சிறுகதைகள்

ஒரு முன்ஜென்ம காதல் கதை – சந்தீப் குமார்

சிறுகதை | வாசகசாலை

“அய்யா…….வேணாங்கய்யா…..என்ன….விட்ருங்கைய்யா….அப்பாக்கு என்ன விட்டா வேறாறுமில்லைங்கய்யா. .அய்….ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ!!! ”

அவன் வைத்திருந்த ஈட்டி என் நெஞ்சைத் துளைத்து இதயத்தினுள் ஆழமாய் இறங்கியிருந்ததை உணர முடிந்திருந்தது. பெருக்கெடுத்து வெளியோடி வந்திருந்த செங்குருதி, அவள் எனக்கு ஆசையாய்ப் பரிசளித்திருந்த வெண்ணிற முழுக்கைச் சட்டையை முழுவதுமாய்ச் சிவப்பாக்கியிருந்தது. நான் தாங்கும் சக்திக்கும் மீறியதானதொரு வலி உடலெங்கும் வியாபிக்கத் தொடங்கியிருந்தது. மூக்கின் துவாரங்கள் சுவாசத்திற்குப் பதிலாய் இரத்தத்தை வெளியேற்றிக் கொண்டிருந்தன. பிராணவாயு கிடைக்கப்பெறாமல் தசைகள் தளரத் துவங்கியிருந்தன. நாடி குறைவதையும், மூச்சுத் திணறத் துவங்குவதையும், கண்கள் மெல்ல இருண்டு, உடல் குழைய நிலை குலைந்து நான் மெல்ல கீழ் நோக்கிச் சரியத் துவங்கியது வரையில் அனைத்தையும் நன்கு உணர்ந்திருந்தேன். என் புலன்கள் முழுவதுமாய்ச் செயலிழக்கத் துவங்கும் முன்வரை என் கண்கள் கண்ட காட்சிகள் என்னுள் அப்படியே பதிந்துப்போயிருந்தன.

“அவன், அவள இதயத்துல வச்சு தாங்குரானாம்ல. அதான் அந்த இதயத்தையே குத்திக் கிழிச்சுப்புட்டேன்”, எவ்வித நெருடலுமற்று அவன் சொல்லி முடிக்க, கூடிருந்தவர்கள் ஒரு வித திமிருடன் சத்தமாய்ச் சிரிக்கத் துவங்கவும், என் புலன்கள் என்னை விட்டு முழுதாய் நீங்கவுமாய், நான் என்னை வேறொரு பரிணாமத்தில் உணரத் துவங்கியிருந்தேன். அங்கு நான் அது வரையில் வாழ்ந்த வாழ்வுக்கான அனைத்து சுகநினைவுகளும் ஒரு முன்கதைச் சுருக்கம் போல் என் கண் முன்னே ஓடி மறைந்தன.

ஆம்!!!! நான் இறந்துவிட்டிருந்தேன்!!! அன்று என் பிறந்தநாள். என் துவக்கத்தைக் குறித்த அதே நாளிலே என் முடிவும் எழுதப்பட்டிருந்தது, எனக்குப்  பெருத்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளித்திருந்தது. அங்கு நிகழ்ந்திருந்த அத்தனை கொடூரங்களுக்குமான ஏக சாட்சியாய் அங்கு  நானே என்னைப் பரிதாபத்துடன் பார்த்தபடி நின்றிருந்தேன். என்ன செய்திடுவேன் என்றறியாத குழப்பமுற்ற நிலையில் நான் இருக்க,  ஒரு வித இயலாமை என்னை முழுதாய் விழுங்கியிருப்பதாய் உணரத் துவங்கியிருந்தேன்.

அப்போது அந்தப் பாடல் கேட்கத் துவங்கியது. நான் நன்கு அறிந்திருந்த ஒரு பாடல். நான் பல நாட்கள் அதைப் பாடித் திரிந்திருக்கிறேன். பலருக்கும் பரிந்துரைத்திருக்கிறேன். இதையெல்லாம் நினைவுகூர என்னால் முடியும் போதும் கூட அந்தப் பாடலையோ அதன் வரிகளையோ நினைவுக்குக் கொண்டு வர முயன்றும் முடியாமல் போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல அந்தப் பாடலின் ஒலி அதிகரிக்கதுக் கேட்கத் துவங்கியது. அது அந்தப் பாடல் என்னை நோக்கி வருவதைப் போன்றதொரு மாய பிம்பத்தை எனக்குள் ஏற்படுத்தியது. அதன் ஒலியின் அளவு கூடிக் கொண்டே போக விட்டு விட்டு ஒலித்தது.

இம்முறை அது எனக்கு மிக அருகில் மிகுந்த சப்தத்துடன் ஒலிக்கத் துவங்கியிருந்தது. அதன் ஒலி, என்னால் தாங்க முடிந்திட்ட அளவைக் காட்டிலும் மிகுதியாய் இருக்க, நான் கைகளால் என் காதுகளைப் பொத்திக் கொண்டு உடலைக் குறுக்கித் தரையில் அமர்ந்தேன். மேலும், மேலும் அதிகரித்துக் கொண்டே சென்ற அந்த ஒலி என் மனதின் சமநிலையைத் தகர்க்கத் துவங்க நான் திடுக்கிட்டு விழித்திருந்தேன்.

அலுவலகத்தில், இரவு நேரப்பணியில், அலுவலக இருக்கையில் அமர்ந்தபடியே உறங்கியிருந்தேன். கைப்பேசியை எடுத்து நேரம் பார்த்தபோது மணி இரவு 12.30ஐக் காட்டியது. கைப்பேசியில் 21 தவறிய அழைப்புகள் பதிவாகியிருந்தன. அதில் 13 அழைப்புகள் என் மனைவியிடமிருந்து வந்திருந்தன. நான் அமர்ந்திருந்த கணினியின் திரை அணைந்து இருந்தது. பொத்தானை அழுத்திக் கணினியின் திரையை உயிர்ப்பித்த பின் கைப்பேசியை எடுக்கவும், அதில் மீண்டும் அவளின் அழைப்பு  வரவும் ஒத்து இருந்தது. என் கனவில் ஒலித்து என்னைப் பாடாய்ப் படுத்தி எடுத்திருந்த அதே பாடல். கைப்பேசியின் திரையில் தெரிந்த பச்சை நிறக் குறியீட்டை அழுத்தி விரல்களால் இழுக்கவும் மறுமுனையில் அவள் குரல்,

“நாயே…! ஃபோன் எடுக்காம எங்க போய்த் தொலைஞ்ச”, கோபத்தில் பொரிந்திருந்த போதும், அதில் ஒரு காதலின் இழை.

