இணைய இதழ்இணைய இதழ் 60சிறுகதைகள்

ஒரு நாளில் உலகம் – நான் விஜய் 

சிறுகதை | வாசகசாலை

ன்று மிகுந்த சோர்வு. மனம் ஒரு நிறைவில் இருந்தாலும் எதோ கொஞ்சம் உடனே அசந்து தூங்க வேண்டும் என்பது போன்ற உணர்வு விஜய்க்கு. தனது சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு ஒரு நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்கு வந்திருந்தான், மனம் போல வேலை கிடைத்துவிட்டது. ஆனாலும் வெகு நேரம் காத்திருந்தது, முடிவின் பயம் இதுவே இந்த மன நிலைக்கு காரணம்.

கிண்டியில் நடந்த நேர்முகத் தேர்வை முடித்து கொண்டு, லோக்கல் ரயில் ஏறி புறப்பட்டதும் மதியம் 3 மணி வேளை என்பதால் பெரிதாக கூட்டம் இல்லாமல் இருந்தது, லோக்கல் ரயிலில் ‘வெண்டார்’ என்ற வியாபாரிகளுக்கான ஒரு பெட்டி உண்டு. அதில் மற்ற பெட்டிகளை போல் அல்லாது பெட்டியின் சுவர்களை ஒட்டி இருக்கைகள் நீள வாக்கில் போடப்பட்டிருக்கும். இந்த மதிய நேரத்தில் அந்த ‘வெண்டார்’ பெட்டி சுத்தமாக ஆள் அரவமே இல்லாமல் இருந்ததால் நன்றாக கால் நீட்டி படுத்துக்கொண்டே வந்தான், மேற்கு மாம்பலம் நிலையம் வந்ததும் 3 பேர் ஏறினார்கள் ஆனால், இன்னும் அது காலியாகவே இருந்தது அதனால் தன் தூக்க முயற்சியைத் தொடர்ந்தான்.. எழும்பூர் நிலையம் வந்ததும் அதில் சில திருநங்கைகள் ஏறினர், உள்ளே உள்ளவர்களை ஆசீர்வதித்து பணம் பெற்றனர். தன் கையில் சுத்தமாக காசே இல்லாமல் பயணச் செலவுக்கு மட்டும் பணம் வைத்திருந்ததை உணர்ந்த விஜய் தூங்குவதை போல பாசங்கு செய்யத் துவங்கினான்..

சில நிமிடங்கள் ஆனது…தன்னை யாரோ உற்று பார்ப்பது போல ஒரு உணர்வு மேலிட கண் திறந்து பார்த்தான்; அந்தத் திருநங்கை அங்கேயே இருந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு ஒரு மாதிரி கூனிக் குறுகி தன்னிடம் எந்த பணமும் இல்லை என்று அவளிடம் சொன்னான். அதைக் கேட்டு மெல்லியதாய் ஒரு புன்னகை வீசிவிட்டு தொடர்ந்து அவனையே கவனித்தாள் அந்தத் திருநங்கை.

அந்த திருநங்கை நல்ல மாநிறம்.கலையழகு கொஞ்சும் முகம்.. திருநங்கை என்று அவளே சொல்லிக்கொண்டால் தான் தெரியும்; அப்படி ஒரு பெண்ணின் முகம் அச்சடித்தது போல. குரல் மட்டும் கொஞ்சமாய் காட்டிக் கொடுக்கிறது இவரின் பாலினத்தை என்று சொல்லலாம். ஆனால், அதுவும் ஒரு குரல் மாறுபாடுள்ள அல்லது கீச்சுக் குரல் உள்ள பெண் என்று சொன்னால் அனைவரும் நம்பி விடுவார்கள், அப்படி ஒரு லட்சணம். அவள்தான் சற்றும் பார்வை விலகாது விஜயையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

விஜய் எதோ ஒரு குற்ற உணர்வில் நெளிந்து கொண்டிருப்பவன் போல அவள் முன்னால் இருந்தான். பிறகு மெதுவாக கொஞ்சம் தைரியத்தை வர வைத்து கொண்டு, ‘ஏன் என்னையே பாக்குறீங்க?’ என்று கேட்டான்.

