![selva samiyan](https://vasagasalai.com/wp-content/uploads/2020/03/selva.jpg)
அங்கீகாரமாக எடுத்துக்கொள்வதா..? அவமானமாக எடுத்துக்கொள்வதா..? என்று தர்மனுக்குத் தெரியவில்லை. ரோசா சட்டென்று அப்படிக் கேட்டதும் தர்மனுக்கு முதலில் கோபம்தான் பொங்கிக்கொண்டு வந்தது. இனிமேல் அவள் இருக்கும் பக்கமே கால் நீட்டக்கூடாது என்று நினைத்தபடி விறுவிறுவென்று தியேட்டருக்குத் திரும்பி வந்தான். ஆனால், இந்த நொடி வரை அவளைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறான். இப்போதுகூட அவன் எதிரில் அடர்த்தியாக மழை பெய்துகொண்டிருக்கிறது. ஆனால், அதன் சாரல்கூட அவன் மூளையைச் சென்று தொடவில்லை. நம் பார்வையில்கூட அவன் மழையை ரசித்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அவன் கண்கள் இரண்டும் மழைத்துளிகளில் உரசிக்கொள்ளாமல் வளைந்து நெளிந்து ஓடி, மழைக்கு அந்தப்பக்கம் இருக்கும் வெயிலடிக்கும் நிலத்தில் உலவிக்கொண்டிருக்கிறது. அந்த நிலத்தில்தான் ரோசா, தன் புடவைமுந்தானை காற்றில் பறக்க ஓடுகிறாள்… பறக்கிறாள்… மிதக்கிறாள்… அவளை முன்னேவிட்டு பின்னே துரத்திச் செல்கிறான் தர்மன்.
தர்மனுக்கு இப்போது கோபமுமில்லை.. குழப்பமுமில்லை.. தெளிந்திருந்தான். அவள் தன்னை அங்கீகரித்திருக்கிறாள் என்று முடிவுக்கு வந்திருந்தான். “இத்தனைக் காலத்தில் எந்தப் பெண்ணாவது தன்னிடம் இப்படி கேட்டிருக்கிறார்களா..? ரோசாதானே கேட்டாள்..!
“அஞ்சு ரூவாய்க்கு ஒரு மஞ்சக்கயிறு வாங்கி வந்து என் கழுத்துல முடிஞ்சிப்புடு..” என்று.
அப்படியென்றால் என்ன அர்த்தம்..? அவளுக்குத் தெரியாத ஆம்பிள்ளைகளா இல்லை. அவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு என்னைப்பார்த்து கேட்டாளென்றால்…?” தர்மன் பெருமையாக உணர்ந்தான். இந்த நிமிடத்தில் அவன் ரோசாவைக் காதலிக்கத் தொடங்கியிருந்தான். அதை நினைத்ததும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. நாற்பது வயதில் முதல் காதல் என்றால் சிரிப்பு வராதா..?
உண்மையில் தர்மனுக்கு நாற்பது வயது இருக்காது, குறைவாகத்தான் இருக்கும். ஆனால், பார்வைக்கு நாற்பது வயது ஆள்போல் தெரிவான். செம்மண்ணும் பழுப்பும் கலந்த சுருள்சுருளான தலைமுடி, முகத்தில் சிறுசிறு பருக்குழிகள்கொண்ட எண்ணெய்ப் பிசுபிசுப்பான கல்கோனா முகம், புளிய விதை அளவுக்கு உருட்டிய புகையிலையை கீழ்உதட்டின் உள்பக்கமாக வைத்திருக்கும் சிறுமேடு, கல்லழுக்காகிப்போன துணிமணி என விரும்பத்தகாதபடிதான் இருப்பான். தர்மனிடம் சென்று “உனக்கு வயசு எத்தனை..?” என்று கேட்டால் அவனுக்கு நிச்சயம் சொல்லத் தெரியாது. அம்மா, அப்பா முகம்கூட அவனுக்கு நினைவில் இல்லை. அவன் தன்னைப்பற்றி நினைக்கத் தொடங்கினான் என்றால்… கமலம் தியேட்டரில் இரண்டாம் ஆட்டம் திரைப்படம் முடிந்து, கலைந்து செல்லும் கூட்டத்திற்கு நடுவே தூக்கக் கலக்கத்தோடு வீறிட்டு அழுதபடி நின்றதுதான் முதலில் நினைவுக்கு வரும்.
