
எங்கள் நண்பர்கள் குழுவின் வாட்ஸ்அப்பில் அந்தத் தகவலைக் கண்டதும் நான் என்னையறியாமலேயே ‘நாசமாப் போச்சு’ எனக் கத்தினேன். அருகிலிருந்த மனைவி, ‘என்னாச்சு?’ என்பது போலத் திடுக்கிட்டுப் பார்த்தாள். “ஒன்றுமில்லை” எனச் சமாளித்துவிட்டு மீண்டும் அந்தச் செய்தியைப் படித்தேன்.
“ஒருவார விடுமுறை. ஊருக்கு வருகிறேன். நண்பர்களைச் சந்திக்க ஆவல்-நம்பி”
தகவல் செல்வத்தின் எண்ணிலிருந்து வந்திருந்தது. இந்த நண்பர்கள் வாட்ஸ்அப் குழுவில் நம்பி கிடையாது. தெளிவாகச் சொன்னால் இப்படியொரு வாட்ஸ்அப் குழு இருப்பதே அவனுக்குத் தெரியாது. செல்வத்தின் மேல் கோபம் வந்தது. மடையன் இந்தக் குழுவை அவன்தான் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். கோபத்தில் செல்வத்திற்கு போன் போட்டேன். எடுத்ததும், ‘செல்வம்’ என்றேன்.
“யாராச்சும் உடனே போன் போடுவீங்கன்னு தெரியும்… நெனச்ச மாதிரியே நீ போன் போட்டுட்ட..” நம்பியின் குரல்.
புரிந்துவிட்டது. இனி தப்பிக்க முடியாது. இன்னும் ஒரு வாரத்திற்கு நம்பியைச் சமாளித்தே ஆகவேண்டும். வேறு வழியில்லை.
நம்பி எங்கள் எல்லோருக்கும் வகுப்புத் தோழன். எல்லோருக்கும் என்றால் ஏழெட்டு பேர் இருப்போம். எங்கள் எல்லோருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளில் முக்கியமாகச் சொல்லவேண்டியது நம்பியைக் கண்டால் தலைதெறிக்க ஓடுவது. நம்பியை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது என எவ்வளவோ யோசித்துப் பார்த்தும் முடியவில்லை. அவனை யாரிடமாவது அறிமுகம் செய்யவேண்டி இருந்தால், ஏதாவது சம்பவமே நினைவுக்கு வரும். அவனை நினைக்கும் போதெல்லாம் அந்த இ.மெயில் சம்பவம்தான் முதலில் நினைவுக்கு வரும்.
அப்போது கணினி பற்றி அரையும் குறையுமாகத் தெரியத் தொடங்கியிருந்த காலம். மனிதன் செய்யும் எல்லா வேலைகளையும் சடக்கென்று நொடியில் செய்துவிடும் எந்திரம் என்கிற விசயமே எங்களை மிரட்டியிருந்தது. அதிலும் இ.மெயிலைப் பற்றி கேள்விப்பட்டவுடனே வியப்பின் உச்சிக்கே போய்விட்டோம். அஞ்சலகத்திற்குப் போய் கவர் வாங்கி, ஸ்டாம்ப் வாங்கி, அதில் எச்சில் தடவி, கடிதத்தை உள்ளே வைத்து, கவரின் மடிப்புத் தாளில் எச்சில் தடவி, ஒட்டிக் காய வைத்து, அதைக் கவனமாகப் பெட்டியில் போட்டு…. அது போய்ச் சேர்ந்ததா, இல்லையா எனப் பரிதவிக்கும் காலத்தில், உட்கார்ந்துகொண்டே தகவலைச் சம்பந்தப்பட்டவர்க்கே ஒரு நிமிடத்தில் அனுப்பிவிடலாம். அதைப் பார்த்தவுடனே அவரும் நமக்குப் பதில் தருவார். அதுவும் உடனே நமக்குக் கிடைக்கும் என்பது எங்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இவ்வளவு விரைவாக இமெயில் செல்கிறதென்றால் அதன் வேகம் எப்படியிருக்கும் என்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது குமார் சொன்னான்.
