இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

குத்துக் கல் – வண்ணதாசன்

சிறுகதை | வாசகசாலை

பஸ்ஸிலிருந்து கடைசி ஆள் ஆகத்தான் மூத்தார்குரிச்சியில் இறங்கினேன்.

பத்து இருபது  வருஷத்திற்கு அப்புறம் வருகிறேன். முக்குத் திரும்பும் போது தெப்பக்குளம் அப்படியே இருந்தது. எப்போதோ கடைசியாகப் போன முறை பார்த்த அதே சிவப்பு ஒற்றை அல்லி அதே இடத்தில் பூத்திருப்பது போன்ற தோற்றம். தேரைப் புதுப்பித்துத் தைலம் பூசியிருக்கிறார்கள்.

பொன்னுக் கம்பர் சுக்கு வென்னீர்க் கடையைக் காணோம். வரிசையாக எட்டிப் பார்த்துக்கொண்டே தான் வந்தேன்.

இரண்டு மொபைல் கடை இருக்கிறது. ஏ.டி.எம் இருக்கிறது. ஸ்டேட் பேங்க், பாண்டியன் கிராம வங்கி, முத்தூட் நகை அடகு எல்லாம் இருக்கிறது. இது எங்கள் பெரியப்பா ஊர் இல்லை. வேறு ஊர். இறங்குகிறதா அல்லது அப்படியே, படையல், நெட்டைப் புதூர், கருங்கோட்டை என்று கடைசிவரை போய்விட்டு மறுபடி ஊருக்குத் திரும்பிவிடலமா என்று தோன்றிவிட்டது.

நான் இறங்குவதற்கும் கிட்டு மாமா கூட்டத்தோடு கூட்டமாக இதே பஸ்சில் ஏறுவதற்கும் சரியாக இருந்தது. எழுபது வயதுக்கும் பஸ்ஸில் போகிறார். கண்ணாடி போட்டிருக்கிறார். கட் மீசை நரைத்துப் பஞ்சை ஒட்டி வைத்தது போல இருக்கிறது. கையில் இருந்த குடையை, ’இதைக் கொஞ்சம் பிடி டே’ என்று கடைசி சீட்டில் இருந்தவர் வசம் கொடுத்துவிட்டார்.

கிட்டு மாமாவுக்கு என்னை உடனே அடையாளம் கண்டுபிடித்துவிட முடிந்தது.. ’சுந்தரம்’ என்று பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார். முன்னால் என்றால் எந்தச் சின்னப் பையனைப் பார்த்தாலும்,’கள்ளப் பயலே’ என்பார். அல்லது ‘கசவாளிப் பயலே‘ என்பார். எனக்கு வயசாகி விட்டதாலோ, பேங்க்கில் வேலை பார்க்கிறேன் என்பதற்காகவே, ‘வே, மருமகப் பிள்ளை, வாரும்’ என்றார்.

‘எங்கே.. துக்கத்துக்கு வந்தீரா? சைலா வடக்கே இருந்து ஊரோடு வந்துவிட்டது எனக்கே மூணு நாளைக்கு முன்னாலதான் தெரியு.ம். உமக்கு அதுக்குள்ளே வந்துட்டுதா? மதுரைக்கார பேப்பர்காரன் உடனைக்குடனே நூஸ் போட்டிருவான் போல’ என்று சிரித்தார்.

கண்டக்டர் விசில் ஊதியதும், காலைத் தூக்கிப் படியில் வைத்துக் கொண்டு உன்னி மேலே ஏறினபடியே, ’இருப்பேரா? இல்லை உடனே கிளம்பீருவேரா?’ நீரு ராத்தங்கவும் முடியாது. அவ ஒத்தையிலதான் இருக்கா. தைர்யக்காரி’

‘எனக்கு படையலில் ஒரு கல்யாண வீடு. ஏற்கனவே லேட்டு. முகூர்த்த நேரம் முடிஞ்சுருக்கும். வந்திருதேன். சைலா பச்சரித் தோப்பில இருக்கா. வம்பா நடுத்தெருவுக்கு போய்த் தேடவேண்டாம். அதை எல்லாம் எப்பமோ கிரயம் பண்ணியாச்சு. முடிஞ்சா சீக்கிரம் வரப் பார்க்கேன். பார்ப்போம்’ என்று மேலே ஏறினார். இன்னும் டயர் செருப்புத்தான் போடுகிறார். கரண்டை எலும்பு புடைத்துச் சாம்பல் பூத்துக் காய்த்துப் போயிருக்கிறது.

