இணைய இதழ்இணைய இதழ் 84கட்டுரைகள்

தீர விசாரிப்பதே மெய்; ‘மங்களவாரம்’ திரைப்பட விமர்சனம் – அராதி

கட்டுரை | வாசகசாலை

ரே மாதிரியான வேலையை ஒரே இடத்தில் இருந்து ஒரே மாதிரியான மக்களுடன் செய்யும்போது ஏற்படும் ஓர் சலிப்பு ஒரே மாதிரியான கதைகளைப் படிக்கும்போதும் ஒரே மாதிரியான திரைப்படங்களைப் பார்க்கும்போதும் கூட வந்துவிடுகிறது. எல்லா மொழிகளிலும், எல்லா காலங்களிலும், எல்லா பிராந்தியங்களிலும், ‘பழிவாங்குதல்’ மிகவும் பழசான (அ) மிகவும் புதிதான கரு. அது பழையதா புதியதா என்பது அந்தக் கதையோ திரைப்படமோ அந்தப் பழிவாங்கலை எப்படிக் கையாள்கிறது என்பதில் இருக்கிறது. வழக்கமான டெம்ப்ளேட்களை தவிர்த்து ஒரு பழிவாங்கும் கதையை முழுமையான திரை அனுபவமாகக் கொடுத்துள்ளது, ‘மங்களவாரம்’ திரைப்படம். தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம் மற்றும் ஹிந்தியில் வெளியாகியுள்ளது இப்படம்.

திரைப்படம் முழுதும் பொதுப்புத்தி, வேண்டிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. புரட்சிகரமான கேள்விகள் இல்லையென்றாலும், கேள்விகள் முக்கியம்தான். 80-90 காலகட்டங்களில் கதை நடப்பது படத்திற்கு சாதகமாக உள்ளது. மக்களின் கல்வியறிவு, சிந்தனை மற்றும் பல லாஜிக்குகளை நோண்டத் தேவையில்லை.  

மகாலக்ஷ்மிபுரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமைகளில் நடக்கும் மரணங்களைச் சுற்றி கதை நகர்ந்தாலும் முதல் ஒரு மணி நேரத்திற்குள் இயக்குநர் அஜய் பூபதி மகாலஷ்மிபுரம் கிராமம் முழுதும் சுற்றிக் காட்டிவிடுகிறார். கிராமத்தைச் சுற்றிக் காட்டுவது என்றால் ஊர், மக்கள், மக்கள் மனநிலை, கட்டமைப்பு, ஊரின் பிரதான தெய்வமான மாலச்சி அம்மன் எல்லாம். மாலச்சி என்ற பெயர் மகாலக்ஷ்மி என்பதாக இருக்குமோ என்று தோன்றுகிறது. ஊரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் இருவர் அடித்துக்கொள்ள ஆரம்பித்து மொத்த ஊரே அடித்துக்கொள்வதைப் பார்க்கும்போது ஊர்மக்கள் என்ன மாதிரியானவர்கள் என்று தெரிந்துவிடுகிறது. ஊரையும் ஊர் மக்களையும் முழுதும் பார்வையாளர்களுக்குக் காட்டி முடித்துவிட்டு செவ்வாய் ஸ்பெசல் மரணங்களுக்குப் போகாமல், ரொம்ப நேரம் கடத்தாமல் அவற்றைக் காட்டியது சுவாரசியம் கூட்டியது. இந்த அடித்தளம், இடைவேளைக்குப் பிறகு வேறு மாதிரி செல்லும் கதையோடு சேர்ந்து செல்ல சுலபமாக்குகிறது. 

அட்டகாசமான இசைக்கோர்ப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவை படத்திற்கு வலு சேர்க்கின்றன. அவரவர் வேலையை முழு மெனக்கெடலோடு அவரவர் செய்துள்ளது தெரிகிறது. 

