
ஒரு பழைய திரைப்படம். ‘என் மனைவி’ என்பது படத்தின் பெயர். மொத்த படத்தையும் நடிகர் சாரங்கபாணிதான் தாங்கியிருப்பார். அவருக்கு அப்போது வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். கதாபாத்திரமும் அந்த வயதிற்குரியதே. தன் மனைவி மேல் சந்தேகம் கொண்டு செய்யும் அசட்டுத் தனங்களும், துப்பறியும் ‘சாகசங்களும்’ தான் கதை. படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஒரு காட்சி கூட சோர்வு தட்டாமல் எடுக்கப்பட்ட படம் இது. ஐம்பது வயதான ஒரு நபரை படம்முழுக்க கதாநாயகனாக பார்க்க வேண்டி இருந்தது குறித்து யாருக்கும் குற்றச்சாட்டு இல்லை என்பதைப் படத்தின் வெற்றி காட்டிக் கொடுத்திருக்கிறது. ‘என் மனைவி’ மட்டுமல்ல; பல படங்கள் கதாநாயகர்களுக்கு இருக்கும் குணாதிசயங்களை மீறியே வெளிவந்து வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழ்த் திரைப்படங்கள் கதாநாயகர்களின் கதாபாத்திரத்தை எப்படியெல்லாம் வடிவமைத்திருக்கிறது என்பதை யோசிக்கும்போது மிகுந்த சுவாரஸ்யம் தருகிறது. தொடக்க காலத்தில் புராண கதாபாத்திரங்களும், கடவுளர்களும் கதாநாயகர்களாக இருந்தார்கள். ராமரும், விஷ்ணுவும், நாரதரும், சிவனும்தான் கதாநாயகர்கள். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சற்று முந்தைய வருடங்களிலும் அதன் பின்னரும் சமூக சீர்திருத்த கருத்துகளைப் பேசும் கதாபாத்திரங்கள் கதாநாயகர்களாக ஆனார்கள். இவர்கள் அடுத்ததாக புரட்சி பேசும் கதாநாயர்களாக மாறினார்கள்.
அதன் பின் குடும்பத்தை நடத்திக் கொண்டு போகும் குடும்பத் தலைவர்கள் கதாநாயக கதாபாத்திரமானார்கள். ஒரு கதாநாயகனுக்குரிய அம்சங்கள் என்பது அவன் சண்டையிட வேண்டும், கதாநாயகியை தன்னை நோக்கி இழுக்க வேண்டும், சமூகத்துக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதாக மாறுவதற்கு எம்ஜிஆர் தொடர்ந்து வேலும் கம்பும் சுழற்றி நின்றார். அவர் காலத்திய மற்றொரு உச்ச நட்சத்திரமான சிவாஜி கணேசன், ஒரு கதையில் தன் பங்கு என்ன என்பதை யோசித்தார். எம்ஜிஆர் மாறுபட்டு தனக்கான கதை எது என்று தேர்ந்தெடுக்கத் தொடங்கினார். இவர்கள் இருவருக்குமான கதைகளைக் கடந்து உணர்வுப்பூர்வமான கதைகளை சொல்ல விழைந்த இயக்குனர்களின் தேர்வாக இருந்தார் ஜெமினி கணேசன். காதல் தோல்வி , குடும்பத்திற்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வது, விரக்தியான மனம் கொள்வது, பிறகு கதாநாயகிகளை நோக்கி பெரும் சாமர்த்தியங்கள் காட்டாமல் தன் வழி வருபவர்களைக் காதலிப்பது போன்ற பாத்திரங்களுக்கு ஜெமினி கணேசன் சரியாகப் பொருந்தினார்.