சைலா மூத்தார் குரிச்சிக்கு வந்துவிட்டாள் . கொரோனாவில் சைலா மாப்பிள்ளை இறந்துவிட்டது தெரியும். சைலாவின் அக்கா தைலாவின் கணவர்தான் வாட்ஸாப்பில் தகவல் அனுப்பியிருந்தார். அவர்களே சென்னையில் இருந்து யாரும் மும்பைக்குப் போக முடியவில்லையாம். எல்லாவற்றையும் அம்மாவும் மகளுமே அங்கே தனியாகச் சமாளித்துக் கொண்டார்கள்.

சிவகாமியின் அம்மாச்சிதான் அலுத்துக் கொள்வாளாம். சிவகாமி சொல்வாள். ‘அது என்னடே ஒருத்திக்கு தைலாண்ணு பேரு. இன்னொருத்திக்கு சைலாண்ணு பேரு. உலகத்தில வேற பெயரா இல்லை. வடக்கே வரைக்கும் போய்க் கங்கையில முங்கிக்கிட்டு வந்தவனுக்கு இந்த ரெண்டு பெயரும்தான் கிடைச்சுதாக்கும்? பனை மரத்துப் பொந்துக்குள்ள இருந்து எட்டிப் பாக்குமே கிளிக்குஞ்சு, அதை மாதிரி ஒருத்தியைக் கூப்பிட்டா இன்னோருத்தில்லா எட்டிப் பார்ப்பா?!’

சிவகாமி அம்மாச்சி சொல்வது சரிதான். நிறையத் தடவை அந்த இரண்டு பெயர்களும் குழம்பத்தான் செய்தது.

சைலாவின் அக்கா தைலாவுக்கு என் மேல் ஒரு பிரியம் இருந்தது. அது தங்கச்சிக்காரிக்கும் தெரியும். தைலாவுக்கு நான் எழுதின கடிதங்களை அவள் படித்திருக்கிறாள். அப்படி நான் எழுதிய கடிதங்களில் கூடுதல் குறைவாக ஒரு வார்த்தை கூட இருக்காது என்றாலும் சைலாவுக்கு அந்த வரிகளின் பின்னால் இருந்து ஒரு வெளிச்சம் கசிவதைக் கண்டு பிடிக்க முடிந்திருக்கிறது.

 ஜங்ஷனில் பெய்யாமல் டவுணில் பெய்திருக்கிற மழையைப் போல, என் வரிகளுக்குப் பின் ஒரு தேர்ந்தெடுத்த நனைதல் இருப்பதை அவள் கண்டுபிடித்திருக்கிறாள்.

அக்காவுக்குத் தெரியாமல் சைலா எனக்கு ஒரு பைலட் பேனா கூட வாங்கிக் கொடுத்திருக்கிறாள். பேனா மட்டும் அல்ல.. ஒரு செல் பார்க் டர்க்வாய்ஸ் ப்ளூ மை பாட்டிலும் தந்தாள். அப்போது சைலாவின் கண்கள் கலங்கியிருந்தன. நான் அந்தப் பேனாவை வைத்து அவளுக்கு ஒரு வரிகூட எழுதியது இல்லை. பேனா மூடியைக் கழற்றிப் பின்னால் செருகியவுடன் ஒரு காய்ந்தும் காயாத மை வாசம் வரும். அது எனக்குப் பிடித்திருந்தது.

சைலாவின் கண்களை இத்தனை வருடங்களுக்குப் பின், அவளுடைய மூத்தார்குரிச்சியில் வைத்துப் பார்க்கப் போகிறேன். இரண்டாவது சுற்று கொரோனா முடிந்த கையோடு சைலா மகளுக்கும் கல்யாணம் ஆகி யு.எஸ் போய்விட்டதெல்லாம் தைலாவின் தொலைபேச்சின் மூலம்தான் தெரியும்,.

