இணைய இதழ் 97சிறுகதைகள்

மேகத்தைக் கடத்தியவன் – அசோக் குமார்

சிறுகதை | வாசகசாலை

IMS எனும் இந்தியன் மெட்ரோலோஜிக்கல் சொசைட்டியின் சென்னை அலுவலகம். அந்த தனியார் நிறுவனத்தின் புதிய புரொஜெக்ட்டைப் பற்றி அறிவிப்பதற்காக அனைத்து ஊடகங்களின் நிருபர்களையும் வரவழைத்திருந்தனர்.

சீலிங் பக்கெட் ஏசியிலிருந்து வெளியேறிய சில் காற்று குளிர்ச்சியாய் சத்தமிட்டது. நிருபர்கள் முணுமுணுப்பாய் பேசி சிரித்தனர். அறையின் ஒவ்வொரு அங்குலமும் பணத்தால் இழைக்கப்பட்டிருந்தது. கண்ணாடிக் கதவை நுனிவிரலால் தள்ளி உள்நுழைந்த மாடர்ன் மங்கை வெள்ளாவி வைத்து வெளுத்ததுபோல் வெண்ணிறமாய் இருந்தாள். செபோராவின் உபயத்தில் முகமும் திறந்தவெளி தோள்களும் ஆயில் பெயிண்டிங்காய் வழவழத்தன. பாப் வெட்டப்பட்ட கூந்தலில் ஆங்காங்கே தங்கக்கலர் முடிக்கற்றைகள் பிளீச்சிட்டன. அடர் சிகப்பு நிற மிடியை தொடை வரை இழுத்து, உயரமான ஹீல்ஸில் டக் டக்கென வந்தவளைக் கண்டவுடன் சில நிருபர்கள் பதட்டத்தில் எழுந்து நின்றனர். அவளைத் தொடர்ந்து வந்த சுகந்தமான வெர்ஸாச்சே பர்ப்யூமின் மணம் அறையை குத்தகைக்கு எடுத்துக்கொண்டது.

அவள் கையை நீட்டி புரொஜெக்ட்டைப் பற்றிய சிற்றேடை கொடுக்க அனைவரும் பவ்யமாக குனிந்து பிரசாதம் வாங்குவது போல் வாங்கினார்கள்.

“உங்களை எம்டி பதினோரு மணிக்கு சந்திப்பார்” என்று அவள் ரிங்டோன் குரலில் கூறியதும்,

தந்தி டிவி டேனி “நீங்க” என இரு பொருளில் இழுக்க….

சின்ன புன்முறுவலுடன் “நான் அவரோட அசிஸ்டெண்ட்” என்று உதட்டைச் சுளித்து திரும்பி சென்றாள். பார்வைகள் அவள் மறையும் வரை ஹட்ச் நாயாக பின்தொடர்ந்து மூச்சிழுத்து நிகழ்வெளிக்குத் திரும்பின. சிலர் பொறாமையுடன் டேனியை பார்த்தனர்.

“இப்படி மயில் மாதிரி பொண்ணு கூட இருந்தா மேகத்தை என்ன, நான் சூரியனையே கடத்துவேன்” என்றான் டேனி. எல்லோரும் சிரித்தனர்.

சரியாக பதினோரு மணிக்கு யூனிபார்ம்டு செக்யூரிட்டி கதவைத் திறக்க செல்பி ஸ்டிக் போல ஒல்லியான நரசிம்மன் உள்ளே நுழைந்தார். அதற்கடுத்து ராகேஷ் இரண்டு அழகான பெண் மயில்களுடன் நடந்து வந்தார். நிருபர்களின் கண்கள் மயில்களிடமிருந்து பிரிய சிரமப்பட்டன. ராகேஷ் அந்த நிறுவனத்தின் தலைவர். ஐஐடி கரக்பூரில் பிஎஸ்சி மெட்ரோலோஜி. அமெரிக்காவில் மேற்படிப்பு, மேலும் சில நாடுகளில் ரிஸர்ச் செய்துவிட்டு பத்து வருடத்திற்கு முன்னால் இந்தியாவுக்குத் திரும்பி இந்த நிறுவனத்தை தோற்றுவித்தார். அவருடைய பர்சனல் அசிஸ்டெண்ட் நரசிம்மன். கம்பெனியைத் தொடங்கியதிலிருந்து உடனிருப்பவர். பெண்களை பற்றி பின்னே நேரமிருந்தால்.