ஊரில் இருவருக்கு கள்ளத்தொடர்பு உள்ளது என சுவற்றில் எழுதப்பட்டவர்கள் இறந்துப் போவதால் தற்கொலையென ஊர் மக்கள் நம்பினாலும் காவல் உதவி ஆய்வாளராக வரும் நந்திதா கொலையென சந்தேகிக்கிறார். அவரோடு சேர்ந்து பார்வையாளர்களையும் ஊரில் உள்ள எல்லாரையும் சந்தேகப்பட வைத்துள்ளனர். ஏன் இந்தக் கொலைகள் நடக்கின்றன? யார் கொலை செய்வது? எனக் கேள்விகளுக்கு பதில் தெரிவதற்குள் எல்லா கதாபாத்திரங்கள் மேலும் சந்தேகம் வந்துவிடுகிறது. பசுத்தோல் போர்த்திய புலியாக யார்வேண்டுமானலும் இருக்கலாம் என்று எஸ்.ஐ சந்தேகப்பட, எஸ்.ஐ வந்த பிறகுதான் கொலைகள் நடக்கிறது என ஊர் சந்தேகப்பட சகலமும் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவருவது விறுவிறுப்பைத் தருகிறது. 

கடைசி ஒரு மணி நேரத்திற்குள் ஒன்றுக்கும் மேல் திருப்புமுனைக் காட்சிகள். பெரும்பாலும் கணிக்கக்கூடியதாக இருந்தாலும், சலிக்கவில்லை. ஆனாலும் கடைசி திருப்பம் பெரும்பாலனோர் கணித்திருக்க வாய்ப்பில்லை. மேலும் சில நுணுக்கமான காட்சிகள் இருந்தாலும் அவை முக்கிய திருப்புமுனையாதலால் திரைப்படம் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டியவை. பொதுப்புத்தியைத் தவிர்த்து தீர விசாரிப்பதே கொலைக்கான காரணம், கொலை செய்பவர் என கேள்விகளுக்குப் பதில் தருகிறது. 

ஷைலஜாவாக நடித்துள்ள பாயல் ராஜ்புத் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். கொஞ்சம் பிசகினாலும் தவறாக சித்தரிக்கப்பட்டுவிடும் கதாபாத்திரம். மகிழ்ச்சிக்கும் வருத்தத்திற்குமான வித்தியாசங்கள் பாவணையில் மட்டுமின்றி முகத்தின் நிறத்தில் காட்டப்படுவது போல் உள்ளது. காதலனால் ஏமாற்றப்பட்டு ஊர் தூற்றும் நிலையில் இருக்கும்போது ஒரு பழுப்பு சாயல் தெரிகிறது. போலிஸாக நந்திதா மிடுக்காக இருந்தாலும், சமயங்களில் மிடுக்கு காணாமல் போகிறது. விசாரணை திரைப்படத்தில் முரட்டு போலிஸாக பயமுறுத்தும் அஜய் கோஷ், இங்கு அங்கங்கு சிரிக்க வைக்கிறார். ஒட்டுமொத்தமாக அனைத்து நடிகர்களும் பொருந்தி இருக்கிறார்கள். 

முதல் செவ்வாய் மரணம் நிகழும்போது கழுகுப் பார்வையில் காட்டப்படும் வாழைத் தோட்டம் அதன் வாசத்தைக் கடத்துகிறது. மாலச்சி அம்மனுக்கு திருவிழா செய்ததால் முன்னோர்கள் துர்மரணங்களைத் தடுத்தார்கள் என்றும், அதன்பின் சாந்த உருவமாக ஆன மாலச்சி அம்மனுக்கு திருவிழா செய்தால் செவ்வாய் மரணங்களை தடுக்கலாம் என்ற ஆலோசனையோடு திருவிழா ஆரம்பிக்கிறது. திருவிழாவின் இரவுக் காட்சிகளும், வேடம் போட்ட கலைஞர்களும், களியாட்டமும் கண்ணுக்கு விருந்து. மயாணத்தில் அம்மன் முகமூடி அணிந்த ஒருவன் ஆடும் களியாட்டம் மயாண வாசனைக்கு பதில் மண் வாசனையை வீசுகிறது.

திரைப்படம் வெளியாகி முதல் காட்சியில் இருந்தே, ‘ரிவிய்யூ’க்களால் வறு(ளர்)க்கப்படுகிற காலகட்டத்தில், வசூல் எண்ணிக்கையை வைத்து வெற்றி/தோல்வி என்பதைக் கடந்து, நல்ல திரைப்படம் எதிர்பார்ப்பவர்களுக்கு, ‘மங்களவாரம்’ ஒரு நல்ல திரை(யரங்க) அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

*******

dinesh.adk.1509@gmail.com – 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button