நொடிக்கும் நொடிக்கும் இடையே
ஒரு நொடிக்கும் அடுத்த நொடிக்கும்
இடையில் நடப்பது எதுவும் உண்டா?
மைக்ரான் உலகம் உருவானது
அதில் பிரவேசிக்க நுண்ணுயிர்கள் தோன்றியது
மில்லி மீட்டர் தூரத்தை மில்லி செகண்டுகள் கடந்தன
பல கோடி இடையீடுகளை என் கைபேசி ராட்சன் கேட்டு செயல்படுத்தியது
சில மெகா பிக்சல் இயங்கி இருந்தது
அங்கே ஒரு மலை புரண்டது
கடல் வானேறி குதித்தது
கைபேசி என் முக அழகில் மயங்கி தானே தன் பூட்டை திறந்தது
இப்போது என்னுள் கடல் ஏகி குதித்தது
என் மேல் வானம் கவியத் தொடங்கியது
நானே பூவியீர்ப்பு மையம் ஆனேன்
அப்போது
முகம் மட்டும் மூன்று மடங்கு பிரகாசமாகியது
இனி என்ன வேண்டும் இவ்வுலகில்
நொடியும் மற்றறொரு நொடியும்
இணையும் அந்த சிறு இடைப்பட்ட நேரம் மட்டும்
போதாதா சுய காதல் செய்ய?
பின்னர் நிகழ்ந்தது எல்லாமே சாதாரணம் தான்.
இல்லாமல் போன கடல்
அலைகள் புரளும்
பெருங்கடலை எப்படி பார்ப்பீர்கள்?
உயிர் காதலை அணைத்து கொள்ள துடிப்பது போல
கைகளை பரப்பி நீட்டி?
அற்புத கலைவடிவை ரசிப்பது போல
கண்களை அலக விரித்து?
பரவசம் பொங்க?
நான் பார்க்கும் கடல்
நான் பார்க்க சிறுமியாய் இருந்து குமரியாய் சமைந்த கடல்
கன்னிக் கடல்
மீன்களில் இடை கவ்வலுக்கு துள்ளி தவிக்கும் கடல்
படகின் நுனி துளைத்து முன்னேறுகிறது
கடல் அந்த நேரத்தில் தன் வலியை எப்படி வெளிபடுத்தும்
ஸ் என்ற சத்தத்தோடு புரண்டு விழுமது நான் பார்க்கிறேன்
அந்த அவஸ்தை வலியா வேறு எதுவுமா?
நான் பார்க்கிறேன்
கண் எங்கும் கடல்
கண்களை மூடி பார்க்கிறேன்
கடல் இல்லாமல் போவதை.