இணைய இதழ்இணைய இதழ் 86சிறுகதைகள்

லாகிரி – சபிதா காதர்

சிறுகதை | வாசகசாலை

1 கிலோ 1×17 ஆணி… . 

அரை லிட்டர் … . 

என்ற நீண்ட பட்டியலை கடைப்பையன் சொல்லச் சொல்ல கணிப்பொறியில் தட்டச்சு செய்து, ரசீது வரவும் அதைக் கிழித்து கொடுக்கும் போது உரிய பொருளுக்கு சரியான விலை உள்ளதா என்று மறுமுறை பார்ப்பது வழமைதான்… ஆனால், அந்த அரை லிட்டர் …… 

பாண்ட் என்ற ஒரு பொருள் மட்டும் கூடுதலாக வாங்கியவரை கவனித்துப் பார்க்க வைத்தது. 

‘ஓ… . இவரா’ என்று நினைத்துக் கொண்டு கொஞ்சமே கொஞ்சம் சிரித்து வைத்தேன். இது அவரை சில நொடிகள் காக்க வைத்ததற்கான சமாளிப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். 

எனக்கும் இந்த வன்பொருள் அங்காடிக்கான தொடர்பு முப்பத்தி ஐந்து வருடங்களுக்கானது என்று சொன்னால் நீங்கள் கூட்டிக்கழித்து என்னுடைய வயது நாற்பத்தி ஐந்து என்று கணக்கிடலாம். ஆனால், அது தவறு. பிறந்து நாற்பது நாளான குழந்தையையும் தாயையும் வேறு இடத்திற்கு மாற்றித் திருப்பி அழைத்து வரும் சாங்கியும் உண்டு. பிழைக்கப் போன இடத்தில் வேறு சொந்தக்கார வீடு இல்லாததால் தனது சகலை திறந்து இருக்கும் புதிய கடைக்கு என்னையையும் அம்மாவையும் சாங்கியத்திற்காக என்னுடைய தாத்தா அழைத்து வந்தாராம். 

அப்புறம் அந்த சகலை பாடியின் மகனுக்கே நான் வாக்கப்படப்போய் , ஒரு கட்டத்தில் பொழுது போகாமல்தான் முதன் முதலில் இந்த கடைக்கு வந்து உட்கார்ந்தேன்.

“இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?” என்பார்கள். உண்மைதான். நானே இந்தக் கேள்வியை என்னைப் பார்த்து கேட்டுள்ளேன். ‘நீ வேடிக்கை மட்டும் பாரு சீதேவி’ என்று சொல்லித்தான் என்னை கணவர் கடையில் விட்டுவிட்டு கொள்முதலுக்குச் சென்றார். 

நான் கடைக்குச் சென்ற காலத்தில் அறுபதுகளில் இருக்கும் அண்ணாச்சி மற்றும் இருபது இருபத்தி ஐந்து வயதில் இரண்டு பையன்கள் மட்டுமே. முதலில் இந்தக் கடை என்னை ஈர்க்கவே இல்லை. சின்னக் குழந்தையாகி இருந்தபோது நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்றால் நாம வேறு வீட்டில் பிறந்திருக்கலாம் என்று சலித்துக்கொள்வேன். அதே போல் இவர் ஏதேனும் வேறு கடை வைத்து நடத்தி இருக்கலாம். ஒரு வளையல் கடை , ல்லை துணிக்கடை, அட ஒரு சாப்பாட்டுக் கடை என்று பல பல எண்ணங்கள். நம்பினால் நம்புங்கள் வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை என்றால் கல்லாவில் தலை வைத்து தூங்கி இருக்கிறேன். கடைப் பையன்கள் என்னை என்ன நினைத்தார்களோ தெரியவில்லை ஒரு தம்மைப் போட்டு வரலாம் என்று வெளியே சென்ற அண்ணாச்சி இதைப்பார்த்து ஆடிப்போயிருப்பாராக இருக்கும். இந்த ஞான உதயம் எல்லாம் எனக்கு பின்னாட்களில் வந்ததுதான். 

