
மார்கழி என்றாலே தலைமாட்டில் கோலப்பொடியுடன் உறங்குவேன். முதலில் கோலத்தை முடிப்பது யார் எனும் போட்டியில் கிழவி பஞ்சவர்ணத்திற்கு முதல் பரிசும், எனக்கு இரண்டாம் பரிசு வாயாற மட்டும் கிடைக்கும். கிழவி செத்தால் அந்த இடம் எனக்குத்தான். முதல் நாள் இரவே கிழவி கோலம் போடுகிறாளோ என நோட்டமிட எழுந்த ஒரு நடு ராத்திரியில் வெள்ளையாக ஏதோ ஒன்றைப் பார்த்ததில் இழுத்துப் போர்த்திய போர்வையை விடிந்துதான் எடுத்தேன்.
“ஆறாவதுதான் படிக்கிறா! முன்னேரத்துலயே எழுந்து ஊடு வாசலை எப்படி மொழுவி எடுக்குறா பாரு” என்று தெருவே என்னை மெச்சும்போது பெருமிதமாக இருக்கும். பக்கத்து வீட்டு சுதா அக்கா மட்டும் திட்டும். “இதெல்லாம் பண்ற நேரத்துல புத்தகத்தை எடுத்துப் படி” என்று தலையில் குட்டு வைக்கும். “அந்த பஞ்சவர்ணி கூட மல்லுக்கு நிக்காத” என்று சொல்லிக்கொண்டே இருக்கும்.
அன்று அப்படித்தான் வாசலை அடைத்துக் கோலமிட்டு நிமிர்கையில் கிழவி பஞ்சவர்ணம் வாயில் பல் குச்சியுடன் நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள். பொழுது விடிவதற்கு முனகிக்கொண்டிருந்தது. அந்த மங்கொளியில் கிழவியின் வெள்ளை சட்டையை வைத்தே கிழவிதான் என்பதை உறுதிப்படுத்தியிருந்தேன். சாணித்தரையில் நெளிந்தோடிய கோல மாவில் கோலம் கூடுதல் அழகை வாங்கி குளிர்ந்திருக்கும். விடிந்த பின் அவ்வழகு சற்று குறைந்திருக்கும் அதுபோக தப்பாய் இட்டக் கோடுகளை அழித்த தடயங்கள் வெளிச்சத்தில் பல்லைக்காட்டும்.
“ஏண்டி கோலத்தை இன்னும் பெருசாக்கிருக்கலாம்ல!” எதாவது நொடு நொட்டைப் படிப்பாள் கிழவி. நான் அவளுக்குப் பதிலேதும் தருவதில்லை.
தண்ணீர் வாளியைத் தூக்கி உள்ளே செல்லும்பொழுது அம்மா எழுந்து வந்துவிட்டாள்.
“இந்த சின்ன சிறுக்கி என்னைய மதிக்கவே மாட்றாடி! சாணியை நல்லா கரைக்காம பொறுக்கு மாதிரி கட்டியும் புட்டியுமா கரைச்சிப் போட்ருக்காளேன்னு கேட்டேன் வெடுக்குன்னு சிலுப்புறா” – போன வாரக் கதையை அம்மாவிடம் பற்ற வைத்தாள் பஞ்சவர்ணி.
“பெரியவங்களுக்கு மரியாதைக் கொடுன்னு உன்னை எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!” அம்மா சிடுக்கினாள்.
கிழவியை அப்படியே மல்லாக்க ஒரு தள்ளு தள்ளிவிடனும் போல் இருந்தது. கிழவியை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தேன்.
‘பட் பட்’ என தலையிலும் கன்னத்திலும் உயரத்திலிருந்த கனப்பொருள் ஏதோ விழுவது போல இருந்தது. அந்த அரை இருட்டிலும் கண்கள் இருண்டன. அம்மா தன் கைகளை அமிழ்த்தி விட்டுக் கொண்டாள்.
இந்தக் கிழவியுடன் அம்மாவை சேரவிடாமல் வைப்பது எப்படி என்றே தெரியவில்லை. ஆனாலும் எனக்கு அம்மை போட்டிருந்த காலத்தில் பஞ்சவர்ணிதான் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு முருகன் கவசம் படித்தாள். எந்தப் பலகாரம் செய்தாலும் தூக்கிக் கொண்டு ஓடி வருவாள். கிழவி தனிக்கட்டைதான் ஆனாலும் பத்து ஆளுக்குச் சமமாய்க் காரியங்களை முடிப்பாள்.