புதிய புரொஜெக்ட்டின் பெருமூளை, சிறுமூளையாய் இருந்த ராகேஷ் கோதுமை கலரில் இருந்தார். கார்னியர் டை பத்து வயதை குறைத்துக் காட்டியது. கண்களில் ரேபேன். கச்சிதமாக அளவெடுத்து தைக்கப்பட்ட சூட். முகத்தில் தெனாவெட்டும், அதிகாரமும் தெறித்தன. இருக்கையில் அமர்ந்து கண்ணாடியை கழற்றி வைத்தார்.

“தேங்க்யூ ஆல் பார் கம்மிங் அட் எ ஷார்ட் நோட்டீஸ்” என்று ஆங்கிலத்தில் துவங்கி தமிழுக்குத் தாவினார். “நியூஸ் பேப்பரில் ஏற்கனவே இந்த நிறுவனத்தோட புராஜெக்ட்டைப் பத்தி படிச்சிருப்பீங்க. உங்க கையிலிருக்க சிற்றேட்டில் விரிவாக எழுதியிருக்கோம். இனி உங்க கேள்விய கேட்கலாம்”

குங்குமம் ரிப்போர்ட்டர் மங்களகரமாய் பிள்ளையார் சுழியிட்டார். “உங்க திட்டத்தைப்பத்தி சுருக்கமாகச் சொல்ல முடியுமா?”

“தண்ணீர் இந்த நாட்டோட சாபம். ஒரு மாநிலம் மழை வெள்ளத்தால் அழிஞ்சா பக்கத்து மாநிலம் தண்ணீர் இல்லாம வறட்சியால அழியுது. நதிகளை இணைக்க பேச்சு வார்த்தைங்க பல வருசமா நடக்குது. 1800லயே பிரிட்டிஷர்ஸ் நதிகளை இணைக்கத் திட்டம் போட்டாங்க. ஆனால், பல காரணத்தால நிறைவேத்த முடியல. இன்னைய தேதியில இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பல லட்சம் கோடி செலவாகும்”. திட்டத்தின் இமாலய செலவு அனைவரின் மனதிலும் பதிய இடைவெளி விட்டு தொடர்ந்தார்.

“என்னுடைய திட்டம் முற்றிலும் புதுமையானது. உலக அளவில் இன்னும் பேச்சளவில் இருப்பது. இந்த திட்டத்தின்படி அதிக மழை பெய்யற இடத்தில இருக்க மேகங்களை குறைவாக மழை பெய்யற இடத்திற்கு நகர்த்திட்டுப் போயி அங்க மழை பெய்ய வைப்போம்”. அறையில் சலசலப்பு ஏற்பட்டு சிரிப்பாய் மாறியது. ராகேஷ் காத்திருந்தார்.

“இது எப்படி சாத்தியம் சார்?” என்றார் சன் டிவி நிருபர்.

“விமானத்தில பறக்கும்போது மேகமெல்லாம் சின்ன சின்ன தீவு கூட்டமா, வெண்பஞ்சு பொதியா வானத்துல பறப்பதை பார்த்திருப்பீங்க. பொதுவா இந்த மேகங்களை காற்று ஒரு இடத்திலருந்து மற்றொரு இடத்திற்கு தள்ளிட்டுப் போகும். உதாரணமா தமிழ்நாட்டோட குளிர்காலத்துல சூல்கொண்ட மேகங்கள் தென்மேற்கு பருவக்காற்றால் நகர்த்தப்பட்டு தெற்கிலிருந்து நகர்ந்து வந்து நவம்பர் மாதத்தில் மழை பொழியும்னு படிச்சிருப்பீங்க. அந்த இயல்பான தென்மேற்கு காற்றைப்போல செயற்கையான ஆனால் அதே தன்மையுடைய காற்றை நாம் மேகங்கள் மேல் செலுத்தினால் என்ன ஆகும்”?