ஆனால், அண்ணாச்சி என்னிடம், ‘தொழில் செய்யும் இடத்திற்கும் நான் உட்கார்ந்து காசு வாங்கிப் போடும் இருக்கைக்கும் ஒரு மரியாதை உண்டு. அதை நீ கொடுத்தே ஆக வேண்டும்’ எனும் பால பாடத்தை என் மனம் நோகாமல் ஆனால், அழுத்தமாக ஒரு முறை சொல்லிக் கொடுத்தார். ‘இந்த இருக்கையை பெற யாரோ ஒருத்தரின் வாழ்நாள் உழைப்பு தேவைப்பட்டிருக்கலாம். இது சாதாரணமாக எனக்கு கிடைத்ததால் இதன் அருமை எனக்கு புரியவில்லை’ என்பதை அண்ணாச்சி சொல்லிக் காட்டிய போது கொஞ்சம் அசிங்கமாகத்தான் போச்சு. 

அவர் சொல்லிக்கொடுத்த பாங்கு என்னைக் கேட்டுக்கொள்ள வைத்தது. அந்த முதிர்ச்சியை அண்ணாச்சிக்கு அவர் வயது தந்திருக்கலாம். ஆக, கல்லாபெட்டியில் தலை வைத்து தூங்கக்கூடாது என்பது நான் கற்றுக்கொண்ட முதல் பாடம். 

கணவரிடம் இதைச் சொல்லும் போது, ‘இனி அதுபோல செய்யாதே. ஆனால், நானும் இந்தக் கூத்தையெல்லாம் இந்த கடையில் நிகழ்த்தி இருக்கிறேன். கடையில் எத்தனைபேர் இருந்தாலும் என்னுடைய சைட்டு.. அதுதான் சொல்லியிருக்கேனே என்று அவர் அவளை அழைக்கும் அந்த செல்லப் பேரைச் சொல்லி அதைப் பார்க்க ஓடிடுவேன்னு’ என்று என்னிடம் தானாகவே சொன்னார். நான் முறைத்த முறையில், ‘ஏய்… .ஒய்… .டென்ஷன் ஆகாதே. அதெல்லாம் பாஸ்ட் டென்ஸ்’ என்றார். 

வேடிக்கை மட்டும் பார் என்று சொல்லிக் கொடுத்தது முதலில் மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது. இயல்பிலேயே லொட லொட லோட்டாவாக இருந்த என்னுடைய வாயை அடக்கிப் பேசாமல் கவனிப்பதில் அத்தனை சுவாரஸ்யம் இல்லை. ஆனால், சிரமத்தை தாங்கிக்கொண்டு இதனை ஒரு முயற்சியாக செய்து பார்ப்போமே என்றுதான் ஆரம்பித்தேன். 

நம்முடைய கடைக்கு என்ன வாங்க வருகிறார்கள். அதனை எப்படி கேட்கிறார்கள்.. அந்தப் பொருள் பற்றிய அடிப்படை அறிவு அவர்களுக்கு இருக்கிறதா? அதனை வைத்து கடைக்காரர்கள் அதாவது முதலாளி மற்றும் கடையில் பணி செய்பவர்கள் எப்படி அணுகு கிறார்கள் என்பதைத்தான் முதலில் கவனித்தேன். 

அவனுக்கு ஒரு மூன்று இஞ்ச் ஆணி தேவைப்படலாம். ஆனால், முக்கால் இஞ்ச்சுக்கு விரலில் அளவு காட்டுவான். எத்தனை மீட்டர் டெலிவரி ஓஸ் தேவைப்படும் என்று தெரியாமல் நீரை இறைத்து வெளியே விட ஹோஸ் வாங்க வருவான். கப்லிங் என்றால் என்ன..எல்போ என்றால் என்ன..ரெடியூசர் என்றால் என்ன.. என்ட் கேப் என்றால் என்ன என்று தெரியாமலே பொருள் வாங்க வருவார்கள். இவற்றுக்கெல்லாம் தூய தமிழ்ச்சொல் கண்டிப்பாக மணவை முஸ்தஃபாவோ அல்லது நயன்தாரா வுக்கு தூய தமிழ் சொல்லாக்கம் தந்த கவிஞர் மகுடேஸ்வரனோ சொல்லியிருக்கலாம். இல்லை என்றால் அவருடைய பின்னூட்டங்களில் குத்த வைத்து கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 

சிலர் மிகத்துல்லியமான அளவோடு வருவார்கள். குருட்டு பேரம் பேசாமல் பத்து ரூபாய் கூட இருந்தாலும் அந்த கடையில் பத்து ரூபாய் குறைவு என்று பொட்டில் அடிப்பார்கள். அவர்களை மிக மிக கவனமாக கையாள வேண்டும். 

