
என் பிணத்திலிருந்து
ஆதார் எண்ணை அழித்துக்கொண்டிருக்கிறேன்
என் உடலெங்கும் அப்பியிருக்கும்
காங்கீரிட் சாயலை கழுவிக்கொண்டிருக்கிறேன்.
என் கையிலிருக்கும் சொற்களை
எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடைத்துக்கொண்டிருக்கிறேன்.
ஏன் என்னால் சிலவற்றை கைவிட முடியவில்லை
என் ஒழுங்குகளெல்லாம்
என் அந்தரங்கமெல்லாம்
என் தண்டனைகளெல்லாம்
சில குரல்களாக தென்படுகிறது?
ஒரு அழைப்பை அப்படியே விட்டுவிடும்போது
ஒரு நியாயத்தை நிராகரிக்கும்போது
ஒரு முன்முடிவை திணித்து விட்டிருக்கும் போது
எல்லாம் பழகிவிடுமென சொல்லும் போது
கண்கள் தழும்பிவிடுகின்றன
இதற்கு முன்
நான் எதையுமே பழகவில்லையா என்ன
அத்தனை காதலையும்
அத்தனை காமத்தையும்.?