எல்லைக்குள் நில்லா காதல் – யூசுப் ஜாகிர் (வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதில்கள்’ வாசிப்பு அனுபவம்)
கட்டுரை | வாசகசாலை

மலையாள இலக்கியத்தின் பிதாமகனான வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின் அனுபவப் புனைவு குறுநாவலான இதை, தமிழில் அழகாய் மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான சுகுமாரன்.
இக்குறுநாவலுக்கு ‘மதில்கள்’ என்ற சரியான தலைப்புதான் வைத்திருக்கிறார். சிறைக்குள் அடைப்பட்டு கிடக்கும் ஒரு ஜீவனின் உணர்வுகளை அப்படியே இப்படைப்பில் கொடுத்திருக்கிறார். மதிலுக்கு அப்பால் இருக்கும் பெண்கள் சிறையில் உள்ள நாராயணியுடனான காதல் உணர்வு நம்மையும் பற்றிக்கொள்கிறது. முகம் பார்க்காமல் குரல் வழியே உள்ளம் பகிர்ந்து கொள்வதாகட்டும், குச்சிகளை தூக்கி எறிந்து தங்கள் வருகையை உணர்த்துவதாகட்டும், காதலிக்காக காதலோடு ரோஜா செடியை தூக்கி எறிவதாகட்டும், எல்லாமே சிறைக்குள் அடைப்பட்டுக் கிடந்தாலும் காதலை சுதந்திரமாக சுவாசிக்கும் நிகழ்வுகள். இருவரும் சந்திக்க ஒரு திட்டம் போட்டு வைத்துக் காத்திருக்க, எதிர்பாராத பஷீரின் விடுதலையால் அவர்கள் சந்திக்காமலே போகும் சூழ்நிலையில் நம் நெஞ்சமும் கனக்கத்தொடங்கி விடும்.
நேரில் பார்க்காமலே நாமும் நாராயணியின் மனதின் தவிப்பை உணர்ந்து கொள்ளமுடியும். காதல் சிறையில் விழுந்தபின்பு மனம் விடுதலையை எதிர்பார்ப்பதில்லை. அப்படியாக அவரின் விடுதலையை அவர் துளியளவேணும் நேசிக்காமலே விடுதலையாகிப்போகிறார். அந்த கணத்தில் நம் மனதிற்குள் மதில்கள் உடைந்து இருவரும் சந்தித்து இருக்கக் கூடாதா என்று ஒரு எண்ணம் உருவாகும். இருவரும் மதில்களை தாண்டி பகிர்ந்து கொள்ளும் காதலும், நேசமும் கண்களால் பார்த்துக்கொண்டு காதலித்தவர்களால் கூட முடியாது.
இந்த ஒரு குறுநாவலை எழுத ஆசிரியர் எடுத்துக்கொண்ட நாட்கள் நம்மை பிரமிக்க வைக்கிறது. அவருடைய நேர்த்தியும்,அர்ப்பணிப்பும் நம்மை நிச்சயம் வியக்கவைக்கும். வாசித்த கதையை விட்டு மனம் நீங்காமல் இருக்கும் போதே, பின்னிணைப்பில் மதில்கள் குறுநாவல் உருவான கதையே ஒரு சிறுகதையாக விரிந்து நம்மை ஆச்சரியப்படுத்தும். அந்த ஆச்சரியம் விலகும் முன்னே “மதிலுகள்” சினிமா உருவான கதை, அந்த மதில்களுக்காக நடந்த தேடல் கதைகள் , கதைக்கும், காட்சிக்கும் இருக்கும் சவால்கள் என தொடந்து பகிர்ந்து கொள்ளும் போது, மனம் கூடுதலாக வியப்பைச் சுவைக்கிறது. நிச்சயம் வாசியுங்கள். நீங்களும் அதையே உணர்வீர்கள்!
நூல்: மதில்கள்
ஆசிரியர்: வைக்கம் முகம்மது பஷீர்
வகைமை: குறுநாவல்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்:72 பக்கங்கள்
விலை:ரூ.90/-
*********