“மேகங்கள் நகரும்” என்றார் தினத்தந்தி நிருபர்.

“எக்சாக்ட்லி. அதே தன்மையுடைய செயற்கை காற்றை உருவாக்கவே இவ்வளவு நாட்களாக நாங்கள் ஆராய்ந்து கொண்டிருந்தோம். இந்த முயற்சிக்காக அமெரிக்காவிலிருந்து நாற்பது பிரத்யேக F35B ரக விமானங்களை வாங்கியிருக்கோம். அதை எங்க தேவைக்கேற்ப HAL பெங்களூர் விஞ்ஞானிகளோட உதவியோட மாத்தி வடிவமைச்சிருக்கோம். இந்த விமானங்களால செயற்கை காற்றை ட்ரோபோஸ்பியரில் உருவாக்கி மேகத்தை நகர்த்த முடியும். இதனால ஒரு எடத்துல தேவைக்கதிகமாக மழை பெய்யும்போது, மழை மேகத்தை நாம விரும்பும் திசையில் நகர்த்திட்டுப் போயி தேவைப்படுற எடத்துல மழை பெய்ய வைக்கலாம். இந்த சோதனை முயற்சியில எங்களோட உலக வானிலை அமைப்பின் விஞ்ஞானிகளும் பங்கேற்று இருக்காங்க”

மீண்டும் சலசலப்பு ஏற்பட, ராகேஷ் காத்திருந்தார். ஓசைகள் அடங்கியதும், “என்ன சார் மேகத்தை கடத்திட்டு போயி மழை பெய்ய வைக்கப் போறீங்களா?” என்று டிவி18 நிருபர் கேட்க, சிரிப்பொலிகள் எழும்பின.

“பத்து வருசத்துக்கு முன்னாடி கையடக்க கருவியில அமெரிக்காவுக்கு பேசலாம்னு யாராவது சொல்லிருந்தா சிரிச்சிருப்பீங்க. மனுஷன் ஜெட்டை முதுகில பொருத்திட்டு பறவை மாதிரி பறக்கலாம்னு சொல்லியிருந்தா அவனை பைத்தியம்னு சொல்லியிருப்போம். இப்ப பிரெங்கி ஜப்படா அப்டிங்குற பிரென்ச்காரர் 35 கிலோமீட்டர் இங்கிலிஷ் கால்வாயை இருபது நிமிசத்துல பறந்து காட்டியிருக்காரு. முதன்முதலா 1990ல தமிழ்நாடு, ஆந்திராவுல செயற்கையா மழை பெய்ய வைக்கலாம்னு சொன்னப்பவும் இப்படித்தான் நிருபர்களும், மக்களும் சிரிச்சாங்க. விஞ்ஞானிகள் சில்வர் அயோடைடு தூவி மழை பெய்ய வச்சாங்க. இன்னைக்கு உலகில் பல இடத்துல செயற்கை மழையை பல காரணத்துக்காக பெய்ய வைக்கிறாங்க. மனிதன் மழைய செயற்கையாக உருவாக்குற ஆற்றலை அடைஞ்ச பிறகு, இது அடுத்த கட்டம். மனிதன் இறைவனாகும் தருணம். இந்த அறிவை வறண்ட பகுதியில மழை பெய்ய வைக்கிறதுக்கு மட்டுமில்லாம அதிக மழையால ஒரு எடத்துல வெள்ளம் ஏற்படாம தடுக்கவும் பயன்படுத்தலாம்.” மூச்சு விடாமல் தொடர்ந்தார்.

 “இந்த முயற்சி வெற்றியடைஞ்சா அடுத்த கட்டமா கடலுல உருவாகுற புயலை நகரத்துக்குள்ள வராம எதிர்காற்றை உருவாக்கி தடுக்க முடியும். சேதத்தை தவிர்க்க முடியும். மழை தேவைப்பட்டா அனுமதிக்கவும் செய்யலாம்”

நிருபர்களின் கண்கள் மெதுவாக விரிந்தன. இது சாத்தியமோ என்ற எண்ணம் தோன்றியது.

