட்டது. தனக்கு விதிக்கப்பட்ட  பணியை சிரத்தையுடன் தொடங்கியது. தோல்களுக்குள் ஊடுருவியது. திசுக்களைத் தீண்டியது.  வினை புரிந்தது. அவள் மெல்ல நெளிந்தாள்.  புரண்டு படுத்தாள். முடியவில்லை. போர்வைக்குள்ளிருந்து ஒரு கை நீண்டு வந்து  செல்போனைத் தேடித் தடவியது. விடிகாலை 4.30 மணி என அது மின்னியது. இல்லை அது பின்னிரவு என மனம் அடம் பிடித்தது.  “விடியறதுக்கு இன்னும் எவ்ளோ நேரமிருக்குது, சனியன் இந்தப் பிசுபிசுப்பு தூங்க விடாம தொந்தரவு செய்யுது” அலுத்துக்கொண்டே போர்வை தன்னை இழுத்து மூடிக்கொண்டது.  ஆனால் அவளைத் தூங்க விடவில்லை அந்தப் பிசுபிசுப்பு. போர்வையை சுருட்டி வீசியது அவளின் நெட்டி முறிப்பு. இன்றைய தினம் பேரெரிச்சலுடன் பிறந்தது. எத்தனை இரவுகளை எத்தனை விடியல்களை எரிச்சலின் புதைகுழியில்  புரட்டிப்போட்டுள்ளது  அந்தப்  பிசுபிசுப்பு. அது  பழகியதுதான் என்றாலும் ஒவ்வொரு முறையும் மகா எரிச்சலும் வெறுப்பும்  விதிக்கப்பட்டிருக்கிறது.  என்ன செய்ய?  கருக்கலின் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஐந்து மணியை கவிழ்த்துப்போட்டு  தன்னை எழுப்பிய பிசுபிசுப்பை சபிக்காமல் இருக்க முடியுமா? அவஸ்த்தையுடன் கழிப்பறைக்குப் போனாள்.  உடனே ஜட்டியை மாற்ற வேண்டும்.  சானிட்டரி நாப்கின் வைக்க வேண்டும்.  கண்கள் தூங்கிக்கொண்டிருக்க கைகள் மட்டும் அலமாரியில் நாப்கினைத் தேடின.  கிடைக்கவில்லை.  பட்டப்பகல் வெளிச்சத்திலேயே ஒளிந்து விளையாடும் செல்லக்குட்டிகள் கும்மிருட்டில் கிடைத்து விடுமா என்ன? துணிகளை கலைத்துப் போட்டுத் தேடினாள். கிடைக்கவில்லை. விளக்கை அலறவிட்டு தேடினாள். கிடைக்கவில்லை. “நாசமாப் போன நாப்கின் எங்க போய்த் தொலைஞ்சுதோ”  என்று ஜட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு கழிப்பறைக்குப் போனாள்.  அணிந்திருந்ததைக்  கழிற்றிவிட்டு வேறு அணிந்துகொண்டாள்.  அவளையே  பவ்யமாகப்  பார்த்துக்கொண்டிருந்தது கழற்றிய ஜட்டியிலிருந்த  மாதவிடாய் ரத்தம்.

ஜட்டியை மட்டும் மாற்றிவிட்டு மீண்டும் போய் படுத்துக்கொண்டாள். இந்தத் தற்காலிக ஏற்பாடு ரெண்டு மணி நேரத்திற்குத்தான் தாக்குப் பிடிக்கும். சரிதான்.  ரெண்டு மணி நேரத்தில் மீண்டும் அவளை எழுப்பியது மீண்டும் பரவிய அந்தப் பிசுபிசுப்பு.   மணி 7 இருக்கும்.   உடல் முழுவதும் அலுப்பும்  அதிருப்தியுமாக  முடிவுரை எழுதியது  அவள் உறக்கம்.  கழிப்பறைக்கு போய் வந்துவிட்டு மீண்டும் அலமாரிக்குள் தலையை விட்டுத் தேடினாள். உடனே நாப்கின் வைக்க வேண்டும். இல்லையென்றால் தொடைகளில் வழியத் தொடங்கும்.  அது அவஸ்த்தையின் உச்சத்தைத் தொடும். ஒரு துணியின் தாங்கு திறன் அவ்வளவுதான்.  தென்றலை ஆடையாக அணிய விரும்புகிற மனசுக்காரி ரத்தப் பிசுபிசுப்பை உடையாக அணிவதை எப்படிச் சகிப்பாள்? ஏழைத் தாயின் மகன் தருவதாகச் சொன்ன 15 லட்சம் போல் இந்த முறையும் நாப்கின் கிடைக்கவில்லை. ஜட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு கழிப்பறைக்குப் போனாள். அணிந்திருந்ததைக்  கழிற்றிவிட்டு மீண்டும் வேறு அணிந்துகொண்டாள்.  அவளையே  பவ்யமாகப்  பார்த்துக்கொண்டிருந்தது கழற்றிய ஜட்டியிலிருந்த  மாதவிடாய் ரத்தம்.