“தூங்கிட்டேன் டி”, மெல்லிய குரலில், முழுதாய்க் கலையாத தூக்கத்துடன் சொன்னேன்.

“அய்யோ…தூங்கிட்டியா? அப்போ அந்தக் கனவு வந்திருக்குமே”, என்னைப் பற்றி நன்கு அவள் அறிந்து வைத்திருக்கிறாள் என்பதை எனக்கு எடுத்துணர்த்தும் பாவத்தில் அவள் வினவ,

“ஆமாம். வந்திச்சு, அதான் ஃபோன் எடுக்கல”. என்றேன் நான்.

“இன்னிக்கு செத்தது யாரு? நீயா இல்ல உன் அப்சரசா?”, அவள் கேட்ட தொனியில் நிறைய கிண்டலும் சிறிது பொறாமையும் நிரம்பியிருந்தது.

“நான் தான்”, ஒரு மித வருத்தத்துடன் கூறினேன்.

அதனை உடன் உணர்ந்தவளாக,

“அய்யோ….ஸாரிடா….மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே மை ஸ்வீட்ஹார்ட். லவ் யூ சோ மச் “, என்று கொஞ்சும் மொழியில் தன் அழகுக் குரலில் எனக்கான பிறந்தநாள் வாழ்த்தினை அவள் கூறி முடிக்கவும், என் மேலாளர் என்னை அழைக்கவும் சரியாய் இருந்தது.

“ஹே… நான் போணும். காலைல வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம்”, அவளின் வாழ்த்துக்குப் பதிலேதும் அளிக்காமல், ஏதோ சொல்லத் துவங்கியிருந்த அவளைப் பேசவிடாமல் தொடர்பைத் துண்டித்தேன். நிச்சயம் ஏமாற்றமடைவாள்தான். ஆனால், என் மேலாளர் குறித்தும், அவருக்கும் எனக்குமான பனிப்போர் குறித்தும் நன்கு அறிந்தவள் என்பதால், என் செய்கைகளுக்கான விளக்கங்களை நான் அளிக்கத் துவங்கும் முன் தானாய் விளங்கிக் கொள்வாள்.

ஆம்! அவள் அப்படித்தான். எனக்கும் சேர்த்தே யோசித்துப் பழக்கப்பட்டவள். அவளுக்காய் அவள் யோசித்திடும் வேளைகள் வெகு சொற்பமே. அவளின் அழைப்பை அப்படி பாதியில் நான் துண்டித்தது, என்னில் ஒரு குற்றவுணர்ச்சியை மிதமாய்க் கிளறி விட்டிருந்தது.

மீண்டும் மேலாளரின் அழைப்பு. நிச்சயம் இது என் இந்த இரவுப்பொழுதை இன்னும் மோசமானதாக ஆக்கத்தான். அவருடனான பனிப்போரின் விளைவுதான் இந்த இரவு நேரப் பணி. அதிலும் நள்ளிரவில் அவர் தூங்கப் போகும் முன் ஏதாவதொரு காரணம் கண்டுபிடித்து என்னைத் திட்டித் தீர்க்காவிட்டால் அவரின் அன்றைய இரவு உறக்கமற்றுப் போகும் போலும். அவருடனான அழைப்பு வழக்கம் போல் முடிந்திருந்தது. அவர் அழைப்பைத் துண்டித்ததும் நான் மீண்டும் அவளை அழைத்தேன். மறுமுனையில் பதிலில்லை. அவள் உறங்கியிருக்க வேண்டும். வேறு நபர்களின் வாழ்த்து அழைப்புகளை ஏற்கவோ, வாழ்த்துச் செய்திகளைக் கண்டு பதிலளிக்கவோ மனம் ஒத்து வராமலிருக்க, “ச்சே எப்டி அதுக்குள்ள தூங்க முடியுது இவளால”, மனதில் நான் நினைத்து முடிக்கவும் பக்கத்து இருக்கையில் இருந்த நண்பன் பிரதாப்பின் குறட்டைச் சத்தம் காதைப் பிளந்தது. இப்படியாகப் படுத்துவுடன் உறங்கிடவும், குறட்டை விட்டுத் தூங்கிடவுமான வாழ்க்கை அமையப்பெற்றவர்கள் நிஜத்தில் பாக்கியசாலிகள்தான். நான் தூக்கத்தைப் பெரிதும் விரும்புகிறவன் என என்னிடம் தெரிவிப்பவர்களைப் பெரும் ஆச்சரியத்துடன் நோக்குபவன் நான். காரணம் தூக்கம் என்பது நான் அடைந்துக் கிடக்கும் சிறை. தினம் தினம் நான் சென்று மீளும் சிறை.

தூக்கம் வித்தியாசப்பட்ட கனவுகளைத் தருமாம். விசித்திரமாய், விதவிதமாய், வித்தியாசமாய், விபரீதமாய், விகாரமாய் எனப் பலவிதக் கனவுகளைத் தருமாம். ஒரு சில அறிவியல் கண்டுபிடிப்புகள்கூடத் தூங்கும்போது கனவுகள் வழியே  சாத்தியப்பட்டதென வரலாறுகள் உண்டு. ஆனால், என் தூக்கம் எனக்கு ஒரே ஒரு கனவை மட்டுமே கொடுக்கிறது. ஒரே கனவின் வித்தியாசப்பட்ட நிகழ்வுகளையே நான் மீண்டும் மீண்டும் காண்கிறேன். கண்ட அதே இடம், கண்ட அதே கட்டிடங்கள், கண்ட அதே மனிதர்கள், கூடவே அவள். ஆனால், வித்தியாசப்பட்ட நிகழ்வுகள். ஒவ்வொரு முறையும் வாழ்வின் ஏதோவொரு பகுதியை வாழ்ந்து முடிப்பது போன்றான உணர்வு.

என் சிறு வயது துவங்கி இது நாள் வரையில் நான் கண்டிருந்த அனைத்துக் கனவுகளுமே அவளையும், அவளைச் சார்ந்த மனிதர்களையும், அவர்கள் வசித்திருந்த அந்த ஊரையும் மட்டுமே சார்ந்ததாய் அமைந்திருப்பதில் இருக்கும் மர்மத்திற்கு என்னிடம் பதிலில்லை. என் பதினேழு வயது வரையில் நான் எனக்கு வந்திருந்த கனவுகள் குறித்துப் பெரிதான கவலை ஒன்றும் கொண்டிருக்கவில்லை.  ஆனால், என் கனவுகளை, என்னைக் கவனிக்க வைக்கும் வகையிலான, என் கனவுகளைக் குறித்து நான் கவலை கொள்ளும் வகையிலான நிகழ்வுகளும் அவ்வாண்டே நடந்தேறின.