கமலம் தியேட்டர் நகரின் கெண்டைக்கால் பகுதியில் அப்போதுதான் உதயமாகியிருந்தது. முதல் படமாக ரஜினி நடித்திருந்த தர்மதுரை படத்தை வெளியிட்டு இருந்தனர். படம் சுமார் ரகம்தான் என்றாலும் புதிய திரையரங்கைப் பார்க்க வேண்டுமென்ற மக்களின் பேரார்வத்தால் படம் நூறு நாட்களைக் கடந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்தது. ஒருநாள், படம் பார்க்க வந்திருந்த தர்மனின் அம்மாவோ, அப்பாவோ அல்லது வேறு யாரோதான் மழலையான அவனைக் கூட்டத்தோடு கூட்டமாக அநாதையாக விட்டுச்சென்றுவிட்டனர். கதறியபடி நின்ற அவனை தியேட்டர் பணியாளர்கள் விசாரிக்க, அவனுக்கு தன் பெயர்கூட சொல்லத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தான். மேலாளர் வந்து விசாரித்துப்பார்த்தார், அவராலும் எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. போலீஸிடமும் ஒப்படைக்கவில்லை. தியேட்டரிலேயே தங்கிக்கொண்டான். மேலாளர்தான் அவனுக்கு தர்மதுரை என்று பெயர் சூட்டினார்.
சற்று வளர்ந்த தர்மதுரைக்கு தியேட்டரில் வேலை செய்வது ரொம்பவும் பிடித்திருந்தது. தியேட்டரை கூட்டிப் பெருக்குவது. கழிப்பறையை சுத்தம் செய்வது. தண்ணீர் பிடித்துவைப்பது. சுவரொட்டிக்கான பசையை கலக்குவது. டிக்கெட் கிழிப்பது. இடைவேளையின்போது தட்டுக்கூடையில் பட்டாணி, கடலைமிட்டாய்களை நிரப்பி கூட்டத்தினரிடையே விற்பனை செய்வது என்று பம்பரமாக சுழன்று வேலை செய்வான். அவன் வேலை செய்வதைப் பார்க்கும்போது அவ்வளவு ஆசையாக இருக்கும். விடலைப்பருவ பையன்கள் மத்தியில் அவனுக்கென்று தனிப்பெயர். சொல்லப்போனால், அவன் மீது அவர்களுக்கு சிறுபொறாமைகூட உண்டு. தர்மன் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பின்பு சினிமா போஸ்டர் ஒட்டப்போனான்.
இப்போது வரை அந்தத் தொழிலைத்தான் செய்துகொண்டிருக்கிறான். அவன் சுவரொட்டி ஒட்டுவதற்கு போக ஆரம்பித்த சில வருடங்களில் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது. பெண்கள் வீட்டிலேயே தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்துவிட்டனர் என்று பேசிக்கொண்டனர். ராமராஜன், ராஜ்கிரன் படங்களின் வரவுவேறு குறைந்திருந்தது. தியேட்டரும் தன் இளமைக் கவர்ச்சியை இழந்திருந்தது. முதல் ரிலீஸ் என்பது போய் இரண்டாம் ரிலீஸ் படங்கள் வெளியாயின. தர்மன் தியேட்டர் நோட்டீஸ் போக, வெளியிலிருந்து வரும் சுவரொட்டிகளையும் ஒட்டப்போனான். முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் ஒன்பது பிட்டு நோட்டீஸ் முதல் மூலம் பவுத்திரம் முதலான துண்டு நோட்டீஸ்கள் வரை அனைத்தும் வரும். தினசரி ராத்திரி ஏதாவது ஒரு பிழைப்பு கிடைத்துவிடும். இரவில் நோட்டீஸ் ஒட்டும் வேலையும், பகலில் தியேட்டர் வேலைகளையும் பார்த்துக்கொள்வான். கமலம் திரையரங்கில் இப்போது பலான படங்கள்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