“அம்மா, என்னோட நாப்கின எடுத்தியா?”

“நா, எதுக்குடி எடுக்கப்போறேன், எனக்குத்தான் எப்பவோ நின்னுருச்சே”

“அப்ப யார் எடுத்திருப்பா?”

“ஆமா, இத எடுக்கத் திருடனா வரப்போறான்?”

“நீ வேற எதுக்கும்மா நொட்டு நொட்டுங்கற”

“அட, அவதிக்கு பொறந்தவளே, அவதியவதியா தேடுனா கெடக்காது, நிதானமாத் தேடிப் பாரு”

ஆனால் அவள் உடலுக்குள் எரிச்சலின் மட்டம்  பெட்ரோல் விலையைப் போல் வேகு வேகுவென உயர்ந்துகொண்டேயிருந்தது.

அம்மா எடுக்கலைன்னா யாரு எடுத்திருப்பா? ஆழ்ந்த சிந்தனையில் அகப்பட்டது அவள் மனம். அவளையும் அம்மாவையும் தவிர இந்த வீட்டில் பெண்கள் வேறு யாரும் இல்லை. அப்பாவும் இரண்டு அண்ணன்கள் மட்டும்தான். அம்மா சொல்வதும் சரிதான். அம்மாவுக்கு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னமே மாதவிடாய் நின்றுவிட்டது.  அதன் பிறகுதான் அவள் உடல் பெருத்து  மூட்டு வலி என ஒவ்வொரு பிரச்சனையாக வந்தது.  அவர்களைத் தவிர இந்த வீட்டில் இருப்பது கைரதி மட்டும்தான். அவள் ஆணுமில்லாத பெண்ணுமில்லாத  திருநங்கை. அவளுக்கு எதுக்கு நாப்கின். பக்கத்துவிட்டு மாளவிகா அடிக்கடி அவளைப் பார்க்க வருவாள்.  பூர்விகாவின் படுக்கையறைக்கு வருவது அவள் மட்டும்தான். ஒரு சமயம் அவள் எடுத்துப் போயிருப்பாளோ. ச்சேச்சே, இதையெல்லாமா எடுத்துட்டுப்போவாங்க.  புத்தி ஏன்  இப்படிப் போகுது.

“நல்லா தேடிப்பாரு”

“எல்லா இடத்திலும் தேடிட்டேன். .”

“மொதல்ல நீ கடையிலிருந்து வாங்கிட்டு வந்து வச்சியா?”