“நமக்குத் தெரிஞ்சு, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்தான் பயங்கர ஸ்பீடு. அதுவே சென்னை போக எட்டு மணிநேரம் ஆகுது. இ.மெயில் அதைவிட பாஸ்ட்டா போகுதுன்னா, இ.மெயில் ரயிலைவிட பெரிசாத்தான் இருக்கணும்..”
குமார் கூறியதும் எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது. இ.மெயில் என்பது ரயிலை விடப் பிரம்மாண்டமான வடிவத்தில் இருக்கும் எந்திரமென எங்களுக்குள் சித்திரம் விரிந்தது. அப்போது நம்பி சென்னையிலுள்ள அவனது மாமா வீட்டிலிருந்து ஊர் திரும்பியிருந்தான். குமாரின் கூற்றை ஆமோதித்த அவன் இமெயிலைத் தான் நேரில் பார்த்திருப்பதாகவும், தனது மாமா வீட்டில் எல்லோருக்கும் தனித்தனியாகச் சொந்தமாக இமெயில் உள்ளதாகவும், தன் பெயரிலேயே மூன்று இமெயில் இருப்பதாகவும் சொன்னபோது பிரம்மித்துப் போனோம். ஒவ்வொரு இமெயிலுக்கும் ஒரு பெயர் உண்டென்றும், தனது மூன்று இமெயில்களில் ஒன்றின் பெயர், ’காளி நீலி சூலி அட்.ஜிமெயில் டாட் காம்…’ என எங்களைக் கம்பீரமாகப் பார்த்தபடியே அவன் கூறக் கூற வாய் பிளந்து கேட்டபடியிருந்தோம். அப்புறம் கணினி எங்கள் ஊருக்கு வந்து இமெயில் பற்றித் தெரியவந்த பிறகு காளி நீலி சூலி அட்.ஜிமெயிலிலேயே நம்பியைத் தீட்டித் தீர்த்தோம்.
நம்பி சொல்வதை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவித்த காலமது. அவன்தான் எங்கள் குழுவில் முதன்முதலாக சென்னையைப் பார்த்தவன். அவனது மாமா செல்வாக்கில் அங்கேயே ஒரு வேலையிலும் சேர்ந்தவன். ஊருக்கு வரும்போதெல்லாம் எங்களுக்கென ஏதாவதொரு கதையோடு வந்து சேர்வான். இப்படித்தான் திடீரென ஒருநாள் மும்பையிலிருந்து பேசுகிறேன் எனக் கால் செய்தான். சாட்சியாக வீடியோவிலும் வந்தான். ஒரு வேலையாக மும்பை வந்திருப்பதாகவும், ஒரு மாதம் தங்கப்போவதாகவும் கூறினான். ஒரு வாரம் கழித்துத் திடீரென நாங்கள் எல்லோருமே, ’குல்லி இலக்கிய வட்டம்’ என்கிற வாட்ஸ்அப் குழுவில் இணைக்கப்பட்டிருந்தோம். குழுவை நம்பிதான் உருவாக்கி இருந்தான். குழுவின் முகப்பில் ஒரு வடக்கத்திய சேட் கைகூப்பியபடி இருந்தார். சற்று நேரத்தில் நம்பி போன் செய்து மும்பையில் குர்ரம் சேட் முக்கிய பிரமுகர், பெரிய பணக்காரர், அவருக்குத் தமிழ் மொழி மீது தணியாத தாகம் இருப்பதாகவும் நம்பியின் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்துவிட்டார் என்றும் கூறினான். தமிழுக்கு ஏதாவது செய்ய குர்ரம் சேட் விரும்பியதால் அவர் தலைமையில் குல்லி இலக்கிய வட்டத்தை உருவாக்கியதாகவும் தான்தான் அதன் பொதுச்செயலாளர் எனவும் துணைச் செயலாளர், துணைத்தலைவர் பொறுப்புகளை நாங்கள் பகிர்ந்துகொள்ளலாம் எனவும் கூறினான். “சரிடா…. அதென்ன குல்லி இலக்கிய வட்டம்?” என்றேன்.