சிவாஜி கணேசன் கதைகளுக்குள் தன்னை பொருத்திக் கொண்டார் எனினும் அவரால் சுமைதாங்கி, வெள்ளிவிழா, கல்யாணப் பரிசு போன்ற படங்களைத் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. இந்தப் படங்கள் நாயகிகளை மையமாகக் கொண்ட படங்கள் மற்றும் நாயகன் கடைசி வரை தோற்ற ஒருவனாகவே விரக்தியில் உழலும் பாத்திரங்கள். இதனை சிவாஜி ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. ஏனெனில் ஒரு படத்தில் சிவாஜி நடித்தார் என்றால் அந்தக் கதாபாத்திரம் மிக வலுவானதாக இருக்கும். உதாரணத்துக்கு கந்தன் கருணையை எடுத்துக் கொண்டால் படம் முருகனைப் பற்றியதாக இருந்தாலும் அதில் முருகனாக நடித்த சிவகுமாரை விட வீரபாகுவாக நடித்த சிவாஜிதான் முன்நிற்பார். சரஸ்வதி சபதம் மாதிரியான படத்தையும் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். மூன்று கதாநாயகிகளை சுற்றிய கதை. ஆனால் மையச்சரடுகளை சிவாஜியே ஏற்றிருப்பார். இது அவர் கதையை ஏற்றுக்கொண்ட பாணி. ஒரு படத்தில் கதாநாயகி நாயகனுக்கு இணையான பங்களிப்பையும் குறிப்பாக அடுக்குமொழி வீரவசனமும் பேசுவார் என்றால் நிச்சயம் அந்தப் படத்தில் எஸ்எஸ் ராஜேந்திரன் சரியாகப் பொருந்திப் போவார்.

இவர்களுடைய காலகட்டத்தில் இணைந்த ஜெய்சங்கர் தேர்ந்தெடுத்த கதைகள் அவருக்கென ரசிக வட்டத்தை உருவாக்கியது. துப்பறியும் கதைகள், கௌபாய் படங்கள், தன்னை மட்டுமே முன்நிறுத்தாத கதாபாத்திரங்கள் என ஜெய்சங்கர் தன் பலம் பலவீனம் அறிந்த ஒருவராக இருந்ததால் அவரால் தளபதி வரை தன்னுடைய இருப்பினை சரியாகத் தக்க வைக்க முடிந்தது. இது தெரிந்துதான் தன் கதைக்கு கதாநாயகன் ஒரு கதாபாத்திரமாக இருந்தால் போதும் என நினைத்து கே.பாலச்சந்தர் ஜெமினி கணேசன் மற்றும் ஜெய்சங்கரைத் தன் படங்களில் பயன்படுத்திக் கொண்டார்.

எம்ஜிஆர் தீவிர அரசியலில் ஈடுபட்டு தமிழக முதல்வரும் ஆன பின்பு அவருடைய இடம் வெற்றிடமாகப் போனது. அதை சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் என எவராலும் நிரப்ப இயலவில்லை. அப்போது அனைவருமே சற்று வயது கூடிப் போயிருந்தனர். அதையும் மீறி சிவாஜி கணேசன் ஆடிப்பாடி முயற்சி செய்த படங்கள் அவருக்கே ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்திருக்கும். அதனாலேயே முதல் மரியாதை போன்ற படங்களில் சிவாஜி தன்னை வெளிப்படுத்தினார்.
இந்தக் காலகட்டம் தமிழ்த் திரைப்படத்தின் போக்கை சற்று மாற்றியது என்று சொல்லலாம். டி.ராஜேந்தர், பாக்யராஜ் என நாயக பிம்பத்துக்கு அந்நியமானவர்கள் திரைக்கு வந்தார்கள். அவர்களே இயக்குநர்களாக தங்களது கதாபாத்திரத்தை வடிவமைத்ததால் எது சரியாக தங்களுக்கு கைகொடுக்கும் என்று புரிந்து வைத்திருந்தனர். இது நம்பிக்கையை ஏற்படுத்திய காலம். டிஆரையும், பாக்யராஜையும் மனதில் கொண்டு சென்னை நோக்கி சினிமாவுக்காக வந்தவர்கள் அதிகம். ‘நான் ஜெயிச்சிட்டேன்..உங்களால முடியாதா?’ என்றுதான் அவர்கள் தங்கள் படங்கள் வழி இளைஞர்களுக்கு செய்தி சொன்னார்கள்.