“இந்த முயற்சி வெற்றியடைஞ்சா நதிநீர் இணைப்பு தேவைப்படாது. இதற்காக ஒதுக்கியிருக்க பல லட்சம் கோடிகளை வேறு நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். நதிகளை இணைக்க செயற்கை ஆறுகளை உருவாக்கி சுற்றுப்புறச் சீர்கேட்டை உருவாக்குவதை தவிர்க்கலாம். இதோட பலன்களை யோசித்துப் பாருங்க.

இந்த புரொஜெக்ட்டின் முதல் சோதனை முயற்சியாக பெங்களூரைத் தேர்ந்தெடுத்திருக்கோம். நாலஞ்சி நாளா அங்க நல்ல மழை பெய்யுது. ஆறு, குளமெல்லாம் நிரம்பிருச்சு. இனிமேல் பேஞ்சா சேதமாயிரும்னு சொல்றாங்க. அதுனால மழை பெய்யுற கிமுனோலிம்பஸ் மேகங்களை இன்னைக்கு மதியம் தமிழகத்துக்கு நகர்த்தப் போறோம். உங்களுக்கு எங்க மழை வேணும்னு சொல்லுங்க. பெய்ய வைச்சி காட்டுறேன்” என்றார் கிண்டலாய்.

“காஞ்சிபுரத்துல மழை பெய்ய வையுங்கள்” என்றார் கேப்டன் டிவி.

“ஏன் காஞ்சிபுரம்? என்ன காரணம்?”

“இன்னைக்கு காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்ல விழா நடக்குது. தேர் இழுக்குறப்ப மழை வருங்கிறது ஐதீகம். அங்க இருக்குற எங்க டிவி நிருபரு செம வெயிலு அடிக்குது. மழைக்கு சான்ஸே இல்லைனு சொல்றார். பக்தர்களும் ஏமாற்றத்தோட இருக்காங்களாம்”

“கவலைப்படாதீங்க. உங்கள் பெருமாளை நான் காப்பாத்துறேன். கடவுளும் மனிதனோட அறிவுக்கு மண்டியிடுற காலம் வந்துருச்சி”

“எப்ப காஞ்சிபுரத்துல மழை பெய்ய வைப்பீங்க?”

“இன்னைக்கு மதியானம் ஒரு மணிக்கு எங்களுடைய ஏரோபிளான் செயற்கை காற்றெழுப்பி பெங்களூரிலிருந்து மேகத்தை காஞ்சிபுரம் நோக்கி நகர்த்திவரும். காஞ்சிபுரத்துக்கு வந்ததும் மேகத்துல சில்வர் அயோடைடை தூவி மழை பெய்ய வைப்போம். வேற ஏதாவது கேள்வி இருக்கா?”

எல்லோரும் அமைதியாக இருக்க, “நிருபர்களுக்கு சிற்றுண்டி அரேஞ்ச் பண்ணிருக்கோம். முடிச்சிட்டு ஆடிட்டோரியதிற்கு ஒரு மணிக்கு வந்தீங்கன்னா நிகழ்ச்சிய லைவ்வா பாக்கலாம். தேங்க்யூ ஜென்டில்மென்”

ராகேஷ் அசிஸ்டெண்டுகளுடன் வெளியேற, “இது சாத்தியமானு தெரியல” என்றார் ஒரு நிருபர்.

“அவரு சொல்ற லாஜிக் கரெக்டாதான் இருக்கு” என்றார் மற்றொருவர்.

“எப்படியும் சாயங்காலம் தெரிஞ்சிடும். ஆனா, இது நடந்துச்சின்னா சூப்பரா இருக்கும்”

கண்ட்ரோல் ரூமுக்கு நுழைந்ததும் ஒருவர் நரசிம்மனிடம் பேக்ஸ் மெசேஜைக் குடுத்தார். அதில் விழிகளை ஓட்டிய நரசிம்மன் ராகேஷிடம், “ஸ்டேட், சென்ட்ரல் கவர்ன்மெண்ட் கிளியரன்ஸ் வந்துருச்சி” என்றார்.