குர்ரம் சேட்டின் முதல் எழுத்து கு அவரது மனைவி பெயர் ல்லிஷ்கா…. அதிலிருந்து முதலிரண்டு எழுத்துக்கள் ல்லி… எனவே குல்லி இலக்கிய வட்டம் என்றான். கேட்டுக்கொண்டிருந்த எனக்குக் கிறுக்குப் பிடித்தது போலிருந்தது. அப்புறம் கொஞ்ச நாட்கள் குல்லி இலக்கிய வட்டம் தூக்கத்தில் ஆழ்ந்தது.
பொங்கல் சமயத்தில் ஊருக்கு வந்தவன் எங்களுக்கு ஆளுக்கொரு கரும்பு வாங்கித் தந்து, அதை போட்டோவும் எடுத்துக்கொண்டான். குல்லி இலக்கிய வட்டத்தின் தலைவர் குர்ரம் சேட்டின் அன்பளிப்பு இக்கரும்பு என விளக்கமும் கூறி, எங்களை ஒன்றாகக் கூடவைத்து அவருக்கு வீடியோ கால் செய்தான். தலையில் குல்லாவோடும், வாய் நிறைய வெற்றிலைச் சாற்றோடும் தோன்றிய குர்ரம் சேட் கரகரத்த குரலில், “அல்லா பேத்துக்கும் போங்கல்.. நல்லா.. அழுத்துக்கள்” என்றார். மேலும் என்னவோ சொல்ல வாயெடுத்தார். நம்பி அதற்குள் நிறுத்திவிட்டான்.
இரண்டு நாட்களில் நம்பி சென்னை சென்றுவிட நாங்கள் பெருமூச்சுவிட்டோம். பிறகு கொஞ்ச நாள்கள் கழித்து இரவு எட்டு மணிக்கு போன் செய்தான். குல்லி இலக்கிய வட்டத்தின் அவசரச் செயற்குழுக் கூட்டம் இரவு பத்து மணிக்கு இணையதள வழியில் நடக்க இருப்பதாகவும், அவசியம் கலந்துகொள்ள வேண்டும் எனவும் கூறினான். நான் தயங்கியதும், “ஒரு மாபெரும் இலக்கிய வட்டத்தின் துணைச் செயலாளர் என்கிற பொறுப்பு கொஞ்சம்கூட இல்லையா…? இப்படி இருந்தால் தமிழ் எப்படி ஓங்கும்…?” எனவும் வினவினான். “ஆலையில் சிப்டில் இருக்கிறேன் பன்னிரண்டு மணிக்குத்தான் முடியும்” என்றதும், “பரவாயில்லை இரவு ஒரு மணிக்குச் செயற்குழுவை நடத்தலாம். மிகவும் அவசரம். வந்து விடு” என்றபடி போனை வைத்துவிட்டான்.
வீட்டுக்கு வந்து தூங்கத் தயாராகிக்கொண்டிருக்கும்போது அழைத்து, “கூட்டம் தொடங்கிருச்சு வா…” என்றவன், உடனே வைத்துவிட்டான். தூக்கக் கலக்கத்தோடு ஜூம் ஆப் போனேன். என்னையும் சேர்த்து நாலு பேர் இருந்தனர். குர்ரம் சேட் மிகுந்த சோக முகத்தோடு இருந்தார். நம்பியும் அப்படி இருப்பதாகத் தெரிந்தது. அதுதவிர நானும், சங்கரும் இருந்தோம். முகமன் கூறிக் கூட்டத்தைத் துவக்கிய நம்பி, தலைவர் குர்ரம் சேட் மிகுந்த துயரத்தில் உள்ளதால் தானே கூட்டத்தை வழிநடத்துவதாகவும் கூறி, தலைவர் குர்ரம் சேட்டின் ஆருயிர் மனைவி ல்லிஷ்கா யாரோவொரு டப்பாவாலாவுடன் ஓடிவிட்டதால் இனிமேல்… குல்லி இலக்கிய வட்டம் ‘கு’ இலக்கிய வட்டம் என்கிற பெயரிலேயே செயல்படுமெனவும், அதனை முடிவு செய்யவே இந்த அவசரச் செயற்குழுக் கூட்டம் எனவும் பேசிக்கொண்டிருந்தான்.