நகரின் கெண்டைக்கால் பகுதியில் இருந்த தியேட்டர் இப்போது மாநகரின் இதயப்பகுதியில் இருக்கிறது. அந்தப் பகுதியின் உண்மையான பெயர் மறைந்துபோய் விஜயா தியேட்டர் ஏரியா என்றே மாறிவிட்டது. மழைக்காலம் தொடங்கியிருந்ததால் தர்மனின் தொழிலில் பெரும் சுணக்கம். தினசரி பிழைப்பு என்பதுபோய் மூன்று நாட்களுக்கு ஒன்று என்றாகிவிட்டது. இரவில் நோட்டீஸ் ஒட்டுவதும் சிரமமாகியிருந்தது. சுவரெல்லாம் ஈரம் ஊறிப்போய் கிடக்கும். போஸ்டரில் பசையைத் தடவி ஒட்டும்போது சுவர் பிடித்துக்கொள்வதில்லை. அப்படியே சிரமப்பட்டு ஒட்டிவிட்டு வந்தாலும் கொஞ்ச நேரத்திலேயே உரிந்து தொங்கிவிடுகின்றன. விடிந்ததும் நோட்டீஸ்காரன் தெருத்தெருவாகப் போய் மேற்பார்வை பார்த்துவிட்டு வந்து பாதி நோட்டீஸை ஒட்டவில்லை என்று சொல்லி, பேசியத் தொகையில் பிடித்தம் செய்துவிடுகிறான். நான்கு நாட்களாக சைக்கிள் நிறுத்திய இடத்திலேயே நிற்கிறது. பசைவாளியில் ஈரம் காய்ந்துவிட்டது. கையில் இருந்த சேமிப்பும் புகைபுகையாகப் போய்விட்டது. புகையிலை வாங்கக்கூட காசில்லாமல்தான் கவலையோடு உறங்கப்போனான். நெடுநேரமாக தூக்கம் கிடைக்காமல் உருண்டு புரண்டான். எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.
அதிகாலையில் பிடித்துக்கொண்ட பெருமழையில் தர்மனின் தூக்கம் கலைந்துபோனது. தியேட்டரின் ஆஸ்பெட்டாஸ் கூரை மீது விழும் ஒவ்வொரு துளியின் சத்தமும் தியேட்டரின் உள்ளே டிடிஎஸ் எபெக்டுடன் கேட்டது. தூக்கம் கலைந்திருந்தாலும் அவன் எழுந்திருக்கவில்லை. கண்களை மூடி அப்படியே படுத்திருந்தான். திரையின் பின்பக்கம் ஒலிபெருக்கியின் அருகில் சுவரொட்டிகளை விரித்துப் படுப்பதுதான் அவன் வழக்கம். அங்குதான் குளிரில்லாமல் லேசான கதகதப்பாக இருக்கும். இடுப்பில் கட்டியிருக்கும் கைலியை தலைவரைக்கும் போர்த்தி கால்களை மடக்கிப் படுத்திருந்தான். அப்போது அவன் கன்னப்பகுதியில் தண்ணீர் உருண்டு வந்து தொடுவதுபோல் தோன்ற, சோம்பலாக விழித்துப் பார்த்தான். எதுவுமில்லை. கண்களை மூடப்போனவன் ஏதோ தோன்றியவனாய் திடுக்கென இமைகளை சுருக்கிப் பார்த்தான். மெல்லிய வெளிச்சத்தில், அவன் படுத்திருக்கும் சுவரொட்டியில் பலான நடிகை ஜமுனா கவர்ச்சி உடையில் அருவிப் பாறையில் படுத்திருந்தாள். அதைப் பார்த்ததும் தர்மனுக்கு என்னமோபோல் ஆயிற்று. உடல் சட்டென்று முறுக்கிக்கொண்டதுபோல் இருந்தது. இரத்தம் சூடேறி கன்னமெல்லாம் கதகதப்பாக இருந்தது. கால்களை கைலிக்கு வெளியே விரைப்பாக நீட்டி, பின் மடக்கிக்கொண்டான், கைகள் ரெண்டையும் கோர்த்து தொடைக்கு நடுவில் வைத்துக்கொண்டான். இதமாக இருந்தது. ஜமுனாவுக்கு பதில் ரோசாவை நினைத்துக்கொண்டான். அவள் அருகில் வந்து படுத்துக்கொண்டாள்.