சரவணன் சந்திரனின் நாவலில் ஒரு இடம் வரும்: கையில் கிளாசுடன் ஒரு ஆங்கிலப் படத்தை நாவலின் கதாநாயகன் பார்த்து கொண்டிருப்பான். மொழி புரியாவிட்டாலும் அண்ணனுக்கு சிற்றலுவல் புரிந்து கொண்டே வேலை செய்யும் பையனும் அந்த படத்தை பார்த்துக் கொண்டிருப்பான். அதில் சில கதாபாத்திரங்கள் வரும்… . .போகும்… . பேசும்… . வரும்… போகும்… . பேசும். இதையெல்லாம் பொறுத்துப் பொறுத்து பார்த்த பையன் அண்ணனிடம் கேட்பான், 

‘அண்ணே, இதில் எவன்தான்ணே ஹீரோ?’

‘பேசாமல் அத்தனை பேரையும் கவனிக்கிறானே. அவன்தான்டா ஹீரோ’ என்பான் நாவலின் கதாநாயகன். 

படிக்கும் போது அந்த வரிகளை மேலோட்டமாக கடந்து வந்துள்ளேன். ஆனால், அதைக் கடைபிடிக்கும் போது அதன் சூட்சுமம் புரிய ஆரம்பித்தது. அதாவது ஒருத்தன் வாயைத் திறந்து பேசி தன்னை யார் என்று தன்னைத்தானே காட்டிக்கொடுக்கின்றான். புரியலையா உங்களுக்கு? 

என் கடைக்கு பொருள் வாங்க வரும் சிலருக்கு அந்த பொருள் பற்றிய புரிதல் இல்லை என்பதை அவர்கள் தங்கள் வாய் வார்த்தை வழியாகவே அம்பலப்படுத்துகிறார்கள். அதன் மூலம் நான் அவர்களைக் கணிக்கின்றேன். 

அடுத்தவனோட கணிப்பில் போய் அச்சு பிசகாமல் அமர்ந்து கொள்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது? ஆனால் ஒன்று, என் கடைப் பொருட்களில் அவன் பூஜ்ஜிய அறிவைப் பெற்றிருந்தாலும் இன்னொரு விஷயத்தில் வித்துவானாக இருக்கலாம். நான் அதில் பூஜ்ஜியமாக இருப்பேன். 

இப்போது இங்கே இந்தக் கடையை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அதை நான் வாயைத் திறந்து காட்டிக்கொடுக்க விரும்பவில்லை . எது எப்படியோ பேசுவதைக் குறைத்து மனிதர்களை கவனிக்கத் தொடங்கினேன். நான் வீதி வீதியாக அலைந்து திரியாமல் அந்த வாய்ப்பினை என் கடை எனக்கு வழங்கியது. 

விற்பனை பிரதிநிதிகள் சுடும் வடைகளை வாயில் ஈ போக கவனித்திருக்கிறேன். குடும்பமாக வந்து வீட்டுக்கான வண்ணங்களைத் தேர்வுசெய்பவர்கள், கோழிக்கூண்டு செய்ய கோழிவலை வாங்க வரும் சிறுவர்கள், தச்சு வேலை செய்யும் ஆசாரிகள், கட்டடம் கட்டும் எஞ்சினியர்கள், மேஸ்திரிகள், மெக்கானிக்குகள், பிளம்பர்கள் என்று வித விதமான தொழில் செய்யும் மனிதர்கள், அவர்கள் சில நேரங்களில் சொல்லும் கதைகள் என்று இந்தக்கடை என்னைக் கட்டி வைத்தது. 