“டார்கெட் இடம் காஞ்சிபுரம்னு எல்லா அரசு பொறுப்பு அதிகாரிகளுக்கும் தகவல் சொல்லிருங்க. அந்த ரூட்டுல இருக்க ஏர்போர்ஸ் தளம், விமான கண்ட்ரோல் டவர்களுக்கு தகவல் அனுப்பிருங்க”

“ஏற்கனவே சொல்லியாச்சி சார். டார்கெட்டை தெரியப்படுத்துனா போதும்”

“ஓகே. ஓசூர் லீடரைக் கூப்பிடுங்க”

“டீம் கிளவுட்” எனப்பட்ட 40 விமானங்களின் குரூப்புக்கு லீடராக இருப்பவன் ரோகித். விமானங்களை ஒருங்கிணைத்து மேகத்தை நகர்த்துவற்கு நியமிக்கப்பட்டவன்.

ரோகித் இணைப்பில் வந்தவுடன், “ஹாய் ரோகித் கவர்ன்மெண்ட் கிளியரன்ஸ் கிடைச்சிடுச்சி. மதியம் 1 மணிக்கு டேக் ஆப் பண்ணுங்க. டார்கெட் காஞ்சிபுரம்” என்றார்.

“ஓகே சார்”

“ரொம்ப வேகமா மேகத்தை நகர்த்த வேண்டாம். மணிக்கு 30 மைல் வேகம் போதும். தேவைப்பட்டா குறைச்சிடுங்க. மேகம் கலையக்கூடாது. டார்கெட்டுக்கு போய் சேர எவ்வளவு நேரம் ஆகும்?”

“பெங்களூர் டு காஞ்சிபுரம் 140 மைல்ஸ் சார்.  5 டு 6 மணி நேரம் போதும்னு நினைக்கிறேன்”

“டீமை ரெடி பண்ணிக்குங்க. மறுபடியும் கூப்பிடறேன்” என லைனை கட் செய்தார்.

“நரசிம்மன், நிகழ்வை பாக்க வர்றதா சொன்ன ஸ்டேட், சென்ட்ரல் எம்பிஸ், விஞ்ஞானிகளுக்கு தகவல் சொல்லிருங்க”

“எஸ் சார்”

கண்ட்ரோல் ரூம் இன்சார்ஜ் ரேஷ்மியிடம் திரும்பி, “பெங்களூர் கிளைமேட் எப்படி இருக்கு?” என்றார்.

“இன்னும் 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் சார்”

“நைஸ். மானிட்டர் பண்ணிட்டே இருங்க. 12.45 க்கு வர்றேன்”

ஓசூர் விமானப்படை தளத்தில் அமர்ந்திருந்த ரோகித் கான்பரன்ஸ் ரூமிற்கு சென்றான். ஈகிள்ஸ் என நாமகர்ணம் சூட்டப்பட்ட அனைத்து பைலட்டுகளும் காத்திருந்தனர்.

“ஹாய் ஈகிள்ஸ், உத்தரவு வந்துருச்சி. நம்ம டார்கெட் காஞ்சிபுரம். நான் முன்னாடியே சொன்ன மாதிரி பத்து பேர் இங்க இருக்க, மதியம் ஒரு மணிக்கு 30 விமானத்தை டேக் ஆப் செய்யறோம். பெங்களூரோட மறுபக்கத்துக்கு போனதும் ட்ரிபிள் பார்மேஷனில் அமைக்கிறோம். நான் கொடுத்துருக்க லிஸ்ட் படி முதல் பத்து பேரு மேலடுக்கிலும், இரண்டாவது பத்து பேரு நடுவிலும், மூணாவது பத்து பேரு கீழ் அடுக்கிலும் விமானங்களை கழுகு போல நிறுத்துறோம். நான் சொல்லும்போது காற்றை உருவாக்கி மேகத்தை நகர்த்தலாம். எனி டவுட்ஸ்?”

“ஸ்பீடு என்ன சார்?”

“மணிக்கு 30 மைல். மாறுதல் தேவைப்பட்டா நான் சொல்கிறேன். கேரி ஆன் நௌ. அசெம்பிள் அட் 12.30″ என்றதும் அனைவரும் கலைந்தனர்.