ரோசாவும் ஏறத்தாழ இவனைப்போலத்தான். உறவற்றவள். யாரோ ஒரு பெண் பிச்சை எடுப்பதை அவள் இடுப்பில் இருந்தபடியே பார்த்ததுதான், அவள் தன்னைப்பற்றி நினைக்கும்போது வரும் முதல் நினைவு. பின், வேறுவேறு பெண்களின் இடுப்பில் அமர்ந்திருந்தது ஞாபகத்துக்கு வரும். அதன்பின், தான் கைநீட்டி நின்றது நினைவுக்கு வரும். சிக்னல்களில் காது குடையும் பட்ஸ் விற்பனை செய்தது நினைவுக்கு வரும். இப்போது அவள் எந்த வேலையும் செய்யவில்லை, அந்தத் தொழிலைத்தான் செய்கிறாள். பெரிய கிராக்கி உடையவளெல்லாம் இல்லை. நூறுக்கும் நூற்றைம்பதுக்கும் போவாள். சிலநேரங்களில் குவார்ட்டர் பாட்டிலுக்கும் கோழி பிரியாணிக்கும் முடிச்சை அவிழ்ப்பதுண்டு.
மழை நின்றிருந்தது. இருள் விலகி லேசான வெளிச்சம் பரவி இருந்தது. தர்மன் படுக்கையில் இருந்து எழுந்துகொண்டான். கைலியை உதறிக் கட்டிக்கொண்டு கூரையில் இருந்து வழியும் மழைநீரை வாங்கி முகத்தில் தெளித்துக்கொண்டான். இந்நேரத்திற்கு ரோசா எங்கே இருப்பாள் என்று மனதுக்குள் கணக்கு போட்டபடி தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.
குறிப்பிடும்படி ரோசாவிற்கு என்று உறைவிடம் கிடையாது. காற்றைப்போல இருப்பவள் அவள். கோயில் தெப்பக்குளம் பக்கம் இருக்கலாம் என்று எண்ணி அங்கே போய் பார்த்தான். அவளைக் காணவில்லை. ஒவ்வொரு இடமாக, ஒவ்வொரு தெருவாக மனதில் வரைந்து அந்த இடங்களுக்கெல்லாம் போய் ஏமாந்தான். வெறும் வயிறு இரைய ஆரம்பித்துவிட்டது. டீ குடிக்க வேண்டும்போல் இருந்தது. ரோசாவைத் தேடுவதை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்துவிட்டு டீக்கடைக்கு கிளம்பினான்.
பையில் காசில்லை என்பதுகூட நினைவில்லாமல் வேகவேகமாக இருந்த தர்மனின் நடை, டீக்கடைக்கு முன்பு நூறடி தூரத்தில் நின்றுவிட்டது. ஆமாம், ரோசா டீக்கடையில் நின்றுகொண்டிருந்தாள். டீயில் வறுக்கியை நனைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். தர்மனின் முகத்தில் லேசான புன்னகை. டீக்கடைக்கு போகாமல் அருகில் இருந்த பொதுக்கழிவறையின் அருகே ஒதுங்கி நின்றுகொண்டான். அங்கே இருந்து அவளைப் பார்த்தான். அவள் வறுக்கியை உண்பதிலேயே மும்மரமாக இருந்தாள். தான் இங்கே நிற்பதை கவனித்தால் அவள் புரிந்துகொள்வாள் என்று எண்ணிக்கொண்டான். ஆனால் அவள் இவன் பக்கம் திரும்பவே இல்லை. ஒருசமயத்தில் ரோசா தர்மன் நிற்பதை கவனித்தாள்தான், ஆனால் பார்க்காததுபோல் இருந்துகொண்டாள். தர்மனுக்கு இருப்புக்கொள்ளவில்லை, டீக்கடைக்கு போய்விடச்சொல்லி உள்ளுக்குள் தள்ளியது. அவனும் போகலாம் என்று எத்தனித்தபோது, ரோசா டீக்கிளாஸை வைத்துவிட்டு திரும்பி நடந்தாள். தர்மன் நிற்கும் பொதுக்கழிப்பறை நோக்கிதான் வந்தாள். தர்மனை பார்த்ததும் தற்செயலாக அவனை பார்த்ததுபோல முகபாவனை காட்டிவிட்டு, “என்ன தர்மா, வெளியில நின்னுட்ட… கக்கூஸ்குள்ள கூட்டமா இருக்கா…?” என்று சிரித்தபடி, அவனின் பதிலை எதிர்பார்க்காமல் பெண்களின் கழிவறைக்குள் புகுந்துகொண்டாள். தர்மன் ரோசா புறக்கணிப்பதை புரிந்துகொண்டான். அவளை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்பது பற்றி யோசிக்கத் தொடங்கினான்.
