
ஒரு பறவையால் மட்டுமே விதைக்க முடிந்த மரம்
சமவெளி மக்களுக்கு
மலையின் தேனும் கிழங்கும் மிளகும்
பிடிக்கும் என்பது தெரியும்
புதிதாய் அவர்கள்
ஒரு மலரையும் கேட்கிறார்கள்
கோடைப்பருவம் முழுக்க
அந்த மலர்
மலையை ஆட்சி செய்யும்
தெய்வத்தின் கோடை வடிவம் என்று
நாங்கள் வணங்கும் அம்மலரை
அவர்கள்
எப்போது கேள்விப்பட்டார்கள்!
யார் சொல்லியிருப்பார்கள்?
மலைப் பொருட்களுக்கு இருக்கும்
மதிப்பும் உயர்வும்
மலைவாசிகளுக்கும் இருக்கிறது என்பதை
ஏற்க முடியாதவர்கள்
மலையில் தோன்றும்
அரிதானவைகள் எல்லாம்
பண்டமாற்றாக தரையிறங்கும் என்பதால்
எதற்காகவும்
மலையேறி வராதவர்கள்
அந்த மலருக்காக வரத் தொடங்கினார்கள்
ஒருநாள்
ஒரு கூட்டமே வந்தது
அப்போது கோடைக்காலம்
முடிந்து போயிருந்தது
உயர்ந்த மரத்தில்
சிறிய இலைகள் மட்டுமே
அசைந்து கொண்டிருந்தன
அக்கூட்டமானது
அந்த மலர் அரும்பும் மரத்தை
வளைத்து வளைத்துப் பார்த்தது
மலையெங்கும்
பரவி விரவியிருக்கும் மரமல்ல அது
அஃது அரிது
அதை அறியாத அவர்கள்
மலை முழுக்க அலைந்தார்கள்
நாங்கள் ஒன்றிரண்டைக் காட்டினோம்
சிறிய கன்றுகளை
வேரோடு அகழ்ந்து கொடுக்கச் சொன்னார்கள்
நாங்கள் அக்கன்றுகளைப்
பார்த்ததில்லை என்பதை
அவர்கள் நம்பவில்லை.
உண்மையில் நாங்கள் பார்த்ததில்லை
அது மலரும்போதுதான்
மலைக்கே தெரியும்
அதன் விதைகளை இதுநாள் வரை
நாங்கள்
விதைத்ததும் இல்லை
ஆனால், அவர்கள்
நம்ப முடியாமல் கேட்டார்கள்
அடுத்த கோடைக்காலத்துக்காக காத்திருந்தோம்
அவர்கள்
தொடர்ந்து வந்த வேறு வேறு
பருவகாலத்திலும் வந்தார்கள்
மரத்திலிருந்த இலைகளும்
உதிர்ந்து போயிருந்தன
எங்கள் இயல்பைக்
கெடுப்பதற்குரிய சொற்கள்
அவர்களிடம் இருந்தன
மலையின் அமைதி
காட்டுத்தீயால் கெட்டு விடுவதில்லை என்பது
அவர்களுக்குப் புரியவில்லை
கோடைக்காலம்
குகைக்குள் இருந்து வெளியே வரும்
ஒரு புலியைப் போல வந்தது
மலையை ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தும்
அந்த மலர் அரும்பத் தொடங்கியது
ஒவ்வொரு நாளும்
அவர்கள் கண்காணித்து வந்தார்கள்
காய்கள் பழுக்கும் வரை
காத்திருக்கச் சொன்னோம்
குயிலின் கண்களைப் போல் இருக்கும்
பழங்களை
சேகரித்துக் கொடுத்தோம்
அவர்களுக்கு நன்றி சொல்லத் தெரியவில்லை
அது இன்னும் வளராத பண்பாடாக
அவர்களிடம் இருப்பதாகச் சொல்லப்பட்டது
அந்த விதைகள்
சமவெளியில் மட்டுமல்ல
மலையில் கூட
விதைத்தால் முளைக்காது என்பதை
அவர்கள் திரும்பி வந்தபோது
சொன்னோம்
அவர்கள் சினம் கொண்டார்கள்
மலையில் கூடாரம் அடித்தார்கள்
மலையில் விதைத்து
கன்றாகத் தாருங்கள் என்றார்கள்
விதைத்தோம்
அந்த விதைக்குத் தேவையான
ஆழம் தெரியாமல் விதைத்தோம்
அதற்குத் தேவையான வெப்பமும்
புரியவில்லை
ஈரமும் புரியவில்லை
விதைகள் கண் திறக்கவே இல்லை
அவர்கள் சினந்து
சில மரங்களை
மலையிடமிருந்து நீக்கிவிட்டு
தரையிறங்கிவிட்ட நாளில்
அந்த மஞ்சள் மலர் பூக்கும்
மரத்தின் அடியில்
நாங்கள் குழுமினோம் இரவில்.
அதன் பட்டைகளைத் தொட்டு
வாக்கு கொடுத்தோம்;
இந்த மரங்களை விதைப்பதற்கு
ஒரு பறவை வரவேண்டும் என்பதை
அவர்களிடம் நாங்கள்
ஒருபோதும் சொல்லப்போவதில்லை.
***
பாழ்வெளி
நேற்று இரவு கண்ட
ஒரு கனவை நினைவுபடுத்திப் பார்த்தேன்.