மதியம் 12.50க்கு சென்னை கண்ட்ரோல் ரூமில் இதற்காக வடிவமைக்கப்பட்ட ஆடிட்டோரியத்தில் விஐபிகளும், பார்வையாளர்களும் வந்து சேர்ந்திருந்தனர். எதிரில் வரிசையாக இருந்த டிவி திரைகளில் பெங்களூரிலிருந்து லைவ் காட்சிகள் வந்து கொண்டிருந்தன. சரியாக ஒரு மணிக்கு ஆன்லைனுக்கு வந்த ரோகித் “புறப்படுறோம் சார்” என சொல்ல…

“ஆல் தி பெஸ்ட் ” என்றார் ராகேஷ் பெருமையுடன்.

ஏரோபிளான்கள் ஒவ்வொன்றாக ரன்வேயிலிருந்து மேலெழத் தொடங்கின. ஏரோபிளானின் முன்புறம், காக்பிட்டில் அமைக்கப்பட்ட சக்தி வாய்ந்த ஜிபிஎஸ் கேமராக்கள் நடப்பவற்றைத் தெளிவாக காட்டின.

விமானங்கள் ஏகமாக மழை பொழியும் பெங்களூரை சுற்றிக்கொண்டு, ஐந்து நிமிடத்தில் 70 கிலோமீட்டரைக் கடந்து மறுபுறத்தை அடைந்தன. ராட்சச கரும்புகை படலமாய் மேகங்கள் பெங்களூரை சூழ்ந்திருப்பது ஆடிட்டோரியத்தின் எல்லா திரைகளிலும் தெரிந்தது. ஏரோபிளான்கள் மூன்று அடுக்குகளாகப் பிரிந்தன. கண்ட்ரோல் ரூம் திரையில் பச்சை புள்ளிகளாக ஒளிர்ந்த விமானங்கள் மூன்று கோட்டில் அமைந்தன.

“நாங்க ரெடி சார்” என்றான் ரோகித்.

“ஓகே ஸ்டார்ட். நான் லைன்லயே இருக்கேன்”

ரோகித் உத்தரவிட்டதும் விமான இறக்கைகளுக்கு மேலாக அதற்கு இணையாக பதிக்கப்பட்ட அமைப்புகளிலிருந்து சுழலும் அமைப்புகள் வெளிப்பட்டன. அவை வேகமாகச் சுழன்று மணிக்கு 30 மைல் காற்றை உருவாக்கின. ஒரே வேகத்தினாலான சீரான காற்றழுத்தம் ஏற்பட்டு முன்னேற, முதல் நொடிகள் பதட்டத்துடன் நகர்ந்தன. நிருபர்கள் கைவிரல் நகங்களைக் கடித்தனர். ஒத்திசைவான காற்றின் வேகத்தில் மேகங்கள் மெதுவாக நகர காக்பிட்டிலிருந்த ரோகித், “சக்ஸஸ்.. மேகங்கள் நகர்கின்றன” என்று கத்தியது ஆடிட்டோரியத்தின் அத்தனை டீவிக்களிலும் தெரிய, கேமிராக்கள் பளிச்சிட்டன. விஐபிகள் கை தட்டி கூச்சலிட்டனர்.

மேகங்கள் கொந்தளிப்புடன் நகர, “ஈகிள்ஸ் பிளேன்களை 50 அடி நகர்த்துங்கள்” என்று ரோகித் உத்தரவிட்டான். பிளேன்கள் முன்னகர்ந்தன. இப்போது மேகங்கள் நகர்ந்தபோது பக்கங்களில் இருந்த மேகங்கள் சுழன்று அந்த இடத்தை நிரப்ப, மேகங்கள் ஒரே இடத்தில் சுழலத் துவங்கின. நடு அடுக்கின் மையத்திலிருந்த ரோகித் இருபுறங்களில் இருந்த மேகங்கள் உள்ளே நுழைந்து சுழற்சியை ஏற்படுத்துவதை கவனித்தான்.

மைக்கில், “காற்றின் வேகத்தை 20க்கு குறையுங்கள்” என்று சொல்லி விட்டு, சூளூர் விமானப்படை தளத்திலிருந்த பொறுப்பு அதிகாரி ரமேசுக்கு போன் செய்து அங்கிருந்த பத்து விமானங்களையும் கொண்டு வர உத்தரவிட்டான். அடுத்த 7 நிமிடங்களில் ரமேஷின் பத்து விமானங்கள் ரோகித்தை வந்தடைந்தன.