‘என்னத் தெரியலையா உனக்கு?’

‘தெரியலையே’

‘உன்கூட செவன்த் வரைக்கும் மோகன்னு ஒரு பையன் படிச்சான் தெரியுமா?’

‘மோகன்.. ஆமா, உங்களுக்கு அவனைத் தெரியுமா?’

‘டேய், நான்தான் மோகன்.இப்போ மோஹினி’

‘என்ன சொல்ற.நீயா? அதான் எங்கையோ பார்த்த மாதிரி இருந்துதுனு தோணுச்சா?’ ( உண்மையில் அவனுக்கு உள்ளுக்குள் பயத்தை தவிர்த்து அது போன்ற எந்த எண்ணமும் தோன்றவில்லை )

‘எப்புடி இருக்க?’

‘நல்லா இருக்கன்டா. நீ?’

கொஞ்சமாகச் சிரித்து விட்டு, ‘பார்த்தா தெரியல? எப்படி இருக்கேன்?’

‘ஏண்டா இப்புடி ஆகிட்ட?’

‘எனக்குப் புடிச்சா மாதிரியா?’

‘அது இல்லை’ , என்று அவன் சொல்லத் தொடங்க அவள், ‘தனக்கு நேரமில்லை; அடுத்த நிலையத்தில் இறங்க வேண்டும்’ என்று சொல்லி அவனது மொபைல் எண்ணைக் குறித்துக் கொண்டு கிளம்பினாள்.

பின்பு அந்த நிமிடங்களை விஜய் சற்று நேரம் மனதில் அலசி ஆராய்ந்தான். சிறு வயது மோகன் முகம் இப்போது தான் கொஞ்சம் நினைவுக்கு வந்தது, அப்போதே அவன் பெண்களைப் போன்ற, இன்னும் சொல்லப் போனால் பெண்களை விட அதிகமாகவே நளினமாய் இருப்பான், அந்த நினைவுகளெல்லாம் புகை மூட்டம் போல மறைந்து போக, விஜய் நிஜ உலகிற்குள் நுழைந்தான், கடற்கரை சந்திப்பு வந்ததும் வெளியில் வந்து ஷேர் ஆட்டோ பிடித்து வண்ணாரப்பேட்டை வந்து சேர்ந்தான். அங்குதான் அவனது ஊரைச் சேர்ந்த நண்பன் ஒருவன் மருத்துவப் பிரதிநிதியாக வேலை செய்து வாடகைக்கு சிறிய அறை ஒன்றை எடுத்திருந்தான். அறையில் இன்னும் இரண்டு நாட்கள் இருக்க வேண்டும்; நாளை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவனுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். அதன் பின் ஒரு நாள் இங்கு இருந்து விட்டு சொந்த ஊருக்குக் கிளம்புவது என்று திட்டம்.. இதை வீட்டில் உள்ள அனைவருக்கும் சொல்லி முடித்தாயிற்று. இனி அவன் ஆசைப்பட்ட அந்த உறக்கத்தை தேடிச் சென்றான். அப்போதுதான் அவனது மொபைல் சிணுங்கியது. எதோ புது எண். ஒருவேளை புது நிறுவனத்தில் இருந்து அழைப்பார்களோ என்று யோசித்து எடுத்தான். மறுமுனையில் மோஹினி என்கிற மோகன்.

‘நான் தான் மோஹினி’

‘யாரு வேணும் ?’

‘டேய் லூசு. மோகன் டா.’

‘ஆஹ்ஹ்.சொல்றா’ (மனதுக்குள் இப்போ எதுக்கு போன் பண்ணி தாலிய அறுக்குறான் என்று கரித்துக் கொட்டினான்)

‘நாளைக்கு நாம மீட் பண்ணலாமா?’

‘நாளைக்கா? முடியாது, நாளைக்கி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு’

‘ஓகே.அப்போ நாளான்னிக்கு?’