நன்றாக ஞாபகமிருக்கிறது. சென்ற வாரம்தான் அம்மாவுடன் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு மளிகைச் சாமான்கள் வாங்கப் போன போது நாப்கின் வாங்கினாள்.  எப்பவும் வாங்குகிற வெளிர் நீலக்கலர். முப்பது ரூபாய் பாக்கெட்.  அதுதான் அவளுக்கு வசதியாக இருக்கும். அதைத்தான் எப்போதும் வாங்குவாள். சென்ற வாரமும் அதைத்தான் வாங்கினாள்.  அம்மாகூட “ஏ எப்போதும் இதையே வாங்குற, விலை கூடுனத வாங்கலாமே” என்றாள்.  “இதுதான் எனக்கு கம்போர்ட்டா இருக்குமா” என்றாளே. வாங்கிக் கொண்டுவந்து அலமாரியில் பிளாஸ்டிக் கூடைக்குள் வச்சதும் ஞாபகம் இருக்கு. அப்பாவோ அண்ணன்களோ அலமாரியைத் திறந்தால் தெரியக்கூடாது என்பதற்காக உள்ளாடைகளைப் போட்டுவைக்கும்  பிளாஸ்டிக் கூடையில்தான் வைப்பாள்.  இப்போது அலமாரி மட்டுமல்ல, பீரோ, அடுக்கி வைத்திருக்கும் துணிமணிகள். அழுக்குத் துணிக்கூடை என எல்லாவற்றிலும் தேடிப் பார்த்துவிட்டாள். எங்கும் இல்லை. கண்டிப்பாக யாராவது எடுத்திருக்க வேண்டும். யாராக இருக்கும். ரத்தப்போக்கு எரிச்சலுடன்  கேள்வியின் அரிச்சலும் உச்சந்தலையில் காயும் வெயிலை உடைத்துக்கொண்டிருந்தது.

இப்போது மருத்துக்கடை திறந்திருக்காது. ஒன்பது மணியாகும். அதுவரைக்குமாவது தாக்குப்பிடிக்க வேண்டும்.  அலுவலகத்திற்கு விடுப்புச் சொல்ல வேண்டும். ஒன்பது மணிக்குமேல் கடைக்குப் போய் நாப்கின் வாங்கி வந்து அதற்குப் பிறகு புறப்பட்டு பஸ் பிடித்து எப்படி அலுவலகம்  போவது? அதுமட்டுமல்லாமல் முதல் நாள் ரத்தம் கட்டி கட்டியாக  வரும். அடிவயிற்றில் பெரும் வலியும் வாதையும் நரக வேதனைதான். சகிக்க முடியாது. எரிச்சல் எரிச்சலாக வரும்.  அவள் வேலை பார்க்கும் ஐ.டி. நிறுவனத்தின் அவளுடைய டீம் லீடரிடம் அலைபேசியில் விடுப்பு சொல்லிவிட்டாள். பி.டெக். கம்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு அந்த நிறுவனத்தில் சேர்ந்து ஆறு மாதங்கள்தான்  ஆகியுள்ளது. அதனால் இதுவரை விடுப்பு எடுத்ததில்லை. மாதவிடாய் சமயங்களிலும் சகித்துக்கொண்டு வேலைக்கு சென்றுவிடுவாள். கைப்பையில் நாப்கினையும் எடுத்துச் செல்வாள். ஆனால் இந்த நாப்கின் பிரச்சனையால் இன்று அப்படியே அப்செட் ஆகிவிட்டாள்.

———

மருந்துக்கடையில் சானிட்டரி நாப்கின் பொதியை பில் போடும் இடத்தில் கொடுத்தாள். அதனை காக்கி உறைக்குள் திணித்தாள் கடைக்காரப் பெண்.

“கவர் போட வேண்டாங்க, அப்படியே கொடுங்க” என்றாள் பூர்விகா.

பூர்விகாவை ஒரு மாதிரிப் பார்த்தாள் கடைக்காரப் பெண். இதுவரை இப்படி யாரும் சொன்னதில்லை.

“டாஸ்மாக் கடையில பாட்டில பப்ளிக்கா எடுத்துட்டுப் போறனுங்க,   காலேஜ் முன்னாடியே தைரியமா கஞ்சா விக்கறானுங்க, பான் மசலா போட்டு  கண்ட இடத்துல துப்பி வைக்கறானுங்க, எவனும் கூச்சப்படறதில்ல,  நாப்கின் நம்மோட  தேவை, அதையேன் நாம் மூடி மறைச்சு கூசிக் குறுகி எடுத்துக்கிட்டுப் போகனும்?” பொரிந்தாள்.

எதுவும் பேசாமல் அப்படியே உறைநிலையில் நின்று நாப்கினைக் கொடுத்தாள் கடைக்காரப் பெண்.

வீட்டுக்கு வந்து வேறு ஜட்டியை மாற்றிவிட்டு நாப்கின் வைத்த பிறகுதான் சற்று ஆசுவாசமாக இருந்தது. ஆனால் யோசனை மட்டும் “அடங்குன்னா நா அடங்கற ஆளா” எனச் சிலுப்பிக்கொண்டே இருந்தது.