பணம் பொருளாக மாறி பின் பொருள் பணமாக மாறும் தொடர் நிகழ்வில்தான் லாபம் எனும் கனி அடங்கியிருக்கிறது. இந்த லாபம் எனும் பெரும் போதைதான் வியாபாரத்தை தொடர்ந்து இயங்க வைக்கிறது. இதுதான் வியாபாரத்தின் அச்சாணி என்று நினைத்திருந்தேன். ஆனால், சில நேரங்களில் லாபத்தை குறைத்தோ இல்லை லாபத்தை விட்டுக்கொடுத்தோ வாடிக்கையாளர்களை தக்க வைக்க வேண்டி இருந்தது. ஒன்றில் விட்டு இன்னொன்றில் பிடிப்பது எப்படி என்று பிடிபட ஆரம்பித்தது. இந்த ஆட்டத்தை ஆடிப் பார்க்க ஆசை வந்தது. 

இன்னொரு விஷயம் பொதுவாக இதுபோன்று கடைகளில் பெண்கள் அமர்வது மேற்பார்வை பார்ப்பது இதெல்லாம் இதற்கு முன் என் குடும்பத்தில் நடந்ததில்லை. வியாபாரத்தை காலம் காலமாகச் செய்து வந்தாலும் அது ஆண்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்டது. இதை நேரடியாக, கிண்டலாக, வினையமாக,பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். அந்தக் கிண்டலும் கேலியும் இன்னும் ஆர்வமாக என்னைக் கற்றுக்கொள்ள வைத்தது என்றே சொல்லலாம். கேலி கிண்டலை விட மனிதனை சீண்டிவிடும் விஷயம் வேறெதும் உண்டா என்ன? 

ஒன்று….ரெண்டு..மூன்று என்று வருடங்கள் ஓட ஆரம்பித்தது. என்னுடைய பிள்ளைகளும் என்னுடைய உதவியை எதிர்பார்க்கும் வயதைக் கடந்து விட்டதாலும், நம்மில் ஒருவர் வியாபாரத்தில் இணைந்து கொள்வதில் ஆண் பெண் என்ற பேதம் எல்லாம் அநாவசியம் என்பதை என் குடும்பம் உணரவும் இந்த கால அவகாசம் தேவைப்பட்டது. அது அது அப்படியே காலத்தோடு ஓட ஆரம்பித்தது. 

அன்றாடம் எத்தனையோ பேர் பொருள் வாங்க வருகிறார்கள். நாமும் விற்கின்றோம். சிலர் பரீட்சமானவர்களாக மாறிவிடுவதுண்டு. மெலிந்த தேகத்துடன் அழுக்கு டீ சர்ட், அழுக்கு துண்டு சகிதம் வரும் ஒருவன் அந்த பொருளுக்குரிய சரியான விலையை சில்லறைகளாக கொடுப்பான். பொருளைப் பெறுவான், கிளம்பிவிடுவான். இது பலமுறை தொடர்ந்திருக்கிறது. வேறு பேச்சுக்கு இடமில்லை. அவனுக்குப் பேச வருமா என்று எங்களுக்குத் தெரியாது

அன்று இரவு 8.50 விரைவு வண்டியில் வந்து இறங்கினேன். வீட்டுக்கு செல்லும் அவசரம். மழை வேறு இந்தா வர்றேன் என்று காட்டாப்பு காட்டிக் கொண்டிருந்தது. ரயில் நிலையத்தின் வெளியே மழைக்கு சிலர் ஒதுங்கி நிற்கின்றனர். ஒரு மூலையில் மூட்டை முடிச்சுடன் நிற்கும் அவனை எங்கேயே பார்த்தது போல இருக்கின்றதே என்று மறுமுறை மறுமுறை ஞாபக அடுக்குகளை வேகமாக ஓட்டிப் பார்க்கிறேன். பலன் இல்லை. 

அவன் மூட்டையிலிருந்து ஒரு 200 மில்லி …..டப்பாவை எடுத்து ஒரு ரூபாய் நாணயத்தை கொண்டு நெம்பித் திறக்கின்றான். ‘ஆஹான்..’. புரிந்து போனது. இரண்டு நாட்களுக்கு முன்னே நான் எடுத்துக் கொடுத்த அதே 200 மில்லி … ..டப்பா தான். அதை எப்படிக் கண்டுபிடித்தேன் என்று கேட்கிறீர்களா? அந்தப் பொருளின் அடக்க விலையை ஒரு விலாசத்தில் எழுதி இருப்போம். அதைக்கற்றுக்கொள்ள தலைகீழாக நின்று தண்ணி குடித்தேன் என்பது வேறு கதை. அந்த டப்பாவில் இருந்த சற்று அடர்த்தியான திரவத்தை துண்டில் ஊற்றி கசக்கி மூக்கில் நுகர்கிறான். மூக்குப்பொடியை ஒற்றை மூக்குத் துவாரத்தில் உறிஞ்சி உள்ளே இழுப்பார்களே அதே போல… பற்களுக்களுக்கும் உதட்டுக்கும் இடையில் கசக்கி வைப்பார்களே அதே போல… 