எனக்கு வந்த ஆத்திரத்தில் இணைப்பைத் துண்டித்து வெளியேறிவிட்டேன். அடுத்த நாளே அவன் என்னை அழைக்க முடியாதவாறு கருப்புப் பட்டியலில் இணைத்தேன். அன்று மாலையில்தான் தெரிந்தது, நள்ளிரவு செயற்குழுக் கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்க, காலையில் பொதுக்குழு என்ற பெயரில் எல்லோரையும் இணைய வழியில் கூட்டியிருக்கிறான். அதில் எரிச்சலாகி எல்லோருமே அவனைக் கருப்புப் பட்டியலில் சேர்த்திருக்கின்றனர். நான்கு மாதங்களாக எந்தத் தொடர்பும் இல்லை. எங்களுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது. நம்பி எங்கிருக்கிறான்… என்ன செய்கிறான்… என்றெல்லாம் தெரிந்துகொள்ள முயன்றோம்; பலனில்லை.
மாடசாமி அண்ணாச்சி டீக்கடையில்தான் பெரும்பாலும் கூடுவோம். நம்பி மீது அவருக்குத் தனி பிரியம் உண்டு.
“என்ன இருந்தாலும் நம்ம பயல்லே. பம்பாய் வரைக்கும் போயி நம்ம மொழியோட புகழப் பரப்பிருக்கான்ல…” என்பார். நம்பியின் பொய்களை முட்டாள்தனங்களை அவரிடம் ஒவ்வொன்றாக விளக்கியபோது அலட்டிக்கொள்ளாமல்… “சரிங்கலே, அதுக்கென்ன இப்ப? எந்நேரமும் அறிவத் தூக்கிட்டே அலஞ்சா நல்லாவா இருக்கும்? வாழ்க்க ருசிக்காதுலே… அவம் பொய்யினால உங்களுக்கு ஏதும் சங்கட்டம் வந்துச்சா…?”
நாங்கள் மௌனமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இதுவரை அவனது பொய்களால் எங்களுக்கு எந்தத் துன்பமும் வந்ததில்லை, சிற்சில மணிநேரங்கள் பாழானதைத் தவிர. எங்கள் மனதைப் படித்துவிட்டவர் போல மாடசாமி அண்ணாச்சி தொடர்ந்தார்,
“அட… டைம் வேஸ்ட் ஆயிருக்கும் அவ்ளதானலே… ஒவ்வொரு நிமிசத்தையும் துல்லியமா பயன்படுத்த நாம என்ன மிசினாலே…? அதும்போவ அவம் பேசும்போதே டூபாக்கூர்னு கண்டுபிடிக்க உங்களுக்குத் தெரியல. கண்டுபிடிச்சதே தெரியாம அவன பேசவிட்டு ரசிக்கணும்லே” என்றார்.