அது ஒரு விதமான கண்ணாமூச்சி விளையாட்டு. என்னுடன் பேசவேண்டும் என்று தோன்றினால் சைலாவின் அக்கா, சிவகாமியைத்தான் கூப்பிட்டுப் பேசுவாள். என்னிடம் சொல்ல வேண்டிய தகவல்களையெல்லாம் சிவகாமியிடம் சொல்லி விட்டுப் பேசி முடிக்கப் போகும் போது, ‘சுந்தரத்து அத்தான் நல்லா இருக்காங்களா?’ என்று கேட்பாள்.

ஃபோன் என் கைக்கு ஒரு சிரிப்போடு வரும். ‘என்ன அத்தான் நல்லா இருக்கீங்களா? உடம்பைப் பார்த்துக்கிடுங்க’ என்று சொல்லிவிட்டு வைத்து விடுவாள். சிவகாமிக்கு எல்லாம் புரியும். ‘உங்க கூட இந்த அரை நிமிஷம் பேசுததுக்குத்தானே, என் கூட அந்த அஞ்சு நிமிஷமும் பத்து நிமிஷமும் சுத்தி சுத்திப் பேச்சு’ என்று சிரிப்பு. ‘மச்சினாரை ரொம்பத் தேடீட்ட்டு போல’ என்று மறுபடியும் ஒரு முகம் பார்க்காத சிரிப்பு.

சைலா இங்கே வந்துவிட்டதைக்கூட தைலாதான் சொன்னாள். ‘எல்லோரும் மூத்தார் குரிச்சிக்கு வாங்க. ஒரு ரெண்டு நாளாவது எல்லாரும் ஒண்ணா இருப்போம். பாவம் தங்கச்சியும் ஒத்தையிலதானே இருப்பா’ என்றாள். அந்த ‘ஒத்தையிலதானே இருப்பா பாவம்’ என்ற வார்த்தைகள் மிக எளிய வார்த்தைகள்தான். எல்லோரும் இது போன்ற சந்தர்ப்பங்களில் யதேச்சையாகச் சொல்வதுதான். ஆனால், ஒரு பெரும் பாரம் போல என் மேல் அமர்ந்துவிட்டது.

சிவகாமி மாடிக்கு வந்து பார்த்த போது நான் என்னுடைய பழைய ட்ரங்க் பெட்டியில் இருந்து அந்த இரண்டு படங்களையும் எடுத்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். இரண்டும் சைலா அவளுடைய கல்லூரி நாட்களில் வரைந்தவை. இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கும்.

ஒரு படத்தில் ஒரு ஆளுயர கல் தூணின் விளிம்பில் ஒரு சிறு பறவை உட்கார்ந்திருக்கும். அதை மிக மெலிந்த, மார்புத் திரட்சி அதிகம் இல்லாத பெண் ஒருத்தி பார்த்துக்கொண்டு நிற்பாள். கைகள் இரண்டும் மரப்பாச்சிக்குச் செதுக்கினது போல பக்கவாட்டில் நீண்டிருக்கும் சிறு மடங்கலும் இல்லாமல்.

இன்னொன்றிலும் அதே பெண்தான். அதே கல் தூண்தான். பறவை இருக்காது. கல் தூணில் பறவைக்குப் பதிலாக ஒரு விளக்கு மாடக் குழி இருக்கும். விளக்கு சுடர்ந்து எரிந்து அலைக்கழியும் வெளிச்சம் அந்தப் பெண்ணின் முகத்தில் நெளியும். அந்தப் படத்திலும், மடங்கலே இல்லாமல் மரப்பாச்சிக் கைகள் தோள்களில் இருந்து தொங்கும்.

எனக்குப் பின்னால் சிவகாமி வந்து நிற்பதை உணர்ந்து, இரண்டு படங்களையும் அவளிடம் உயர்த்தி நீட்டி, ‘ ஒத்தையில இருக்கா, பாவம்’ என்றேன்.