‘இல்லை, நான் வேலை விஷயமா தான் ஊருக்கே வந்துருக்கேன். அதானால மீட் பண்றது கஷ்டம் தான்.’

‘ஒஹ்ஹஹ் அப்புடியா.எனக்காக ஒரே ஒரு நாள் தர முடியுமா கொஞ்சம் பேசணும் உன்கிட்ட’

‘என்ன விஷயம்? போன்லயே சொல்றா.’

‘இல்லை.எனக்கு இன்னும் அஞ்சு நாள்ல ஒரு ஆபரேஷன். இதயத்துல நெறைய அடைப்புங்க இருக்கு. அதனால அதுக்கு அப்புறம் உன்ன பாக்க முடியுமானு தெரியல.இப்போதைக்கு நம்ம ஊர்ல எனக்குத் தெரிஞ்ச முகம் நீ மட்டும்தான். உன்கிட்ட பேசுனா வீட்ல இருக்கவங்க கிட்ட பேசுனா மாதிரி இருக்கும்னு தோணுச்சு. அதான் கேட்டேன்.’

‘என்னடா.இப்புடி சொல்ற? உன் ஆபரேஷன முடிச்சுட்டு நாம கண்டிப்பா மீட் பண்ணலாம். இனிமே நான் சென்னைல தான் இருப்பன்.’

‘இல்லை.எனக்கு ஆபரேஷன் மும்பைல ஒரு பெரிய ஹாஸ்பிடல்ல.அங்க எனக்கு ஆபரேஷன் சக்ஸஸ் ஆக 30% தான் சான்ஸ் இருக்குன்னு சொல்லிட்டாங்க. இருந்தாலும் பரவால்லைனு நான் பண்ணிக்கப் போறேன். அதனால தான், ஜஸ்ட் ஒன் அவர் என் கூட இருந்தாக் கூட போதும்.’

இதற்கு மேல் சம்மதிக்காமல் இருக்கும் அளவுக்கு அவனுக்கு அத்தனை கல் நெஞ்சம் அல்லவே.! 

நாளை மறுநாள் OMR தொடக்கமான திருவான்மியூரில் இருவரும் சந்திப்பதென திட்டம் முடிவானது. சிறிது நேர கலக்கத்திற்குப் பிறகு ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றான் விஜய். மறுநாள் திட்டமிட்ட பணிகளையெல்லாம் செய்து முடித்தான். இடையிடையே மோஹினியின் குறுஞ்செய்திகள் வந்தபடி இருந்தாலும், எதற்கும் பெரிதாக பதில் சொல்லாமல் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி முடித்துக் கொண்டான்.

***

மறுநாள் எழுந்ததும் திட்டப்படி காலை 10 மணிக்கு விஜய் திருவான்மியூர் பேருந்து நிலையம் சென்றான். அங்கே அவனுக்கு முன்னால் மோஹினி ஏற்கனவே அங்கு காத்திருந்தாள். ஒரு பெண் கூட இவள் அழகின் ஒப்பனையின் முன் நிச்சயம் தோற்றுப் போவாள். அவளது ஆடை தேர்ந்தெடுப்பு அவளது ரசனையைப் பேசியது.. சில நிமிடங்கள் அவள் ஒரு திருநங்கை என்பதையே மறந்து போனான் விஜய். அந்த பிரமிப்பில் இருந்து மீளவே அவனுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. அவன் திகைப்பை உணர்ந்து கொண்டவளாய் அவளே பேசத் தொடங்கினாள்.

‘ரூட் கண்டுபுடிக்க ஈசியா இருந்ததா டா?’

‘அந்த ஏரியால இருந்து 6D ஒரே பஸ் தான். ப்ராப்ளம் இல்லை.’

‘நல்லது..!’

‘சரி சொல்லு. என்ன பேசணும்.?’

‘ஏன்டா இவ்ளோ அவசரம்? ஏதாவது முக்கியமான வேலை இருக்கா.?