———

எப்படிக் காணாமல் போச்சு, யார் எடுத்திருப்பார்கள். கண்டுபிடிக்காமல் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுல சிப்பு இருக்கா இல்லையா என்பதைக்கூட கண்டுபிடித்துவிடலாம் போலிருக்கு. ஆனா இதைக் கண்டுபிடிப்பது அதை விடக் கஷ்டமா இருக்கு. அவளுக்கு என்னமோ கைரதி மீதுதான் சந்தேகம். இருந்தாலும் கைரதி திருநங்கை ஆயிற்றே. திருநங்கைகள் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள், அவர்களுக்கு கர்ப்பப்பையே இருக்காது.   ஏதோ புத்தகத்தில் படித்திருக்கிறாள். கர்ப்பபையே இல்லாமல் மாதவிடாய் வருமா?. வராது.  அப்புறம் எதுக்கு நாப்கின்?. குழப்பங்களின்  சுழல் பாதைக்குள் அவளை கைப்பிடித்துக் கூட்டிச் சென்றது யோசனை.

கைரதி இந்த வீட்டுக்கு வந்து ஒரு  மாதம்தான்  ஆகிறது. அம்மாவுக்கு கால் முட்டியில் ஆப்ரேஷன் செய்த பிறகு நின்றுகொண்டு சமையல் செய்ய முடியாது.   சமையலுக்கு நல்ல ஆள் தேவைப்பட்டது. அம்மச்சியம்மாதான் பையும் பாயுமாக  கைரதியை வீட்டுக்குக் கூட்டிவந்தாள். முதலில் கைரதியைப் பார்த்த போது வீட்டில் எல்லோருக்கும் ஒரு மாதிரியாக இருந்தது.  அப்பாவும் அண்ணன்களும் முகம் சுளித்தார்கள். “அம்மச்சி, உனக்கு வேற ஆளே கெடக்கலையா?” என்றான் பெரியண்ணன். ஆண்மை திரிந்து பெண்மை கலந்த அந்த ரஸவிகாரத்தை அவனால் சகிக்க முடியவில்லை.  அதுவும் ஒரு ஆம்பளை உருவம் தலையை வகிடெடுத்துச் சீவி, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து ரெண்டு புஜத்திலும் பிரில் வைத்த ஜாக்கெட் போட்டிருப்பதைப் பார்க்கப் பார்க்க அவனுடைய ஆண்மய மனதிற்கு  குமட்டிக்கொண்டு வந்தது.  அம்மா மட்டும் ஏற்றுக்கொண்டாள். வேறு ஆள் கிடைக்கவில்லை என்றால் அம்மா தலையில்தான் பொழுது விடியும். அதனால் அம்மா எதையும் யோசிக்காமல் சம்மதித்தாள். அதுமட்டுமல்ல எப்போதும் அம்மாவில் முகத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் கருணை சொந்தமாக வீடு கட்டி குடியிருக்கும். “ரெண்டு நாள் அவ சமைக்கிறத தின்னு பாருங்க, அதுக்கு அப்புறம் வேண்டான்னா திருப்பி அனுப்பிச்சிருவோம்” என்று அம்மச்சியம்மா நிலைமையை திறம்பட கையாண்டாள்.

