
ஜப்பானிய சமகால எழுத்தாளர்களில் ஒருவரான ஹாருகி முரகாமியின் எழுத்தில் வெளிவந்த நாவல் இது. 70களில் நடக்கிற கதை. “டோரு வாட்டனபி” என்கிற மனிதனின் மாணவ கால நினைவுகளின் பயணம்தான் இக்கதை.
அவனுடைய பால்ய கால நண்பனான “கிசுகி”யின் மரணமும், கிசுகியின் தோழியான “நாவொகோவு”டனான காதலும், அச்சமயத்தில் அவன் வாழ்வில் குறுக்கிடும் “மிடோரி” என்ற பெண்ணின் நெருக்கமும் என்று கதை பயணிக்கிறது.
ஆசாதாரணமான நட்பு, சுதந்திரமான பாலுறவு, காதல், இழப்பு, ஆசை என்று தொடர்ந்து அலைக்கழிக்கபடுகிறான்.
கீசுகியின் மரணம் வாட்டனபி நவோக்கோ இருவரையும் பாதிக்கிறது. அந்த பாதிப்பில் இருந்து வாட்டனபியால் மீண்டு வர முடிகிறது. ஆனால் நவோக்கோவால் மீள முடியவில்லை. வாட்டனபி மீது கொள்ளும் காதல் சற்றே ஆறுதல் தந்தாலும் தொடர் மன உளைச்சலின் காரணமான மனநல நல விடுதியில் சேர்க்கபடுகிறாள்.
அவள் வாட்டனபிக்கு எழுதும் கடிதத்தில் பின்வருமாறு எழுதுகிறாள்.. “நாங்கள் இங்கே (மனநல விடுதியில்) இருப்பது குறைபாட்டை சரிசெய்வதற்கு அல்ல, நம்மை அந்தக் குறைபாட்டுக்கு பழகிக்கொள்வதற்கு. நமது குறைபாடுகளை அடையாளம் கண்டுகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் இயலாததே நம்முடைய பிரச்சினைகளில் ஒன்றாகும். எப்படி ஆணோ பெண்ணோ ஒவ்வொருவரின் நடையும் குறிப்பிட்ட விதத்தில் இருக்கிறதோ, அதுபோன்றே ஒவ்வொருவரும் சிந்திப்பதிலும் உணர்வதிலும் விஷயங்களைப் பார்ப்பதிலும் அவரவருக்கென ஒரு சுபாவம் இருக்கிறது. நீங்கள் அவற்றை மாற்ற விரும்பினாலும் அது ஒரே இரவில் நிகழ்ந்து விடாது. ஆனால் விடாப்பிடியாக அதனை ஏதோ ஒருவிதத்தில் வற்புறுத்தினால், வேறு ஏதாவது ஒன்று தவறாக போகும்”. இந்த வரிகளை தொடர்ந்து மனதில் அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன்.
இது யாருக்காக சொல்லப்பட்ட வரிகள்.. தனக்கு பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்து மனநல விடுதியில் வாழ்பவர்களுக்கா அல்லது பாதிப்பு இல்லை என்று நினைத்துக்கொண்டு வெளியில் இருப்பவர்களுக்கா?
நான் படித்த வரையில் காமத்தை இந்த அளவு துல்லியமாக எழுதியவர்கள் யாரும் இல்லை. அருவி போன்றும் ஆர்ப்பரிக்கும் உறவை சொன்னவர்கள் உண்டு அல்லது கானல் நீர் போல் சொல்ல முற்பட்டவர்கள் உண்டு. ஆனால் மழைத் தூறல் போல் காமத்தை வாசித்தது இவரிடம் தான்.
வாழ்க்கை என்பது ஒரு சாக்லேட் பாக்ஸ் – இந்த வசனத்தை டாம் ஹாங்க்ஸ்’ன் Foresh Gump’ல் நாம் கேட்டிருப்போம். அது இந்த நாவலில் வருகிற வரிகள்தான். டாம் ஹாங்க்ஸ்’ன் நினைவுகளும் இந்த நாவலில் வருகிற வாட்டனபியின் நினைவுகளும் பல இடங்களில் ஒத்து போகின்றன.
இந்த மூன்று பேரை தவிர்த்து ரெய்ககோ, நாகசாவா, ஸ்டோர்ம் ட்ரூப்பர் பாத்திரங்களும் நமக்கு எல்லையற்ற அனுபவங்களை தருகிறவர்கள்.
நாவல் முழுக்க இசையும் எழுத்தும் தொடர்ந்து பேசப்படுகிறது. பின்னணி இசையுடன் பல படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் நாவலுக்கு பின்னணி இசை வாசித்து கேட்டதுண்டா
இந்த நாவலை நாம் படிக்க ஆரம்பித்த தருணத்தில் இருந்து இந்த நாவலுக்கான பின்னணி இசையுடன்தான் பயணிப்போம். இந்த நாவலின் பெயரே பீட்டில்ஸ் என்ற புகழ்பெற்ற இசைக்குழுவின் பாடலான நோர்வீஜியன்வுட்டை மரியாதை செய்வதற்காக வைக்கப்பட்டதுதான்.
நாவல் முழுக்க இசையும் பாடல்களும்தான்… ஒரு தருணத்தில் நவோக்கோவின் இறப்பை நினைவுகூரும்போதும் அவளுக்கு இசையின் மூலம் இறுதி மரியாதை செய்ய விரும்புகிறார்கள். ஒயின் அருந்திபடியே ரெய்க்கோ Norvegian Wood, Yesterday, Michelle, something, Here comes the sun, The fool on the Hill, Benny Lane, Blackbird, Julia, Nowhere Man, And I love her, Hey Jude வாசிக்க ஆரம்பிக்கிறாள்.
ட்ரூமன் கேபோட், ஜான் அப்டைக், எஃப் ஸ்காட் , பிட்ஜெரால்டு, ரேமண்ட்சாண்ட்லர், போரிஸ்வியான் என்ற எழுத்தாளர்களின் எழுத்தை பற்றி பேசப்படுகிறது.
மிக எளிய நடையில் கே. சுப்பிரமணியன் இந்த புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். நிச்சயம் வாசிக்க வேண்டிய படைப்பு.
கதையில் ஒரு இடத்தில், பட்டினியில் வாடும் ஒருவன் எலும்புகளைச் சப்புவது போன்ற தீவிரத்துடன் நான் இந்த புத்தகத்தை எழுதி செல்கிறேன் என்று ஒரு வரி வரும் . இது உண்மை என்பதை படித்து முடிக்கும் தருணத்தில் நாம் உணருவோம்.