“ரமேஷ், கழுகின் இருபுறத்திற்கும் ஐந்து விமானங்களை அனுப்பு. மேலே மூன்று, கீழே இரண்டென விமானங்களையும் நிலைநிறுத்தி 30 மைல் வேகத்தில் காற்றை ஏற்படுத்து” என உத்தரவிட, விமானங்கள் பிரிந்து சென்று நிலைகொண்டன. கழுகு அமைப்பின் இருபுறமிருந்த விமானங்கள் வேகமான காற்றைச் செலுத்த மீண்டும் மேகக்கூட்டம் நகர்ந்தது.

கன்ட்ரோல் ரூமிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ராகேஷ் தீவிர யோசனையில் இருந்தார். மேகம் நகருவது மானிட்டரில் தெரிந்தது. மேகங்கள் நகராவிட்டால் என்ன செய்வதென்ற எல்லா சாத்தியக் கூறுகளும் விமானிகளுக்குச் சொல்லப்பட்டிருந்தன.

ரேஷ்மி, “சார் கிமுனோலிம்பஸ் மேகத்தோட அடர்த்தி குறையுது” என எச்சரித்தாள்.  

காற்றின் உராய்வில் ஏற்படும் வெப்பத்தால் மேகத்திலிருக்கும் நீர் ஆவியாவதை உணர்ந்த ராகேஷ், “ரோகித், மேகங்களோட அடர்த்தி குறையுது” என்றார்.

“ஈகிள்ஸ், ஈரக்காற்றை உருவாக்குங்கள்” என ரோகித் கூறியதும் விமானிகள் காற்றை உருவாக்கும் புளோயரில் நீரை கலக்கும் மிக்சர் அமைப்பைத் திறந்து விட, விமானங்களில் இருந்து வெளிப்பட்ட ஈரமான காற்று இப்போது மேகத்தை நோக்கிச் சென்றது.  மீண்டும் மேகங்கள் நகர, இம்முறை இடியுடன் கூடிய மின்னல்கள் உருவாகின.

“ஈகிள்ஸ் காற்றின் வேகத்தை பதினைஞ்சி ஆக்குங்க. இரண்டு பக்கமுள்ள ஐந்து விமானங்கள் முப்பது மைல்ஸ் அளவிலேயே காற்றைச் செலுத்தட்டும்”.

இம்முறை மேகங்களிலிருந்து பெய்யும் மழையின் அளவு அதிகரித்தது. ரோகித் காற்றின் வேகத்தை அதிகரித்தும், குறைத்தும் பார்த்தான். பலவித முயற்சிகள் செய்தும் மேகங்கள் நகர மறுத்தன. ஒரு மணிநேரத்திற்கு பின்னர் இந்தியன் மெட்ரோலோஜிக்கல் சொசைட்டியின் அதிகாரி நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார்.

“நாங்கள் விமானம் மூலம் செயற்கையாக ஏற்படுத்திய காற்றினால், காற்றின் அல்லது வேறெதோ காரணத்தினால் மேகத்தின் நீர் மூலக்கூறுகள் உடைந்து நீர்த்துளி ஆவியாகிறது. மழை பெய்யும் வேகத்தை கட்டுப்படுத்த முடிந்ததே தவிர மழை மேகங்களை குறிப்பிட்ட திசையில் நகர்த்த முடியவில்லை. மேகங்கள் அங்கேயே சுழல்கின்றன. மேகங்களில் ஏற்பட்ட கொந்தளிப்பால் இடியுடன் கூடிய மின்னலும் உருவாகிறது. இயற்கையாக வீசும் காற்றில் இந்த நிகழ்வுகள் நடக்காமல் எப்படி மேகங்கள் நகர்கின்றன என்பதைக் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கும்”

கண்ட்ரோல் ரூமில் அமர்ந்திருந்த ராகேசை நெருங்கிய நரசிம்மன், “சார், காஞ்சிபுரத்துல செம மழை பெய்யுதாம்” என்றார்.

amar.rohith@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button