காலையில் இட்லிக்கு கடலைமுத்துச் சட்னி, மதியம் பருப்பரிசி சாதம் தொட்டுக்க பொன்னாங்கன்னி தொக்கு, சாயங்காலம் டீ யுடன் கடிச்சிக்க வாழைப்பூ வடை. கைரதியின் கைப் பக்குவத்தில் துள்ளிய நாக்குகள் எல்லாம் ஊரடங்கு அறிவித்தது போல் உள்ளடங்கிவிட்டன. ருசியிடம் மண்டியிட்டு  சரணடைந்தது கைரதி மீதான அந்தக் குடும்பத்தின் ஒவ்வாமை.   பின்னே, வாய்க்கு ருசியாக வக்கணையாக தின்று எவ்வளவு நாளாச்சு. கைரதி தங்குவதற்கு பொடக்காலியில் பழைய சாமான்கள் போட்டு வைத்திருந்த ஆஸ்பெட்டாஸ் சீட் வேய்ந்த சிறிய அறை ஒதுக்கப்பட்டது.   அதை அவளே சுத்தம் செய்து தரையை சாணி போட்டு மெழுகி தன்னுடன் கொண்டு வந்திருந்த பழைய பை, பாய், பெரிய கண்ணாடி, தலை வாருகிற சீப்பு, சிக்கெடுக்கிற சீப்பு, பவுடர் டப்பா, கண் மை டப்பா, ஐ ப்ரோ பென்சில், உதட்டு லிப்டிக்  என அந்தக் குட்டி அறையை கூவத்தூர் சொகுசு விடுதியாக மாற்றிக்கொண்டாள்.

கைரதி வீட்டுக்கு வந்ததலிருந்து பக்கத்து வீட்டுப் பெண்களெல்லாம் தங்களை  இளக்காரமாக பார்ப்பதாக பூர்விகாவின் மனதுக்குள் ஒரு கழுகு சொன்னது.  அதனாலேயே அவர்களை நேர் கொண்டு பார்ப்பதைத் தவிர்த்து வந்தாள்.  அண்டை வீடுகள் எத்தனை நாள்தான் ஆர்ப்பரிக்கும் ஆவலை அடக்கிவைக்கும். “சரிதான் நேர்லயே போய் பார்த்திருவோம் அந்த அரவாணிய” என பூர்விகாவின் வீட்டுக்குள் அணிவகுத்தார்கள். கைரதியின் நடையையும் உடையையும் “யக்கா, யக்கா” என நீட்டிப்பேசுகிற பேச்சையும் பார்த்துப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தார்கள்.  அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அரை மணி நேரத்தில் பூசணிக்காய் அல்வாவும் சுய்யனும்  சுட்டுக்கொண்டுவந்து “யக்கா, சாப்பிடுங்க” என அன்பாகக் கொடுத்தாள் கைரதி. ருசித்த அண்டை வீடுகள் வாயடைத்துப் போயின.  அவர்களின் இளக்காரம் மாறிவிட்டது. இப்போது பிரியாணி எப்படி வைக்கிறது, அடைக்கு எப்படி மாவு கலக்கறது என தினமும் யாரவது ஒருத்தர் கைரதியைத் தேடி வருவார்கள்.

“எப்படி இவ்வளவு ருசியா சமைக்க கத்துக்கிட்ட” என்று கேட்காத ஆளில்லை. “பள்ளபட்டியில் ஆஷான்னு ஒரு அரவாணி இருந்தாங்க.  நல்ல பேரெடுத்த சமையல்காரம்மா. பெரிய ஆளுங்க வீட்டு விஷேசங்களுக்கெல்லாம் சமைப்பாங்க. ஒரே சமயத்துல ஐயாயிரம் பேருக்குக்கூட சமைச்சுப் போடுவாங்க. பிரியாணி வச்சாங்கன்னா பத்து கிலோ மீட்டருக்கு மணக்கும். அரவாணிக பொம்பளைங்கன்னு அம்பது பேருக்கு மேல வேலை கொடுத்து வாழவச்சாங்க. அந்த அம்மாகிட்டதான் நா வேலைக்கு இருந்தேன். ஸ்வீட் மாஸ்டரா இருந்தேன். பெங்கால் ஸ்வீட்டிலிருந்து எல்லாம் போடுவேன். எங்க அரவாணி கூட்டத்திலே முதன் மொதலா மச்சு வீடு கட்டியது அந்தம்மாதான். கிரகப்பிரவேசம் நடத்தி மூனு நாளா விருந்து வச்சாங்கன்னா பாருங்களே, இப்ப அந்தம்மாவுக்கு வயசாயிடுச்சு, தொழில விட்டிருச்சு, அரவாணின்னு சொல்லி விரட்டியடிச்ச கூடப் பொறப்புக சொத்து வந்தவுடனே வந்து ஒட்டிகிட்டானுங்க. அவுனுங்க குடும்பத்துக்கும் அந்தம்மா உழைச்சுக் கொட்டுச்சு. கடைசியில சொத்தையெல்லாம் புடுங்கிட்டு நடுத்தெருவுல விட்டுட்டானுங்க” என்று பெருங்கதையாடுவாள்.