ரோசா வெளியே வந்தாள். தர்மன் ஆர்வமாக அவள் முகத்தை பார்த்தான். அவளோ, இப்படி ஒருவன் இங்கே நின்றுகொண்டிருக்கிறான் என்கிற உணர்வே இல்லாததுபோல் அவனைக் கடந்துபோனாள். தர்மன் அதைப் பற்றி கவலைப்படாமல் அவளை பின்தொடர்ந்தான். தர்மன் பின்னால் வருவதை உணர்ந்துகொண்ட ரோசா தெருவில் இருந்து விலகி குறுக்குச் சந்துக்குள் போனாள். தர்மனும் விடாமல் பின்னாடியே போனான். திரும்பி பார்த்தவள், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடம் வந்ததும் சட்டென்று திரும்பி “என்ன தர்மா, நானும் பாத்துட்டே இருக்கேன்… நாய் மாதிரி பின்னாடியே வந்துட்ருக்க..?” என்று கேட்க, தரையைப் பார்த்தபடி “மழைக்காலத்துல நாய் பின்னாடி எதுக்கு வரும்னு தெரியாதா..?” என்று கேட்டான். “எதுக்கு வரும்…?” என்று கேட்டவள். ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, ”இங்கபாரு தர்மா… நீ கொடுக்க வேண்டிய பழைய பாக்கியே நானுத்தி சொச்சம் இருக்கு… எதுவா இருந்தாலும் அதைக் கொடுத்துட்டு மேற்கொண்டு பேசு…” என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனாள். அவள் பின்னாடியே நடந்தவன்.. “கையில காச வச்சிக்கிட்டு உன்ன ஏமாத்தல ரோசா… நாலு நாளா சிங்கிள் பிட்டு நோட்டீஸ்கூட வரல ..” என்று முடிப்பதற்குள், “கடைசியா வந்த ரெண்டுவாட்டியும் இதை சொல்லித்தான் செஞ்சிட்டு போன… ஒரே படத்தை திரும்ப திரும்ப ஓட்டாத தர்மா, ரீல் தேஞ்சிபோயிடும்…” என்று சொல்ல, “நாளைக்கு காலையில இதே டயத்துல பழைய பாக்கி, புதுபாக்கி எல்லாத்தையும் ஒரேயடியா செட்டில்மென்ட் பண்ணிடுறேன் ரோசா.. என் நிலமைய கொஞ்சம் புரிஞ்சிக்க..” என்று கெஞ்சினான். அவள் அந்த வார்த்தைகளை உதறித்தள்ளிவிட்டு நடந்தாள். பின்னாடியே ஓடியவன் “நாளைக்கு கவுன்சிலருக்கு பிறந்தநாளாம்.. ஒம்பது பிட்டு நோட்டீஸ் ஒட்டணும்னு போன் பண்ணி சொன்னாரு.. வர்ற கூலிய அப்படியே கொண்டாந்து உங்கிட்ட தந்துடுறேன் ரோசா..” என்று கெஞ்சினான். “ஓம்பேச்சை நான் நம்பமாட்டேன் தர்மா… எதுவா இருந்தாலும் கையில காசு.. வாயில தோசை.. அவ்ளோதான் சொல்லுவேன்..” என்று கறாராக சொல்லிவிட்டு போனாள். தர்மன் அவளை பின்தொடர்வதை நிறுத்தினான். ஏக்கமாக அவளையே பார்த்தான். சிறிது தூரம் சென்றவள் என்ன நினைத்தாளோ, திரும்பி அருகில் வந்தாள். தர்மன் ஆர்வமானான். அவளோ, “உன்னை பார்த்தா எனக்கும் பாவமாத்தான் இருக்கு. ஆனா, ஒரு பாக்கு வாங்கித்தரக்கூட உங்கிட்ட காசில்ல, என் நிலமையும் கொஞ்சம் யோசிச்சிப்பாரு தர்மா..” என்று சொன்னவள். “நான் ஒண்ணு சொல்லுவேன், முடிஞ்சா அதை செய்யி..” என்று சொல்லி, நேராக அவன் முகத்தைப் பார்த்து, “அஞ்சு ரூவாய்க்கு மஞ்ச கயிறு வாங்கியாந்து என் கழுத்துல முடிஞ்சிப்பிடு… நீ கூப்பிடும்போதெல்லாம் வர்றேன்.. காசு கீசு கேட்கமாட்டேன்… எல்லாம் ஓசிதான்…” என்று அழுத்தமாக