அன்று என் பன்னிரெண்டாம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வு விடுப்பு முடிந்து, நாங்கள் மீண்டும் வகுப்பறைக்கு வந்திருந்த நாள். என் உற்ற தோழியாயிருந்த ஜானகி என்னிடம் சிறு வெட்கத்துடன் நெருங்கி வந்து, ” டே, லீவ்ல நான் வீட்ல இருந்தப்ப நீ என் கனவுல வந்த, உனக்கு நான் எப்போவாவது கனவுல வந்திருக்கேனா”, என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, ” நிறைய தடவ வந்திருக்கியே “, என யோசிக்காமல் அவளிடம் பொய் கூறியிருந்தபோதும், அதுவரையில் எனக்கு வந்திருந்த கனவுகள் குறித்தான என் நியாபகங்களை நான் புரட்டத் துவங்கியிருந்தேன். அனைத்திலும் அதே முகங்கள், அதே இடங்கள். அன்று தொடங்கி என் கனவுகளை நான் கவனிக்கத் துவங்கினேன். மாறுதல்கள் ஏதும் இல்லாமல் மீண்டும் மீண்டும் கண்டு பழகிய அதே முகங்கள். அதே இடங்கள். ஆனால், வேறு வேறு நிகழ்வுகள். கனவுகளின் துவக்கம் வெவ்வேறாய் இருந்தபோதும், முடிவு ஒன்றாயே இருந்தது. என் மரணம். அந்த மரணம் என் தூக்கத்தின் எல்லையாய் அமைகிறது. கனவுகளில் நான் இறக்கும் போதெல்லாம் தூக்கம் கலைந்து எழுகிறேன். மீண்டும் தூங்கத் துவங்கும்போது அதே மனிதர்களைக் கொண்ட வேறொரு நிகழ்வுடன் கூடியதான கனவில் சஞ்சரிக்கிறேன். சுருங்கச் சொல்வதென்றால் என் தூக்கம், நான் அந்தக் கனவு உலகிற்குள் நுழைவதற்கான வாயில். அங்குச் சம்பவிக்கும் என் மரணம், அங்கிருந்து நான் வெளியேறி மீண்டு வருவதற்கான வாயில்.

முதலில் இது எனக்கு ஒரு வித ஆச்சரியத்தைத் தான் கொடுத்தது. நான் எங்கோ பார்த்த, படித்த ஏதோவொரு நிகழ்வின் பாதிப்பாகவே இது இருக்க வேண்டுமெனத் தீவிரமாய் நம்பியிருந்தேன். வருடங்கள்தான் மாறியதே தவிர எனக்கு அனுதினமும் வந்திருந்த கனவில் மாற்றமேதும் நிகழ்ந்திருக்கவில்லை. இது என்னில் ஒரு வித மன அழுத்தத்தைத் தரத் துவங்கியிருந்தது. தூக்கத்தைக் கண்டு நான் அஞ்சத் துவங்கியிருந்தேன். இதைப் பகிரவோ, இது குறித்தான புரிதல்களை எனக்கு ஏற்படுத்தவோ யாருமின்றித் தனியே தவித்து வந்திருந்தேன். தீவிரத் தூக்கமின்மை என்னைப் பாதித்திருந்தது. முதன் முதலாய் வீட்டிலிருப்பவர்கள் என்னைக் குறித்துக் கவலை கொள்ளத் துவங்கியிருந்தனர். அவர்களிடம் நான் முதன் முதலாய் என் கனவுகளைக் குறித்துச் சொன்ன நாள் இன்றும் நினைவில் உள்ளது.

“என்னது ஒரே கனவே தினமும் வருதா, அதனால என்ன பிரச்சன உனக்கு”, ஏளனத்துடன் கேட்டார் அப்பா.

என் கனவுகளில் நிகழ்ந்திருந்த நிகழ்வுகளைக் காது கொடுத்துக் கேட்ட அம்மா,” இதுலாம் ஹார்மோன் ச்சேஞ்சஸ் பா. சரியாய்டும்” என்றவாறே என்னைத் தட்டிக் கொடுத்துக் கடக்க, ” என்னால தூங்கவே முடியல. யாராவது என்ன கொஞ்சமாவது கண்டுக்ரிங்களா”, என அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துக் கத்தி அழுதது இன்றும் நினைவில் உள்ளது.

அதன் விளைவாக ஒரு மனநல மருத்துவரிடம் செல்ல நேர்ந்தது.
நான் சொன்ன அனைத்தையும் கேட்ட அவர், தூங்குவதற்கான சில மருந்துகளையே மீண்டும் எழுதிக் கொடுத்தார். நான் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாய்த் தெரிவித்தார். இப்படியாக நான் ஒரு மனநோயாளியாக அறியப்படத் துவங்கினேன்.

தூக்கம் எனக்குத் தந்திருந்த பயத்தைக் காட்டிலும், விழித்திருந்த போது நான் கண்ட இந்த உலகம் என்னை வெகுவாய்ப் பயமுறுத்தத் துவங்கியிருந்தது. அதிலிருந்து தப்பித்து வெளியேற நான் தூக்கத்தையே ஆயுதமாய்ப் பயன்படுத்தத் துவங்கியிருந்தேன். நினைத்த மாத்திரம் அங்கிருந்து வெளியேற ஒரு வழிமுறையையும் நான் கண்டறிந்திருந்தேன். தற்கொலை செய்துக் கொள்வது. கனவிலிருந்து நான் வெளியேற விரும்பும் வேளையில் கனவினுள் இருக்கும் என் உயிரை நானாய் மாய்த்துக் கொள்வது என்னை அங்கிருந்து வெளியேற்றி, என் தூக்கத்தைக் கலைத்து நிதர்சனத்திற்குக் கொண்டு வந்தது. இப்படியாக என் கனவை என்னால் கட்டுக்குள் வைக்க முடிந்தது எனக்கொரு பெருத்த நிம்மதியை அளித்திருந்த போதும், நான் உறங்கி எழுவது போன்றதான உணர்வை என்னால் உணர முடியாமல் போனது. விழித்திருக்கும் போதும், உறங்கும் போதும்  இரு வேறான வாழ்க்கையை வாழ என்னை நானே பழக்கப்படுத்தியிருந்தேன்.