உயர்ந்த மரங்களுக்கிடையே ஊடுபயிராக அந்த வீட்டில் வாழத்தொடங்கினாள் கைரதி. சமையல் வீட்டு வேலைகளெல்லாம் முடிந்த பிறகும் சும்மா இருக்க மாட்டாள்.  அம்மாவின் முட்டிங்கால் வலிக்கு எண்ணெய் தேய்த்து நீவி விடுவாள்.  வெந்நீர் வைத்து ஒத்தடம் கொடுப்பாள்.   அம்மா அவளை தன் மரத்தண்டின் ஒரு கிளையாகவே நடத்தினாள். “அவளுக்கு அதிகம் இடம் கொடுக்காதே” என பூர்விகாதான் அடிக்கடிச் சொல்லுவாள்.  அம்மாவெனும் பெரு மரத்தின் பரிவுக்கும் நிழலுக்கும் யாரும் தடை போடமுடியாது.

———

காலையிலிருந்து நான்கு ஜட்டிகளை மாற்றிவிட்டாள். அவைகளைத் துவைத்துக் காயப்போட வேண்டும். சாயங்காலம் மாற்றிக்கொள்ள வேறு இல்லை.   ஆனால் என்னா அலுப்பு, என்னா அசதி. எப்படிச் செய்வது?. வழக்கம் போல் அம்மா, “அம்மா” அவதாரமாக வந்தாள். அம்மா அவதாரத்தை விட வேறு உன்னதமான கடவுள் அவதாரம் இருக்கா என்ன?. “நான் தொவச்சு காயப்போடறேன், நீ போயி ரெஸ்ட் எடு”  என்று  சொன்னாள். அது பூர்விகாவிற்கு அவ்வளவு ஆறுதலாக  இருந்தது. அந்த ஆறுதலில் மனம் தக்கையென மிதந்தது.

துவைத்த உள்ளாடைகளை துணி காயப்போடும் கயிற்றின் மேகோட்டு மூலையில்  வேப்ப மர நிழல் கவிழ்ந்த பகுதியில் காய வைத்தாள் அம்மா.

“நல்ல வெயில் படற இடத்துல காயப்போடும்மா” என்றாள் பூர்விகா

“தீட்டுத் துணியெல்லாம் வெயில்ல காயப்போடக்கூடாது, நெழல்லதான் காயப்போடனும், அதுதான் சாங்கியம்”

“உன் சாங்கியத்துக்கு ஜி.எஸ்.டி. வரி போட, இந்தத் துணிகளத்தான் நல்ல வெயில்ல காயப்போடனும், அப்பத்தான் கிருமிகயில்லாம சுகாதாரமா இருக்கும்”

“வெயில்ல போட்டா துணி மொட மொடன்னு ஆயிரும்டி”

“இல்லைன்னா மட்டும் ஆகாதா?”

“மகளே, உங்கூட பேசி ஜெயிக்க முடியுமா? போ, போயி கைரதிகிட்ட மதியத்துக்கு உலை வக்கச்சொல்லு ” பேச்சை மடைமாற்றிவிட்டாள் அம்மா.

———

பொடக்காலியில் கைரதியைத் தேடிப்போனாள். கைரதியின் அந்த சொகுசு விடுதி உள்ளே தாழிடப்பட்டிருந்தது. கைரதி மீதுதான் சந்தேகம். சரி கைரதி ரூமை பார்த்துவிட்டாள் என்ன?. வெளியில் போட்டிருந்த ஆட்டுரலில் ஏறி நின்று ஜன்னல் வழியாக நோட்டம் விட்டாள்.

கைரதி கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு பழைய ஜட்டியிருந்தது.  அதன் அடிப்பகுதியில் சிவப்புக் கலர் லிப்ஸ்டிக்கைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். அடிப்பகுதி முழுவதும் சிவப்பு நிறமாக மாறியது.

சிவப்பாக மாறிய அடிப்பகுதியை கண்ணாடியில் காட்டிப் பேசினாள்.

