
ரணகள்ளியின்
சாறாய்
வழிந்தோடும்
சொற்களுக்கு
அடியில்
பதுங்கிக் கிடக்கும்
நாள்பட்ட தழும்பு
சூலுற்ற
மழைக்காலக்
குளம்
எல்லோர்க்கும்
அளித்த பின்
காகத்திற்கென
கலயத்தில்
எஞ்சியிருக்கும்
ஒரு கைப்பிடிச் சோறு
பள்ளி விட்டதும்
ஓடி வரும்
மழலைக்கென
பகல் முழுவதும்
காத்துக் கிடக்கும்
அம்மாவின் முத்தம்
உன் பிரியத்தின் திசை.
****
மரத்தின்
விரிந்த கைகளும்
போர்த்திய
உடையுமாய் நிற்கும்
அவளது வேர்க்கால்களில்
பாவி நிற்கிறது
ஆயிரமாயிரம்
நத்தைகளின் கூடுகள்
மேனியெங்கும்
ஊறும்
அட்டைகளின்
பசிக்கென
கொஞ்சம்
எஞ்சியிருக்கும்
கருணையில்
குளிர் காய்கின்றன
அன்பின் சொற்களாலான
பச்சையம்
அமர்த்திய
இலைகளின்
நிழல்கள்.
*****
கடல்
பார்த்து
நின்று கொண்டிருக்கிறேன்
அதுவும்
மனிதர்களைத்தான்
பார்த்துக் கொண்டிருக்கிறது
அலைகளிடமிருந்து
தப்பித்து
வளை புகுந்து கொள்ளும்
நண்டுகளுக்கு
அலைகளைத்
தெரிந்தால் போதும்
நாவாய் பற்றி
அறிந்து ஆவது என்ன?
சுடச்சுட
மணல் நனைத்து
விளையாடும்
மதிய வெய்யில்
கொஞ்சம்
தணித்துக் கொள்கிறது
அலைகளில்
சிறுசங்கு, கிளிஞ்சல்
பொறுக்கும்
சிறுமி
கடலைக் கொண்டு
செல்கிறாள்
வீட்டிற்கு.
****
பிரார்த்தனைக்கென உண்ணும்
மண்சோற்றுக் கவளத்தின்
பருக்கைகளில்
நிறைந்திருக்கும்
அன்பு
நான் இருக்கிறேன்
எனும்
ஒற்றைத் தலையசைவு.
********