மாடசாமி அண்ணாச்சி அப்படிப்பட்டவர்தான். அதற்கொரு சம்பவமும் உண்டு. ஒருமுறை இதேபோல ஒரு ஞாயிற்றுக்கிழமையில் டீக்கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். அதுவொரு குடியரசு தினத்திற்கு முந்தைய வாரம். நம்பி ஊரில்தான் இருந்தான். திடீரென உங்ககிட்ட இதுவரை சொல்லாத ரகசியத்தை சொல்லப்போறேன் என்றான். ஆட்கள் வராத மதியப் பொழுது. அண்ணாச்சியும் ஆர்வமானார். பெஞ்சில் கிடந்த அன்றைய நாளிதழைக் கையில் எடுத்து ஒரு செய்தியைக் காட்டினான். குடியரசு தினத்தன்று ஜனாதிபதி வழங்கவுள்ள பத்மஶ்ரீ விருதாளர்களின் விபரம் அதில் இருந்தது. அதில் தமிழகத்தைச் சார்ந்த மறைந்த நாதஸ்வரக் கலைஞர் ஒருவரின் பெயரும் இருந்தது. அந்தப் பெயரைக் காட்டியபடியே நம்பி பெருமிதமாகக் கூறினான்.
“அவரது பெயரன்தான் நான்”
நாங்கள் திகைத்தோம்.
“நம்ப முடியலயா? ஆனா அதான் உண்ம. அவர் வாசிச்ச பீப்பீ இன்னமும் எங்க பூர்வீக ஊர்ல, வீட்ல இருக்குது”
நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். நம்பி மேலும் தொடர்ந்தான். எந்த வழிமுறையில் அவர் தனக்குத் தாத்தா என்பதை விலாவாரியாக விளக்கிவிட்டு, குடியரசுத் தினத்தன்று பத்மஸ்ரீ விருது வழங்கும்போது, தாத்தா வாசித்த பீப்பீயை ஜனாதிபதி பார்க்க விரும்புவதால் அந்த பீப்பிக்குத் தனி விமானம் வருவதாகவும், ஒருவேளை தானும்கூட அதில் செல்ல வேண்டியதிருக்கும் என்றும் சொல்லிக்கொண்டே போனான். நல்லவேளையாக அவனது அலைபேசியில் யாரோ அழைக்க, பேசிவிட்டுக் கிளம்பினான்.
நாங்கள் நாதஸ்வர வித்வான் கதையை நம்புவதா வேண்டாமா என விவாதிக்கத் தொடங்கினோம். அண்ணாச்சி ஒரே போடாகப் போட்டார்.
“அவம் புருடா விடுதாம்லே…”
“எப்படி அண்ணாச்சி சொல்றீய?”
“அட… கூறுகெட்ட கூவைகா! நாதஸ்வரத்தை பீப்பீனு சொல்லும்போதே தெரியலியா…? இவன் அவரு பேரன் இல்லனு?”
சொல்லிவிட்டு கண்ணில் நீர் வரச் சிரித்தார். எங்களுக்கும் புரிய, சிரித்து உருண்டோம்.
நம்பியின் லீலையினால் சில நல்லதுகளும் நடந்ததை ஒப்புக்கொள்ள வேண்டும். எங்களுக்குக் கவிதையின் மேலும் கொஞ்சம் பித்து உண்டு. திடீரென ஒருநாள் பித்து முத்தி ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்து, ஊருக்கு மேற்கே உள்ள வனப்பகுதிக்குச் சென்று நாள் பூராவும் கவிதை தொடர்பான விவாதத்தை நடத்த வேண்டும் என முடிவு செய்து கடலைப்பருப்பு சேவு, மிட்டாய் எல்லாம் வாங்கிக்கொண்டு பதின்மூன்று கிலோ மீட்டர் தூரமுள்ள அங்கு சென்று சேர்வோம்.
அங்கே போய் பேச ஆரம்பித்த சற்று நேரத்தில் கடலைப்பருப்பு சேவு, மிட்டாய் காலியாகும். அதைக் காரணம் காட்டி உடனே திரும்பிவிடுவோம். இப்படியானது எங்கள் ரசனை. இப்படி இருக்கையில் பக்கத்து ஊரில் நடக்கவுள்ள இலக்கியக் கூட்டத்திற்காக முக்கியக் கவிஞர் கருப்பாயி புருசன் வந்திருப்பதை அறிந்து, அவர் தங்கியிருந்த விடுதிக்குப் போனோம். நம்பியும் உடன் வந்திருந்தான். போன பின்புதான் தெரிந்தது, அந்தக் கவிஞர் பெரிய ஜபர்தஸ்து பேர்வழி என்பது. எங்களை ஒரு நிமிடம் கூடப் பேசவிடாமல் அவரது புகழை அவரே பாடிக் கொண்டிருந்தார். நாங்கள் அவஸ்தையாய் கேட்டுக் கொண்டிருந்தோம்.