சிவகாமியும் அதே ஊர்க்காரிதான். அவளுக்குமே நடுத் தெருதான். சிவகாமி வீட்டை ‘ரெட்டைத் தூண் வீடு’ என்று சொல்வார்கள். தைலா, சைலா வீட்டை ‘இந்தி வாத்தியார் வீடு’ என்பார்கள். தோப்பு, துரவு எல்லாம் உண்டு என்றாலும் அது இந்தி வாத்தியார் வீடு அல்லது காசிக்காரர் வீடு. சைலாவின் அப்பா காசிக்குப் போய்க்கொஞ்ச நாள் வேலை பார்த்துவிட்டு வந்தார். காசியில் இருந்து வரும்போதுதான் அவர் புதிதாக மீசை வளர்த்து கன்னத்தைப் பார்க்கத் தேய்த்து விட்டிருந்தார் முறுக்கிவிடாமல்.

‘இந்தி வாத்தியார் காசிக்குப் போய்ட்டு வந்த பிறகு பிறந்தவதானே சின்னவ’ என்று சிவகாமியின் அம்மாச்சி சொல்வாள். சின்னவள் என்பது சைலாவை .

சிவகாமி முன்பே சொல்லியிருக்கிறாள். தைலா, சைலா வீட்டில் இருந்து ஆற்றுக்குப் போகிற திருமஞ்சன வீதியில் ஒரு முச்சந்தி வருமாம். அந்த இடத்தில் ஒரு குத்துக்கல் உண்டாம். அதில் தினசரி விளக்குப் போட சைலா போவாள். எண்ணெய்ப் பிசுக்கேறிய அந்தக் குத்துக்கல் மாடத்தில் மஞ்சட் பொடியும் குங்குமமும் பொருக்காடிக் கிடக்க யாராவது சாத்திவிட்டுப் போன மஞ்சள் சிவந்திப் பூ மாலையில் நீண்ட காம்புகள் திருக்கிக் கொண்டு குப்புறவும் நிமிர்ந்தும் கிடப்பதைப் பார்க்க சிவகாமிக்கு ஒரு தடவை தொடைச் சதை கிடுகிடுவென்று நடுங்கியிருக்கிறதாம். ’அந்தக் குத்துக் கல்லுக்கு ஏதோ பவர் இருக்கு’ என்று பேச்சை முடிப்பாள்.

’வெள்ளி செவ்வாயில கவனிச்சுப் பார்த்தால், சைலா அப்பமே வழக்கம் போல இருக்க மாட்டா. ஜாஸ்தி பேச மாட்டா. சில சமயம் சாப்பாடு வேண்டாம்னு சொல்லீருவா. முன் வாசல் மாதிரி அவங்க வீட்டுப் பின் வாசலிலும் ஒரு நீளத் தார்சா உண்டு. அதிலே வடக்கேயும் தெற்கேயும் சைலா விடாம, நூறு தடவை, ஆயிரம் தடவை நடந்துக்கிட்டே இருப்பா’

இதைச் சொல்கிற சிவகாமியை நான் ஏறிட்டுப் பார்ப்பேன், ‘இதையெல்லாம் போய் உங்ககிட்டே எதுக்குச் சொல்லணும். கஷ்டப்படுவீங்க என்று நான் முன்னமே இதைப் பத்தி ஒண்ணும் சொல்லலை’ என்று சிவகாமி என் தோளில் ஆறுதலாகக் கை வைத்திருக்கிறாள். சிவகாமியை தோளில் விழுந்த கை வாக்கில் இழுத்து மேலே போட்டுக் கொள்வேன்.

இது சிவகாமியா.. சைலாவா? உடம்போடு உடம்பாய் அமுங்குகிறதே, இது யாருடையது ? மடங்குகிறதே, மரப்பாச்சிக் கை போல் இல்லையே , இது சிவகாமிதானே என்று தோன்றும். தைலா ஞாபகம் வரவே வராமல், சைலா மட்டும் வருகிறாளே. இது என்ன கூத்து ? நான் கடிதம் எழுதியது எல்லாம் தைலாவுக்கு.. இல்லை தங்கச்சிக்காரிக்குதானா? என்று மண்டைக்குள் எல்லாம் நெளு நெளு என்று புரண்டு மறுபடி முட்டைக்கோஸ் போல அடுக்கு அடுக்காய் நரம்புவிரித்து இளம் பச்சையில் இறுகும்.