நான் அங்குச் செல்ல விரும்புவதும், அங்கிருந்து நினைத்த மாத்திரத்தில் தற்கொலை செய்துக் கொண்டு வெளியேறி விடுவதற்குமான காரணம் அவள். என் கனவு முழுவதுமாய் நிரம்பிக் கிடப்பவள். ஆனால், அவளுக்கான பெயர் அந்தக் கனவில் எங்கும் இருந்திருக்கவில்லை. யாரும் அவளைப் பெயர் சொல்லியும் அழைத்திருக்கவில்லை. அவள் என்னை “த்தே..ந்தா” என்று ஒருவித அலட்சியத்துடன் அழைப்பாள். நான் அவளை “என்னங்க, வாங்க, போங்க” என்றே பயம் கலந்து அழைத்திருந்தேன். அவள் அதை வெகுவாய் இரசித்திருந்தாள்.

அந்தக் கனவில் வரும் அவள் வெறும் கனவல்ல, அவள் நிச்சயமாய் எங்கோ இருக்கிறாள் என நான் வெகு தீவிரமாய் நம்பியிருந்தேன். அவளும் இது போலவே என்னைக் கனவு காண்பாள் என மூர்க்கமான நம்பிக்கை கொண்டு காணும் பெண்களிலெல்லாம் நான் அவளையே தேடி வந்தேன். என்னளவில் அவள் பெண்களுக்கான ஒரு ஒப்பீடாய் மாறிப் போயிருந்தாள். அழகிலும், அறிவிலும் அவளை ஒத்திருந்த பெண்ணைத் தேடியே என் நிஜ வாழ்வு கரைந்திருந்தது.

அவள் பேரழகி தான். உடலாலும், உள்ளத்தாலும். காண்பவரிடம் மெளனமொழி பேசி ஆளைச் சாய்த்திடும் அழகு கண்கள் அவளுக்கு. ஒரு மித மருட்சி அவளின் கண்களில் எப்போதும் இழையோடும். ஓரிடம் நில்லாது அங்குமிங்குமாய்ப் பாய்ந்தோடிக் காணும் அனைத்தையும் அலசி ஆராய்ந்துக் கொண்டே இருக்கும் மை பூசிய அழகு கண்கள். கோபம் கொண்டு சிவக்கும் போதும், மோகம் கொண்டு வெட்கும் போதும் அவள் கண்கள் பேரழகு. அதைக் கண்டிடவே நான் மீண்டும் மீண்டும் அங்குச் செல்கிறேன். அங்கு நிரந்திரமாய்ச் சிக்கிக் கொள்ளவும் நான் விரும்பியதுண்டு. அவளைக் காண வேண்டி, அவள் ஸ்பரிசங்கள் வேண்டி, அவள் அன்பை வேண்டி.

அவளை ஒப்பீடாய்க் கொண்டே கனவில் மட்டும் காதல் நிகழ்த்தி ஓட்டி வந்திருந்த வாழ்க்கை மீண்டுமொரு திருப்பத்தைச் சந்தித்தது. என் வீட்டிலிருந்தவர்கள் எனக்கான பெண்பார்க்கும் படலத்தைத் துவங்கியவுடன்.

“அம்மா! என் மனசுல ஒரு பொண்ணு இருக்கா. அது மாதிரி ஒரு பொண்ண பாத்தா மட்டும்தான் நான் கட்டிப்பேன்”, என்று பிடிவாதமாய் இருக்க, “சரிடா, வந்து மொதல பொண்ண பாரு”, என்பதாய்ச் சமாதானப்படுத்தி என்னை அழைத்துச் சென்றிருந்தாள்.
சம்பிரதாயத்திற்குச் சென்றுவிட்டு வீடு வந்ததும் அம்மாவைத் தனியே அழைத்துப்போய் நான் சொன்னேன்,

“அம்மா! எனக்கு இந்தப் பொண்ண புடிக்கலை”.

“ஏன் சாமி”, குழப்பத்துடன் வினவினாள் அம்மா.

“நான் அந்தப் பொண்ணுகிட்ட உனக்கு உன் வாழ்க்கைல என்ன கனவுன்னு கேட்டா, நான் ஒரு நல்ல மனைவியா இருக்கனுங்கரது தான் கனவுன்னு சொல்ரா. அதனால வேண்டாம்மா”,
நான் கூற,

“ஏன் டா அதானே குடும்பத்துக்கு நல்லது. நல்லதுதானே டா சொல்லிருக்கா” – இது அம்மாவின் பதில்.

“அம்மா, கனவு இல்லாத பொண்ணு பொணத்துக்குச் சமம்னு எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணு சொல்லிருக்கா மா”, என்று நான் கூற,

“அப்டிபட்ட பொண்ணுங்களாம் கனவுலதான் சாத்தியம்”, புலம்பியபடியே சென்றாள் அம்மா.

நான் மெல்லிதாய்ச் சிரித்துக் கொண்டேன். ஆம். கனவினில் அவள் என்னிடம் சொல்லியது தான். ஒரு மாலை வேளை, இளஞ்சிவப்பு நிற வானத்தைப் பார்த்தபடி என் நெஞ்சில் சாய்ந்திருந்த அவள் சொன்னது: ” த்தே..ந்தா..கனவு இல்லாத பொண்ணு பொணத்துக்குச் சமம். நீ சந்தோஷப் படனும். நீ ஒரு பொணத்த காதலிக்கல. ஒரு பொண்ணதான் காதலிக்கரன்னு”. அவளின் கனவுகள் குறித்து அவள் பேசும்போது அவளின் காது மடல்கள் துடிப்பதையும், அவளின் கண்கள் ஒளிருவதையும் காணலாம். அழகானவொரு மாலைப் பொழுதாய் நினைவில் நின்று போனது அந்தக் கனவில் வந்திருந்த மாலைப்பொழுது.