குளத்தங்கரை நோக்கி நடந்தேன். அம்மாவிடம் கோபித்துக் கொள்ளும் காலங்களில் அந்தக் குளத்தங்கரைதான் எனக்கு கதி. சமீபத்தில்தான் படிக்கட்டுகளும் கட்டப்பட்ட்டிருந்தன. அந்தப் புதுப்பூச்சில் குளத்து நீர், கிணத்து நீர் போல கலங்கப்படாமல் கிடந்தது. அதிகாலை நேரமது, குளத்து மேடையில் யாருடைய அரங்கேற்றம் முதலில் என குளத்து மீன்கள் படிக்கட்டுகளை விசாரித்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு விசாரிப்பின் போதும் படிக்கட்டுகளிடம் பேச்சுக் கொடுத்தவாறே அதன் பாசிகளைச் சுரண்டிச்சென்றன. பெரிய மீன்களுக்கு அகங்காரம் இருக்கக்கூடும் போலும். படிக்கட்டுகளிடம் அவை பேசுவதே இல்லை. வலைக்காரன் வீசும்போதுதான் அவைகள் வசித்த விபரமே தெரியவரும். மீன்குஞ்சுகள் எது பற்றியும் கவலை கொள்வதில்லை. கடைசிப்படியில் உட்கார்ந்து கொண்டு கால்களைத் தண்ணீரில் நீள விட்டிருந்தேன். மீன்குஞ்சுகள் விரல்களைத் தின்றுக் கொண்டிருந்தன. கூச்சம் வயிற்றுக்குள் நீர்ப்பெருக்கியது.கால் நகங்களைப் பளிச்சென மினுக்கேற்றிக் கொடுத்தன மீன்குஞ்சுகள்.
யாருமற்ற அக்கணத்தை நானும் குளத்தங்கரையும் இடுக்கின்றிக் கையில் வைத்திருந்தோம். குளத்து நீரில் என் முகம் மஞ்சளெனக் குழைந்திருந்தது. முதல் நாள் இரவில், புதிதாய்த் தாலி கட்டிக்கொண்ட புவனா அக்காள் மஞ்சளை உரசிச் சென்றிருப்பாள். நான் காலை நனைத்ததில் மேலேறிய நீர், மஞ்சளை இழுத்துச் சென்றிருக்கும். என் முகவட்டத்தில் மட்டும் அம்மஞ்சளைப் பரப்பி வைத்திருந்தாள் குளத்தக்காள். மஞ்சள் திட்டுக்களை மெல்ல அப்புறப்படுத்திக் கொண்டிருந்தது காற்று. நீரலைகளில் பரிசிலென மிதந்து மிதந்து கரையொதுங்கி காட்டாமணிக்கு சடங்கு செய்தது தடாகம்.
என் முதுகில் கதிர்படத்துவங்கிய இளம் சூட்டை யாரோ மறைப்பது போல் உணர்ந்து சட்டென திரும்பினேன். மாராப்பைக் கீழே போட்டுவிட்டு சட்டை ஊக்குகளை விடுவித்துக் கொண்டிருந்தாள் பத்மா.
இந்த பத்மா வந்தாலே தெருப்பிள்ளைகள் அடித்துப் பிடித்து வீட்டிற்குள் ஓடுவர். பன்றிக்குக் குவிந்திருப்பது போன்ற குறுகலான உதடுகள். அவை சாயப்படாமல் இருந்தால்கூட தேவலாம் போல் இருந்திருக்கும். நாளெல்லாம் குதக்கிய வெற்றிலைச் சக்கையுடன், சுண்ணாம்புடன் சின்னப்பட்டு சிவந்திருக்கும் அந்த உதடுகளில் பற்று பற்றாய்ப் படிந்திருக்கும் தாம்பூலம் ஏடு ஏடாய் உதிர்ந்து கொட்டுவதைக் காணும்போது குமட்டிக்கொண்டு வரும். உதட்டின் ஓரம் துணுக்காய் ஒரு பிசிறு எப்போதும் துருத்திக்கொண்டே இருக்கும். இழுப்பி இழுப்பி முகம் முழுக்க குருதிக்கோடாய்க் கிழித்திருப்பாள்.
