
தவிப்பு
ஆரத்தழுவும் போதெல்லாம்
பிரிவைப் பற்றியே பேசுகிறாய்.
முத்தங்கள் இடுகையில் இதுவே
கடைசியாக இருக்குமென்று
சற்று அதிகமாகவே
இதழோடு இதழ்
உறைந்து கிடக்கிறாய்.
நடக்கின்ற பொழுதுகளில்
கைகளைக் கோர்த்து
இன்னும் இறுக்கமாக
அணைத்து நடக்கிறாய்.
எப்போதும் யாரோ ஒருவர்
என்னை உன்னிடமிருந்து
பிரித்து விடுவார்களென
அச்சத்தோடு இருக்கிறாய்.
எந்த நிலையிலும் எதனாலும்
‘உன்னை நான் பிரியமாட்டேனென’
என்னிடம் சத்தியம்
வாங்கிக் கொண்டாய்.
பின்னர்,
அவ்வாறு நிகழ்ந்ததும்
எதிரில் பார்த்தாலும்
முன்பின் தெரியாதவராக
பாசாங்கு செய்கிறாய்.
நானோ
“காதல் வைத்து காதல் வைத்து
காத்திருந்தேன்”
பாடலைக் கேட்டுக் கொண்டு
நினைவுகளில் மூர்ச்சையாகிறேன்.
000000
ஒரே ஒரு பொய்
இன்று நான்
உங்களிடம்
எனக்குச் சிறியதாக
தோன்றக்கூடிய
ஒரேயொரு பொய்யை
கூறப் போகின்றேன்.
அது உங்களுக்கு
மிக மிகப் பெரியதாக
இருக்கக்கூடும்.
ஏன்!!!
அது உங்கள்
வாழ்க்கையையே
தலைகீழாக
மாற்றி விடலாம்
இல்லையேல்
அது உங்களை
உங்களின் குடும்பத்திடம்
இருந்தும்கூட
பிரித்து விடலாம்
அல்லது
உங்களை உங்களின்
காதலனுடன்/ காதலியுடன்
சேர்த்து விடலாம்
இல்லை
உங்களுக்கு மிகவும்
பிடித்த நபர்
உங்கள்மீது வைத்திருக்கும்
மரியாதையை/ நம்பிக்கையை
நான் கூறப்போகும் பொய்
தகர்த்தும் விடலாம்.
ஆனால், நான்
அதைப் பற்றியெல்லாம்
கவலைப்பட போவதில்லை;
எப்படியாயினும்,
இன்று ‘அந்தப் பொய்’ஐ
நான் கூறத் தான் போகிறேன்;
எதிர்காலத்தில் எப்படியும்
அது ‘உண்மை’யாக
மாறிவிடும்
என்ற நம்பிக்கையில்.