பெண்பார்க்கும் படலம் முடிந்து நான் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் வீட்டிலிருந்தவர்களின் உணர்வுரீதியான மிரட்டல்களும், கட்டாயமும் ஒன்று சேர அவளுக்கான தேடல் படலம் நிறைவுற்றது. அன்று நான் போய்க் கண்டிருந்த அதே பெண் தான் இன்று எனக்கு மனைவி. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிப் போயிருந்தன. ஒரு மனைவி என்பதைக் காட்டிலும், ஒரு தோழியாய் என்னிடம் வெகுவாய் நெருங்கியிருந்தாள். எனக்குத் தேவையான தனியிடத்தை அளித்திருந்தாள். என் கனவுகளைக் குறித்துக் கேட்டறிந்தாள். என் தினசரிக் கனவுகளின் நிகழ்வுகளைக் கதையாகக் கேட்பது அவளுக்கு மிகவும் பிடித்த வாடிக்கை. நான் கனவில் இருப்பவளுடன் நெருங்கியிருப்பதாய் வரும் கனவுகளை அவளிடம் கதையாய்ச் சொல்லும் நாட்களில் அவளின் முகத்தில் ஒரு பொறாமையைக் காணலாம். அடுத்த இரண்டு நாட்கள் காரணமில்லாமல் சிறு சிறு சண்டைகள் இடுவாள். அவள் கனவில் ஒரு அழகிய ஆடவன் வந்து அவளைக் கட்டியணைத்ததாய், அழகை வர்ணித்ததாய், அவனை மிகவும் பிடித்திருந்ததாய்ச் சொல்வாள். ஒவ்வொன்றிற்கும் என் முகபாவத்தையும் நோக்குவாள். அவளின் அந்தச் சலம்பல்களுக்கு நான் எவ்வித முகபாவமும் காட்டாமல் அமர்ந்திருந்தால், “அப்போ எவனாவது கேட்டா என்ன நீ விட்டுக் குடுத்துடுவியா”, என சண்டையும் இடுவாள். இந்த இரண்டு வருடங்களில் நான் அவளை மெதுவாய் இரசிக்கத் துவங்கியிருந்தபோதும், மனதளவில் கனவில் தோன்றுபவளே என்னுள் ஆழமாய் வேரூன்றிப் போயிருந்தது ஒரு வித நெருடலையே தந்திருந்தது. இரு விதமான வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்திருந்தபோதும் எதையோ இழந்திருப்பது போன்றதான தவிர்க்க முடியாத உணர்வு.

என் மனைவியை நான் கனவில் காணும் பெண்ணுடன் மனதளவில் ஒப்பிட்டு என்னை நானே ஒருவித அழுத்தத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தேன். மீண்டும் தூக்கம் என்னில் ஒரு வித பயத்தை ஏற்படுத்தத் துவங்கியிருந்தது.

சில பொழுதுகள் நான் சிந்தித்ததுண்டு, கனவில் இருக்கும் வாழ்க்கையிலே நிரந்திரமாய்த் தங்கி விடவேண்டுமென்று. ஆனால், அவளுடன் நான் நிரந்திரமாய்த் தங்கிட நினைக்கும் போதெல்லாம், எங்கள் காதலை அறிந்து அதை எதிர்க்கும் ஆதிக்கசாதி வெறி பிடித்த அவளின் அண்ணன்களால் அவள் உயிரிழந்திட நேருவதால், அவளுக்கு முன் நான் தற்கொலை செய்து கனவைக் கலைத்திட்டு, மீண்டும் உறங்கி அந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவளுடன் போய் இணைகிறேன்.  இதுவே ஒரு தொடர் சுழற்சியாய் நடைபெற்று வந்தது, என்னில் ஒரு அயர்ச்சியை உண்டாக்கியிருந்தது.

கனவுலகில் ஒரு முறை, அவளும் நானும் மட்டுமாய் இருந்திருந்த எங்கள் அந்தரங்கப் பொழுதொன்றில் என் மேல் கிடந்தபடி சொன்னாள், ” த்தே…ந்தா…எனக்கு இங்க ஒரே மூச்சுமுட்டலா இருக்கு. இங்கருக்க ஆளுங்க யாரையுமே எனக்குப் புடிக்கல. எனக்கு இப்டி அடங்கி கெடக்கவும் சுத்தமா மனசில்ல. என்ன இங்கருந்து எங்காவது கூட்டிப் போயேன். எனக்கு நெறய படிக்கனும், நெறய எடம் போவணும், நெறய அனுபவம் வேணும். நீ என்னக் கூட்டிப் போகலனாலும் நான் போவேன். நீ என் கூட மட்டும் வந்தின்னா போதும்”.

இதைக் கேட்ட நொடி முதல் அவளின் அந்த மூச்சுமுட்டல் அவளிடமிருந்து எனக்கும் பகிரத் துவங்கியிருந்தது. கனவுலகை விட்டு அவளை வெளிக் கொண்டு வர முடியாத இயலாமையின் மூச்சுமுட்டல். அங்கு நிரந்திரமாய் நான் தங்கிட முடியாத வலியின் மூச்சுமுட்டல். இந்த உணர்வுகள் எல்லாம் ஒன்று சேர, அது  இந்த நிஜ உலகை விட்டு என்னை அந்நியப் படுத்தி விட்டதாய் ஒரு உணர்வு. இப்படியாய் நினைவுகளை அசைபோட்டே நான் பொழுதைப் புலர்ப்பித்திருந்தேன்.

இரவு மனைவியின் அழைப்பைப் பாதியில் துண்டித்திருந்ததால் அவளைச் சமாதானப்படுத்திட வேண்டி அவள் பெரிதும் விரும்பிடும் முட்டை மிட்டாயை வாங்கி கைப்பையில் வைத்தபடி வீடு நோக்கி நடக்கலானேன்.

…..

ஆறு மாதங்கள் உருண்டோடியிருந்தன. நிஜ உலகம் கனவுலகம் என இரண்டு வாழ்க்கை முறைக்கும் நன்றாய்ப் பழகியிருந்தேன். என் நிஜ வாழ்வில் வரத் துவங்கியிருந்த அனைத்துக் குழப்பங்களுக்கும், என் கனவுலகில் நான் வாழ்ந்துக் கொண்டிருந்த வாழ்வும், அதில் இருக்கும் அவளுமே தீர்வாய் அமைந்திருந்தனர். இந்நிலையில் எனக்கான பணி மாறுதல் வரப்பெற்றிருந்தது. அதன் காரணமாய் நாங்கள் அது வரையில் தங்கியிருந்த ஊரை விட்டு புதிதாய் மாறுதல் கிடைக்கப் பெற்ற அலுவலகம் அமைந்திருக்கும் ஊருக்குக் குடிபெயர வேண்டிய கட்டாயம்.