டிஆர் படத்தினை இன்று பார்க்கிறபோது அதில் தொழில்நுட்பம், திரைக்கதை என பலவற்றைக் குறித்த போதாமை இருந்தாலும் அதை மீறி ஒரு புள்ளியில் கதையை நோக்கி நம்மைத் தள்ளிவிடும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஒரு நாயகன் ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளைக் கைபிடிப்பதே கதைகளின் போக்காக அதற்கு முன்பாக இருந்தன. ஆனால், டிஆர் தன் படங்களில் காதல் தோல்வியை புனிதப்படுதினார். காதலித்து தோற்றுப் போனால் கூட பரவாயில்லை; நமக்கு டிஆரின் பாடல்கள் உண்டு என்று இளைஞர்கள் நினைத்திருக்கக்கூடும். இவர் அளவுக்கு காதல் தோல்வியை தமிழில் எடுத்துச் சொன்னவர் எவருமில்லை. ஒரு காலகட்டத்தின் நாயகர் அவர்.
பாக்யராஜ் அவர்கள் தான் சந்தித்த கதாபாத்திரங்களை கதைக்குள் கதாபாத்திரங்களாக அழைத்து வந்தார். தந்தை இல்லாத குடும்பத்தில் தங்கைகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டிய அண்ணன், பார்க்கும் பெண்களை எல்லாம் பற்றி கனவு கண்டு வெட்டியாகப் பொழுதை போக்கும் இளைஞன், மனைவி இறந்த பிறகு கைக்குழந்தையோடு வேறு திருமணம் பற்றி யோசிக்காத தூய்மைவாதி, மனைவி மீது அன்பும் காதலும் இருந்தும் வேறு ஒரு பெண்ணை தீண்டிய ஒருவனின் மனநிலை இவை போன்ற கதாபத்திரங்களை அவர் சொல்லியவிதம் எல்லோருக்கும் தங்களையும் தங்கள் சுற்றத்தில் உள்ள நபர்களையும் நினைவுபடுத்தியது. பாக்யராஜின் கதாநாயக வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இது. பாக்யராஜ், டிஆர் போன்றவர்களுக்குப் பின் பாண்டியராஜன், பார்த்திபன், மணிவண்ணன், ஆர்.சுந்தராஜன், ராஜ்கிரண் என இயக்குநர்கள் நடிகர்களானார்கள். அது சேரன், கரு.பழனியப்பன், மிஷ்கின், செல்வராகவன், அமீர், சமுத்திரக்கனி, சசிகுமார் என நீள்கிறது. வேறு எந்த மொழியிலும் இப்படியான மாற்றங்கள் நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகமே.