மூத்தார் குரிச்சி பஸ் ஸ்டாப்பில் டீ குடிக்கப் போனேன். ‘வெஜிடபிள் பஃப், மட்டன் பஃப் சூடாக இருக்கு வேணுமா?’ என்று கடைக்காரர் கேட்டார். அவர் இடப்பக்கத்தில் லஸ்ஸி கடைகிற எவர்சில்வர் பானையும் மத்தும் மின்சார வயரோடு தொங்கிக்கொண்டு இருந்தது. டீ மட்டும் சாப்பிட்டேன். பச்சரிசி மாங்காய்த் தோப்பை பச்சரிசித் தோப்பு என்றுதான் அப்போதே சொல்வோம். அதன் பக்கம்தான் இந்தி வாத்தியாரின் மங்களா வீடு இருந்தது.

முன்பு பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்துதான் போயிருக்கிறோம். பெரியப்பா நொடித்துப் போய் இந்த ஊரைக் காலி பண்ணுவதற்கு முன்பு வரை அவர் வில்வண்டி கொண்டு வந்து எங்களை ஏற்றிக்கொண்டு போவார். வில் வண்டிப் பைதா ஒன்று மட்டும் சார்த்தி வைத்திருந்த தொழுவத்துச் சுவர் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கும் முன்பு. இப்போது ஏதோ நர்சரி பள்ளிக்கூடம் அந்த இடத்தில் வந்துவிட்டதாகச் சொன்னார்கள்.

நான் பச்சரிசித் தோப்புக்கு எப்படிப் போகலாம் என்று டீக்கடையில் கேட்டேன். மினி பஸ் உண்டாம். இனிமேல் அது மதியம் ஒருமணிக்கு மேல் கருங்கோட்டை பேஸஞ்சர் ரயில் வருகிற நேரத்துக்குத்தான் வருமாம். ஆனால், ஆட்டோ நிறையக் கிடைக்கும் என்றார். கடை வாசலில் வந்து நின்று கொண்டு அவரே ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஒரு ஆட்டோவை வரச் சொல்லிக் கையைக் காட்டினார். இங்கே இருந்து அங்கே கேட்கும் அளவுக்கு உரக்க, ‘பச்சரிசித் தோப்பு’ என்று சத்தம் கொடுத்தார்.

முன்பு என்றால் ரயில்வே கேட் தாண்டித்தான் போக வேண்டும். இப்போது வேறு பாதை போட்டுவிட்டார்கள். ஆட்டோ புதிது புதிதாகக் கட்டிடங்களைத் தாண்டிப் போனது. பட்டுப் பூச்சி வளர்ப்புப் பண்ணை, பல்கலைக் கழக சூழலியல் ஆய்வுத் துறை என்று பெரிய பெரிய போர்டுகள் பின்னால் நகர்ந்தன. நான் பேச்சுக்கொடுக்கவே இல்லை.

 ரயில்வே கேட் தாண்டிப் போயிருந்தால் அந்தப் பாதையில் நிறைய ஆலமரங்கள் வளர்ந்து நிற்கும். பெரிதாகவும் இராது. சின்னச் சின்னதாக உறுதியான இலைகளும் சிவப்புப் பழங்களுமாக, ‘சீக்கிரம் வரைந்து முடி. நான் போக வேண்டும்’ என்று சொல்கிறது போல லேசாக ஒரு காலை வண்டிப்பாதையில் வைத்தபடி இருக்கும். இங்கே மரங்கள் எதுவும் இல்லை. உசிலை மரம் என்று நினைக்கிறேன். ஒன்று பின்னால் தன் பெரிய உடம்பைத் தூக்கியபடி நகர்ந்து போனது. மலைத் தொடர்கள் பக்கத்தில் வந்திருந்தன.