புதிய வீட்டிற்குப் பொருட்களைக் கொண்டு இறக்கியதும், அப்பா தான்  எடுத்து வந்திருந்த செய்தித்தாள் கட்டை முதலில் எடுத்துக் கீழே போட்டபடி, “மொதல்ல ஷெல்ஃப்ல எல்லாம் இந்த நியூஸ் பேப்பர விரிங்க. அப்ரமா பொருள் எல்லாம் அடுக்கலாம்”, என்று கூற, கட்டிலிருந்து ஒரு செய்தித்தாளை உருவியபடி நான் வீட்டின் சமையலறை நோக்கி நடந்தேன். அங்கிருக்கும் திட்டில் அந்தச் செய்தித்தாளை விரிக்க பிரித்துத் திறந்த எனக்கோ பேரதிர்ச்சி. குரலெடுத்துக் கத்த முயன்றும் குரல் வராமல் நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக் கொண்டது. உடல் முழுவதும் வியர்த்து வழியத் துவங்கியிருந்தது. அங்கு என்னைத் தேடி வந்த என் மனைவி என்னைக் கண்டதும்,” என்னடா, என்ன ஆச்சு என்றபடி பதற”, நான் விரித்துப் பரப்பியிருந்த அந்தச் செய்தித்தாளைக் காண்பித்தபடி வார்த்தை வராமல் விக்கித்து நின்றிருந்தேன். அவள் ஓடிச் சென்று அந்தச் செய்தித்தாளை என் அருகில் எடுத்து வர, ” எ…என்….என்…கனவுல வர பொண்ணுடி”, என்று நான் திக்கித் திக்கிக் கூறக் கேட்ட அவள் முகத்திலும் பேரதிர்ச்சி.
அவள் என்னைக் கைத்தாங்கலாய் அழைத்துச் சென்று அமர்த்தினாள். குடிக்க குளிர்ந்த நீர் எடுத்து வந்து கொடுத்து என்னைச் சாந்தப்படுத்தினாள்.  பின் அந்தச் செய்தித்தாளை என்னிடம் தந்து, ” நல்லா பாருடா, ஏதாவது மியர் ரிசம்ப்லன்சா இருக்கப் போவுது”, என்றபடி என் கைகளை இறுகப்பற்றினாள்.

“இல்ல டி. ஆம் டேம்ன் ஸ்யுர். இது என் கனவுல வர அதே பொண்ணு தான்”, நான் அதிர்ச்சி விலகாமல் கூற அந்தச் செய்தித் தாளில் அவள் படம் இடம்பெற்றிருந்த பத்தியின் தலைப்பில் “11 தூக்கு தண்டனைக் கைதிகளின் தண்டனை இரட்டை ஆயுளாய்க் குறைப்பு” என இடம்பெற்றிருந்தது. என் மனைவி  என் கையிலிருந்த செய்தித்தாளை வாங்கி அந்தச் செய்தியை உரக்க வாசிக்கத் துவங்கினாள். அதில் அவளது பெயர் இருந்தது. நான் வருடங்களாய் அறிய ஏங்கிய பெயர். சந்திரகலா. அவளைப் போலவேதான் இருந்தது அவள் பெயரும். பேரழகாய். ஆனாலும் பல வருடங்களாய் நான் தேடித் திரிந்தவளை, ஏங்கித் திரிந்தவளை இப்படியான ஒரு கோலத்தில் காண நேர்ந்தது என் மனதில் ஆறா வடுவாய் நீறிக் கொண்டிருந்தது. அன்றின் இரவு எனக்கு வழக்கமான இரவாய் இருந்திருக்கவில்லை. நான் கண்களை மூடித் தூங்கத் தொடங்கியதும் வரும் வழக்கமான கனவு அன்று எனக்கு வரவில்லை. அதிர்ந்து எழுந்தவன் மீண்டும் தூங்க முயற்சித்தேன். கனவு வரவேயில்லை. வழக்கமாய்க் கண்களை மூடினதும் வரும் கனவு அன்று வரவே இல்லை. நிம்மதியாய்த் தூங்கி எழுந்த உணர்வை நான் பல வருடங்களுக்குப் பின் உணர்ந்திருந்தேன். ஆனால், நான் இத்தனை வருடங்களாக என்னுடன் சுமந்துத் திரிந்திருந்த கனவின் இழப்பு என்னை நிலை தடுமாறச் செய்தது. என் தவிப்பை உடனிருந்து பார்த்த மனைவி வழக்கறிஞரான தன் நண்பன் நவீனை அழைத்தாள்.  அந்தச் செய்தியின் தகவலைச் சொல்லி அது சம்மந்தப்பட்ட தகவல்களைச் சேகரித்துத் தருமாறு வலியுறுத்தினாள்.

எனக்கோ அந்தச் செய்தியும், தினசரி வந்திருந்த கனவின் இழப்பும் ஒருசேர என்னை முழுதாய்த் தளர்த்தியிருந்தன. என்னைச் சுற்றியிருந்த அனைவரும் என் சமநிலையை நான் இழந்துவிட்டதாய்க் கூறிய போதும், அவள் எனக்காய் அவர்களிடம் வாதிட்டது, என் உணர்வுகளைப் புரிந்தவளாய் உடன் நின்றது அவளின் மீதொரு காதலைத் தந்தது.

 

அவளின் நண்பன் அவள் கேட்டிருந்த தகவுகளோடு வீட்டிற்கே வந்திருந்தான்.

“கன்விக்ட் பேரு சந்திரகலா, நாலு மர்டர். சொந்த அப்பா, அண்ணனுங்களையே பாய்சன் பண்ணி மர்டர் பண்ணிருக்கு. மோட்டிவ் என்னன்னு சொல்லல. விசாரிச்சதுல, அது ஊருல ஒரு பையன்கூடக் கொஞ்சம் அப்டி இப்டினு இருந்திருக்கு. அத கேட்டதுக்கு நாலு பேரையும் பாய்சன் பண்ணிருக்கு. இங்க பக்கத்துல தான் கிளியூர் வில்லேஜ்”, நவீன் சொல்லி முடிக்கவும், “நோ… அப்படியா இருக்காது”, நான் அலறினேன். என்னைச் சாந்தப்படுத்தியவள், “நவீன் நாங்க அவங்கள பாக்க அரேஞ்ச் பண்ணித் தர முடியுமா? ப்ளீஸ்”, என்று வினவினாள்.

“சரி நான் பாக்றேன் “, என்றவர், விடைபெற்று எழுந்து சென்றார்.

எனக்கான தூக்கமில்லா, நிம்மதியில்லா நாட்களின் புதியதொரு துவக்கமாய் அது அமைந்திருந்தது. இம்முறை கனவுகளைப் பயந்து அல்ல. அவற்றை விரும்பி வேண்டி.

ஒரு வாரம் கடந்திருந்தது. நவீன் அழைத்திருந்தார். அவர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டதாகவும், நாளை வேலூர் சிறைக்கு வருமாறும் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தார்.

