இணைய இதழ்இணைய இதழ் 70கவிதைகள்

குமரகுரு கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

பூங்காவின் கதவிலொரு பூட்டு
வந்து வந்து பார்த்துப் போகும் பிள்ளைகளுக்கெல்லாம்
தன் சாவிதுவாரத்தால் பதில் சொல்லிக் கொண்டிருந்தது
இன்னும் கொஞ்ச நேரம் போனால் அழுதேயிருக்கும்
காவலாளி சாவியை துவாரத்தில் வைத்ததும்
பொடக்கென்று எளிதாய்த் திறந்து கொடுத்து
பிள்ளைகளை உள்ளே வரச் சொல்லி நிம்மதியடைந்தது!!

***

ஸ்கூட்டியாகிய நான்
பார்க்கிங்கில் கோணையாக நிற்கிறேன்
என்னைப் பார்த்து
எல்லோரும் திட்டிவிட்டுப் போகிறார்கள்
இதோ வந்துவிட்டார்
என் ஓட்டுநர்
அவர் பெண் இல்லை என்று எல்லோரிடமும் நான் சொன்னது கேட்டிருக்குமா?

***

இலைகளுக்கு நடுவில்
கீற்று போல் நெளிந்தபடியிருந்தது
பச்சைப் பாம்பு
நான் மொட்டை மாடியிலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
எனக்கும் பாம்புக்கும் நல்ல தூரம்
காற்றசைவிலொரு தென்னங்கீற்றைப் போல அசைந்து கொண்டிருந்தது
அதன் கூர்முனை மூக்கைப் பிடித்துக் கிள்ள வேண்டுமென்று
தோன்றியது எனக்கு
தென்னங்குலைகளின் நடுவிலிருந்து வந்த
ஓணானொன்றைப் பிடித்து விழுங்கியது
கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி முடித்ததும் மெல்ல நகர்ந்து தென்னைமட்டையின் வளைவில் படுத்து ஓய்வெடுத்தது
செரிமானமாக சிறிது நேரமாகும்
அதுவரை நான் அதை ரசிக்கலாம்
எவ்வளவு தூரம் தாவி வந்தாலும் என்னைப் பிடிக்க முடியாது
அதனால் சத்தமாய் கத்திக் கொண்டிருந்தேன்… “கிர்ரக் கிர்ரக் கிர்ரக்” என்று…
என் சத்தம் கேட்டு மழை வரட்டும்
நான் ஒரு மகிழ்ச்சியான தவக்களை!

*****

கமெண்டுகளின் வாய் மிக நீளம்
சில கமெண்டுகள்
பெரிய பெரிய கருத்துகளைப் பேசுகின்றன
சில அடுக்குத்தொடர்களாய்
ரிப்ளைகளை விழுங்குகின்றன
தரவுகளைத் தேடி எடுத்துப் போடப்பட்ட நீளமான கமெண்ட் ஒன்று, “என்னைப் படி!! என்னைப் படி” என்று டைம்லைனில் நின்று
கத்திக் கொண்டிருந்தது
பாவம் என்று புளூ லைக் போட்டுவிட்டு வந்தேன்
எவ்வளவு பெரிய கமெண்ட்டின் வாயையும் மூட
அந்த ஒரு புளூ லைக் போதுமானதாகிறது
சில நேரம் அதிகமாகப் பேசும் வாய்களைப் பார்த்து
ரிபோர்ட் அடித்து பிளாக் செய்ததும் உண்டு
லிப்ஸ்டிக் ஒட்டிய கமெண்டுகளுக்கு மட்டும் ஏனோ
இதுவரை யாரும் ஆங்கிரி ரியாக்டைப் பயன்படுத்தியதில்லையாம்
அதுவும் ஒரு, ‘மித்’ தான்.

*****

கவிதை என்றெதுவும் எழுதுவதில்லை
வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவனின்
முட்டிவலியைப் பற்றி எப்படி கவிதையாக எழுதுவது?
தென்னமரக்குடி எண்ணெயின் விலை கூடக் கூடிவிட்டது
இந்த வலியின் நடுவிலும்
எப்போதாவது சிரிப்பதுண்டு
ஆனால்
அது அதுவாய் நிகழும்
என்ன அப்போது என் அருகில் யாரும் இருப்பதில்லை!

*****

yorkerguru@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button