ஒரு நாள் அம்மாவிடம் பஞ்சவர்ணி இவளைப் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். “ஊர்ல ஒரு ஆம்பளை உட்றதில்லை, உரிக்காத தேங்காய் மாதிரி மாரை வச்சிக்கிட்டு நடுக்கோடு காட்ற மாதிரி சாக்கெட்டு ஒன்னைப் போட்டுக்கிட்டு அங்க இங்கன்னு நிக்குறா! ஒரு நாளைக்கு ஆறு ஆம்பளையைத் தாங்குறாளாம். உலகம் தாங்காதுடி ஆயா இவ அடிக்கிற கூத்தை!”
அன்றிலிருந்து இந்த பத்மாவை எங்கு பார்த்தாலும் அவளை உற்று உற்று பார்ப்பது வழக்கமாயிற்று.ஒரு நாள் பால்வண்டிக் காரனுடன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். அழுக்கு மூட்டை போல் இருக்கும் அவளிடம் இவ்வளவு நெருக்கமாய்ப் பால்வண்டிக்காரர் எப்படிப் பேசுகிறார்! அவர் நல்ல நிறம். இஸ்திரி போட்ட சட்டைதான் போடுவார். அவர் போடும் ஜவ்வாதின் மணம் பாலை வாங்கிக்கொண்டு உள்ளே வரும்போது பால் சொம்பிற்குள்ளும் குதித்தே கூட வரும்.
“அவ பன்னிக்கறி திம்பாளாம்டி” அங்காடிக்குச் சென்ற ஒரு நாளில் வித்யா சொல்லிக்கொண்டு வந்தாள். வித்யாவின் அப்பாவை ஒரு நாள் இரவில் ஒரு வீட்டின் சந்திற்குள் இழுத்துப் போய்விட்டாளாம் பத்மா. வித்யாவின் அப்பா பயந்து விட்டாராம். அவள் அப்பாவின் வேட்டியை உருவிக்கொண்டாளாம். “அம்மா தலைல சத்தியம் பண்ணி சொன்னாருடி அப்பா! எங்கம்மாதான் உர்ருன்னே இருந்துச்சு”
“அவ பன்னிக்கறி திங்குறதாலத்தான் அவ வாயி அப்டி இருக்குதோடி?” என்றேன் நான்.
வித்யாவிற்கு தாங்கமுடியாத சிரிப்பொன்று அரை நிமிடம் நீடித்தது. அவள் சிரிக்க வேண்டும் என்பதற்காக நான் அதைக் கேட்கவில்லை. உண்மையில் எனக்கு அந்த சந்தேகம் இருந்தது.
பத்மா எதிரே நடந்து வந்து கொண்டிருந்த ஒரு நாளில் அவளை தூரத்திலிருந்தே கவனித்து வந்தேன். அவள் உருவம் மட்டுமே புரிபட்ட அந்தத் தொலைவிலும் அவள் உடம்பிலிருந்து ஒரு வீச்சம் அடித்தது.அவளை இந்த ஆண்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என என் வயதைத் தாண்டியும் சிந்தித்து வைத்தேன். இவ்வளவு பருமனாக இருக்கும் இவளை இந்த ஆண்கள் எப்படிக் கையாளுவார்கள்! இவளை எப்படி முத்தம் கொஞ்சுவார்கள்! அந்த பன்றிவாய்ப் பார்த்தால் குமட்டுமே! பால்வண்டிக்காரர் கச்சையாக கோடு போல் இருப்பார். பத்மா இறுக்கினால் அவர் ஒடிந்து போவாரே!
வழியில் இருந்த அம்மன் கோவிலுக்குள் அவள் சென்றதும் எனக்கு படபடப்பாய் இருந்தது. பின்னாலயே நானும் நுழைந்தேன். சாமி இவளை எதுவும் செய்யாதா? சுத்த பத்தம் இல்லாதவளாயிற்றே! மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தாள். அந்த உதடுகள் எதையோ முணுமுணுத்தன. வேண்டுதலை முடித்துவிட்டு அங்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த விபூதியை எடுத்து பூசிக்கொண்டாள். அவளுக்கு எதிரே நின்று அவளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த என் நெற்றியிலும் பூசி விட்டாள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவள் என்னைத் தொட்டு விட்டாளே! நான் மறுபடியும் குளிக்க வேண்டுமே! என அவள்மீது ஆத்திரமாய் வந்தது. அப்போதுதான் கவனித்தேன் அவளருகில் நின்றபோது அவள் மீது எவ்வித துர்வீச்சமும் இல்லை. கற்பூர மணத்தின் ஓங்கலினால் இருக்குமோ என்னவோ!