சொன்னாள். அவன் நிமிர்ந்து அவள் முகத்தில் காரி துப்புவதுபோல் ஒரு பார்வை பார்த்தான். திரும்பி விறுவிறுவென்று நடந்தான். அவள் எந்த சலனமும் இல்லாமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தியேட்டரில் இடைவேளை மணிச்சத்தம் ஒலித்தது. தர்மன் நிதானத்திற்கு திரும்பினான். எழுந்துபோய் அரங்கின் கதவைத் திறந்துவைத்துவிட்டு, ஸ்டாலில் வந்து நின்றுகொண்டான். திரையரங்கின் உள்ளே இருந்து ஆட்கள் வெளியே வந்தார்கள். கணிசமான கூட்டம்தான். மழைபெய்யும் நாட்களில், வழக்கத்தைவிட பத்திருபது பேர் கூடுதலாக வருவார்கள். முறுக்கு, பாக்கு, பீடி என்று விற்பனையில் சில நிமிடங்கள் ரோசாவை மறந்திருந்தான். மீண்டும் மணிச்சத்தம் ஒலித்தது. ஸ்கிரீன் துணியை இழுத்துவிரித்து கதவை சாத்திவிட்டு, வாசற்படியில் வந்து அமர்ந்துகொண்டான். மழை நின்றிருந்தது. படம் முடியும்முன்பே தியேட்டரிலிருந்து பார்வையாளர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தார்கள். பிட்டு ஓடி முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டான். எழுந்துபோய் மானேஜரை பார்த்தான். வசூல் தொகையை ஒப்படைத்துவிட்டு இருபது ரூபாயை மட்டும் வாங்கிக்கொண்டு கிளம்பினான். படம் முடிந்ததற்கான மணி ஒலித்தது. தர்மன் லேசாக சிரித்துக்கொண்டான். இந்நேரத்திற்கு ரோசா எங்கே இருப்பாள் என்று யோசனை செய்தபடியே நடந்தான்.
இம்முறை சுலபமாக அவளைக் கண்டுபிடித்துவிட்டான். கோயிலின் முன்பு குடை விரித்திருக்கும் பூக்காரி அருகே பிளாட்பாரக் கல்லில் உட்கார்ந்திருந்தபடி வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் அங்கேயே ஓரமாக இருந்த விளக்கு கம்பத்தில் சாய்ந்து நின்றுகொண்டான். அங்கேயிருந்து ரோசாவை ரசித்துப் பார்த்தான். அவளிடம் காலையில் பார்த்த அழுக்கு இல்லை. புடவையை மாத்தியிருந்தாள். முகத்துக்கு மஞ்சள் பூசியிருந்தாள். நெற்றியில் வட்டக் குங்குமம். நீர் தெளித்த சாமந்திப் பூப்போல் இருந்தாள்.. மழையில் நனைந்திருப்பாள் என்று நினைத்துக்கொண்டான். ரோசா பேச்சுவாக்கில் இவன் பக்கம் திரும்பினாள். அவளைப் பார்த்து தர்மன் லேசாக பல்லிளித்தான். அவள் வெடுக்கென்று பார்வையை திருப்பிக்கொண்டாள். சிறிது நேரத்திற்குப் பிறகு, “நிற்கிறானா..? போய்விட்டானா..?” என்று நைஸாக பார்வையைவிட்டாள். தர்மன் அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தான். “என்ன..?” என்பது போல் புருவத்தை உயர்த்தினாள். அவன் தன் பாக்கெட்டிலிருந்த மஞ்சள் கயிறை எடுத்து தராசுத் தட்டை பிடிப்பதுபோல் நிறுத்திக் காட்டினான். அவள் சிலநொடிகள் இமைக்காமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். தர்மன் அவளைக் கடந்து கோயில் வாசல் நோக்கி போனான். அவளும் பூக்காரியிடம் ஒரு காரணத்தை ஒப்புக்குச் சொல்லிவிட்டு அவன் பின்னால் நடந்தாள்.