பள்ளி நாட்களில் சிகரெட்டை ஒரு முறையேனும் புகைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருந்தது. ஒரு காலத்தில் அப்பா சிகரெட் பிடித்து கொண்டிருந்தார். அதனால் ஒன்றிரண்டு சிகரெட்டுகளை ஆட்டையைப் போடுவதில் அத்தனை சிரமம் இல்லை. ஆனால், அதை எப்படி புகைப்பது என்றுதான் தெரியவில்லை. 

‘ஏய் வீரா, உன் ஆளு தம் அடிப்பான் தானேடி… மரியாதையா நாளைக்கு அவன் கிட்ட கத்துக்கிட்டு வர்ற’ என்றோம். 

‘இங்க பாருங்க..டீ சிகரெட்டை பற்ற வைத்தவுடன் டீப் பிரீத் எடுத்து ரிலாக்ஸாக புகையை வெளியே விடனும்….அவசரப்படக்கூடாது’ என்று சர்வசாதாரணமாக இந்த ஹைபிஸ்கஸ் படத்தை ரெக்கார்ட் நோட்டின் நாலாவது பக்கத்தில் வரைந்து பாகம் குறி என்பது போல சொல்லி முடித்தாள்.

ஆர்வமிகுதியில் பற்ற வைத்து நான் ஒரு இழுதான் இழுத்தேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவேயில்லை. அந்த சிகரெட் புகை, உள்ளுக்குள் போனதும், நடுமண்டைக்கு ஏறி ‘சுர்’ரென்று அடித்து, நுரையீரலில் பரவி நெஞ்சு முழுவதும் காந்தி எரிந்தது. கண்களுக்குள் மிளகாய் பொடியைத் தூவியது போன்ற எரிச்சல். மூக்கு வாய் என்று அனைத்தும் எரிந்தது.

பிடித்திருந்த சிகரெட்டை தூக்கி எறிந்தவள்தான். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இரும ஆரம்பித்தேன். பக்கத்தில் இருந்தவள் ஆடிப்போய் சிகரெட்டை அப்புறப்படுத்த, இன்னொருத்தி, ‘நாயே…. நாயே இதெல்லாம் தேவையா? இந்தா தண்ணியக்குடி’ என்று என் தலையில் தட்டி நெஞ்சைத் தடவிய பின் கொஞ்சம் என்னைச் சரி செய்து கொண்டு, ‘இதைப் போய் உன் ஆளுக்கிட்ட சொல்லக்கூடாது. சொன்ன..தொலைச்சிடுவேன்! அவன் கேட்டா நாங்க எல்லோரும் ஆளுக்கு ஒன்னு ட்ரை பண்ணினோம்னுதான் சொல்லணும்’ என்று வீரா என்கிற வீரலட்சுமியிடம் கறாராகச் சொன்னேன். 

இந்த சிந்தனைகளுடன் அவனை கவனிக்கிறேன். தலைவர் சொக்கிப்போய் உட்கார்ந்து இருந்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் பரவச நிலையை அடைவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தக் காட்சி என்னை ஒரு விதத்தில் அலைக்கழித்தது. அந்த 200மில்லி …..டப்பாவின் பயன்பாடு இது கிடையாதுதான். நானே என் கையால் எடுத்துக்கொடுத்தது பாவிப்பய இதை இப்படி டோப்பு போல பயன்படுத்துறானே. இதுக்கு நானும் ஒரு காரணமா? 

இது தேவையில்லாத ஆணி என்று எனக்கே புரிகிறது. அப்புறம் டாஸ்மாக்கடையில் வேலை செய்றவன், பெட்டிக்கடைக்காரன் எல்லாம் இதைப்பற்றியா கவலைப்படுறான். அவன் அவன் நல்ல சோறு திண்றதில்லையா இல்லை பொண்டாட்டி கூட குடும்பம்தான் நடத்திறதில்லையா.. போவியா ன்று எனக்கு நானே சமாதானமும் செய்து கொண்டேன். 