வாசலில் பூ விற்றுக் கொண்டிருந்த மருதாயிக்கு இடுப்பிலிருந்து உருவிய சுருக்குப்பையை விலக்கி இரண்டு நூறு ரூபாய்களை எடுத்துக் கொடுத்தாள் பத்மா. அதை வாங்கிக் கொண்ட மருதாயி அந்த ரூபாய் நோட்டுகளைக் கொண்டு கண்களைப் பொத்திக்கொண்டு உடலை குலுக்கிக் கொண்டிருந்தாள். ரூபாய் நோட்டுகளை அவள் இறக்கியபோதுதான் மருதாயி அழுதிருந்தது தெரிந்தது.
“ஆசுபத்திரிக்குப் புள்ளயத் தூக்கிப் போடி.. எத்தினி நாளைக்கு வச்சிருப்ப!” சொல்லிக்கொண்டே செருப்புகளை மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள் பத்மா.
இன்று குளத்தங்கரையில் நெஞ்சு மேட்டிற்கு மேல் கட்டப்பட்டிருந்த பாவாடையுடன் பத்மா தண்ணீருக்குள் இறங்கிக் கொண்டிருந்தாள். முதலில் கால் கட்டை விரலால் தண்ணீரின் குளிர்ச்சியைத் தொட்டுப் பார்த்தாள். பின் மெல்ல கால்களை இறக்கினாள். தண்ணீருக்குள் இரண்டு படிகள் மூழ்கியிருந்தன. ஒவ்வொரு படியாய் இறங்கினாள். குதிகால் முழுக்க வெடிப்பாய் இருந்தது. அதை மறைப்பதற்காகவே மருதாணியை அப்பியெடுத்து சிவப்பாக்கி வைத்திருந்தாள். கொலுசுகளே இல்லாத ஆள் மயக்கி இவள்! தொடை அளவு இறங்கியதும் பாவாடை பலூனைப் போல உப்பிக் கொண்டது. குளத்து மூலையிலிருந்தெல்லாம் ஓடி வந்த காற்று அவள் காலிடுக்கில் நுழைவதற்காய் போராடிக்கொண்டு பாவாடைக்குள் புகுந்திருந்தது. மேலிருந்து பாவாடையை மெல்ல தடவிக்கொடுத்து அடைபட்டிருந்த காற்றை வெளியேற்றினாள். பாவாடையும் அவளும் ஒன்றென ஒட்டிக்கொண்டனர். தண்ணீருக்குள் இடுப்பைச் செலுத்திக் கொண்டிருந்தாள். ஏதோ ஒன்றில் நீர் ஊடுருவி அவள் அடிவயிற்றைக் கிழித்திருக்கும் போலும், எதிலோ குத்துபட்டவள் போல உடலை சிலிப்பினாள். தண்ணீர் உயர்ந்து கொண்டே வந்தது. இடுப்பு, வயிறு , நெஞ்சு கழுத்து என்று அவளை விழுங்கியிருந்தது.