இளங்கருப்பு, இள நீலம். இளஞ் சிவப்பு என்று தன்னைத் தானே நொடிக்கு நொடி வெயிலில் மாற்றிக்கொண்டு நீண்டுகொண்டே போயின. ஒரு மலையை யாராவது வரைய முடியுமா தெரியவில்லை. சைலா ஒரு வேளை இப்போது இந்த ஊருக்கு வந்த பின் இந்த மலைத் தொடரை இனிமேல் வரைய ஆரம்பிக்கலாம். மனம், மலைத் தொடர், வெயில் தொடர், கடல் தொடர், மணல் தொடர் என்று அதுவாகவே சில மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கியிருந்தது.

ஆட்டோ ஓட்டுகிறவரையும் மலை என்னவோ செய்திருந்தது. அவரும் இதுவரை என்னிடம் ஒன்றுமே பேசவில்லை. இந்தி வாத்தியார் வீடு என்றுதான் சொல்லியிருந்தேன். வீட்டு முன் நின்றது. வீடு பூட்டிக் கிடந்தது. இரண்டு பெரிய பிரம்பு சாய்வு நாற்காலிகள் தார்சாவில் நடைக்கு எதிர் எதிர் புரத்தில் கிடந்தன. தலை வாசல் நடையில் சாய்ந்தாற் போல ஒரு பன்னிரண்டுக்குப் பத்து படத்தில் ஒரு பெரியவருக்கு சிவப்பு உல்லன் நூல் மாலை போட்டு இருந்தது. சைலாவின் அப்பா இல்லை. இந்தி வாத்தியாரை நான் பார்த்திருக்கிறேன். இது காலத்தால் முந்திய ஒரு செபியா நிறப்படம். நெற்றிக்கு மேல் தலையை மேல்பக்கம் ஏற்றிச் சீவிக் கொண்டை போட்டு, குங்குமம் வைத்துக் கடுக்கன் போட்டிருந்த முகம்.

ஆட்டோ ஓட்டுகிறவர் கீழே இறங்கிச் செருப்பைக் கழற்றிவிட்டுப் படத்தைப் பார்த்துக் கும்பிட்டார். அவரே, ‘வண்டியில ஏறுங்க. தோப்புல இருப்பாங்க’ என்று சொல்லி நான் ஏறினதும் ஆட்டோவின் பக்கவாட்டுக் கதவைச் சத்தமில்லாமல் மூடினார். எனக்கு சத்தம் வேண்டியதிருந்தது. கொஞ்சம் சத்தம் கேட்டுவிட்டு மறுபடி அமைதியாகிவிட்டால் கூடப் போதும்.

தோப்புக்குப் போகிற பாதையில் மிகத் தெளிவாக ஒரு ஓடை பாய்ந்து கொண்டு இருந்தது. இரண்டு உள்ளங்கை அகலத்திற்கு ஒரு ஆமை வாயில் புல்லைக் கடித்தபடி வெயிலில் ஓடையோரம் கிடந்தது. ஆட்டோ ஓட்டுகிறவர் அந்த ஆமையைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டார். சட்டென்று அந்தப் பகுதி முழுவதும் ஒரு மேய்ச்சல் நிலம் போலவும், ஒரு பெரும் மந்தை அப்போதுதான் மேய்ந்துவிட்டு அந்த இடத்தைக் காலி செய்துவிட்டுப் போயிருப்பது போலவும், கடிபட்ட புற்களின் பச்சை வாசம்.. பச்சை கூட அல்ல இளம் பச்சைவாசத்தைத் தகடு போல வெயில் ஏந்தியபடி மலையைப் பார்க்க நகர்வது போலவும் அந்த இடம் நிரம்பியது.

தோப்பில் தேங்காய்ப்பறி நடந்துகொண்டு இருந்தது, குவியல் குவியலாகக் கிடந்த தேங்காய் நெற்றுகளுக்கு அருகில் சைலா நின்று கொண்டு இருந்தாள். ஆட்டோ ஒரு மரியாதையான தூரத்தில் சைலா நிற்கும் தேங்காய்க் குவியலுக்கு முந்திய தேங்காய்க் குவியலுக்கு முன், அதற்கு முன்பே எஞ்சினை அணைத்து, சத்தம் குறைத்து, தன் முந்திய விசையில் உருண்டு போய் நின்றது. நான் இறங்கினதும் எந்தத் தொகையும் என்னிடம் வாங்கிக் கொள்ளாமல் ஒரு அரைவட்டத்திற்கு வண்டியைக் கையால் நகர்த்தி, அதன் பின் ஸ்டார்ட் செய்து போய்விட்டது.