அன்றின் இரவு மிக நீளமானதொரு இரவாய் அமைந்திருந்தது. ” அவங்களுக்கு என்னைத் தெரியுமா?? தெரியாம போய்ட்டா என்ன டி பண்றது?? நான் சொல்ற கதையெல்லாம் கேட்டு என்ன பையித்தியம்னு நெனச்சிடுவாங்களோ??”, என் மனதின் அவஸ்தைகளாய்ப் பட்டிருந்ததை நான் என் மனைவியிடம் கொட்டித் தீர்த்தபடி இருந்தேன். உலகில் வேறு யாருக்கும் இப்படியான என்னைச் சகிக்கும் அளவுக்கான பொறுமை சாத்தியமில்லைதான். ஆனால், இவள் நிச்சயம் எனக்கானவள். பெண் பார்க்கச் சென்றிருந்தபோது நான் கேட்ட கேள்விக்கு அவள் அளித்திருந்த பதில் என் நினைவுக்கு வந்தது ,” ஒரு நல்ல மனைவியா இருக்கனுங்கிறதுதான் என் கனவு”.  அவளை நான் இறுக அணைத்துக் கொண்டேன்.

மறுநாள் இருவரும் வேலூர் சிறைக்குச் சென்றிருந்தோம்.
கூடவே நவீனும் வந்திருந்தார். எங்களை அங்கிருந்த அதிகாரியிடம் அறிமுகப்படுத்தினார்.

“நீங்க அந்தம்மாக்கு யாருங்க? சொந்தமா?”, அவர் வினவ

“ஒரு வகைல தூரத்துச் சொந்தம் சார்”, நவீன் பதிலளித்தார்.

“அந்தம்மா யாரையும் பாக்க விருப்பமில்லைன்னு சொல்லிடுச்சுங்க நவீன். சோ வீ ஆர் சாரி”, உயரதிகாரி கூறவும் எங்களுக்கு ஏமாற்றமாய் இருந்தது.

“ஏதும் பண்ண முடியாதா சார் ப்ளீஸ்”, நான் உடைந்த குரலில் கேட்க,

“அவங்கள ஃபோர்ஸ் பண்ணிலாம் கூட்டிட்டு வர முடியாது சார். கெளம்புங்க”, மிடுக்காய்க் கூறினார் அவர்.

“சார் இந்த லெட்டர மட்டும் அவங்க கிட்ட குடுத்துடுங்க ப்ளீஸ்”, நான் கெஞ்சலுடன் நீட்டிய கடிதத்தை அதிகாரி வாங்கிக் கொண்டிருந்தது சிறு நிம்மதியைத் தந்திருந்தது.

நான் அதுவரையிலான கனவுகளையும், அதில் நிகழ்ந்த நிகழ்வுகளையும், எங்கள் உரையாடலையும் சுருக்கி ஒரு கடிதமாய்த் தயார் செய்து வைத்திருந்தேன். அதையே இப்பொழுது அதிகாரியிடம் கொடுத்தேன். சிறு ஏமாற்றத்துடன் நாங்கள் திரும்பிய போது, ” உங்க ஸ்டோரிலாம் சஞ்சனா (என் மனைவி) சொன்னாங்க. இங்க பக்கத்தில தான் கிளியூர். ஒரு விசிட் அடிப்போமா?”, நவீன் கேட்க, இருவரும் ஒருசேர உற்சாகமாய்த் தலையாட்டினோம்.

கிளியூர். நான் கனவில் கண்டிருந்த பல இடங்கள் அங்கு அப்படியே இருந்த போதும், சில இடங்கள் கால ஓட்டத்தால் மாறித்தான் போயிருந்தன. என் மனைவி வாகனைத்தைச் செலுத்த நான் முன்னிருக்கையில் அமர்ந்தபடி கனவில் கண்டிருந்த இடங்களையெல்லாம் அவளுக்கு முன் கூட்டியே சொல்லியபடி இருந்தேன். அவளின் முகத்தில் ஒருவித ஆச்சரியத்தின் ரேகை. நவீன் ஒன்றும் புரியாதவராய்ப் பின் அமர்ந்திருக்க, கனவில் நான் கண்டிருந்த வீட்டின் அருகில் நாங்கள் வந்தடைந்தோம். வீடு முற்றிலுமாய்ச் சிதிலமடைந்து பாழடைந்துப் போயிருந்தது. நவீன் இறங்கி அங்கு அருகிலிருந்த ஒரு மூதாட்டியிடம், “பாட்டி… இங்க யாரும் இல்லையா?”, என்று கேட்க,
“ஒரு பையனும் அவனோட அப்பாவும் இருந்தாங்க, அந்தப் பையன கொன்னுட்டாங்க, அந்தக் கவலைல அவனோட அப்பாவும் எறந்துட்டாரு”.
என் கண்கள் நிரம்பித் தளும்பின.  கனவில் வரும் நான் சிறு வயதிலேயே தாயை இழந்திருந்தேன். தாய்க்குத் தாயாயும், தந்தைக்குத் தந்தையாயும் இருந்து என்னைப் பேணியவர் என் அப்பா.  அவர் ஒரு சமையற்கலைஞர். பல இடங்களுக்குச் சென்று பணிபுரிந்து என்னைப் படிக்க வைத்திருந்தவர். படிப்பின் மகத்துவம் அறிந்திருந்தவர். “எப்படியாவது ஒரு கவர்மண்டு வேலை வாங்கி புடு ராசா” என என் தாடையைத் தடவி முத்தமிடுபவர். இறுதி காலத்தில் கேட்பாரற்று இறந்திருக்கிறார்.

நவீன் அந்த சிதிலமடைந்த வீட்டிற்குள் சென்று அங்கு அலசி ஆராய்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்து வந்தார். அப்பாவும் நானும்.  அதில் இருந்த எனக்கும் இப்போதுள்ள எனக்கும் உருவ வேற்றுமை இருந்த போதும், ஓருடலில் இருவருக்கான உணர்வுகளையும் சுமந்துத் திரிந்திருந்தேன். அவரிடமிருந்த அந்தப் புகைப்படத்தை நெஞ்சோடு தழுவியபடி அழுதேன். அதைப் பொக்கிஷமாய் என்னோடு வைத்துப் பாதுகாக்க முடிவெடுத்திருந்தேன்.

அடுத்ததாய்ச் சந்திரகலாவின் வீடு. அங்கு அந்தப் பழைய மாளிகை வீடு இருந்திருக்கவில்லை. மாறாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டிருந்தது. அங்கு நவீன் இறங்கி சந்திரகலாவைப் பற்றி விசாரிக்க, அங்கிருந்தவர்கள் கோபத்துடன், ” ஊரு பேர கெடுத்தவ அவ. அவள தேடி வந்திருக்கிங்களா, ஊர விட்டு வெளியே போங்கடா”, என்று கூறி விரட்ட அங்கிருந்து புறப்பட்ட நாங்கள் ஊரின் எல்லையை வந்தடைந்தோம்.

