
அப்பாவுக்கு எதுமே நினைவில் இல்லை.
‘கண்ணாடியை இங்கதான வச்சேன்…’ எனப் பதற்றத்துடன் இங்கும் அங்கும் அலைவார்.
சாப்பிட்டு முடித்த பின்னர், ‘நான் சாப்பிடவே இல்லை…’ என சத்தியம் செய்வார்.
அப்போதெல்லாம் இதன் விபரீதம் எனக்குப் புரியவில்லை.
ஆனால்…இப்போது அப்பாவைக் காணவில்லை!
கடந்த இரண்டு நாட்களாக, ‘முருகன் வெளியதான் நிக்கறான். லாரிக்கு டையர் மாத்தனும். நான் போயிட்டு வரேன். முருகா நில்லுடா வரேன்…’ எனப் பேச ஆரம்பித்தார்.
நிற்க…
முதலில் அப்பாவைப் பற்றி சொல்லி விடுகிறேன்.
லாரி க்ளீனர் டூ ‘வசந்தா டிரான்ஸ்போர்ட்ஸ்’ ஓனர்.
நாற்பது வருட கால அயராத உழைப்பு.
வசந்தா என்பது அம்மாதான். எனக்கொரு அக்கா இருக்கிறாள். இவர்களைப் பற்றிப் பிறகு சொல்கிறேன்.
‘அப்பா…நீ எங்க போய்ட்ட?’
அப்பா உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதை நான் பார்த்ததே இல்லை.
எந்நேரமும் பம்பரத்தைப் போல சுழன்றுகொண்டே இருப்பார்.
மிகவும் நேர்மையானவர். அதே நேர்மையை மற்றவர்களிடமும் எதிர்பார்த்து ஏமாந்து போவார்.
அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. பொறுமைசாலி.
அம்மா மீது பாசம் அதிகம். வாராவாரம் அம்மாவுடைய படத்துக்குப் பூ வைத்து கும்மிடும் அளவிற்கு!
ஆம்…அம்மா இறந்து போய் சில ஆண்டுகள் ஆகின்றன.
அக்காவுக்கு கல்யாணம் முடிந்த பின்னர், வீட்டில் நானும் அப்பாவும் மட்டும்தான்.
‘வணக்கம் சார். ரெண்டு நாளா அப்பாவக் காணோம். அப்பாவப் பத்தின விவரம் இதுல இருக்கு. கண்டுபிடிச்சுக் குடுங்க ப்ளீஸ்…’
எல்லாவற்றையும் விட, அப்பாவுக்கு நினைவாற்றல் மிக அதிகம்!!!
லாரி கணக்கு வழக்குகளை துல்லியமாக நினைவில் வைத்துக் கொள்வார்.
எந்த லாரிக்கு எவ்வளவு பெட்ரோல் தேவை? எந்த லாரி எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறது? எல்லாமே விரல் நுனி.
அவருக்கு, குறிப்புப் புத்தகம் என தனியான எதுவும் தேவை இல்லை.
ஒருமுறை…
‘சேகர் பையன்தான நீ…அப்பன போல நீயும் வண்டி ஓட்ட வந்துட்டயா…?’ எனப் பல வருடங்களுக்குப் பிறகு, ட்ரைவராக வந்த ஒருவனை அடையாளம் கண்டு அதிர்ச்சி கொடுத்தார்.
சரி, விஷயத்திற்கு வருகிறேன்.
வெளியில் நிற்பதாக அவர் சொன்ன அந்த முருகன் அப்பாவின் நண்பர். விபத்தில் அவர் இறந்து போய், பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது.
‘அப்பா…முருகன் செத்துப்போய் பத்து வருசம் ஆகுது. ஏன் இப்படி உளறிட்டு இருக்க? வெளிய யாருமே இல்ல. அமைதியா படுத்துத் தூங்கு…’
அப்பாவை நான் புரிந்து கொள்ளவில்லை.
இல்லை…
அப்பாவுக்கு ஏற்பட்ட நோயை நான் புரிந்து கொள்ளவில்லை.
சென்ற வாரம் கேஸ் சிலிண்டரை ஆன் செய்துவிட்டு, அதை அணைக்க மறந்து விட்டார்.
திட்டித் தீர்த்தேன்.
‘எனக்கு நிறைய வேல இருக்கு. உன் பின்னாடியே வந்துட்டு இருக்க முடியுமா? ஒழுங்கா இந்த ரூம் உள்ளேயே இரு. இல்லனா எங்கயாவது கொண்டு போய் ஆஸ்ரமத்துல சேத்துடுவேன்…’
‘அப்பா…நீ எங்கே போயிட்ட? நான் திட்டினதால கோபப்பட்டு போயிட்டியா? அது மட்டும் உனக்கு ஞாபகம் இருக்கா?’
அக்கா வந்தாள். அப்பாவை விசாரித்தாள். அழுதாள். சென்று விட்டாள்.
வேறென்ன செய்ய முடியும் அவளால்…?
அப்பா காணாமல் போன மூன்றாவது நாள் அந்த அழைப்பு வந்தது.
‘சார், நீயூ டவுன் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து…’
‘சொல்லுங்க சார். அப்பா கிடைச்சுட்டாரா…?’
‘கிடைச்சுட்டாரு…உடனே வாங்க…’
ஓடினேன்.
தலை தொங்கியபடி ஸ்டேஷனின் ஒரு மூலையில் உள்ள நாற்காலியில், முதியவர் ஒருவர் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
அது அப்பாதான்…அப்பாவேதான்…
‘அப்ப்பா…’ என்றேன்.
உடனே தலை நிமிர்ந்து என்னைப் பார்த்த அவர், ஒரு குழந்தையைப் போல சிரித்தார்.
‘அப்பா…என்ன தனியா விட்டுட்டு எங்கே போய்யிட்ட? என் மேல கோபமா ?’ என்றேன்.
‘யார் சார் நீங்க?’ என்றார்.
*******