‘இல்லை. சும்மா கேட்டேன்’

‘உனக்கு பைக் ஓட்டத் தெரியுமா?’

‘தெரியும்’

‘என்ன பைக்ல கூட்டிட்டுப் போறியா?’

‘என்கிட்ட பைக் இல்லையே.’

‘என் அக்காகிட்ட இருந்து ஸ்கூட்டர் வாங்கிட்டு வந்துருக்கேன். அதுல கூட்டிட்டுப் போறியா?’

‘சரி போலாம்.ஆனா, எங்க?’

‘இங்க பக்கத்துல ஒரு பீச் இருக்கு. நல்லா இருக்கும். அங்க போலாமா?’

‘எவ்ளோ தூரம்?’

‘டேய், ரொம்ப தூரம் கூட்டிட்டு போய் உன்ன ஒன்னும் பண்ணமாட்டேன். இங்க இருந்து ஒரு 5 மினிட்ஸ் டிரைவ்தான்..’

‘ஹே.அப்புடி இல்ல டா. (தலையில் மெதுவாய் அடித்து கொண்டு) இல்லைங்க.’

‘உனக்கு டான்னு கூப்புடறது comfort இருந்தா அப்புடியே கூப்புடு.’

‘தேங்க்ஸ் டா.’

‘சரி, போலாமா?’

பின் சென்னையில் குடியிருப்புவாசிகளாலே பராமரிக்கப் டும் ஒரே கடற்கரையான திருவான்மியூர் RTO கடற்கரைக்குச் சென்றனர். அங்கிருந்த அனைவரது கண்களுக்கும் அவர்கள் ஒரு காதல் ஜோடியாகவே பட்டனர். நிச்சயம் மோஹினியை எல்லோரும் பெண்னென்றே நினைத்தனர் என்பதைத் தனியாக சொல்லவேண்டிய அவசியம் இருக்காது 

அதிக நேர மௌனம் விஜயை எதோ செய்தது.. இனி அமைதி காக்க அவசியம் இல்லை என்று மோஹினி பக்கம் திரும்பிப் பேச முயலும் போது, மோஹினியின் கண்களில் நீர் வடிந்து கொண்டிருப்பதைக் கண்டான். 

சட்டென்று துணுகுற்றவனாய் அவளிடம் காரணம் கேட்க, அவள் அழுகை சற்று நின்றது. ஒன்றுமில்லை என்ற பதிலோடு கூடவே ஒரு புன்னகை இணைந்து கொண்டது.இருந்தும் அது அவனுக்குப் போதவில்லை. மீண்டும் அவன் கேள்விகளைத் தொடங்க.. அவளும் முடிவெடுத்தவள் போல் அனைத்தையும் கொட்டத் தொடங்கினாள்.

8-ஆம் வகுப்பிற்குப் பிறகு மோகனின் இயல்பை புரிந்துகொண்ட பெற்றோர்கள் வேறு ஊருக்கு அவனை அனுப்பி அங்கே படிக்கவைக்க முயன்றிருக்கின்றனர். ஆனால், 12-ஆம் வகுப்பில் இருக்கும் போது தன்னால் இனி தனது இயல்பை மறைத்து வாழ முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. விளைவு.அடி உதை. இறுதியில் வீட்டில் இருந்தே துரத்தப்பட்டிருக்கிறான், அங்கிருந்து ஓடத் தொடங்கியவனுக்கு தெரிந்த ஒரே பாதை சென்னை. அங்கே சிலர் அவனுக்கு சில சிகிச்சைகள் செய்வதன் மூலம் முழு பெண்ணாய் மாற்றுவதாய் சொல்ல, அதை நம்பி அவர்களுடன் மும்பைக்குப் புறப்பட்டான். அங்கே சிகிச்சைக்குப் பிறகு சிகப்பு விளக்குப் பகுதியில் விற்கப்பட்டான். இனி அவள் என்று சொல்வது சரியாக இருக்கும். அங்கே பல கொடுமைகளை அனுபவித்து அதன் பின் அங்கிருந்து சில நல்ல உள்ளங்கள் உதவியுடன் தப்பி மீண்டும் சென்னைக்கு வந்தாள். வந்தவளுக்கு இங்கே இன்னொரு திருநங்கை ஆதரவால் ஒரு புது வாழ்க்கை கிடைத்தது ஆனால், அது முழுமை பெறுவதற்குள் இதயக் கோளாறு. அளவுக்கு அதிக கால்சியத்தின் காரண்மாக இதயத்தின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, அது பல நாட்கள் கவனிக்கப்படாமலே போக, இன்று அவளது கடைசி தினம் என்று சொல்லும் நிலையை ஒரு கட்டத்தில் எட்டி இருக்கிறாள். மீண்டும் சில நல்ல உள்ளங்களின் உதவியுடன் ஒரு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதன் பலன் என்பது 20% நம்பிக்கை மட்டுமே தரக்கூடியது என்பதும் முன்னேரே அவளுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. மோஹினிக்கு வாழ்க்கையின் மீது உள்ள பற்றற்ற நிலைமையால் அவளும் சிகிச்சைக்கு சம்மதித்து விட்டாள். நாளை அவள் மும்பை கிளம்புகிறாள்.அதனால் தான் இன்று அவள் அவனைப் பார்க்க வந்ததாக நீளமாக நீர் பெருகிய கண்களுடன் சொல்லி முடித்தாள்.