ஒரு காலகட்டத்து கதாநாயர்கள் மேடையேறி பாடுபவர்களாக ஆடுபவர்களாக இருந்தனர். நாயக நாயகிகள் ஒரே கல்லூரியில் படிக்கிற கதைகள் அதிகம் வெளிவந்தன. கிராமப்புற , மத்தியத்தர பெண்கள் இருபாலர் படிக்கும் கல்லூரிகளில் எண்பதுகளின் மத்தியில்தான் சேரத் தொடங்கியிருந்தனர். இதன் பாதிப்பு கதைகளிலும் இருந்தது.
ஒரு பக்கம் ரஜினிகாந்த் மிக அடர்த்தியான கதைகளில் நடித்தார். ஆறு முதல் அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் மாதிரியான படங்கள். கமல்ஹாசன் சிறு வேடங்கள் தொடங்கி நாயக அந்தஸ்த்துக்கு உயர்ந்து வெவ்வேறு விதமான் கதாபாத்திரங்களை ஏற்றுக்கொண்டிருந்தார். ரஜினி, கமல் இருவரின் நடிப்பையும் போக்கையும் மாற்றியதில் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களது பங்கு நாம் அறிந்ததே. தில்லுமுல்லு மாதிரியான படத்தில் தொடங்கிய ரஜினியின் நகைச்சுவை நடிப்பு அப்போது பிரபலமானது. மாப்பிள்ளை, தம்பிக்கு எந்த ஊரு, ராஜா சின்ன ரோஜா, தர்மத்தின் தலைவன் போன்ற படங்களில் ரஜினி முதல் பாதியில் நகைச்சுவை கலந்த நடிப்பையும் பின்பாதியில் கதைக்குள் தீவிரமாக ஒன்றினைவதையும் வழக்கமாக்கியிருந்தார். இன்று வரை ‘மாஸ் ஹீரோக்கள்’ நடிக்கும் படங்களின் ஃபார்முலா இதுவாகத்தான் இருக்கிறது. ரஜினிகாந்த் எல்லோரையும் விட வசூல் சாதனைகளை செய்ததன் காரணம் அவர் தன் ரசிகர்களைத் தெரிந்து கொண்டதால்தான். ரஜினியின் படங்களில் பாட்ஷா, அதன் பிறகான பல நாயகர்களின் கனவுப் படமானது.. கமலைப் பொறுத்தவரை அவர் எப்போதுமே தன்னை கதாநாயகனாக காட்டிக் கொள்வதை விடவும் கதாபாத்திரமாக வெளிப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து பார்த்துவிட வேண்டும் என்பதில் அவர் கொண்டிருக்கிற தீவிரம், தென்னிந்தியாவின் மீது இப்போது வரை ஒரு ஆச்சரியத்தை மற்றவர்களுக்கு தந்து கொண்டிருக்கிறது.

ரஜினி கமல் இருவருக்கும் இணையாக வசூல் தந்தவர் விஜயகாந்த். நகைச்சுவை, அப்பாவித்தனம், ஆக்ரோஷம், புதுமையான கதைகள் இவற்றோடு முக்கியமாய் திரைப்படக் கல்லூரியில் இருந்து வெளிவரும் மாணவர்களின் படங்களுக்கு முக்கியத்துவம் தருவது என அவர் தனி பாணியினைக் கொண்டிருந்தார். விஜயகாந்த் நடிக்கும் படங்களில் அவர் ஒருவரே மொத்த பயங்கரவாதக் கூட்டத்தையும் காலி செய்கிறார் என்று சொன்னாலும் நம்பத் தயாராக இருக்கும் அளவுக்கு அவர் தன்னை வடிவமைத்திருந்தார். அவரது சண்டைக்காட்சிகளுக்கு பெண்களும் கூட ரசிகையாக இருந்தனர். கிராமத்தில் இருந்து வந்த அசல் முகம் என்பதால் நகர்ப்புறத்தினை விட அவருக்கு குக்கிராமங்களிலும் ரசிகர்கள் மத்தியில் ‘நம்மாளுப்பா’ என்கிற நெருக்கத்தை அது ஏற்படுத்தித் தந்தது. திரையில் அவர் ஜெயிக்கிறபோது அவர்கள் குதூகலம் அடைந்தார்கள். அதனாலேயே அவரது படங்கள் மீண்டும் ரீலிஸ் ஆனாலும் கூட அதே வசூலைப் பெற்றுத் தந்தது. வேறு யாருக்கும் கிடைத்திராத வாய்ப்பு இது. நடிகர்கள் அரசியலிலும் ஜெயிக்க முடியும் என்பதை வலுவாக நிரூபித்த சமீபத்திய உதாரணம் அவர்.