அங்கு ஒரு தேநீர்க் கடையில் சிறிது நேரம் ஓய்விற்காய் நிற்க, ஒரு மூதாட்டியும் அவரின் பேத்தியும் இருசக்கர வாகனத்தில் வந்து எங்கள் அருகில் நின்றனர். அந்த மூதாட்டி அதிலிருந்து இறங்கி ” நீங்க யாரு வேணும் சந்திர கலாவுக்கு”, என்று வினவ, ” இவங்க அவங்களுக்குத் தூரத்து சொந்தம், நான் அவங்க வக்கீல்”, நவீன் யோசிக்காமல் சொல்லி முடித்தார்.

“ஓ வக்கீலு தம்பிங்களா, எப்பிடியாவது அந்தப் புள்ளைய வெளியே கொண்டு வந்துடுங்க தம்பி, பாவம் அந்தப் புள்ள, படுபாவிங்க வாழவிட்டானுங்களா”, கவலை தோய்ந்த முகத்துடன் அந்த மூதாட்டி கூற, “அவங்களுக்கு என்னாச்சு? அவங்க அம்மா எங்க இருக்காங்க?”, வேகமாய் நான் வினவினேன்.

“அத ஏன் தம்பி கேக்கற. ரெண்டுஞ் சின்னஞ் சிறுசுங்க. அந்தத் தம்பி தான் அப்ப ஊர்லயே அதிகம் படிச்ச  புள்ள. அவளுக்கோ ரொம்ப படிக்க ஆச. ஆன அவ அப்பனு அண்ணனுவளும் பொட்டச்சிக்கு எதுக்குப் படிப்புன்னு நிறுத்திப் புட்டானுவ. அந்தத் தம்பிதான் அவங்க வூட்ல கணக்கெழுத போயிருக்கு. அந்தப்புள்ளைக்குப் படிக்க நறிய பொஸ்தகம்லாம் குடுக்கும் அந்தத் தம்பி. அப்பிடி காதல் ஆயிடிச்சு. வாழவிட்டானுவளா இந்த பாவிப் பயலுவ. அந்தப் பையன கூட்டு போய்க் கொன்னு போட்டானுங்க. அத தாங்காத அந்தப் பொண்ணு வெஷம் வச்சு  அவங்க அப்பனையும் அண்ணனுகளையும் கொன்னுடுச்சு. அவங்க சொத்த புடுங்க இது தான் வாய்ப்புன்னு கூட இருந்த நாய்ங்க அந்தப் பொண்ண மயித்தலாம் அறுத்து கல்லால அடிச்சு கொல்லப் பாத்தானுவ. போலீஸ் வந்து காப்பாத்திச்சு. அவங்க அம்மாவ அடிச்சு தொரத்திட்டு சொத்து பூராம் எடுத்துக்கிட்டானுங்க தம்பி. அவங்கம்மா பையித்தியம் புடிச்சு தெருவுல செத்துச்சு”, அவர் சொல்லி முடிக்கவும் அழுகை என் தொண்டையைக் கவ்வியது.
விம்மத் தொடங்கியிருந்தேன்.

“சரிங்கம்மா, கவலைப்படாதிங்க, அவங்கள வெளியே கொண்டு வந்திடுவோம். நாங்க போய்ட்டு வரோம்”, கூறியபடி நவீன் வாகனத்தில் ஏற நானும் கூடவே ஏறினேன். கிளம்பத் துவங்கும் வேளையில் சிறையின் அதிகாரியிடமிருந்து நவீனுக்கு அழைப்பு.
“யெஸ் சார்…….ஓகே சார்…..ஒடனே வர்ரோம் சார்”, என்றபடி அழைப்பைத் துண்டித்த நவீன், “அந்தம்மா நம்மள பாக்கனு சொன்னாங்களாம். வாங்க ஒடனே போவோம்”, என்று கூற என் மனைவியிடம் ஒரு உற்சாகம் வந்து தொற்றியது.
நான் முழுதாய்த் தளர்ந்திருந்தேன்.

வேலூர் சிறைச்சாலைக்கு உள் நுழையும் முன் வரை மெதுவாய் இருந்த என் இதயத்துடிப்பு இப்போது வேகமெடுக்கத் துவங்கியிருந்தது.

பார்வையாளர் சந்திப்புப் பகுதியில் சந்திரகலா நின்றிருந்தார். நான் விரும்பி இரசித்திருந்த கண்கள் உலர்ந்து வெளிரி சுருங்கியிருந்தன. வயதுக்கு மீறிய முதுமை அவரிடம் தெரிந்திருந்தது. முகம் முழுக்க சுருக்கங்களுடன் சோகமும் ஒட்டியிருந்தது.  அவர் கண்களில் குழப்பமிருந்தது. நாங்கள் உள்நுழையவும் அவர் வேறு யாரையோ தேடிக் கொண்டிருந்தது புரிந்தது.

அவரிடம் சென்ற என் மனைவி, ” அந்த லெட்டர தந்தது இவர் தான்”, என்று கூற அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.

“தம்பீ…இதுலாம் உங்களுக்கெப்படி?? “, அவர் கேள்வியை முழுதாய் முடிக்கும் முன் நான் உடைந்தழத்  துவங்கினேன்.

“என் பிறைநிலாவுக்கு என்ன தெரியாமப் போச்சே” என்று  நாங்களிருவர் மட்டும் அறிந்திருந்த அவர் பெயரை நான் சொல்லி அங்கிருந்து எடுத்து வந்திருந்த என் பழைய புகைப்படத்தைக் காட்டிக் குலுங்கு அழவும், நிலைத்தடுமாறிப் போனவர் தத்தித் தத்தி அருகில் வந்தார். அவரின் கண்கள் நிறைந்து தாடை குலுங்கி அழுகை முட்டி நின்றிருந்தன. அருகில் வந்தவர் கம்பிகள் வழியே கைவிட்டு குனிந்து அழுதுக் கொண்டிருந்த என் கன்னங்களை வருடினார். நான் அவரின் கைகளை என் கன்னத்தோடு சேர்த்துப் பிடித்தபடி அழுதேன். என் தலையைக் கோதியவர், கைகளை உயர்த்தி ஆசிர்வாதித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துச் சென்றார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதுவரை அங்கு நடைபெற்றிருந்த நிகழ்வுகளை அமைதியாய் வேடிக்கைப் பார்த்திருந்த என் மனைவி, என் கைகளை இறுகப் பற்றியபடி கூறினாள், “டே இவங்கள நாம வெளியே எடுத்ததும் நம்ம கூடவே வச்சுக்கலாம் டா”.

அவளை இறுக்கி அணைத்தபடி  வாய்விட்டுக் கதறியழுதேன்.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button