அள்ளி முடிந்திருந்த அந்த செம்பட்டைக் கூந்தலை அவிழ்த்து விட்டாள். எண்ணெயே காணாத வறண்ட சிகையது. தண்ணீரில் காகிதம் போல் மிதந்தது. தண்ணீருக்குள் மூழ்கவே இல்லை அது. மூக்கைப் பிடித்துக்கொண்டு முங்கினாள். முழுவதும் ஈரமாய் கண்களிலிருந்து நீரை வழித்துக் கொண்டு வெளியே வந்தாள். ஈரப்பாவாடையில் அவள் அங்கங்களெல்லாம் கோடு கொண்டு வரைந்தாற்போல் படு துல்லியமாய்த் தெரிந்தன. என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் முகத்தை மாற்றவே இல்லை. அப்படியே சலனமற்று அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
பஞ்சவர்ணி சொன்னதுபோல் தேங்காய்கள்தான் அவை. எப்படித் தாங்குகிறாள் இவள்! காலம்பூராவும் இந்த எடையை சுமந்து கொண்டே திரிய வேண்டுமே இவள்! கடைசிப்படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு உடுத்தியிருந்த துணிகளைத் துவைக்க ஆயத்தமாயிருந்தாள். துணியை வைக்கும் இடங்களை தேங்காய் நாரைக்கொண்டு தேய்த்துக் கழுவி சுத்தப்படுத்தினாள். துணிகளை பலமுறை கசக்கி தண்ணீருக்குள் முக்கி அலசி எடுத்து சுத்தமான இடத்தில் பிழிந்து வைத்தாள். தான் போட்டு வந்திருந்த செருப்பைத் தேய்த்துக் கழுவினாள். அது ரப்பர் செருப்புதான் தண்ணீருக்குள் விட்டு எடுத்தாலே சுத்தமாய்ப் போகும். ஆனாலும் துணிசோப்பைக் கொண்டு கழுவிக் காய வைத்தாள். துணியின் நுரைகள் அப்பால் போகுமாறு தண்ணீரைத் தள்ளி தள்ளி கண்களுக்குத் தெரிந்த அழுக்குகளை அப்புறப்படுத்தினாள். அந்தத் தூய நீரில் நீராடினாள்.
வெள்ளரிக்காய் மொத்தத்தில் உருண்டையான நார் ஒன்றை எடுத்து வந்திருந்தாள். அதைத் தண்ணீரில் நனைத்து குளியல் சோப்பில் துவைத்து மேனியெங்கும் தேய்த்தாள். கைவிரல் இடுக்குகளைக்கூட அவ்வளவு மினுக்கிட்டு குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள். யாரும் பார்க்காதவாறு தண்ணீருக்கடியின் சென்று இடுப்பிற்கு கீழ் நாரை வைத்துத் தேய்த்து ஏறினாள். பின்னங்கழுத்தை அவள் சொறிந்த விதத்தில் நிச்சயம் குளத்து நீர் சிவப்பாகும் என காத்திருந்தேன். குளித்து முடித்து குளியல் நாரைக் கழுவி படிக்கட்டில் வைத்தாள். அது மீண்டும் விரைத்துக் கொண்டு பழைய நிலைக்கு வந்தது. அந்த நாரை நீட்டிப் பிடித்து என் முகத்தருகே மேலும் கீழுமாய் ஆட்டிச் சிரித்தாள். அதில் சிரிக்க ஒன்றுமில்லாததாய் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.
எவ்வளவு சுத்தமானவள் இவள்! இவளைத் தொட்டாலா தீட்டு என்றாள் பஞ்சவர்ணி! அவள் மேனியெல்லாம் குளியல் சோப்பு மணக்கிறதே! இந்த மணம் நிச்சயம் பால்வண்டிக்காரனை மயக்கித்தான் இருக்கும். இவளையா அழுக்கு மூட்டையென ஒதுக்கி வைத்தாள் அம்மா! அம்மா கூட இவ்வளவு சுத்தமாய்க் குளிக்க மாட்டாளே! கால் செருப்பைக் கூட இப்படிக் கழுவ மாட்டாளே!
டீக்கடை மாமாவும் பத்மாவை கடைக்குள் அனுமதிக்க மாட்டார். “அங்கேயே நில்லுடி மூதி, ஆட்டிக்கிட்டு வர” என்று தெருவிலேயே நிற்க வைத்து கண்ணாடி டம்ளரில்தான் டீ கொடுப்பார். அவள் குடித்த டம்ளரை அவளேதான் கழுவி வைக்க வேண்டும். அதையும் தண்ணீர் தெளித்துதான் மாமா எடுப்பார்.
அம்மா மாதாமாதம் முன்று நாட்கள் தனியாகப் படுக்கும்போது காரணம் கேட்கும் தம்பியிடம் பத்மாவைத் தொட்டு விட்டதாகச் சொல்லி ஒதுங்குவாள். பத்மா என்றாலே பெருந்தீட்டு. என்னென்னவோ நினைவுகள் மனதினில் ஓடியது.