சைலா கும்பிட்டபடியே வந்தாள். நெற்றியில் அந்தக் குத்துக்கல் என்ணெய்ப் பிசுக்குக் கருப்பை வைத்திருந்தாள். நான் கும்பிடவில்லை. கும்பிடுவதற்கு முன்பே அந்தக் கருப்புப் பிசுக்கில் போய் நான் அப்பிவிட்டது போல் இருந்தது.

என் பக்கம் ஓர் அடி தூரத்திற்கு வரும்வரை சைலாவின் கும்பிட்ட கை விலகாமல் இருந்தது. மணிக்கட்டில் இருந்து கை குவிக்காமல், இரண்டு முழங்கைகளும் ஒட்டிப் புறப்பட்ட வணக்கம் ஒன்றின் மேல் ஒன்றாக ஒட்டி அப்பிக்கிடக்கும் இரண்டு கைகளின் நடுவிரல்களின் நகக் கண்களில் முடிந்தது.

‘நல்லா இருக்கியா சைலா?’ என்று பெயர் சொல்லிக் கேட்க முடியவில்லை. ‘நல்லா இருக்கீங்களா?’ என்று மரியாதையான சொற்கள் என்னிடமிருந்து வந்ததன. உதடுகள் எனக்கு உலர்ந்து தோல் உரிந்துவிட்டதா.. அப்படி ஒரு உணர்வு..

கும்பிட்ட கைகளை முழுவதுமாக விலக்கிப் பக்கவாட்டில் இறக்கியதும் அவள் பழைய சைலா ஆகிவிட்டது போல இருந்தது. ‘நல்லா இருக்கீங்களா அத்தான்?’ என்றாள். பக்கத்தில் நின்ற ஒரு பெண்ணிடம் இளநீர் சீவித் தரச் சொன்னாள். அவள் குடிக்கவில்லை. ஒன்று, அதன் பின் இன்னொன்று என இரண்டாவதையும் கொடுக்கச் சொன்னாள். சிந்தாமல் குடிக்கத் தெரியவில்லை. ஒரு வேளை சிந்தட்டும் என்று சிந்தச் சிந்தக் குடித்தேனோ என்னவோ?

சுற்று முற்றும் பார்த்தாள். பெரும்பாலும் ஆண்களை விடப் பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். உதடு பிரித்து ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், இன்னின்னார்க்கு இன்னின்ன வேலை என்று உத்தரவிட்டு முடிந்தது போல, பார்வையின் அரை வட்டத்தை என் பக்கம் திருப்பி, ‘சவுக்கைக்குக் போகலாம்’ என்றாள்.

சவுக்கை என்று சைலா குறிப்பிட்டது ஒரு பர்ணசாலை போல இருந்தது. ஒரு பெரிய சச்சவுக்காமான மண்சுவரால் எழுப்பப்பட்ட அமைப்பு. சாணம் பூசிப் பூசி மஞ்சள் ஏறி மினுங்கியது. ரொம்பத் தணிவான கூரையில் ஒரு சிறு விம்பல் இல்லாமல் மேலுக்கு மேல் அடர்த்தியாகத் தென்னை ஓலை வேயப் பட்டு, சிலும்பல் இல்லாமல் நான்குபுறத்திலும் கத்தரிக்கப்பட்டு அழகாக இருந்தது. கதவு எல்லாம் கிடையாது. வாசல் போல மொழு மொழுவென்று நுழைவு பூசப்பட்டுக் கிடந்தது. போதுமான இருட்டு. போதுமான வெளிச்சம். போதுமான வெக்கை, போதுமான குளிச்சி. குனிந்து உள்ளே நுழைந்தாலே , எல்லாம் போதும் போதும் எனத் தோன்றிவிடுகிறது.