இரண்டு நாட்கள் கழித்து கடைக்கு வந்தான். ஸ்டாக் இல்லை என்று பொய் சொன்னேன். அதே பொய்யை மறுபடி மறுபடி சொன்னேன். கடைப் பையன்கள் எனக்கு பைத்தியம் பிடித்ததாக நினைத்துக் கொண்டார்கள். பத்து முறை வந்திருப்பான். என்னுடைய மறுப்புக்கு பதில் ஏதும் சொல்லாமல் சென்றுவிடுவான். ஆனால், மறுபடியும் வருவான். ஒரு கட்டத்தில் அவன் வருவது முற்றிலும் நின்று போனது. 

ஆனால், எனக்கு நிஜப் பைத்தியம் அதன் பின்தான் பிடிக்க ஆரம்பித்தது. யார் வந்து இந்தப் பொருளை வாங்க வந்தாலும் அவர்களை கூடுதலாக கவனிக்க ஆரம்பித்தேன். அவர்களுடைய கண்களை இன்னும் கூடுதலாக கவனிக்க ஆரம்பித்தேன். பள்ளிச் சிறுவர்கள் வாங்க வந்தால் ஒரு வித பதட்டத்தில் மீண்டும் மீண்டும் எதற்காக வாங்கிச் செல்கிறீர்கள் என்று கண்டிப்புடன் கேட்க ஆரம்பித்தேன். என்னுடைய கவனம் சிதற ஆரம்பித்தது. கல்லாவிலிருந்து மீதிப் பணத்தைக் கொடுக்கும் போது கூடவும் குறைத்தும் கொடுக்க ஆரம்பித்தேன். வங்கி பரிவர்த்தனைகள் மூலம் வரும் பணம் வந்து சேர்ந்ததா என்பதை கவனிப்பதில்லை. 

‘உனக்கு பைத்தியமாடி பிடிச்சிருக்கு.. போய் சிஸ்டத்தில் அடிச்சுப் பாரு.. இந்த அதிசிவ் கேட்டகிரியில் மொத்தம் பதினேழு பொருட்கள் விற்கிறோம். வாங்குற ஒவ்வொருத்தனும் அதை டோப்படிக்க பயன்படுத்துறானான்னு கண்டுபிடிக்கிறதுதான் உன் வேலையா?’ என்று கணவரும் என்னைக் கடிந்துகொண்டார். 

எனக்கு மிகப் பிடித்த, எட்டு வருடங்களாக என்னைத் தயார்படுத்திக் கொண்ட வியாபாரத்துக்கு நான் தகுதியே இல்லாதவளோ என்ற எண்ணம் அனுதினமும் ஆட்டிப் படைத்தது. கடைக்குப் போகாமல் இருந்து பார்க்கலாம் என்றால் தலைவலி மண்டையை உடைக்க ஆரம்பித்தது. அப்போதுதான் எனக்கு ஒன்று தெளிவாகப் புரிய ஆரம்பித்தது. அவன் அந்த 200மில்லி …….க்கு அடிமையானது போல நான் இந்தக் கடைக்கு அடிமையாகிவிட்டேன். 

இந்த இடத்தில் நீங்கள் கூட நினைக்கலாம், ‘ஏம்மா, இதெல்லாம் என்ன அவ்வளவு பெரிய விஷயமா ? மூக்கு பொடப்பா இருந்தால் இப்படி எல்லாம் யோசிக்கத் தோணும் என்பது போல வேறு கவலை மயிரு இல்லை போல இந்தப் பொம்பளைக்கு’ என்றுகூட நினைக்கலாம். தப்பே இல்லை. ஆனால் பாருங்க, ஸ்மால், மீடியம், லார்ஜ் எனும் பிரச்சனைகளின் அளவு ஆளுக்காள் வேறுபடுகிறதே.

சத்தியமாக என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதாவது வழி கிடைக்குமா? யாராவது மீட்க மாட்டார்களா? எதாவது இதுபற்றி படித்திருக்கிறோமா? நண்பர்களுக்கு இது போன்ற தலை வலி வந்து கேள்விப்பட்டிருக்கிறோமா என்று வெகுவாக யோசித்தேன். பிறரின் அனுபவத்திலிருந்து பாடம் படிப்பதுதானே புத்திசாலித்தானம். 