சத்யராஜ் , பிரபு , கார்த்திக் , அர்ஜுன், மோகன் போன்றவர்களின் படங்கள் வெள்ளிவிழா கண்டு கொண்டிருந்தன. புதிதாய் கதை சொல்லலாம் என்று அப்போது வந்த இயக்குநர்களின் தேர்வாக இவர்கள் இருந்ததும் ஒரு காரணம்.
இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன் பாலு மகேந்திரா என இவர்கள் தங்களது கதைகளில் தெளிவாக இருந்தனர். எங்களது படங்களுக்கு கதை முக்கியம். அதில் பொருந்தக்கூடிய நாயகன் தனித்து தெரிய வேண்டியதில்லை..உறுத்தாமல் கதைக்குள் இருந்தால் போதும் என்று முடிவு கொண்டிருந்தனர். இதன் பலனாக பாண்டியன், ராஜா, நெப்போலியன், சுதாகர், சரத்பாபு இவர்கள் எல்லாருக்குமே நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தன.
மணிரத்னம் தனது படத்தில் வரும் எவருமே மற்ற படங்களைப் போல அல்லாமல் தன்னுடைய அலைவரிசைக்குள் வர வேண்டும் என நினைப்பவர். அரவிந்த்சாமி, மாதவன் போன்றவர்களை இவர் அறிமுகப்படுத்தியதுமே அவர்கள் தவிர்க்க முடியாத இடங்களுக்கு சென்றுவிட்டனர். அரவிந்த்சாமியின் வருகை தமிழகத்தில் பேசுபொருளானது. அழகான தோற்றம் உடைய ஹீரோ என்பதன் அர்த்தம் அரவிந்த்சாமி என்றானது. அப்பாஸ் அந்த இடத்துக்கு அருகில் வந்து தனது நடிப்பால் அதை இழந்து நின்றார்.

அஜித், விஜய்யின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆரம்ப காலங்களில் தேர்ந்தெடுத்த கதைகளும் இயக்குநர்களும் முக்கிய பங்கு கொண்டிருந்தனர். காதல் கதைகளின் போக்கு மாறிய நேரம் விஜய், அஜித் அதில் பொருந்தினார்கள். மெல்லிய சோகமும், குதூகலமும் கொண்ட இவர்களது படங்கள் இருபத்தைந்து வருட காலத்துக்குப் பிறகும் அவர்களை நிலைநாட்டியிருக்கிறது. மிக மெதுவாக திட்டமிட்டே ‘ஆக்ஷன்’ படங்களில் இருவரும் நடித்தனர்.
சில நடிகர்கள் முதல் படத்திலேயே தங்களை மாஸ் ஹீரோவாக காட்டியே ஆக வேண்டும் என்று எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் சறுக்கியிருக்கின்றன. இங்கு நிலைத்து நின்ற கதாநாயகர்கள் எல்லோருமே முதல் சில வருடங்களில் நடித்த படங்களில் கதைக்கே முக்கியத்துவம் தந்திருந்தார். தங்களது நடிப்பின், உடல்மொழியின் சாதக பாதகங்களைப் பார்த்தபின்பே அடுத்தடுத்த இடம் நோக்கி நகர்ந்தார்கள். இதை உணர்ந்து கொள்ளாதவர்கள் முதல் படத்திலேயே சிக்கிக் கொள்கிறார்கள்.

உலகம் முழுவதுமே நகைச்சுவை நடிகர்கள் படத்தின் நாயகர்களாக நடிப்பது சாதரணமான ஒன்று. அவை பெரும்பாலும் வெற்றியும் பெற்று விடுகின்றன. தமிழிலும் சபாபதி , என் மனைவி , எதிர்நீச்சல், நீர்க்குமிழி போன்ற படங்களை சொல்லலாம். சந்தானம், வடிவேலு, விவேக் இவர்களெல்லாம் கதையின் நாயர்களாக நடித்தபோது மக்களே ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே இருந்தார்கள். ஆனால், இதற்கு முன்பு நடித்த நகைச்சுவை நடிகர்களின் கதைத் தேர்வினை இவர்கள் பின்பற்றாமல் சர்வ வல்லமை பொருந்திய நாயகனாக தங்களைக் காட்டும் படங்களைத் தந்து தோல்வி கண்டனர்.