இருவரும் கோயிலின் சுற்றுச்சுவர் அருகே வந்தார்கள். தர்மன் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றபோது, ரோசாதான் சொன்னாள் “நம்மள கோயிலுக்குள்ளாற விடமாட்டாங்க… அய்யரு நடைய சாத்திட்டு போனபிறவு வாசல்ல நின்னு கட்டிக்குவோம்..” என்று. தர்மன் தலையை ஆட்டினான். இருவரும் தெப்பக்குளம் பக்கம் நடந்துசென்று படிக்கட்டில் அமர்ந்துகொண்டார்கள். அதன்பிறகு இருவரும் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளவில்லை. அவனுக்குத் தெரியாமல் இவளும், இவளுக்குத் தெரியாமல் அவனும் பார்த்துக்கொண்டு மெல்லிசாக சிரித்துக்கொண்டார்கள். அவ்வப்போது குளத்து மீன்கள் நீரின் மேற்பரப்புக்கு வந்து சுவாதித்துச் சென்றன.
அய்யர் கோயில் வாசலை பூட்டிவிட்டு கிளம்பினார். தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. இருவரும் கோயிலின் வாசலுக்கு வந்தனர். கோபுரத்தின் கீழே கதவு ஓரமாய் இருட்டாக இருந்தது. முதலில் தர்மன் அந்த இருட்டுக்குள் போனான். பின் அவளும் புகுந்துகொண்டாள். தர்மன் மஞ்சள் கயிறை எடுத்தான். அவள் தலை குனிந்து நின்றிருந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தவன் அவசர அவசரமாக அந்தக் கயிறை அவள் கழுத்தில் கட்டினான். அவள் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் அதைப் பார்க்காமல் கணக்கில்லாமல் முடிச்சுகள் போட்டுக்கொண்டிருந்தான். ரோசா கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
இருவரும் இருட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்கள். இருவருக்கும் ஏதோ ஒரு பெயரில்லாத உணர்வு… அவன் முன்னேயும், அவள் அவனை ஒட்டிப் பின்னேயும் நடந்தார்கள். அப்போது, வேகமாக வந்த ஒரு பைக் அவளை உரசிக்கொண்டு வந்து நின்றது. “எலே தர்மா.. உன்ன எங்கெல்லாம் தேடுறது.. போனை ஏன்டா சுவிட்சாப் பண்ண… கவுன்சிலரு கையோட கூட்டியாற சொன்னாரு.. வாடா வந்து வண்டில ஏறு..” என்று ஒரு குரல் பிடித்து இழுத்தது. அவன் எதுவும் பேசாமல் பைக்கில் ஏறிக்கொண்டான். பைக்கில் போகும்போது அவளை ஒருவாட்டி திரும்பிப் பார்த்தான். அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவள், மெல்ல அடியெடுத்து வைத்தாள். கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிறு லேசாக ஆடியது. அதை எடுத்து ஆசையாக உள்ளுக்குள் போட்டுக்கொண்டாள். ஒரு அடி எடுத்துவைத்தாள். கயிறில் முடிந்திருந்த மஞ்சள் கிழங்கு லேசாக அசைந்து அவள் மார்பைத் தொட்டு சில்லிட்டது. ஒருவித இனிப்பு அவள் உடலெங்கும் பரவி சிலிர்க்க வைத்தது. கண்களை மூடிக்கொண்டு அப்படியே நின்றுவிட்டாள். அப்போது பார்த்து அவள் காதோரமாய் ஒரு குரல், “ஏட்டி ரோசா.. உனக்காக குவாட்டரு பிராந்தியும், கோழி பிரியாணியும் வாங்கி வந்துருக்கேன்.. வாடி அந்தப் பக்கமா போவோம்…” என்று அழைத்தது. ரோசா அந்தக் குரலைப் பின்தொடர்ந்தபடி இருட்டுக்குள் நுழைந்தாள். அந்த இருட்டுக்குள்தான் சைக்கிளை மிதித்துச்செல்லும் தர்மன் சுவரொட்டிகளில் பசையைத் தடவி ஒட்டிக்கொண்டிருந்தான்.