சைலாதான் முதலில் உள்ளே போனாள். தேவையான குனிதலை விட, பணிந்து அதிகம் குனிந்தபடியே கும்பிட்டுக்கொண்டு போய் நடுவில் இருக்கும் சமாதியில் நின்றாள். சந்தன வாசம் அடித்தது. நாக லிங்கப் பூ வாசனை அடித்தது. பட்டுச்சேலைக்கு இடையே வைத்திருக்கிற தாழம் பூ மடல் வாசம் அடித்தது. எதை நினைக்கிறதோ அந்த வாசனை வந்து, எந்த வாசனையும் இல்லாமல் சுவரில் பூசியிருக்கும் சாணத்தின் வாடை பரவியது.

நானும் கும்பிட்டுக் கொண்டே சைலாவின் பின்னால் நின்றேன். சைலா என்னை அவளுக்கு முன்னால் வந்து நிற்கச் சொன்னாள். கோவில் கருவறைக்கு முன்னால் நிற்பது போல நான் முதலிலும் அவள் எனக்கு அருகிலும் நின்றோம்.

‘தேசிகர் ஜீவ சமாதி’ என்றாள். அந்த மூன்று சொற்களும் எனக்குள் இறங்கி என் கால் பெருவிரல் வரை வந்து மறுபடி உச்சந்தலைக்கு ஏறும் வரை அவகாசம் தந்தாள். ‘எங்கள் அப்பாவின் அப்பாவின் அப்பா’ என்று சொல்லிக் கும்பிட்டாள். கூரை ஓலைக்குள் காற்றோ, அணில் குஞ்சோ நகர்வது தெரிந்தது.

சமாதிக்கு முன்னால் போடப்பட்டிருந்த, இரண்டு தலைகீழ் முக்கோணம் செருகிய போன்ற நட்சத்திரக் கோலத்தில் உட்கார்ந்து தியானத்தில் இருந்தாள். நான் கும்பிடவுமில்லை. தியானம் செய்யவும் இல்லை. தைலா, சைலா, சிவகாமி எந்தப் பெயரின் உச்சரிப்பும் இன்றி அப்படியே நின்றேன்.

கூரையில் காற்று துளைக்கிற ஓலைச் சத்தத்தை, அணில் சரசரப்பை ஒரு தடவை மீண்டும் கேட்க விரும்பினேன். எதுவும் ஒரு தரம்தான். மறு முறை என்பது எதுவும் கிடையாது போல அமைதியாக இருந்தது,

 சைலா சிறு தீபக்கால் போல ஒரு ஒற்றைத் திரியிட்ட விளக்கை ஏற்றினாள். இடது கையை வலது முழங்கையில் இட்டு சமாதியின் உச்சிக்கு ஏற்றி வலம்செய்து சுடரை உயர்த்திக்காட்டிக் கையை உயர்த்தின வாக்கில் நிறுத்தினாள். என்னை அருகில் வரச்சொல்லி என் கையும் அவள கையும் ஏந்த தீபக்காலை உயர்த்திக்காட்டி மௌனமாக நின்றாள். கீழே அதை வைத்து, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிட்டாள். சற்று நேரத்தில் அவளுடைய படுக்கை நிலையை மாற்றி ஒரு கையை மேலே உயர்த்தி, மறு காலை மடித்துக்  கையைக் கீழே தாழ்த்தியும் கல் பொம்மை போலக் கிடந்தாள்.

எழுந்திருந்து நேரே என்னிடம் வந்த  சைலா என்னை அப்படியே இறுக அணைத்துக் கொண்டாள். அப்படியே அசையாமல் மரப்பாச்சிக் கைகள் போலக் கிடந்த என் கைகளை உயர்த்தி உயர்த்தி அவளைத் தழுவிக்கொள்ளச் சொல்வது போல சைலா தன் இடுப்பில் வைத்துக் கொண்டாள்.

‘குத்துக் கல், குத்துக் கல்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி என்னைக் கும்பிட்டாள்.

ஒரு சிறு பறவை, ஒரு நெடுஞ்சுடர் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தது.

Vannadasan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button