அதன்பின்னர் தம்பியும் நானும் குளத்திற்குக் குளிக்கச் சென்ற நாளொன்றில் பழக்கப்பட்ட ஆழம் தாண்டி ஒவ்வொரு அடியாய் வைத்து நகர்ந்து பார்த்தேன். வேண்டாமென்று சொல்லிக் கொண்டே தம்பி கடைசிப்படியில் நின்று கொண்டான். நீந்துவதாய் காலை உந்தி மேலே மிதந்த நான் மெல்லக் கொஞ்ச தூரம் கைகளை வீசி நகர்ந்தேன். உடல் மிதப்பது போல் தெரிந்து நீந்துவதாய் மகிழ்ந்தேன். அதுவரை அசைந்து கொண்டிருந்த குளம் பனிப்பாறை போல் அசைவற்று உறையத் துவங்கியது. கழுத்துவரை இருந்த தண்ணீர் மூக்கு, கண் என மூடிக்கொண்டிருந்தது. குதித்து குதித்து மேலே உயரப் போராடியதில் குளத்து நீரை ‘மடக் மடக்’ எனக் குடித்து விட்டேன். ஒரு வாய்க்கெல்லாம் குடல் மொத்தமும் நிறைந்தது. அடுத்த வாய்க்கு தொண்டை வழிவிடாமல் மூச்சுக்குழாயெங்கும் குளமாய் இருந்தது. தண்ணீருக்குள் மூழ்கி குளத்தின் பக்கவாட்டுகளை அகண்ட கண்களுடன் பார்த்தவாறே உள்ளே சென்று கொண்டிருந்தேன். மூச்சுத் திணறிய அக்கணத்திலும் தீபாவளிக்கு அம்மா வாங்கி வந்திருந்த பட்டுப்பாவாடையைப் போட்டுக்கொள்ள நான் இருக்கப் போவதில்லை என தெளிவாய் மனதினில் படிந்து கொண்டிருந்தது. சாவைப் பார்த்தே விட்டேன். அது கலங்கலாகவும் தொட்டால் விலகுவதாகவும் இருந்தது. என் கொத்து முடியை ஏதோ ஒன்று இறுக்க அடிமயிரெல்லாம் அறுகத் துவங்கியது. கீழிருந்து மேலே வந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு முடிக்கும் ஒரு கத்தி குத்தப்பட்டது போல் நெற்றியிலிருந்து ஏதோ வழிந்தது.தொட்டுப் பார்த்தேன் பிசுக்கவில்லை.
கண்களைத் திறந்த போது குளம் என் முன் பணிந்து கிடந்தது.கடைசிப் படிக்கட்டில் மூச்சுத் திணறுலுடன் செருமிக் கொண்டிருந்த என் முதுகில் பத்மா ஓங்கித் தட்டினாள். ‘லொபக்’ என குடித்த நீரைக் கக்கிக் காட்டினேன்.
“தண்ணிக்குள்ள என்னாடி வெளாட்டு! பாடையைக் கட்டிருக்க வேண்டிது!” பத்மா சிரித்தாள்.
பத்மாவின் உதடுகள் என் ஈரக்கண்களுக்கு மீன் வாயாகத் தெரிந்தது. வெற்றிலையில்லாததால் கூட அப்படித் தெரிந்திருக்கலாம்.
அம்மாவும் தம்பியுமாக ஓடி வருவது தெரிந்தது. என்னை இழுத்து கன்னம் மாற்றி கன்னம் அறைந்தாள் அம்மா. பத்மா கண்டுகொள்ளவே இல்லை. அவள் தன் குளியல் வேலையில் மும்முரமாய் இருந்தாள். என்னைத் துவட்டி ஆசுவாசப்படுத்தி அணைத்துக் கொண்டாள் அம்மா. “பத்மா இல்லேன்னா நீ செத்துருப்ப என்றான்” தம்பி.
குளித்து முடித்து கரையேறிய பத்மாவிடம் அம்மா ஐம்பது ரூபாயை நீட்டினாள். ஐம்பது ரூபாயை ஒரு முறையும், என்னை ஒரு முறையும் பார்த்தாள் பத்மா. ஈரத்துணிகளைத் தோளில் போட்டுக்கொண்டு தண்ணீர் சொட்டச் சொட்ட இடுப்பை வெட்டி வெட்டி நடந்து சென்றாள்.
“அம்பது ரூவாயை நீட்னா எப்புடி வாங்குவா அவ? நீ நூறு ரூவாயா நீட்டிருக்கனும்” பஞ்சவர்ணி வழக்கம்போல் நுணுக்கம் சொன்னாள்.
********