அதுவொரு பாழ்வெளி
யார் யாரோ போகிறார்கள்
ஒருவன்
தன் குதிரையை
நடத்திக்கொண்டு செல்கிறான்
குதிரையின் உடம்புக்கு சுகமில்லையா
என்று அவனிடம் கேட்கிறேன்
அவன் எதுவும் பதில் பேசவில்லை
குதிரை மட்டும் திரும்பிப் பார்க்கிறது
அதன் கண்கள்
கனிந்த நாவல் பழங்களைப்போல்
இருக்கின்றன.
பிறகொருவன்
ஒரு வேட்டை நாயின் பின்னே ஓடுகிறான்
எங்குமே பச்சையில்லாத பாழ்வெளியில்
அவனுக்கு
இரையாக எது கிடைக்கும் என்று
ஆவல் பொங்க யோசிக்கிறேன்
அவனுடைய நாய்
காய்ந்த கற்களுக்கு நடுவே கிடக்கும்
ஒரு பாழடைந்த கால் எலும்பைக்
கவ்விக்கொண்டு வருகிறது
ஐயோ பரிதாபமே என்றிருக்கிறது
வேட்டைக்காரனின்
உலர்ந்து போன வாய்
ஏதோவொரு மந்திரத்தைச் சொல்கிறது
நாயின் கண்களைப் பார்த்தேன்
வெண்ணிற எலும்பை
காலடியில் போட்டுவிட்டு
தன்னைச் சூழ்ந்த வெளியை
உக்கிரமாக நோக்குகிறது.
இன்னும்
யார் யாரையோ
இப்படியான துயரக்கோலத்தில்
பார்த்துக்கொண்டே போகிறேன்
பாழ்வெளி நீள்கிறது
பாழ்வெளி இருள்கிறது
பாழ்வெளி மறைகிறது.
***
மலர்
ஏன்
உன் முகத்தில்
துயரம் அப்பியுள்ளது?
கண்கள்
அழுது காய்ந்தவைபோல் உள்ளன?
விம்மி விம்மி சோர்ந்த உதட்டில்
ஓலம் ஒன்று பதுங்கியுள்ளது ?
என் கேள்வியில் தொனிக்கும்
ஆறுதல் தரும் தன்மையை
உணர்ந்தவளாக
அவள் பகிர்ந்து கொண்டாள்
உள்ளம் கொதிப்பதையும்
உடல் பதைப்பதையும்.
மொழியின் திரியை அமர்த்தி
மௌனத்தின் ஒளியை ஏற்றி
நனைந்த இரண்டு
சிறிய இலைகள் போன்றிருந்த
அவளது கண்களை
என் கண்களால் தொட்டுத் தடவினேன்
அப்போது – அந்தக் கணத்தில்
அவள் நெஞ்சுக்குழியில் கிடந்த
ஒரு வெப்பக் காற்று
மேலெழுந்து வந்து
மூக்கு வழியே வெளியேறியதை
கண்டேன்.
மெல்ல! மெல்ல! மெல்ல!
தன்னிலைக்கு வந்தவள்
நன்றி என்றாள்.
முதலில்
உன் சிரிப்பைப் பரிமாறு என்றேன்.
சிரித்தாள்.
ஈரத்தரையில் நடந்த
பறவையின் கால்தடம்போல
ஒரு சின்ன நட்சத்திரச் சுவடு
அவள் கன்னத்தில்.
அடி பாதகத்தி!
இந்தக் கன்னக் குழியை
மறைத்து வைத்தாயே
உனக்கே அடுக்குமா என்றேன்.
இப்போது
இசையோடு ஒரு சிரிப்பு.
உள்ளங்கையை அழுத்திப் பிடித்து
சொன்னேன்:
இந்த மலரை
சருகாகாமல் பார்த்துக்கொள்
இஃது
வெறும் மலர் மட்டுமல்ல
மனதின் மலர் வடிவம்.
***
சிரிக்கும் மூக்கு
சிலர் வாய்கொள்ளா
சிரிப்போடு இருப்பார்கள்
சிலருடைய கண்கள்
அழகோ அழகாய் சிரிக்கும்
சிலரின் காது மடல்களில்
சிரிப்பின் மலர்ச்சி தெரிவதைக்
கண்டிருக்கிறேன்
சிலருக்கு நடையில் தெறிக்கும்
சிலருக்கு பேச்சில் பொங்கும்
நான் ஒருத்தியைக் கண்டேன்
என்னவொரு களிப்பு
அந்த எள்ளுப்பூ நாசியில்!
மூக்கு சிரிப்பவளை
இப்போதுதான் பார்க்கிறேன்
வியப்பிலும் மகிழ்விலும் ஆழ்ந்து
அவளிடமே கேட்டுவிட்டேன்
அடி பெண்ணே!
நீ பிறந்து ஒளிர்ந்தபோது
உன்னை முழங்காலில் அமர்த்தி
கண்ணு காது மூக்கையெல்லாம்
உருவி உருவி
தேய்த்துக் குளிப்பாட்டியவள் யார்?
அதைக் கேட்டதும்
அவளுடைய மூக்கில்
அப்படியொரு சிரிப்பு!
அந்தச் சிரிப்பின் ஒளியில்
மூக்கிலிருந்த மூக்குத்திக்கும்
ஒளி கூடியது என்றால்
பார்த்துக் கொள்ளுங்களேன்
அடடா… அடடா…
*****