இன்று தொடர்ந்து வருகிற படங்களைப் பார்கையில் முற்றிலும் இரு வேறு திசை நோக்கி நாயக மைய படங்கள் பயணிப்பதைப் பார்க்கமுடிகிறது. விஜய் சேதுபதி, தனுஷ் போன்றவர்கள் இரண்டு விதமான படங்களில் நடிக்கிறார்கள். கதைக்கு முக்கியத்துவம், தங்களுக்கு இருக்கிற ரசிகர்களின் மனநிலை என இரண்டுக்குமே இருவரும் தயாராக நிற்கிறார்கள்.
மற்றொரு பக்கம் தெலுங்கு படங்கள் என்றாலும் இன்று தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த பாகுபலி, கேஜிஎஃப் – 1 & 2, புஷ்பா, RRR படங்களின் நாயகத்தனம் மிதமிஞ்சியுள்ளது. ஆனால், இவை பேசப்படவும் வெற்றிபெறவும் உள்ள காரணங்கள், இந்தக் கதாபாத்திரம் இதனைச் செய்ய வல்லது என்று கதையின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட நம்பகத்தன்மை தான். இதைத் தவறவிட்டு வெறும் நாயக துதி பாடிய படங்கள் எப்போதுமே பொதுமக்கள் மட்டுமல்லாமல் அந்த நடிகரின் ரசிகர்களின் ஆதரவையும் இழந்திருக்கின்றன. இதற்கு ஹீரோ, பீஸ்ட், வலிமை போன்ற படங்களை உதாரணமாக சொல்ல முடியும்.

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் வந்தபிறகு வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டன. கதையின் தேவை மிக அதிகமாக உள்ளது. உச்ச நட்சத்திரங்கள் தொடங்கி புதிதாய் நடிக்க வருபவர்களுக்கும் கதையின் முக்கியத்துவம் புரியத் தொடங்கியுள்ளது. வெறும் நாயக பிம்பம் கடந்து என்ன சொல்ல விழைகிறோம் ஒவ்வொரு படத்திலும் என்கிற அவசியம் முக்கியமானதாகிவிட்டது.
கொரிய, சீன மற்றும் ஹாலிவுட் படங்களின் தாக்கம் ஓய்ந்து தற்போது எடுபடுவதில்லை. அசலான படங்களைத் தேடித் தேடி மக்கள் சுலபமாக இன்று பார்த்துவிடுவதின் விளைவினால் அசலான கதைகளையே படைப்பாளிகள் சொல்ல வேண்டியிருக்கிறது.
மண்ணின் கதைகள் அல்லது சமூகத்திற்கான கருத்துகளைச் சொல்லும் படங்கள் நாயர்களின் தேர்வாக மாறியுள்ளது. அடுத்த தலைமுறை தானே தனியாக திரையரங்குக்கு செல்லும் வரை இது தொடரும். ஆனால், வருங்காலங்களில்தான் நாயகர்களுக்கு எதுவும் சவாலாக இருக்கப்போகிறது. அடுத்த தலைமுறை ரசிகர்கள் எல்லாம் தெரிந்து கொண்ட பின்பு எந்த அனுபவத்துக்காக திரையரங்குக்கு வருகிறார்கள் என்பதைக் கண்டு கொள்வதே அவர்களுக்கு பெரிய சவாலாக மாறும்..
ஆனாலும் திரைப்படங்களின் நாயகத் தன்மை வெவ்வேறு வடிவங்களில் நிலைபெற்றே இருக்கும்…!
*******