“அடியே கைரதி உனக்கு பீரியட் ஆகியிருக்கு, பாரு நல்லா பாரு உன்னோட ஜட்டி முழுசும் ரத்தமா இருக்கு”

இதுவரை கிடைக்காத பேரானந்ததைத் அடைந்து விட்டது போல் அவள் முகம் அவ்வளவு சந்தோசமாகவும் பிரகாசமாகவும் இருந்தது. அவள் மனம் ஆயிரம் குமிழ்களாக உடைந்து பறந்தது.  அந்தக் கருத்த முகத்திலிருந்த கண்கள் பள பளவென மின்னியது. சினிமாவாக இருந்தால் அவள் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பு ஒளிர்வது போல் கிராபிக்ஸ் செய்து காட்டியிருப்பார்கள். கண்ணுற்ற பூர்விகாவின் கருவிழிகள் அசையவில்லை. பேச்சு மூச்சற்று  நிலைகுத்தி நின்றன.

ஜட்டியை மோதிர விரலின் நுனியில் வைத்து சுழற்றிக்கொண்டே குதிங்காலை முன்னேயும் பின்னேயும் வைத்து  ஆடினாள்.  அது ரஷ்ய மண்ணின் பாலே நடனத்தை ஒத்த  அசைவுகளாக இருந்தது.  மரங்கொத்தியின் மிதமான பறத்தலைப் போல அவள் உடல் மிதந்து கொண்டிருந்தது.   மீண்டும் ஜட்டியை கண்ணாடியில் காண்பித்து பேசினாள்.

“கைரதி உனக்கு மாதவிடாய் பாத்தியா, இனி உனக்கு மாதா மாதம் மாதவிடாய் வரும்”

பைக்குள்ளிருந்து சானிட்டரி நாப்கினை எடுத்தாள். அது பூர்விகா தேடிக்கொண்டிருந்த நாப்கின்தான். அதே வெளிர் நீல உறை. மூக்கில் வைத்து வாசம் பிடித்தாள். சாம்புராணி மரத்துப் பூக்களின் வாசம் மூச்சுக் காற்றுடன் கலந்து சுவாசக்குழாயில் பயணித்தது. நாப்கினால்  கன்னத்தை வருடினாள்.  மயிலிறகின் மென்னிதழ்கள் அவள் கன்னத்தில் மொழி பழகியது.  வெளி உறையை உரித்து  நாப்கினை  ஜட்டியில் வைத்து சேலையை ஒரு கையால்  தூக்கிப் பிடித்து  அணிந்து கொண்டாள். மீண்டும் கண்ணாடியைப் பார்த்து வாய்விட்டு சந்தோசமாகச் சிரித்தாள். அந்த சந்தோசத்திற்கு ஈடுயிணை ஏது?. சிற்றலையாகப் புறப்பட்ட அந்த சந்தோசம் ஆழிப் பேரலையாக உருவெடுத்து சமூகச் சுவர்களை உடைத்துக் கொண்டு பூர்விகாவின் முகத்தில் பூசிப்பட்டிருந்த  போலி கற்பிதங்களைத் துடைத்துச் சென்றது.

திகைப்பில் உறைந்து நின்றாள் பூர்விகா.  திரும்பிச் செல்ல கால்களை தூக்கி வைத்தாள். கால்கள் அசையவில்லை.  அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.  அவள்  உயிருக்குள் சருகுதிர்வதாய் உணர்ந்தாள்.

இப்போதெல்லாம் சானிட்டரி நாப்கின் வாங்கும் போது பூர்விகா மறக்காமல்  கூடுதலாக ஒரு பொதி  வாங்குவாள். அதை அலமாரிக்கு வெளியிலேயே வைப்பாள். வழக்கம் போல்  அடுத்த நாள் அது காணாமல் போகும்.  காணாமல் போனதைப் பார்த்து பூர்விகா மனதுக்குள் சினேகத்தின் புன்னகையை கசிய விடுவாள்.

*** ***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

9 Comments

  1. அருமையான படைப்பு.. மனம் கணத்து விட்டது அரவாணியின் அந்த ஆசை.. வாழ்த்துக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button