மழை வேறு ‘நச நச’ என்று பெய்து தொலைக்கிறது. துணிகள் காய்ந்தும் காயாமலும் ஈர வாடை அடிக்கிறது. எந்த இலக்கும் இல்லாமல் தொலைக்காட்சிப் பெட்டியை பார்க்கின்றேன். அது பெட்டி வடிவத்தை இழந்து மாமாங்கம் ஆகிவிட்டதுதான். பெரிய சைஸ் சிலேட்டு போன்ற திரையில் ஸ்நேகாவும் பிரசன்னாவும் மழையை ரசித்த வண்ணம் டீ குடிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் துணிகளை கம்ஃபோர்ட் போட்டு துவைத்துள்ளார்களாம். ஈர வாடை துணிகளில் வீசாதாம்.அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களாம். ஹம்.. துணிகளில் ஈர வாடை வருவது அத்தனை துன்பியலானது போல..அதனால்தான் இத்தனை லட்சம் செலவு செய்து இந்த விளம்பரத்தை எடுத்துள்ளார்கள். நமக்குத்தான் அது சின்ன விஷயம் போல . 

சிநேகாவை பார்த்தால் பல நேரங்களில் ஜாய் சிஸ்டர் நினைவுக்கு வருவாங்க. 

மொத்த வகுப்பும் கண்ணீரோடு நிற்கின்றோம் . ஜாய் சிஸ்டர் செயின்ட் ஆன்ஸ் கான்வென்ட்டிலிருந்து மாற்றப்பட்டு நாகர்கோவிலில் இயங்கும் இன்ஃபான்ட் ஜீசஸ் பள்ளிக்குச் செல்ல இருப்பதாக வந்த செய்திதான் காரணம். சிஸ்டர் அப்பொழுதும் சிரித்த முகமாகவே நிற்கின்றார். 

“சிஸ்டர், நாங்க உங்க செல்லம் இல்லையா? எங்களைப் பிரிவது உங்களுக்கு கஷ்டமாவே இல்லையா?” என்று துடுக்காக நான்தான் கேட்டேன். 

சிஸ்டர் சிரித்துக்கொண்டே, “செல்லம்தான்.. அங்க இன்னும் கொஞ்சம் செல்லங்கள் காத்துக்கொண்டு இருக்காறாங்களே. அவங்களும் பாவம் இல்லையோ?” என்று கேட்டுவிட்டு, “எது ஒன்று நம்மைக் கட்டிவைக்கிறதோ எதிலிருந்து வெளிவரும்போதுதான் நமக்காக ஒரு பெரிய வானம் காத்துக் கொண்டிருப்பது தெரியும். டோன் கெட் ஸ்டக்டு மை சில்ரன். ச்சியர் அப். நீங்க எல்லாரும் பெரியவங்க ஆன பின்னே எப்போதாவது ஜாய் சிஸ்டரை நினைத்துக் கொள்ளுங்கள்” என்று அவர் சொல்லிச் சென்றது இப்போது சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வருகிறது 

எது ஒன்று நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதோ அதிலிருந்து பக்குவமாக விடுவித்துக் கொள்வதுதானே போதைகளிலையே பெரும்போதையாக இருக்க வேண்டும். ஒன்றிலிருந்து விடுபட இன்னொன்று தேவைப படுகிறது. ஆனால், இந்த முறை அந்த இன்னொன்றின் லகானை இறுகப்பற்றிக் கொள்ளப் போவதில்லை.

போதையிலிருந்து தானே மீட்சி பெற்றவன் இன்னொன்றின் மீது பற்று வைப்பதில்லை. இதை எனக்கும் அவனுக்கும் சேர்த்தே சொல்லிக்கொண்டேன். இதனை பயிற்சியாகவே செய்து பார்க்கத் துணிந்து விட்டேன். அதன் தொடர்ச்சியாக குடுகுடுப்பைக்காரியாக எனக்குத் தெரிந்தை உங்களுக்கு கதையாக சொல்லிவிட்டேன் நம்புவதும் நம்பாததும் உங்கள் சமத்து. ஜெய் ஜக்கம்மா!!! 

**********

sabithakadher786@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button