தன் வாழ்வில் இதுவரை அவன் கஷ்டம் என்று உணர்ந்ததெல்லாம் இன்று ஒன்றும் இல்லை என்று விஜய் அப்போது புரிந்துகொண்டான். வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்று அவன் போராடிக் கொண்டிருக்கும் போது, இங்கு ஒரு கூட்டம் வாழவே போராடிக் கொண்டிருக்கிறது என்கிற உண்மை அவனை திகைக்க வைக்கிறது. என்ன செய்வது, என்ன சொல்வது என்று புரியாமல் திணறினான். இப்படி அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மோஹினி பேச தொடங்கினாள்

‘உன்னப் பாத்ததும் திரும்ப வாழனும்னு ஆசை வந்துருக்கு.. ஒவ்வொருமுறையும் எனக்கு அந்த ஆசை வர காரணம் உன் பேரு தான் விஜய்.’

‘புரியல.’

‘சின்ன வயசுல மத்த பசங்கள்லாம் என்ன கலாட்டா பண்ணப்ப நீதான் வந்து எனக்காக பேசுவ. ரெண்டு பேர அடிச்சுக்கூட இருக்க. அந்த சின்ன வயசு விஜய் தான் என்னோட இவ்ளோ நாள் போராட்ட வாழ்க்கைல கூட இருந்தவன்.’

‘நீ என்ன சொல்ற?

‘ஆமா, அந்த ரெட் லைட் ஏரியால இருக்கும் போது என்னைக்காவது நீ வந்து காப்பாத்துவன்னு மனசுக்குள்ள ஏதோ ஒரு எண்ணம். கண்டிப்பா அது நடக்காதுனு தெரியும்; ஆனா, நடந்திடாதானு மனசுக்குள்ள தினமும் ஏங்கிட்டே, உன்ன ஒரு தடவையாவவது பாத்திட மாட்டனானனு உள்ளூர ஆசை பட்டுகிட்டே இருப்பேபன்.’ 

‘அப்படி என்ன பண்ணிட்டேன் உனக்கு?’