நம்பியின் போன் திடீரென ஒலித்தது. ஒரு பெரிய மனிதரைப் பார்க்கப் போகும்போது போனை அமைதிப்படுத்த வேண்டாமா? என்கிற கேள்வியோடு அவனை முறைத்தோம்.
“ஹலோ… ஓ… நீங்களா! நான் இப்ப எங்க இருக்கேன் தெரியுமா?” அவர் பெயரச் சொன்னாலே நீங்க சந்தோசத்துல குதிப்பீங்க”
கேட்டுக் கொண்டிருந்த கவிஞர் கருப்பாயி புருசனுக்கு முகம் சந்தோசத்தில் விரிந்தது. நம்பியுடன் பேசிக்கொண்டிருப்பவர் குதிக்கும் ஓசையைக் கேட்க ஆர்வமானார்.
“நான் கவிஞர் கருப்பாயி புருசனோடு இருக்கேன்”
“என்ன சொல்றீங்க… கருப்பாயி புருசனத் தெரியாதா?” நம்பி ஆச்சரியமானான். கவிஞரது முகத்தில் குழப்பம் தெரிந்தது.
“என்னங்க ஐயா, உங்களத் தெரியாதுங்கார்… உங்க புத்தக பேரு ஏதாச்சும் சொல்லுங்க”
நம்பி நிதானமாகத்தான் கேட்டான். கருப்பாயி புருசன்தான் பதற்றமாகி படபடவென ஏழெட்டு நூல்களின் தலைப்பை ஒப்பித்தார். அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
நம்பி ஏழெட்டு நூல்களின் பெயர்களைச் சொன்ன பின்பும் எதிர்முனைக்காரருக்கு கருப்பாயி புருசன் யாரென்றே தெரியவில்லை. சலிப்போடு போனை வைத்துவிட்டு பாவமாகக் கவிஞரைப் பார்த்தான். அதற்கப்புறம் கவிஞர் கருப்பாயி புருசனின் முகத்தில் களையேயில்லை. எங்களுக்கு நம்பியோடு போனில் பேசியவர் யாரெனத் தெரிந்துகொள்ள மனது பரபரப்பானது. வெளியே ஆர்வமாகக் கேட்டபோது நிதானமாகச் சொன்னான்.
“எங்க வீட்டுக்கு வழக்கமா மசால் பொடி போடுறவர். பாக்கியைக் கேட்டு போன் போட்டார்” ஊருக்கு வரும் வழியெல்லாம் சிரித்துச் சிரித்துப் புரையேறிவிட்டது.
செல்வத்திடமிருந்து மீண்டும் போன் வந்தது. நம்பிதான் மீண்டும் அழைக்கிறானென எண்ணி, “சொல்லு நம்பி” என்றேன்.
“மாப்ள! நான் செல்வம்டா. சாரிடா, காலயிலேயே வீட்டுக்கு வந்துட்டான். எல்லோருக்கும் வாட்ஸ்அப் பண்ண ட்ரை பண்றப்ப செல்ல வாங்கி குழுவைப் பாத்துட்டான். ஒன்னும் பண்ண முடில”
“அதனாலென்ன, நம்பியக் கூப்டுக்கிட்டு அண்ணாச்சி கடைக்கு வந்துரு. குரூப்லயேயும் தகவல் சொல்லிரு”
நம்பியின் புதிய கதைகளைக் கேட்க அண்ணாச்சி கடைக்குக் கிளம்பினேன்.
***



