
முதலைகளின் கொடூரப் பாடல்கள்
குருவிகள் ஏமாற்றப்படும் நிலத்தில்
இந்தப் பருவத்தின் மகசூல் பரவாயில்லை
ஆயிரம் மூட்டை மக்காச்சோளம்
அறுவடை முடிந்து தோகைகள் காற்றில் அலைகின்றன
தட்டைகளைக் கொளுத்திவிட வேண்டும்
நுண் பூச்சிகளின் சத்தம்
வணிகத்துக்கு தூர்க்குறியாக இருக்கிறது.
*****
பனி பெய்து கொண்டுதான் இருக்கிறது
குளிர் இன்னும் குறையவில்லை
மண்ணைப் புதுப்பிக்க அவலாசையில் அலைகிறது இயற்கை
நான் விடுவேனா !
எந்திரங்களை கிடை போடுவேன்
சில்லரை வர்த்தகத்தில் போட்ட
என் முதலீடு பெருக வேண்டி
நிலத்திற்கு எதிராக எதையும் செய்வேன்.
*****
ஊர் திருந்திவிடும் போலிருக்கிறது
வரகு உமிக்கு இடியைத் தடுக்கும்
சக்தி இருக்கிறதென்று
ஒருவன் கதை விடுகிறான்
ரேஷன் அரிசியை வேகவைத்து
உயிர் தப்பிக் கிடக்கும் கிழ மூதேவிகள்
‘ஆமாம் சாமி’ போடுகின்றன
முதலில் இந்த கோயில் திண்ணையை
உடைத்துப்போட வேண்டும்
கதைகளாக சில உண்மைகள் வளர்கின்றன.
*****
கூறு கட்டி விற்கப்படும்
சொத்தைக் காய்களை வாங்குபவன் ஆபத்தானவன்
நகரத்தின் வார சந்தையில் விற்கும்
பெருத்த காய்களை
அமுக்கி இச்சை கொள்ளும் வாடிக்கையாளர்கள்
அவனைக் கவனம் கொள்கிறார்கள்
என்ன செய்வது?
ஒரு புழுவால் உயிர் வாழ முடிகிற
சிறிய சொத்தைக் காய்களில்தானே
முதலாளிகளைக் கோவணம் கட்ட வைக்கும்
விதைகள் இருக்கின்றன.
*****
சூழலைக் காப்பாற்றுதல் குறித்து
வாய் கிழிய கத்துபவன்
மரக்கன்றுகளை இலவசமாகத் தரும்
பூவுலகின் பைத்தியக்காரன்
மரப்பட்டையை நீக்கி புழுவைத் தேடும்
பறவையைப்போல் வாழ வேண்டும் என்கிறான்
கேட்பவர்கள் ஞான சூனியன்கள்
அவனைத் தீர்க்கதரிசி போல் பாவிக்கிறார்கள்.
*****
ஆறுகளை மொட்டையடிக்கும் கத்தி
சற்று பெரியது
பொக்லைனில் பொருத்தியிருக்கிறேன்
சுற்றியுள்ள கிராமவாசிகள் நன்றியில்லாதவர்கள்
மணல் போனாலும்
ஆழம் மிஞ்சுகிறதே என்ற அறிவில்லை
என் பேராசையில் மணலை அள்ளி
போடப் பார்க்கிறார்கள் பரதேசிகள்.