‘பாதுகாப்பு கொடுத்த..இந்த உலகம் எனக்கு எதத் தரலைன்னு நான் தினம் தினம் அழுதனோ, அதை நீ மட்டும்தான் கொடுத்த. சின்ன வயசுல வீட்ல அடிப்பாங்க அப்படி நடக்காத, இப்படி பேசாதனு. பசங்க அசிங்க அசிங்கமா பண்ணுவாங்க என்கிட்டே. கண்ட எடத்துல என் கைய கொண்டுபோய் வைப்பானுங்க, கட்டிப் புடிப்பனுங்க. அருவருப்பா இருக்கும். ஆனா, நீ கூட இருக்கும் போது அவனுங்க பயந்து ஓடுவாங்க. நீ என் கண்ணுக்கு ஹீரோ தெரியுமா..? அப்போல இருந்து உன் பேர் தான் என்னோட தைரியம். அந்த தைரியம் தான் இவ்ளோ நாள் எனக்கு வாழுற நம்பிக்கைய கொடுத்துருக்கு. ஒருத்தன் என்ன கூட்டிட்டு போய் ரெட் லைட் ஏரியால வித்தான்னு சொன்னேனன்ல… அவன் பேரும் விஜய் தான். அந்த ஒரு காரணத்துக்காக தான் நம்புனேன். நான் ஏமாந்தது தெரிஞ்சதும். உன் பேர வெச்சு என்ன ஏமாத்திட்டானேனு தான் நான் அழுதேதன். அவ்வளவு புடிக்கும் உன் பேர. எனக்கு ஒரு ஆசை இருக்கு செய்வியா விஜய்? கடைசி ஆசை.’

‘ஹே, அப்படிலாம் சொல்லாத. என்ன செய்யணும் சொல்லு?’

‘இந்த ஒரு நாள் எனக்கு உன் கூட ஒரு காதலியா இருக்கனும். Sex வேண்டாம், நான் அதப்பத்தி பேசல. உன் தோள்ல சாஞ்சுக்கணும்.மனசுவிட்டுப் பேசி நெறைய அழணும். உன்கூட ஒரு படம் பாக்கணும். இன்னைக்கு முழுக்க உன் முகத்தை பாத்துகிட்டே இருக்கனும்.. நடக்குமா?’

அவன் உருகிப் போயிருந்தான் என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.. அவள் கண்களைப் பார்த்தான். முதல் முறையாக அவளை… ஆம் இந்த கனம் முதல் அவனுக்கும் அவள் தான், அவள் பெயரை ‘மோஹினி’ என்று சொல்லி அழைத்தான்.

‘நீ சொன்னதெல்லாம் மனசுல ஓடுது. உனக்கு நடந்த கஷ்டம் எல்லாமும் புரியுது. ஆனா, அதைவிட அதிகமா எனக்கு வலிச்சது உன் காதல், அந்த காதல்ல இருந்த நம்பிக்கை. அதுதான். என்னால கூட இருந்து காப்பாத்த முடியலையேங்குறதுதான்.’

‘டேய், இதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இன்னும் சொல்லப்போனா இப்பவரைக்கும் நான் உயிரோட இருக்க காரணமே நீதான். நீ சின்ன வயசுல கொடுத்த அந்த பாதுகாப்பு உணர்வு தான்.’

‘மோஹினி, இப்போ சொல்றது சரியானு தெரியல. ஏதோ ஒரு உணர்வுல.’

‘வேண்டாம், இப்போ சொல்லாலத. இது நான் எதிர்பார்த்தது இல்லை. இது ஒரு அனுதாபத்துல வர்றது. சொல்லாத.’

‘புரியுது.’

‘இந்த நாள் மட்டும் போதும்..’

இருவரும் அன்று இதுதான் கடைசி தினம் என்பது போல சுற்றித் திரிந்தனர்; திகட்ட திகட்டப் பேசினர். கூடவே கொஞ்சம் அழுகையம். இப்படியாக அந்த நாள் கடந்தது.. இருவரும் கண்ணீரோடு விடை பெறக் கூடாது என்று முன்பே பேசி இருந்ததால். புன்னகையுடனும், மனம் நிறைய வலிகளோடும் பிரிந்தனர்.

மீண்டும் அவர்கள் சந்தித்தனரா? அவள் சுகம் பெற்றாளா? எனக்கும் தெரியாது. ஆனால், இந்த உலகம் ஏற்றாலும் ஏற்கவிட்டாலும் இனி அவளுக்கு கவலை இல்லை; அவனைப் பொறுத்தவரை இவள் மோஹினி, அது போதும் அவளுக்கு.!

******

joshuvijay@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button